சமூகம்

‘எண்ணிம’ (Digital) காலத்தில் இலங்கை!? கிராமங்களிலும் ‘எண்ணிம’ வியாபாரம்!

அஹ்சன் ஆப்தார்

அத்தியாவசியப் பொருள்களை இணையவழி விற்பனை செய்துவரும் இந்த கிராமத்தவர்கள் இன்னும் பல தொழில்களைச் செய்வதற்கு இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தனது சொந்த ஊருக்கு வெளியே சலூன் வைத்திருந்த அன்சாப் (வயது 24) இப்போது தனது சொந்த ஊரில் நடமாடும் சிகையலங்காரம்…..

ஊரடங்குச்சட்டத்தினால் குருணாகல் மாவட்டத்தில் உள்ள பரகஹதெனிய எனும் பல்லின மக்கள் வாழும் ஊரில் எல்லா வியாபாரிகளையும் போல ரஸானுக்கும் கடையை மூட வேண்டிய கட்டாயம். திடீரென ஊரடங்கு என அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே கொள்வனவு செய்த மீன்களை விற்க முடியாத நிலைக்கு ரஸான் (50) தள்ளப்பட்டார். ஆனால் எல்லாம் முடிந்து விட்டது என்று தளர்ந்து விடாமல் தனது மச்சான் மொஹமட் ரபீக்குடன் (வயது 44) இணைந்து வீட்டிலிருந்தே மீன்களை விற்றுவிடுவதற்கான நடவடிக்கைளை அவர் மேற்கொண்டார்.

‘மீன்களை விற்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோது அவற்றை ஒன்லைன் மூலம் விற்கலாம் என்ற யோசனை தோன்றியது. ஆனால் கொரோனாவின் தீவிரத்தினால் பொலிஸாரும் கடுமையாகவே இருந்தனர். அதனால் இதைச் செய்ய முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. பரகஹதெனிய வியாபாரிகள் சங்கத்தின் உதவியுடன் பொலிஸாரிடம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டியதால் விளம்பரங்களை தயாரித்து பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப்பில் ஓரிரு மணித்தியாலங்களுள் வெளியிட்டோம் அதுதான் இன்றளவும் எமக்கு கைகொடுக்கிறது” என்கிறார் மொஹமட் ரபீக்.

வீடுகளுக்குச் சென்று சிகையலங்காரம் செய்யும் காட்சி

விளம்பரங்களை சமூகவலைத்தளங்களில் பார்ப்பவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு எந்த மீன் எவ்வளவு வேண்டும் என சொல்வார்கள். அதன் பிறகு குறித்த வீட்டுக்கு அவர்கள் கேட்ட மீனை கொண்டுபோய் கொடுத்துவிட்டு அதற்கான விலையை ரஸான் பெற்றுக்கொள்வார். இந்த நடமாடும் சேவையில் அறக்குளா, பாரை, லின்னா, உருல்லோ, தலபத், நண்டு, இறால் என பல மீன்களை அவர் விற்றுவருகிறார்.
இதனால் குருணாகல் மாவட்டத்தில் உள்ள பரகஹதெனிய எனும் பல்லின மக்கள் வாழும் அந்தக் கிராமம், ஊரடங்கிலும் வியாபரம் செய்யவும் தமது வழமையான வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யவும் பழகிவிட்டனர். சமையலுக்கு தேவையான மரக்கறிகள், பலசரக்குகள், மருந்துகள், எரிவாயு என சகல அத்தியாவசிய பொருட்களும் வாசலுக்கே வருகின்றன. அதே நேரம் மிகக்கவனமாக கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் கைக்கொண்டுவருகின்றனர்.

ரஸானிடம் மீனை கொள்வனவு செய்ய பார்த்துக்கொண்டிருக்கும் சத்தியவானி கருத்து தெரிவிக்கையில் ‘ஊரடங்கு காலத்திலும் மீன் போன்ற முக்கியமான ஒரு உணவுப்பொருள் கிடைப்பது பெரிய உதவி. இங்கே எல்லா மீன்களும் கிடைக்கின்றன. இது இலகுவாகவும் இருக்கிறது. இந்தப்பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பிறகும் இதுபோன்ற நடமாடும் சேவைகள் தொடர்ந்தால் எங்களைப் போன்ற தொழில் செய்யும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்” என்கிறார்.
வழமையாக தேங்காய்களை பரகஹதெனியவில் இருந்து திருகோணமலைக்கு ஏற்றிச்செல்லும் வாகனம் திரும்பி வரும் போது அதில் மீன்களை கொண்டுவருவதே வழக்கம். இந்த ஊரடங்கு காலத்திலும் அதைத் தொடர்வதற்கான எழுத்துமூல அனுமதியையும் ரஸான் மாவத்தகம பொலிஸாரிடம் இருந்து பெற்றுள்ளார். இந்த விற்பனை முறையை மக்கள் அதிகம் விரும்புவதால் எதிர்காலத்திலும் இதைத் தொடர்வதற்கு எண்ணியுள்ளார் ரஸான்.
“ஊரடங்கு தளர்த்தப்படும்போது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கோழிகளை வினியோகித்துவருகிறேன்” என்கிறார் இதே இடத்தைச் சேர்ந்த நஸ்மி நாஸிர்.
சமூக ஊடகங்களே வாழ்வுக்கு தீங்கு என்றவர்கள் பலர், சமூக ஊடகங்களை எப்படிப்பயன்படுத்துவது என கற்றுக்கொள்கிறார்கள்.!

இதற்காக வேய் (றுயுலு) என்ற குழுவின் ஊடாக குரல் பதிவுகளை அனுப்பி தனது வியாபார செயற்பாடுகளுக்கான விளம்பரங்களை செய்துள்ளார். வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக் ஊடாகவும் விளமபரங்களை செய்தார். இதற்காக அவர் எந்தவிதமான சிறப்பு ‘அப்’ களை அவர்பாவிக்கவில்லை. சமூகஊடக செய்திப்பரிவர்த்தனைமூலம் அதைத் செய்துவருகிறார். ‘எனது குரல் பதிவுகளையும் விளம்பரங்களையும் பார்த்தவர்கள் தொலைபேசி மூலம் அழைப்புகளை மேற்கொண்டு தமது ஓ;டர்களை மேற்கொண்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் கோழிகளை கேட்டவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கொடுத்து விட்டு அதற்கான கட்டணத்தை பெற்றுக்கொள்கிறேன்.” என்கிறார் நஸ்மி நாஸிர்.

அதேவேளை பரகஹதெனியவில் பொல்வத்த எனும் இடத்தில் சில்லறைக்கடை ஒன்றை நடத்திவரும் ரிஸ்மி (வயது 39) இப்போது தனது முச்சக்கரவண்டியில் பொருட்களை ஏற்றி விற்றுவருகின்றார். அவரது நடமாடும் இந்த வியாபார சேவையில் முகக்கவசம், முறுக்கு, பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. தனது கடைக்கு அருகாமையில் உள்ள சின்னச் சின்ன பிரதேசங்களில் இருந்து வருகின்ற மக்களுக்காக அந்த மக்கள் வசிக்கும் தெருக்களில் இவர் செல்கிறார். ஆங்காங்கே நிறுத்தி வைத்து கூவி தகவல் சொல்கிறார். மக்கள் ஓரிருவராக வெளியில் வந்து கொள்வனவு செய்கிறார்கள்.
பரகஹதெனியவின் சிங்கபுர எனும் பகுதியில் இம்ரானும் (வயது 32) கலதெனியவும் (வயது 36) மரக்கறி விற்றுவருகிறார்கள். உண்மையில் இவர்கள் இரும்பு வியாபாரிகள். “இன்றைய சூழலில் இரும்பை விற்கவும் முடியாது வாங்கவும் ஆளில்லை. இதனால், மரக்கறி வியாபாரத்தில் இறங்கினோம். இதனால் ஊரடங்கு தளர்த்தப்பட்ட 8 மணித்தியாலத்தில் தம்புள்ளைக்கு சென்று இரும்பு ஏற்றும் லொறியில் மரக்கறிகளை ஏற்றிவருகிறோம். ஓன்லைன்னில் கேட்பவர்களுக்கு மொத்தமாகவும் கொடுக்கிறோம்.” என்கிறார்.
அதே பகுதியில் கொத்து பராட்டா மற்றும் கறிரொட்டி போன்றவற்றை இணையவழி; மூலம் விற்கிறார் இர்பான் (வயது 50). ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு ஆட்ட மா விற்பனையாளர் ஆவார். கொழும்பில் இருந்து வரும் பஸ் சாரதி ஒருவரிடம் இருந்து ஆட்ட மாவை பெற்று குருணாகல் நகரத்தில் இவர் விற்பனை செய்வார். ஆனால் கொரோனா வைரஸ் அச்சத்தினால் ஏற்பட்டுள்ள ஊரடங்குச்சட்டத்தினால் அதற்கான எந்த வாய்ப்பும் இவருக்கு இல்லை. இவருடைய 13 வயது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏனைய குடும்பங்களை விட இவருக்கு பணத்தேவை இருந்துகொண்டே இருக்கின்றது.

‘மகளுக்கு சுகமில்லை என்பதால் ஏதாவது தொழில் செய்யவே வேனும். எனக்கு ஹோட்டல் தொழில் ஓரளவு தெரியும். இதனால் ரொட்டி கொத்து என்பவற்றை பிள்ளைகளின் உதவியுடன் ஒன்லைனில் விற்க முடிகின்றது. கொழும்புக்கு சென்று ஆட்ட மா வாங்கி வர வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் கொரோனாவும் பயங்கரமானது. என்ன செய்வது இங்கு இருந்து கொள்வனவு செய்து சாப்பாடுகளைச் செய்துவருகிறேன்” என்கிறார். இர்பானிடம் கொத்து, பராட்டா போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு ஒரு இளைஞர் கூட்டம் இருக்கின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு வசதியிருப்பதை தாம் செய்த பாக்கியமாக அந்த இளைஞர்கள் கருதுகின்றார்கள்.

இப்படி அத்தியாவசியப் பொருள்களை இணையவழி விற்பனை செய்துவரும் இந்த கிராமத்தவர்கள் இன்னும் பல தொழில்களைச் செய்வதற்கு இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தனது சொந்த ஊருக்கு வெளியே சலூன் வைத்திருந்த அன்சாப் (வயது 24) இப்போது தனது சொந்த ஊரில் நடமாடும் சிகையலங்காரம் செய்யும் வேலையைத் தொடங்கியுள்ளார். இதற்காக முன்கூட்டிய பதிவுகளை ஏற்றுக்கொண்டு சென்று வருகிறார். சவரக்கத்தி முடி வெட்டும் இயந்திரம் போன்றவற்றுடன் தனது நடமாடும் சேவையை ஆரம்பித்துவிட்டார்.
‘வீட்டுக்கு வந்து சிகையலங்காரம் செய்வதால் தேவையற்ற காத்திருப்பை தவிர்க்கலாம். நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இவ்வாறு நடமாடும் சிகையலங்கார சேவை இருப்பது மிகவும் சிறந்த ஒரு விடயமாகும்” என அன்சாபிடம் சிகையலங்காரம் செய்துகொண்ட ரொஸான் (வயது 27) கூறுகிறார். அதே நேரம் கோரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான ஒழுங்குகளையும் இவர்கள் பின்பற்ற தவறவில்லை.

இவ்வாறான நடமாடும் சேவையை பெரிய பள்ளிக்கு முன்னாள் பேக்ஹவுஸ் ஒன்றினை நடத்தும் அஸாம் (வயது 37) தற்போது தமது வாடிக்கையாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பாண், பனிஸ் போன்றவற்றை தனது முச்சக்கரவண்டியில் கொண்டு சென்று விற்கத்தொடங்கி விட்டார். ‘பலர் தொலைபோசி மூலம் அழைக்கிறார்கள். தங்கள் வீதிகளுக்கு வரும்படி. பலர் இதற்கு அனுமதி இருப்பதை எங்களுக்கு உணர்த்தினார்கள். அதன்படி நான் செயற்படுகிறேன்.” என அஸாம் தெரிவிக்கின்றார்.
நகரங்களில் இவ்வாறு நடமாடும் சேவைகள் சாதாரண நாட்களிலும் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற கிராமங்களில் நடமாடும் சேவைகளை அதுவும் எண்ணிமத்தினூடாக செயற்படுத்துவது என்பது அதிதானதுதான். அந்தளவுக்கு இந்த காலகட்டம் அனைவரையம் சமூக ஊடகத்தின்பால் ஈர்த்து, அதையே தமக்கான வாழ்வாதார தொடர்புக்கு பயன்படுத்த வைத்துள்ளது. சமூக ஊடகங்களினூடாக மக்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முனைந்துள்ளமையை நாம் வளர்ச்சி எனலாமா?? கிராமங்களிலும் (டிஜிற்றல்) எண்ணிம தொழில்நுட்பம் மக்களை வாழவைக்கிறது. சமூக ஊடகங்களே வாழ்வுக்கு தீங்கு என்றவர்கள் பலர் சமூக ஊடகங்களை எப்படிப்பயன்படுத்துவது என கற்றுக்கொள்கிறார்கள்.! கொரோனாவின் ஆபத்தையும் சமூக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் தமது வாழ்வாதாரத்திற்கான பொருளாதார நடவடிக்கைகளிலும் பலர் இறங்கி வருகின்றனர். இதில் இன மத பேதம் எதுவும் இல்லை. எல்லோருமே வாழ்வதற்காக, வாழ்வாதாரத்தை தேடுவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.!

The article was originally published on the catamaran.com.
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts