கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

முன்பள்ளியில் உற்சாகமாக துள்ளவேண்டிய குழந்தைகள் பிள்ளைமடுவங்களில் தூங்குகின்றன!

அருள்கார்க்கி

பெருந்தோட்டங்களில் உள்ள முன்பள்ளிகள் விருத்திசெய்யப்படவேண்டும்

குழந்தை ஒன்று பிறந்தது முதல் 5வயது வரையான காலப்பகுதி முக்கியமானதாகும். குழந்தையின் உடல் வளர்ச்சி, இயக்க விருத்தி, அறிவு வளர்ச்சி, மொழிவிருத்தி பிள்ளைக்கும் சமூகத்திற்குமான தொடர்பு ஆகியவை விருத்தியடையும் காலமாகும். ஒரு மனிதனின் வாழ்நாளில் விருத்தியடையக்கூடிய நுண்ணறிவு வளர்ச்சியில் 50 வீதமானவை விருத்தியடைவது இக்காலத்தினுள்தான் என்பது ஆய்வுகளின் முடிவு. இக்காலப்பகுதியில்தான் ஒரு பிள்ளையின் கோபம், பயம், கலக்கம், பின்வாங்கல் போன்ற எதிர்மறை மன எழுச்சிகளும் உருவாகின்றன என்கின்றனர். எனவே இவற்றை சரியான முறையில் இனங்கண்டு குழந்தையை தைரியமூட்டல், மகிழ்வூட்டல், உற்சாகப்படுத்தல், ஊக்கப்படுத்தல், அமைதிப்படுத்தல் செய்யவேண்டியது மிக முக்கியமானதாகும். 

இந்த நிலையில் இலங்கையின் பெருந்தோட்ட மக்கள் நூற்றாண்டு காலமாக 3 மாதத்தில் இருந்து 5 வயது வரை ‘பிள்ளை மடுவத்தில்’ பிள்ளையை விட்டு தாயும் தந்தையும் வேலைக்கு சென்று வருகிறார்கள். அங்கே பிள்ளைகளை பாதுகாப்பதும் உணவூட்டுவதும் (பெற்றோர் கொடுக்கும் உணவு) மட்டுமே செய்யப்படுகிறது. பிள்ளை மடுவங்களை தோட்ட நிர்வாகமே நடத்துகிறது. அந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் மட்டும் அந்த அந்த தோட்டங்களில் உள்ள பிள்ளை மடுவங்களில் தமது பிள்ளைகளை விட்டுச்செல்வார்கள். 

“ நான் இத்தொழிலுக்கு வந்த ஆரம்பத்தில் பிள்ளை மடுவங்களில் எவ்வித வசதிகளும் இல்லை. வெறுமனே மலைக்கு செல்லும் தாய்மாரின் பிள்ளைகளை அவர்கள் திரும்பி வந்து பொறுப்பேற்கும் வரை கட்டிடம் ஒன்றில் வைத்து பராமரிக்கும் வேலையையே நான் செய்தேன்.அந்த கட்டிடம் கூட ஒழுங்காக இருக்காது.” என்கிறார் ஒரு குறித்த சிறுவர் பராமரிப்பு நிலைய பொறுப்பாளர் திருமதி. செல்வராணி. 

இந்த கூற்றுக்கு பின்னால் பெருந்தோட்ட முன்பள்ளிகளின் உடைந்து ஒழுகும் வரலாறு உள்ளது. குறிப்பாக பிள்ளை மடுவங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் ஆரம்பகாலத்தில் இருக்கவில்லை. காலையில் அவை பிள்ளை காம்பிராக்களாகவும் மாலையில் கொழுந்து நிறுக்கும் மடுவங்களாகவும் இருந்தன. குறிப்பாக சொல்லப்பேனால், நிரையாக கட்டப்பட்ட ஏணைகளில் தூங்கும் பிள்ளைகள் எழுந்தால் பால், உணவு கொடுத்து மீண்டும் தூங்கவிடுவது மட்டுமே நடைபெற்று வந்தது. பிள்ளையை பாதுகாக்கும் செயற்பாடு மட்டுமே.  அங்கு பணிபுரிவோர் ஆயாக்கள் எனவே அழைக்கப்பட்டனர்.

இந்த ஆயாக்களுக்கு தோட்டங்களே சம்பளம் வழங்கும். அதற்கு மேலதிகமான எவ்வித பயிற்சியோ, அடிப்படை வசதிகளோ அவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. அந்த நிலை இப்போதும் பல இடங்களில் தொடர்வதுதான் தோட்ட மக்களை தொடர்ந்தும் நலிவற்ற சமூகமாகவே இருக்க வைக்கிறது. குழந்தைகளின், அடுத்த சந்ததியின் முக்கியமான காலப்பகுதி வீணே மழுங்கடிக்கப்படுவது ஏன்?

இலங்கையானது ஆரம்ப காலம் தொட்டு முதன்மையான கல்வி குறிகாட்டிகளில் தெற்காசிய வலயத்தில் ஏனைய நாடுகளை விடவும் அபிவிருத்தியடைந்து காணப்படுகின்றது. நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் கொண்டு வந்த கல்வி கொள்கைகள், கல்வி சார் சீர்த்திருத்தங்கள் என்பன இலங்கையானது எழுத்தறிவிலும், பொதுக்கல்வியிலும் இன்று மேலோங்கி இருப்பதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஒரு சமூகம் மட்டும் ஏன் இப்படி உருவாக்கப்படுகிறது?

இலங்கையில் 1997 இன் 1 வது இலக்க ஒழுங்கின் படி 5 – 14 வயது வரையான பிள்ளைகளுக்கு கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இதன் உச்ச வயதெல்லை 16 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையில் கட்டாய கல்வி வாய்ப்புகளில் முக்கியமான அம்சம் தமது சொந்த மொழியில் அவர்கள் ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை பெற்றுக்கொள்ள முடியும். இதைப் பெறுவதில் இருந்து தோட்டப்புற மக்கள் விலகுவதன் காரணம் என்ன? பாடசாலைகளில் அதிக இடைவிலகல் தோட்டப்புறங்களில் நடைபெறுவதாக கூறுகின்றனர். வறுமையை விட பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் குறைவாக உள்ளமையே காரணம். கல்வி நாட்டம் குறைவதற்கு 1இருந்து 5 வயதான முக்கிய காலப்பகுதியில் அந்தக் குழந்தைகள் எப்படி வழிநடத்தப்பட்டார்கள் என்பது முக்கியமாகிறது. ஆரம்பத்தில் அத்திவாரமே இடமால் எப்படி பெரும் கட்டிடத்தை உருவாக்க முடியும்? 

தேசிய ரீதியில் முன்பள்ளிக் கல்வியானது இன்று நகர்ப்புறங்களை மையப்படுத்தி சர்வதேச தரத்துக்கு ஈடாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் சமவாய்ப்புகள் பேணப்படுவதாக கூறப்படும் கல்வித்துறையில் பாரபட்சமாக நோக்கப்படும் பெருந்தோட்ட முன்பள்ளிக் கல்வியின் வளர்ச்சியானது இன்றுவரை முன்னேற்றமடையவில்லை. 

தேசிய பொருளாதாரத்திலும், ஆட்சி முறையிலும் பெருந்தோட்ட மக்கள் முழுமையாக பங்களிப்புச் செய்கின்றார்கள். இருப்பினும் இவர்களுக்கான அடிப்படை தேவைகளான சுகாதாரம், வீடமைப்பு, முன்பிள்ளை கல்வி என்பன தோட்டக்கம்பனிகளின் பொறுப்பில் மட்டும் விடப்பட்டுள்ளன. 

இப்போதெல்லாம் இலங்கையின் முன்பிள்ளை பருவ பராமரிப்பும் விருத்தியும் தொடர்பான நிலையங்கள் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் பல செயற்பட்டு வருகின்றன. முன்பிள்ளை பருவ விருத்தி நிலையங்கள், முன்பிள்ளை பாடசாலைகள், ‘மொண்டசூரிகள்,’ தினசரி காப்பு நிலையங்கள், ‘கிரேச்சர்ஸ்’ என்று பல்வேறு நாமங்களில் அவை அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால் பெருந்தோட்டங்களில் பிள்ளை மடுவங்கள், பிள்ளை காம்பிராக்கள் என்றே ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை அடையாளப்படுத்தப்படுவதாக எம்மோடு அனுபவங்களை பகிர்ந்துக் கொண்ட செல்வராணி கூறுகின்றார். ஆனாலும் ஒரு சில இடங்களில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் என அரசுசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடனும் சில அரசியல்வாதிகளின் கண்காணிப்புடன் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் அவற்றை முன்னைய பிள்ளை மடுவங்களாகவே நோக்குகின்றனர். ஏனெனில் பெரிய மாற்றங்களைக் காண முடியவில்லை என்கின்றனர்.

1997 ஆம் ஆண்டின் கல்விச் சீர்த்திருத்தங்களின் பின்னர், அரசாங்கம் முன்பிள்ளைப்பருவ நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக முக்கிய செயற்பணிகளை விரிவுபடுத்தியது. அதே காலப்பகுதியில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் (Pர்னுவு) மூலம் பெருந்தோட்ட முன்பள்ளிகள் சிறியளவிலான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை கண்டன. ஆனாலும் தோட்ட நிர்வாகங்களே இவற்றுக்கு பொறுப்பாக இருந்தன. பராமரிப்பாளர்களின் பயிற்சி, ஆலோசனை, தளபாடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை ஒருபோதும் அவை மேம்படுத்தியதில்லை. 

“பிள்ளைகளை பராமரிப்பு நிலையத்துக்கு கொண்டு வருபவர்கள் அவர்களுக்கான விரிப்புகள், தொட்டில்கள் என்பவற்றையும் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அங்கு காணப்படும் சாக்கு பைகளிலேயே பிள்ளைகளை கிடத்தி வைப்போம்” என்று தனது முன்னைய அனுபவங்களை செல்வராணி பகிர்ந்து கொள்கின்றார். 

செல்வராணியின் கூற்றுப்படி பிள்ளைகளின் பெற்றோரே அவர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றியுள்ளனர். எனவே பிள்ளைகள் போதுமான உடல் உள பாதுகாப்பு, சுகாதாரம் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர் என்று கூறுகின்றார். 

அவரின் சேவைக்காலத்தில் பிள்ளைகளுக்கு தாய்மார் தொடர்ச்சியாக கொண்டுவரும் உணவுகள் பற்றி கேட்டபோது அவை வெறுமனே கோதுமை ரொட்டியாகவும், அரிசிச் சோறாகவுமே இருந்ததாகக் கூறுகிறார்.  இவை ஆரோக்கியமான உணவுகள் அல்ல. இதன் மூலம் பிள்ளைகளுக்கு தேவையான போசாக்கு எவ்விதத்திலும் கிடைக்காது என்பதை தாய்மார்களிடம் பல தடவைகள் நாம் எடுத்துக் கூறினாலும் பெற்றோரின் பொருளாதார நிலை போசாக்கிற்கு தடையாகவே உள்ளது என்கிறார்.

முன்பள்ளிகளில் சுகாதாரம், போசாக்கு, உள சமூகவாக்கம், சுத்தமான குடிநீர், கழிவகற்றல் போன்றவற்றை முறையாக வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் கரிசனை காட்டுவதில்லை. இந்த இடத்தில் அரசாங்கமே அதற்கான பொறுப்பாளி என்ற வகையில் அரசு பெருந்தோட்டங்களை மட்டும் இவ்வாறு புறக்கணித்திருப்பது ஒரு மனிதவுரிமை மீறலாகவே பார்க்கப்பட வேண்டும். 

“நாங்கள் இப்பிள்ளைகளின் நிலைமையை அறிந்த ஒரு சில தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை செய்தன. இப்போது அதன் மூலம் தளபாடங்கள், அடிப்படை தேவையான சில பொருட்களை பெற்றுக் கொண்டோம்” என்கின்றார் செல்வராணி. 

இவ்விடயம் தொடர்பாக முன்னாள் பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளரான வீ. புத்திரசிகாமணியின் கருத்துப்படி ‘ஒப்பீட்டளவில் பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் தற்போது அபிவிருத்தியடைந்து வருகின்றன. உலக வங்கியின் கடனுதவியின் மூலம் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை தரமுயர்த்தும் செயற்பாடுகளும், சிறுவர் அபிவிருத்தி நிலைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சிகளும் கடந்த நல்லாட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியை தற்போதும் காணமுடியும்;’ என்கின்றார். அதேபோல் பெருந்தோட்ட சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை முழுமையாக அரசு பொறுப்பேற்கும் போது இத்தொழில்துறையில் எம்மவர்களின் தொழில்வாய்ப்பு இல்லாமல் போகவும் கூடும். அதாவது நிலைய பொறுப்பாளர்களாக பெரும்பான்மை இனத்தவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றார். 

இவ்விடத்தில் அரச பங்களிப்புடனும், தனியார்துறையுடனும் இணைந்து முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் விருத்தியினை வழங்கும் தரப்பினர்களால் வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்தி பெருந்தோட்டங்களுக்கும் சமமான வாய்ப்புகளை கிடைக்கச் செய்வது அரசின் பொறுப்பு. அதனை சரியாக செய்யவில்லை என்பதே இங்கு பாரபட்சம் ஏற்படக் காரணமாகும். அத்தோடு தமது பிள்ளைகளின் விருத்திக்கு உரிய வகையில் உதவக்கூடிய திறனை பெற்றோருக்கும் சமுதாயத்துக்கும் வழங்குவதும் அரசினது கடமையே முக்கியமாக பொருளாதார துறையை மையப்படுத்தி இவ்விடயம் அணுகப்பட வேண்டும். 

இவற்றை நோக்கும் போது முன்பள்ளிகள் தொடர்பான கொள்கைத்திட்டங்கள் ஒருபுறமும் பெருந்தோட்டங்களின் பிரச்சினைகள் வேறுவிதமாகவும் உள்ளன. மேலும் முன்பள்ளிகளை முகாமைத்துவம் செய்யும் வகையில் மாகாண சபைகளுக்கு தேவையான அதிகாரத்தை அரசியல் யாப்பின் 13 வது திருத்தத்தின் படி 154 (G) (1) உறுப்புரை வழங்குகின்றது. பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மத்திய, ஊவா மாகாணங்களில் கூட இதுவரை பெருந்தோட்ட முன்பள்ளிகளை மேம்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாகாண சபை நிதி மூலம் அதனை ஒழுங்குபடுத்தி அவற்றுக்கான நியமங்கள், பராமரிப்பாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கலாம். ஆனால் மலையக அரசியல் பிற்போக்கு தனங்களால் இவை அசாத்தியமாகியுள்ளன. 

தற்போது செல்வராணி முன்பள்ளி டிப்ளோமாதாரியாவார். உலக வங்கியின் நிதியுதவியுடன் தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்ட முன்பள்ளி கல்வியில் டிப்ளோமா ஒன்றை அவர் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவர் வேறுவிதமான பிரச்சினை ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளார். அதாவது அவரின் அறிவையும், திறனையும் பிரயோகப்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பும் வழிகாட்டலும் அவர் சேவையாற்றும் முன்பள்ளி நிலையத்தில் இல்லை. கற்பித்தல் உபகரணங்கள், முறையான கலைத்திட்ட (Syllabus) மாதிரி எதுவுமே இல்லை.

பெருந்தோட்ட முன்பள்ளிகள் தொடர்ந்தும் கம்பனிகளின் பொறுப்பில் இருக்கின்றமை காரணமாக போதிய ஆளணி, மற்றும் பௌதீக வளத் தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. இவற்றை பிராந்திய கம்பனிகள் தம்வசம் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. அதாவது இம்மக்களின் சமூக நலனில் தாம் பங்களிப்பு செய்வதாக சர்வதேசத்துக்கும், அரசுக்கும் வெளிக்காட்டி அதன் மூலம் சில சலுகைகளை அனுபவிப்பதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது. 

நிதி வளங்களின் சமமான பங்கீடு மற்றும் வினைத்திறனான பயன்பாடுகளின் ஊடாக முன்பிள்ளைப்பருவ பராமரிப்பும் விருத்தியும் (Early Childhood Care Development – ECCD) மீதான சேவைகளிலும் நிகழ்ச்சித்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும். பெருந்தோட்டங்களில் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதும், பெருந்தோட்ட சுகாதாரத்துறையை முழுமையாக அரசு பொறுப்பேற்பதும் இதன் அடிப்படை அம்சங்களாகும். மிகவும் நலிவடைந்து காணப்படும் பெருந்தோட்ட சுகாதார துறையினை மாகாண நிதி மற்றும் உள்ளாட்சி பொறிமுறை ஊடாக அபிவிருத்தி செய்யலாம். 

இவை செய்யப்படுகின்ற போதுதான் ஒரு சமூகத்தை வளமுள்ளதாக்கலாம். சிறுவர்கள் தானே என பாராமுகமாக இருப்பது தொடர்ந்தும் நலிவுற்ற சமூகத்தையே நீடிக்கச் செய்யும்.

The Need To Improve Pre-Schools In The Estate Sector

පුල්ලෙ මඩුවට සීමාවු වතු දරුවන්ගේ මුල් ළමාවිය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts