கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொரோனா ஆபத்தும் மலையக பெருந்தோட்டப்புற மக்களும்

ஜீவா சதாசிவம்

இது கொரோனா காலம். 2019 ஆம்  ஆண்டு காலப்பகுதியில் உருவெடுத்து வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. ஆரம்ப நாட்களில் வைரஸின் தாக்கம் அதன் வீரியம் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாத மக்கள் இப்போது பெரிதும் அச்சமடைந்துள்ளனர். ஒரு வருடம் கடந்த பின்னர் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என்று எதிர்ப்பார்த்த போதிலும் அது நிகழ்ந்ததாக இல்லை.



இலங்கையில்

இலங்கையில் வைரஸ் பரவிய 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மார்ச் மாதமளவில், நாடளாவிய ரீதியில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக இடை இடையே தளர்த்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை. அத்துடன் இறப்பவர்களின் எண்ணிக்கையும்  பெருமளவுக்கு இருக்கவில்லை. முதலாம் அலையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11 ஆகவே இருந்தது. 2020 ஒக்டோபரில் தொடங்கிய இரண்டாம் அலையும் கூட இலங்கையில் ஓரளவு கட்டுக்குள்ளேயே இருந்தது.

 ஆனால், 2021 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதி சுமாராக இருந்தபோதிலும் சித்திரை புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து இலட்சத்தை தொட்டுள்ளது. இதேவேளை, இறப்பவர்களின் எண்ணிக்கையும் நூறை கடந்து ஆயிரத்தை தாண்டிவிட்டது. நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 30 என அதிகரிப்பதுடன் தொற்றாளர்களும் நாளாந்தம் சுமார் 2,500 என்ற நிலையைக் கடந்துள்ளது.

ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் என்று நேரடியாக அமுல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே. இப்போது பயணக்கட்டுபாடு என்ற பெயரில் நாடு முடக்கப்படுகின்றது.  

கொரோனா வாழ்க்கை விதிமுறைகள்

கைகளைத் தவறாமல் அவ்வப்போது கழுவிக்கொள்ளல், அடுத்தவர்களிடமிருந்து 1.5 மீட்டர் தூர இடைவெளியில் விலகியிருத்தல் முகக்கவசம் அணிந்திருத்தல், சுகாதார விதிமுறைகளை கையாளுதல், தம்மைத்தாமே தனிமைப்படுத்திக் கொள்ளுதல், வீட்டில் உள்ளவர்களிடம் கூட தூர விலகியிருத்தல் குறிப்பாக தனியாக இருக்க வேண்டும் என்பதே கொரோனாவிலிருந்து தப்பிப்பதற்கான பிரதான வழிமுறைகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான கொரோனா விதிமுறைகளை கையாள்வதில் தனியான குடியிருப்புக்களை அமைத்து வாழ்பவர்களுக்கும் வசதிபடைத்தவர்களுக்கும் பொருத்தமாக இருந்தாலும் கூட மலையக தோட்டப்பகுதிகளில் குறிப்பாக லயன் குடியிருப்புக்களில் வாழ்பவர்களுக்கு இந்த அறிவுறுத்தல் முறைமை கடைப்பிடிக்க முடியாத  ஒன்றாகவே இருக்கின்றது.

உண்மைச் சம்பவம்

கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள் அவரவர் வீட்டிலேயே   தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டது. அதற்கமைவாக இத்திட்டம் மே மாதம் 17ஆம் திகதி முதல் அமுலானது. லயன் குடியிருப்பில் தங்கியுள்ள ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு அவர் அங்கு தங்கவைக்கப்பட்டதையடுத்து, அதே குடும்பத்தைச் சேர்ந்த 9 மாத குழந்தை உட்பட மேலும் இருவருக்கு ஓரிரு தினங்களில் தொற்று உறுதியாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபர் இதன் பின்னரே தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அருகில் உள்ளவர்களோ பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்வதுடன் தாம் உயிருடன் இருப்போமோ என்று அங்கலாய்க்கும் நிலையும் ஏற்படாமல் இல்லை.

ஒரு லயன் குடியிருப்புத் தொகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி அதே வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தொகுயில் உள்ள மற்றுமொரு வீட்டில் தொற்றுக்குள்ளாகி சுமார் 52 வயது மதிக்கத்தக்க நான்கு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் சுற்றுச் சூழலை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

தோட்ட லயன் குடியிருப்புகள் சிலவற்றின் இன்றைய நிலை

மலையக பகுதியில் உள்ள லயன் குடியிருப்புக்களில் கூட்டான வாழ்க்கை.

லயன் அறையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 முதல் 7 பேர் வரை வாழ்கிறார்கள். சில வீடுகளில இதனை விடவும் அதிகமானோர் வசிக்கின்றார்கள்.

தாய், தந்தை, பிள்ளைகள், பெரியோர், திருமண வயது இளைஞர், யுவதிகள், வயதுக்கு வரும் நிலையிலுள்ள பெண் பிள்ளைகள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.

லயன் காம்பராவிலுள்ள சிறிய இடப்பரப்பிலேயே தமது நாளாந்த வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம். ஒரு வீட்டிலேயே, திருமணம் முடித்த தம்பதிகள் அமர்த்தப்பட்டு அந்த அறையிலேயே ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்து அதற்குள்ளே பருவம் அடைந்த பெண்ணையும் வைத்து பாதுகாத்து அதற்கான கலாசார நிகழ்வுகளையும் செய்கின்றனர். ஒரு சிறிய அறையே குறிப்பிட்ட ஐந்து பிள்ளைகளின் உலகமாகவும் இருந்து விடுகின்றது.

இந்த 120 சதுர அடிப்பரப்பில் குடும்பத்திலுள்ள அனைவரும் உறங்க, உடைகளை மாற்ற, தங்களுடைய அத்தியாவசியப் பொருட்களிலிருந்து சுக, துக்க நிகழ்வுகளுக்கும் இந்தச் சிறிய இடப்பரப்பையே பயன்படுத்த வேண்டும்.

ஒரு தனி மனிதனுக்கு 46 சதுர அடி தேவை என சர்வதேச ரீதியாக  கூறப்படுகிறது. ஆனால், மலையகத்தில் வாழும் பலரது குடும்பங்கள் இன்னும் எட்டடி காம்பராவில் (அறையில்)  வாழ வேண்டிய துர்ப்பாக்கியம் தொடர்கிறது.

இவ்வாறு வாழும் இந்த மலையக மக்கள் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக எவ்வாறு தமது அடிப்படை விடயங்களை மாற்றிக்கொள்ள முடியும்? இந்த நெருக்கமான வீட்டில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதென்பது முற்றிலும் இயலாத விடயமாக இருக்கின்றது. 

லயன் குடியிருப்புத் தொகுதி
லயன் குடியிருப்புத் தொகுதி

வரலாற்று பின்புலம்

 இந்தியாவிலிருந்து சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் கூலிகளாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மக்கள் இலங்கையின் மேட்டு நிலமான மலையகத்தில் அமர்தப்பட்டனர். காடுகளாக இருந்த இந்த நிலங்களுக்கு உயிர்கொடுத்தவர்களாகவே இவர்கள் இருந்தனர். இன்றும் அவ்வாறான நிலைமையே.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இவர்களுடனேயே ‘கொலரா’ எனும் வைரஸும் கூடவே வந்துவிட்டது. இப்போதைய கொரோனா போல. கொலராவினால் பாதிக்கப்பட்ட பலரும் இறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்ட  அக்காலப்பகுதியில் , தோட்டப் பகுதிகளில் உருவாக்கப்பட்ட வைத்திய முறைமைதான் Estate Medical வைத்திய முறைமை. இதே வைத்திய முறைமையின் தொடர்ச்சிதான்  இன்று நூற்றாண்டுகளை கடந்தும் மலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள நிலைமையாகும்.

கொலாராவினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்ட வைத்திய முறைமை இந்த கொரோனா காலத்தில் எவ்வாறு சாத்தியமாகும்?

கொரோனா தொற்றுக்குள்ளான ஒரு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி உரிய இந்த தோட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை. மலையக தோட்டப்புற மக்களுக்கு கிடைத்த ‘இலவசக் கல்வி’ பிற சமூகங்களுக்கு கிடைக்கப்பெற்று தசாப்தங்களின் பின்னரே மலையக மக்களுக்கு கிடைக்கப்பெற்றது.

1972ஆம் ஆண்டு தோட்டங்கள் சுவீகரிக்கப்பட்டதோடு தோட்டப்புற கல்வித்துறை அரச துறைக்குள் உள்வாங்கப்பட்டு இன்று அனைத்து தோட்ட பாடசாலைகளும் அரச பாடசாலையாக மாற்றப்பட்டிருக்கின்றது.   இதேபோல அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரச வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக இன்றும் கூட தோட்டப்புற வைத்தியசாலைகள் தோட்ட முகாமைத்தவத்தினால் முகாமைப்படுகின்ற வைத்தியசாலைகளாக இருப்பது துரதிஸ்டவசம்.

ஒரு சமூக குழுமத்தை அவர்களது சுகாதார நிலைமைகளை நாங்கள் தனியார் வசம் ஒப்படைத்திருப்பது எந்த வகையில் நியாயமானதாகும்?. தேசிய நீரோட்டத்திற்குள் தேசிய சுகாதாரத்திற்குள் இந்த மக்கள் உள்வாங்கப்படாத தொடர்ச்சியான நிலையே இங்கு காணப்படுகின்றது. நோயாளியொருவருக்கு அம்பியூலன்ஸ் தேவையா? இல்லையா? என்பதை தீர்மானிப்பவராக தோட்டத்தின் முகாமையாளர் இருக்கின்றார்.

ஒரு தோட்டத்தின் வைத்தியராக இருக்கக் கூடிய EMA  எனப்படுகின்ற Estate Medical Assistant என்பவர்களுக்கு சம்பளம் வழங்குபவர்கள் இந்த தனியார் கம்பனிகள். எனவே இவர்கள் தொழிலாளர்கள் மீது எந்தளவு தேசிய நலனோடு அக்கறையுடன் செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

சுகாதார அமைச்சுக்குக் கீழாக Estate & Urban Unit  எனப்படுகின்ற மருத்துவ பகுதி ஒன்று இருக்கின்றது. இந்த பகுதிக்கு கீழாக தோட்ட வைத்தியசாலைகள் அரச வைத்தியசாலைகளாக திட்டமிட்ட அடிப்படையில் மாற்றப்பட வேண்டும்.

தோட்ட வைத்தியசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு அரச வைத்திய முறைமைக்குக் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். MBBS தரத்திலான வைத்தியர்களை தோட்ட வைத்தியசாலைக்கு நியமித்து மருந்துகளை அரச வைத்தியத்துறையினூடாக அவர்களுக்கு வழங்கி  தோட்டப்புற மக்களையும் தேசிய சுகாதாரத்திற்குள் கொண்டு வரவேண்டும் எனும் கோரிக்கை கடந்த நல்லாட்சி கால பாராளுமன்றத்தில் மலையக பிரதிநிதிகள் குரல் ஒலித்தது.

பொகவந்தலாவ,  சீனாகலை,  பூசாரி தோட்டப்பகுதியில் 400 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனையின் போது.

மக்கள் பிரதிநிதிகளும் அவர்கள் நியமித்த அதிகாரிகளும்

எனினும் இப்போது கொரொனா பரவலினால்  தனிமைப்படுத்துவதற்கு இடங்களைத் தெரிவு செய்வதற்கு மலையக மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும். மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகள்,  பாடசாலை கட்டிடங்கள், வாசிகசாலைகள் ஆகியனவற்றை தோட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்புடன் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு சிவில் சமூக பிரதிநிதிகள் கோரிக்கை வைக்கும் நிலை வந்துள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் வாழும் மலையகத்தில் பி.சி.ஆர். இயந்திரங்களும்   அவசியம் தேவைப்படுகின்றன. குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில்  அம்புலன்ஸ் வாகனங்கள்  இல்லாமையினால் கொவிட் இனால் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடி உதவிகள் வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே. ஆனால், இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என நோக்கினால் ஏமாற்றமே எஞ்சுகிறது.

நிவாரணம்

கொரொனா கால நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான அரச சுற்றுநிரூபம் பெருந்தோட்டத் தொழிலாளர்களை உள்வாங்கி இருக்கவில்லை என்பது முக்கியமானது.  

வறுமையான குடும்பங்களுக்கு அமைவாக அரசாங்கத்தின் உலர் உணவு நிவாரணம் மற்றும் 5,000 கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் மலையகத் தோட்டப்பகுதி மக்கள் இது தொடர்பான நிதிக் கொடுப்பனவு நடவடிக்கையில் உள்வாங்கப்படவில்லை.  

மலையக மக்கள் அரச பொது நிர்வாகத்தில் முழுமையாக உள்வாங்கப்படாமையே இதற்கான காரணம். அதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை ஓரளவுக்கு நிவர்த்திக்கும் வகையிலேயே மலையக அதிகார சபை உருவாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். அந்த சட்டத்தை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை.அந்தச் சட்டத்தின்படி பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையானது மலையக விடயங்களைக் கையாளும் அமைச்சின் கீழே உள்ளது. அந்த மலையக  அதிகாரசபையின் அனைத்து வெற்றிடங்களும் நிரப்பபட்டுள்ளன.  அந்தப் பதவிகளை வகிப்போர் யார்? அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ? என்ற எந்த விபரமும் வெளியே தெரிவதாக இல்லை.

தீர்வு

லயத்து வாழ்க்கையில் வாழ்ந்து பலர் இன்று உயர் நிலையை அடைந்து தான் பரம்பரையாக வாழ்ந்து வந்த அறைகளை  புதிதாக திருத்தி அமைத்து வாழக்கூடிய சூழ்நிலைகள் இருக்கின்ற போதிலும் காணி உரிமை இல்லாததால் இன்றும் நூற்றாண்டு கால அமைப்பிலேயே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர்.

லயன் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று மலையக அரசியல்வாதிகளால் முயற்சிகள் மேற்கொள்கின்ற போதிலும் அது இன்னும் முழுமைப்பெற்றதாக இல்லை.

தொழிற்சங்க அரசியல் முறைமையின் ஊடாக மக்களை தன்னகத்தே வைத்துள்ள தொழிற்சங்கங்கள் மக்களின் நலன்களில் எந்தளவிற்கு அக்கறையாக இருந்திருக்கின்றது ? இருக்கின்றது என்பதை மலையகத்தில் அவர்கள் வாழும் முறைமையைக் கொண்டு கணிக்கலாம்.

ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் மலையகத்துக்கென வீடமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டு மலையக மக்களுக்கு  தனிவீட்டுத் திட்ட முறைமை பேசப்பட்டது. அன்று ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கமைவாக  முன்னெடுக்கப்பட்டிருந்தால் இன்று மலையக பகுதிகளில் லயன் முறைமைகள் இல்லாதொழிக்கப்பட்டு கிராமங்களாகவே காட்சியளித்திருக்கும்.

அவ்வப்போது இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களின் விளைவு தனிவீட்டுத் திட்டம் , மாடி வீட்டுத்திட்டமாக உருவெடுத்து சில இடங்களில் மாடி வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டு அது முழுமையாக சாத்தியப்படாமையினால், பின்னர் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனி வீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. பல விமர்சனங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வீடுகள் இக்காலப்பகுதிகளில் அமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது  

அத்துடன் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் ஏற்கனவே நாட்டப்பட்டுள்ள அடிக்கல்லுக்கு என்னவாகும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை தேசிய மட்ட சராசரி நிலைகளோடு எடுத்துச்செல்லக் கூடியவகையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் அவசியம். பல வருடங்களாக மலையகத்தின் அடையாளச்சின்னங்களாக, தேசத்தின் அவமானச் சின்னங்களாக  இருந்து வரும் லயன் குடியிருப்புகள் மக்களுக்கான வாழ்விடங்கள் அல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும் .

அவற்றை அகற்றி அவர்களுக்கு தனிவீடுகளை பெற்றுக்கொடுக்கும் போதே கொரோனாவில் இருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கும். அதனைவிட, பெருந்தோட்ட மக்களும்  சுதந்திரமான மக்கள்  எனும் நிலையில் வாழக்கூடியதாக இருக்கும். அதே போல சுகாதாரம் உள்ளிட்ட அரச பொது சேவைகளை மலையகப் பெருந்தோட்ட மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் அரசியல் செல்நெறி குறித்த சிந்தனையும் செயற்பாடும் மலையகத்திற்கான தலையாய தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

How Corona Impacts The Estate Sector

වතු ක්ෂේත්‍රයට කොරෝනාවේ බලපෑම

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts