சமூகம்

மொரட்டுவை: வேறுபட்டவர்களுக்கான மரத்தளபாடங்கள் ஒன்றுபட்டு உருவாக்கப்படுகிறது!

சரத் மனுல விக்கிரம

வீடுகளை ஆடம்பரமாக அலங்கரிக்கும் மரத் தளபாடங்களைச் செய்யும் இவர்களில் பலரது வீடுகளில் மரத்தாலான தளபாடங்கள் இல்லை. அவர்களது வீடுகளில் மறைப்புக்கான திரைச் சீலையாக பெண்களின் சாரிகளே தொங்கவிடப்பட்டுள்ளன….

ஒரு குழுவாக இருந்து கலந்துரையாடிய பின்னரே நாற்காலிகள் தொகுதியொன்று தயாரிக்கப்படுகின்றது. எந்தவிதமான மரத் தளபாட, கூரை, தச்சு வேலைப்பாடுகளாக இருந்தாலும் அவை மக்களை ஒன்றிணைத்து ஐக்கியப்படுத்துகின்றன. தச்சு வேலையானது இணைப்பு பொருத்தலாக மட்டுமல்லாது மக்களை ஒன்றிணைப்பதாகவும் அமைகின்றது.

இன, மத வேறுபாடுகள் இன்றி செல்வந்த, மற்றும் ஏழை வகுப்பினராக இருந்தாலும் வேறுபாடின்றி அவர்களது வீடுகளுக்கு தேவையான மரத் தளபாடங்களை தயாரித்து வழங்கும் இடமாக மொரட்டுவை நகரம் இருக்கின்றது. நாட்டில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ என்ற வேறுபாடுகள் இன்றி தளபாடங்கள் தேவைப்படுகின்றன.

மெராட்டுவையில் தமிழ், முஸ்லிம், பௌத்த மற்றும் கிறிஸ்தவர்கள் என்ற அடிப்படையில் எல்லா இனத்தவர்களும் இந்த தச்சு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். மொரட்டுவையில் சராசரியாக அறுபதினாயிரம் குடும்பங்கள் அளவில் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

Somasiri-Waduge சோமசிறிவடுகே

இந்த துறையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், தச்சர்கள், தளபாடங்களைக் கொண்டு செல்பவர்கள், பாவனையாளர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் நாம் மொரட்டுவையில் சந்தித்தோம்.

மரத்தளபாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக சமாதான நீதவான் சோமசிறிவடுகே கடமையாற்றுகின்றார். சோமசிறிவடுகே மொரட்டுவையில் தச்சு வேலைத் தொழிலாளர்கள் சமூகத்தில் ஒரு சமூகத்தலைவராகவும் மர வேலைப்பாட்டு தொழிலாளர்களின் வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றார்.

மொரட்டுவையின் வரலாற்றை விளக்கும் போது சோமசிறிவடுகே தெரிவித்ததாவது “போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற வெளிநாட்டவர்கள் இலங்கையை ஆக்கிரமித்து ஏகாதிபத்தியம் செலுத்திய மற்றும் பண்டைய காலம் முதல் மொரட்டுவை பிரதேசம் தச்சு மற்றும் மரத்தாலான வேலைகளுக்கு நல்ல பிரசித்தம் பெற்ற இடமாக இருந்து வருகின்றது. அப்போதைய காலப்பகுதியில் தேவாலயங்களுக்கு தேவைப்பட்ட மரத்தாலான தளபாடங்கள் தயாரிக்கப்பட்டது இங்கிருந்தாகும். அதனால் அதிகமானவர்கள் தச்சர்களாக தொழில் புரிந்ததோடு நாட்டில் பல பாகங்களில் இருந்தும் மிகவும் குறைந்த விலைக்கு தளபாடங்களை கொள்வனவு செய்ய மொரட்டுவைக்கே அனைவரும் வருகைதந்தனர். தச்சு வேலையானது இங்கு மரபு ரீதியான ஒரு தொழிலாகும். பாவனையாளர்களது பொருளாதார இயலுமைக்கு ஏற்ப நாம் 1-3 என்ற அடிப்படையில் தளவாடங்களை தரப்படுத்தி இருக்கின்றோம். மெரட்டுவையில் உள்ள மரத் தளபாட களஞ்சியசாலைகள் நாடு முழுவதற்கும் தளபாடங்களை விநியோகம் செய்கின்றன. மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யும் வியாபரிகள், அவற்றைக் கொண்டு செல்வதற்காக போக்குவரத்தை வழங்கக் கூடியவர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய ஒரு வலைப்பின்னல் இங்கு இருக்கின்றது.

நாட்டின் எல்லா பிரதேசங்களில் இருந்தும்; மெரட்டுவைக்கு மரம் கொண்டு வரப்படுகின்றது. ஒரு மரம் இன்னொரு மரத்தை சந்திக்கும் இடம் மொரட்டுவை என்ற அடைமொழி ஒன்றும் இருக்கின்றது. நாங்கள் மரத்தாலான தளபாடங்களை ஆகக் கூடுதலாக பயன்படுத்துகின்றோம். மரத்தின் எந்தவொரு பாகமும் இங்கு வீண்விரயமாவதில்லை. அதன் உச்சபட்ச பலன் எடுக்கப்படுகின்றது. மரத்தூள், மற்றும் மரக் கழிவுகள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. இந்த கைத்தொழிலிலும் ஒரு வலைப்பின்னல் காணப்படுகின்றது.

அஜித் பீரிஸ் மொரட்டுவையில் மரத்தளபாட தச்சு தொழில் நிலையத்தை நடத்தி வரும் வர்த்தக நிலைய சொந்தக்காரார். மரத்தை அறுப்பது முதல் வீட்டுக்கு வீடு மரத்தால் செய்யப்பட்ட தளபாடங்களை விநியோகம் செய்வது வரையில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அளவில் இந்த தொழிலுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன, மத வேறுபாடுகளை மறந்தவர்களாக பணக்காரர், ஏழைகள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒன்றாக தொழிலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். வடிவமைப்பவர்கள், மக்களுக்கு அறிவூட்டுபவர்களாக இருந்தாலும் தொழில் உதவியாளர்களாக வேலை செய்பவர்கள் அவ்வளவாக படித்தவர்களாக இல்லை. இவர்கள் அனைவரும் பாவனையாளர்களின் தேவைக்கு ஏற்ப தரமான உற்பத்திகளை வழங்க போராடுகின்றனர். இதன் அதிகமான பாகங்களை விநியோகிக்கும் விற்பனையாளர்களாக முஸ்லிம்;கள் உள்ளனர். சில தொழில் நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தளபாடங்களுக்கு வழுவழுப்பான முலாம் பூசும் வேலைகளில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.

சில சந்தர்ப்பங்களில் விநியோகிப்பவர்கள் தமிழர்களாகவும் உள்ளனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தளபாடங்கள் பௌத்த பிக்குமார் அவர்களது ஆலயங்களில் மக்களுக்கு உபன்னியாசம் செய்வதற்காக அமரும் அதி உயர்வான ஆசனமாகவும் இருக்கின்றது. கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள மக்கள் அமரும் நீண்ட ஆசனங்களாகவும் உள்ளன. இவை மட்டுமல்லாமல், இந்து ஆலயங்களில் உள்ள தேர் சக்கரங்கள் கூட இவ்வாறு மெரட்டுவையில் உற்பத்தி செய்யப்படுபடுகின்றது.

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு பிடித்துக்கொண்டு நடப்பதற்கான சிறிய மூன்று சக்கர தள்ளுவண்டி, முன்னும் பின்னும் ஆடுவதற்கான மரக்குதிரை, பாடசாலைத் தளபாடங்கள், சவப் பெட்டிகள் உட்பட அனைத்துவிதமான தளபாட பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை மக்கள் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று பயன்படுத்தி மகிழ்கின்றனர். அதனால் மொரட்டுவை ஒரு பல்லின அடையாளத்தின் சின்னம் என்று கூற முடியும்.

சில வீடுகளில் தொங்கவிடப்பட்டுள்ள திரைச் சீலையை பொருத்துவதற்கான மர வேலைப்பாடுகள் கூட மொரட்டுவையில் செய்யப்படுகின்றன. வீடுகளை ஆடம்பரமாக அலங்கரிக்கும் மரத் தளபாடங்களைச் செய்யும் இவர்களில் பலரது வீடுகளில் மரத்தாலான தளபாடங்கள் இல்லை. அவர்களது வீடுகளில் மறைப்புக்கான திரைச் சீலையாக பெண்களின் சாரிகளே தொங்கவிடப்பட்டுள்ளன. கடல் அரிப்புக்குள்ளாகி இருக்கும் கரையும் கடலும் இணைந்ததாக அமைந்துள்ள தெற்கிற்கான புகையிரத பாதை அமைந்திருக்கும் மொரட்டுவை பிரதேசத்திற்கு இடையில் வரிசையாக பலகையாலான பெட்டி வீடுகள் அமைந்துள்ளன. அவையே அதிகமான தொழிலாளர்களது குடியிருப்புக்களாகும். அவர்களால் வடிவமைக்கப்படுகின்ற மரத்தாலான தளபாடங்கள் தருகின்ற அழகின் ஆழத்திற்கு அவர்களது வாழ்க்கை ஒருபோதும் அழகானதாக இல்லை.

“வறுமை காரணமாக அதிகமான குழந்தைகள் பாடசாலைக் கல்வியை இடையில் தொடர வழியில்லாமல் அல்லது இடை நடுவில் முடித்துக்கொள்ளும் நிலையில் அவர்களது குழந்தைகள் உள்ளன. உடுதுணி, உணவு, பாடப் புத்தகங்கள், பிரத்தியேக வகுப்புச் செலவுகள் என்று பலவிதமான தேவைகளுக்கும் செலவு செய்ய பெற்றோரிடம் பணம் இல்லாத அளவிற்கு வறுமை நிலையிலும் உள்ளனர். அன்றாட கூலி வேலை வாழ்க்கைத் தேவைக்கு மட்டுமே போதுமானதாகும். “அதிகமான கூலித் தொழிலாளர்கள் போதைப் பொருள், மதுபானம் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்களாக உள்ளனர். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு அதிக நேரத்தை செலவிட்டு உழைக்கின்றனர்”. என்று மொரட்டுவெல்ல கிராமத்தில் வசிக்கும் ஒருவரான சேனாதீர கூறுகின்றார்.

மொரட்டுவையில் உள்ள அதிகமான வியாபாரிகள் தெரிவிக்கையில் ‘இந்தோனேசியாவில் இருந்து அண்மைக்காலமாக இறக்குமதி செய்யப்படுகின்ற மர உற்பத்தி பொருட்களால் உள்நாட்டு மரத்தளபாட உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை வியாபாரிகள் எதிர்நோக்குகின்ற பாரிய சவாலாகவும் அது இருந்து வருகின்றது.’ என்று கூறுகின்றனர்.
மொரட்டுவையில் உள்ள மரத்தளபாட தொழில் துறையினர் மேலும் பல சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். மரத் தளபாட தொழிலுக்கான அனுமதிப் பத்திரம் பெற வேண்டிய தேவை மற்றுமொரு சவாலாகும். எவ்வாறாயினும் நல்ல அனுபவம் பெற்ற 73 வயதுடைய சமாதான நீதவானாகிய மரத்தளபாட தொழிலாளர் சங்கத்தின் தலைவரான சோமசிறிவடுகே இவ்விடயம் தொடர்பாக கூறுகையில்,

“விவசாய பொருளாதாரத்தின் வீழ்ச்சியானது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறி இருக்கின்றது. எங்களிடம் தளபாடங்களுக்கு பெரியளவில் கேள்வி இருந்தாலும் மக்களிடம் போதுமான அளவிற்கு பணம் இல்லை. நெல் அறுவடை காலத்தில் எங்களிடம் களஞ்சியப்படுத்தப் பட்டிருக்கும் மேதிக உற்பத்திகளை நாங்கள் பொலநறுவைக்கு அனுப்பி விற்பனை செய்தோம். மிளகு அறுவடைக் காலத்தில் மொனராகலைக்கு அனுப்பினோம். விவசாயிகளது கரங்களில் பணம் இருந்தால் எங்களது பொருளாதாரமும் செழிப்பாக இருக்கும். இந்த நிலைக்கு முகம் கொடுப்பதற்காக விவசாயிகளும் கைத்தொழில் துறையினரும் புதிய வியூகங்களை எதிர்பார்க்கின்றனர். எங்கள் அனைவருக்கும் பொருளாதாரத்தில் சிறப்பை ஏற்படுத்தக்கூடிய தளபாடங்களை நாங்கள் தயாரிக்க வேண்டும்” என்று வடுகே உறுதிப்பட கூறுகின்றார். மொரட்டுவை மரத்தளபாட உற்பத்தியாளர்களுக்கும் கொள்கை திட்டமிடல் அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படுகின்ற இடைவெளியைப் பற்றி அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

The article was originally published on the catamaran.com.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts