ஃபலனைப் போல் உங்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா?
சச்சினி டி. பெரேரா
“தெரண ட்ரீம் ஸ்டார்- சீசன் 09” பாடல் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஃபலன் ஆண்ட்ரியா ஜோன்சனை சுற்றி பல விவாதங்கள் நடந்துள்ளன. ஃபலன் வெற்றிக் கோப்பைக்கு தகுதியற்றவர் என்று பலர் கூறினர். இதன் விளைவாக பல எதிர்மறையான மற்றும் கேவலமான பதிவுகள் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது. அவற்றுள் சில கருத்துக்கள் பின்வருமாறு:
“ஃபாலன் இந்த வெற்றிக் கோப்பைக்கு தகுதியற்றவர், ஏனென்றால் அவர் மற்ற இரண்டு போட்டியாளர்களைப் போல திறமையானவர் அல்ல”
“ஃபாலன் செய்தது என்னவென்றால் மேற்கத்தைய பாணியில் உடைகளை அணிந்து தனது உடலைக்காட்டி வெறுமனே மேடையில் நடனமாடியது மாத்திரமே”
“அவளுக்கு ஒரு கர்னாடக சங்கீத பாடலை பாடக்கூட தெரியாது, அனால் ஆங்கில பாடல். அவளுக்கு எந்தவித திறமையும் இல்லை.”
“இந்த சீசன் மிகவும் வெட்கக்கேடானது, ஏனெனில் மிகவும் திறமையான நபர் கோப்பைக்கு தகுதியற்றவரானார்.”
“தெரண ட்ரீம் ஸ்டார் நிகழ்ச்சியானது இந்த கத்தோலிக்க லான்சி பெண்ணை பயன்படுத்தி தமது நிகழ்ச்சியின் பார்வையாளர்களை பெருக்கிக் கொள்ளவே விரும்பியது.”
இந்த வகையான வெறுக்கத்தக்க வதந்திகள் குறுகிய காலத்தில் பரவி நமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய சமூக-கலாச்சார மற்றும் உளவியல் மோதல்களை கட்டுப்படுத்துவது கடினம். இதனால் அச்சம்பவத்தையொட்டி தொடர்புபட்டிருக்கும் நபர் அல்லது அவரது சமூகம் மோசமான வழியில் பாதிக்கபடலாம். உலகளாவிய தகவல் தொடர்பாடல் செல்வாக்கின் அடிப்படையில் இத்தகைய ஆத்திரமூட்டக்கூடிய, வெறுக்கத்தக்க பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்றன.
“வெறுப்பை வெளிப்படுத்தும் அல்லது இனம், மதம், பால் என்பவற்றினடிப்படையில் ஒரு நபர் அல்லது ஒரு குழுவுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் பேச்சு” வெறுப்புப் பேச்சு என கேம்பிரிட்ஜ் அகராதி வரையறுக்கிறது. சமூகவியல் நிபுணர்களின் கருத்தின்படி பிந்தைய நவீனத்துவ மனிதர்களுக்கு ஏனையவர்களால் அடைய முடியாதளவு வாய்ப்புகளை அடைய சமூக வலைத்தளங்களில் சூழ்நிலை காணப்படுகிறது. இது இதே மனநிலையுடையுடன் உள்ள மற்றவர்களால் வலுவூட்டப்பட்டு இறுதியில் வன்முறைச் செயலுக்கு வழிவகுக்கும்.
கேள்வி என்னவென்றால், ஏன் மக்கள் பிரபலமான பிரதிநிதியொருவரை நோக்கி தமது அசாதாரணமான சொற்களை வீச முனைகின்றனர்? இது குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. நிரோஷா குலசேகரவிடம் வினவியபோது “மனிதர்கள் பிறப்பிலேயே குறுகிய மனநிலையிலே காணப்படுவதோடு அறிந்தோ அறியாமலோ தமக்குள்ளே காணாமப்படும் உளவியல் பனிப்போர் காரணமாக உணர்வுபூர்வமாக எப்பொழுதும் அழுத்தத்திற்குள்ளானவர்களாக காணப்படுகிறார்கள். இது ஒருவரின் சமூக நிலை, சமூக-கலாச்சார பின்னனி, மனவலிமை, தனிப்பட்ட சுதந்திரம், பொருளாதார ஸ்திரத்தன்மை, அணுகுமுறைகள் போன்ற பல மூல காரணங்களிலே தங்கியுள்ளது.” என தெரிவித்தார்.
நாம் நமது நாட்டை “சிங்கள பௌத்த” நாடக இன்னும் அறிமுகப்படுத்துகிறோம். இதனால் இந்த சிறிய தீவில் வாழும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மறைமுகமாக பாகுபாடு காட்டுவதன் மூலம் நாடு பிளவுப்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையினர் சிங்கள பௌத்த நோக்கங்களுடன் இருப்பதனால் அவர்கள் இது தொடர்பில் எவ்விதத்திலும் கேள்வி எழுப்புவதில்லை. நாட்டில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருப்பது, ஃபாலன் ஆண்ட்ரியா பெரும்பான்மை மக்களிடமிருந்து சொல்வழித் துன்புறுத்தல்களுக்கு இலக்காக பிரதானமான காரணமானது. மற்றொரு வழியில் ஃபாலனை நோக்கி நிகழ்த்தப்பட்ட வெறுப்புப் பேச்சிலிருந்து “கலாச்சார அடிமைத்தனம்” என்ற உணர்வை தெளிவாக காணமுடிகிறது. மேலும் அவரது நடப்பு வழக்கு(பேஷன்), ஆடற்கலை வடிவமைப்பு(கோரியோக்ராபி), நடன அசைவு மற்றும் குரல்வளம் போன்றவற்றை பலர் அவமதித்தனர். காரணம் அவரது ஆளுமை நம் சமூகத்திற்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியாக அமைந்திருக்கலாம்.
ஃபாலனைப் போல் இலங்கையில் வெறுக்கத்தக்க பேச்சிற்கு இலக்கான பிற பிரபலங்களையும் நாம் காண்கிறோம். ஃபாலன் ஒரு சமீபத்தைய நிகழ்வு மாத்திரமே. ஏன் மக்களில் பலர் ஒரே மாதிரி இருக்கிறார்கள்? “மக்களுக்கு உளவியல் பலங்களும் பலவீனங்களும் உள்ளன. அவர்களின் வழக்கமான வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் அவை வெளிப்படுகின்றன. இதுவே ஒருவரின் ஆளுமை மற்றும் கருத்துக்களின் கட்டமைப்பை உருவாக்குகிறது. இலங்கையில் பெரும்பாலான மக்கள் தமது எல்லைகளையோ அடிப்படை கட்டமைப்புகளையோ மீற பயப்படுகிறார்கள். பெண்களின் மத்தியில் இது மிகவும் வலுப்பெற்றிருக்கிறது. இது பெண்ணியவாதக் கருத்துக்களை தூண்டுவதற்காக அல்ல. எனினும் வெறுப்புப் பேச்சுகள் பாலின சமத்துவமின்றி வெளிப்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என திருமதி.குலசேகர மிகத்தெளிவாக விளக்கமளித்தார்.
“இலங்கை போன்ற கலாச்சாரமுள்ள நாடுகளில் ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாராட்டக்கூடிய மனநிலை அருகிவருகிற விடயமாகும். இது சமூக வலைத்தளங்களிலும் பிரதிபலிக்கின்றன. இது வெகுஜன ஊடகங்களின் போக்கில் வெறுப்புப் பேச்சாக மாறக்கூடிய தாழ்வு மனப்பான்மையை குறிக்கும். அடிப்படையில் இது சமூக ஊடக துன்புறுத்தல் ஆகும். ஃபாலனுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சில் பெரும்பாலான கருத்துக்கள் உடலினமைப்பு, கலாச்சார தீர்ப்பு, பாரபட்சம், மத அடையாளம் மற்றும் பாலியல் நோக்குநிலை போன்றவற்றை மையப்படுத்தியே வெளியிடப்பட்டிருந்தன. இதனடிப்படையில் நோக்கும் போது இவர்கள் அனைவரும் தனிப்பட்ட சார்புகளுக்கு அப்பாற்பட்டு பிறந்தவர்கள். அகங்காரம், இனச்சார்பு, பொறாமை மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் தாக்கங்கள் இவை.” என திருமதி.குலசேகர விளக்கமளித்தார்.
சமூக ஊடகங்களின் பொது மக்களின் நுகர்வு குறித்த நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. புதிய ஊடகங்கள்/ சமூக ஊடகங்கள் ஊடக சுதந்திரத்தை நெறிமுறையற்ற விதத்தில் உபயோகிப்பதானது சைபர் குற்றமாகவும், உளவியல் குற்றமாகவும் வரையறுக்கலாம். ஒருவரின் பேச்சு சுதந்திரமானது மற்றொருவரின் அடையாளத்தையோ அல்லது அவரது வாழும் உரிமையையோ மீறும் வகையில் அமையும் பொழுது அதனை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு தேசமாக பார்க்கும் பொழுது நாம் இன்னும் தலைமுறைக்கு தலைமுறை கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற காலனித்துவ கலாச்சார மனநிலையிலேயே வாழ்கிறோம். இந்த சங்கிலி உடைக்கப்பட வேண்டுமாயின் எமது தனிப்பட்ட அணுகுமுறை மாற்றங்களில் ஆரம்பமாக வேண்டும். இது செய்வதை விடவும் சொல்வது இலகுவானது. “சரியான கலாச்சார மாற்றத்தைக் கொண்ட சில தலைமுறைகளின் பரந்த சமூக-காலாச்சார செயற்பாட்டு அம்சங்களின் மூலம் இலங்கைக்குள் தற்போதுள்ள இந்த மனநிலையை குறைக்க முடியும்.” என திருமதி.குலசேகர தெரிவித்தார்.
நாங்கள் இன்னும் நம் நாட்டை ஒரு ஜனநாயக குடியரசு என்று அழைக்கிறோம். ஆனால் ஒருவரின் அடையாளம் மற்றும்ம் ஆளுமைகளை பாராட்டும், பாதுகாக்கும் ஜனநாயக பண்புகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். ஜனநாயகம் ஒருபோதும் அநீதி, பக்கசார்பு, வெறுப்புப்பேச்சு அல்லது தார்மீக சாமூகத்திற்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றை பரிந்துரைப்பதில்லை. வெறுப்பு பேச்சு பிரசாரங்கள் நாம் நமது ஆளுமைகளில் இருந்து ஒழிக்க வேண்டிய எதிர்மறையான கருத்துக்களையும், ஒழுக்கங்களையும் கொண்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் ஒருவரின் வெறுப்புப் பேச்சை கையாள்வது அல்லது அது குறித்து விமர்சிப்பதென்பது ஒருவரின் பேச்சு சுதந்திரத்தின் வரம்பை கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது என்று அர்த்தமல்ல. யாரவது தவறான எண்ணத்துடன் நமக்கெதிரான துன்புறுத்தலை மேற்கொள்ளும் பொது அதற்கெதிரான நமது ஸ்திரமான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். வெறுப்பு பேச்சை முன்னெடுப்பவர்களிடமிருந்தும், அதன்பால் வழிநடத்துபவர்களிடமிருந்தும் விலகியிருப்பது அவசியமாகும். இது ஃபாலன் போன்ற நட்சத்திரங்களுக்கு மாத்திரமல்ல ஒவ்வொரு இலங்கையருக்குமானது!