இலங்கை பத்திரிகைகள் நடு நிலையானவையா?
ஜெம்சித்
பத்திரிகைத்துறை சேவையை அடிப்படையாக கொண்டது. யாருக்கும் அடிபணியாமல் சுயமாக இயங்க வேண்டும். தாங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை தைரியமாக எடுத்துரைக்க வேண்டும். நாட்டில் நடைபெறக்கூடிய அநியாயங்களையும், சட்டமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து நீதியின் சார்பில் நிற்க வேண்டும்.இதைக் கருத்தில் கொண்டே இந்தத் துறை ஜனநாயக நாடொன்றின் நான்காவது தூணாக கருதப்படுகிறது. ஜனநாயகத்தின் 4ஆவது தூண் என கூறப்படும் ஊடகங்கள் இன்று தமது பொறுப்பை உணர்ந்து, ஒழுக்கவிதிகளை மதித்து, ஊடக அறத்தைப்பேணி நடக்கின்றனவா என்று பார்த்தால் இலங்கையைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஊடக தர்மத்தை காணமுடியவில்லை என்பதே யதார்த்தமாகவுள்ளது.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக ஆட்சிமன்றம், பாராளுமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்று கட்டமைப்புகளும் இருக்க, ஊடகம் நான்காவது தூணாகக் கருதப்படுகிறது. இவற்றில் முதல் மூன்று தூண்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவை. ஆட்சியாளர்கள் பாராளுமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்துக்கு பதிலளிக்க வேண்டும். இந்த மூன்றையும் கேள்வி கேட்கக்கூடிய நான்காவது தூணாகிய ஊடகம் அதாவது செய்திப்பத்திரிகைகள் எந்தவகையிலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கவில்லை. செய்திப்பத்திரிக்கைகள் தம் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டதாக இருக்க வேண்டும். அந்த ஜனநாயகக் கடமையை மிகப் பெரும்பாலான செய்திப்பத்திரிக்கைகள் தட்டிக்கழிக்கின்றன.
நாட்டின் வளங்களாக மக்கள் இருக்கின்றார்கள். இந்த மக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய அநியாயங்களையும், அக்கிரமங்களையும் பத்திரிகைத்துறை சுட்டிக்காட்டி, மக்களின் சார்பாக கேள்விகள் கேட்க வேண்டும். இதுதான் பத்திரிகைத்துறையின் தலையாய பணி .நாட்டில் இன, மத, வன்முறைகளால் அடக்கி.ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினத்தின், மதத்தின், உரிமைகள், பொருளாதாரம் மறுக்கப்பட்டு குரல்வளை நசுக்கப்படும்போது ஒடுக்கப்பட்டவர்களின், பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள் ஊடக நெறிக்கு முரணாக இன, மத, பொருளாதார ரீதியாகவே செயற்படும் போக்கே காணப்படுகின்றது.
இலத்திரனியல் மயத்தினால் மக்கள் கவரப்பட்டுள்ள நிலையில் இலத்திரனியல் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களின் பாதையை பத்திரிகைகளும் பின்பற்றுகின்றன. தத்தமது வாசகர்களை அதிகரித்துக்கொள்வதற்காக இன ,மத ரீதியான கொள்கையில் பயணிக்கின்றன.அதனால் தான் தான் பத்திரிகைகளின் செய்திகளில் நம்பகத்தன்மை குறைவடையத்தொடங்கியுள்ளதுடன் இன, மதவாதங்களும் தூண்டப்படுகின்றன. மக்களின் வாழ்க்கையை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைள், அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் விளைவுகள் போன்றவை குறித்து பத்திரிகைகள் விவாதிப்பதில்லை. வறுமை , பாலினப் பாகுபாடுகளை, சிறுவர் உழைப்பு அவலங்களை, விவசாயிகளின் வீழ்ச்சியை, அன்றாட வாழ்க்கைக்காக நடக்கும் போராட்டங்களை பத்திரிகைகள் பெரிதும் வெளிப்படுத்துவதில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள ,தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிங்கள, ஆங்கில, தமிழ் மொழிகளில் செய்திப் பத்திரிக்கைகள் வெளிவருகின்றன. இவற்றில் சிங்களவர்களுக்காக சிங்கள ஆங்கில, மொழிகளில் பத்திரிகைகள் வெளிவருகின்ற நிலையில் இலங்கையில் சிறுபான்மையினங்களான தமிழ் முஸ்லிம்களுக்காக தமிழ் பத்திரிகைகள் மட்டுமே வெளிவருகின்றன. 74.9 வீத சிங்களவர்களையும் 15. 4 வீத தமிழ் முஸ்லிம்களையும் மிகுதி ஏனைய மொழிகளையுடைய சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் செய்திப்பத்திரிக்கைகள் என்பவை ஊடக நெறிகளுக்கு முரணாக தத்தமது இனங்களுக்கான பத்திரிக்கைகளாக மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக செய்திப்பத்திரிக்கைகளில் ஊடக தர்மங்கள் மீறப்படுவததோடு மட்டுமல்லாமல்,சுயநலப்போக்கோடு உணர்வைக் கொடுக்கும் செய்திகளை கொடுக்காமல் உணர்ச்சியைத் தூண்டும் செய்திகளைப் பரப்பி இன, மத ரீதியான கலவரங்களை, பிளவுகளை ஏற்படுத்தும் போக்கே கையாளப்படுகின்றது.
சிங்கள,ஆங்கில மொழிப் பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம் மக்களின் நிலம், மதம், உரிமை, ஜனநாயகம், பொருளாதாரம் சார்ந்த எந்தப்பிரச்சினைகள், போராட்டங்கள், கோரிக்கைகள், தொடர்பானசெய்திகளும் தவறுதலாக கூட வெளிவருவது கிடையாது. இலங்கையில் கடந்த 30 வருடகால தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மற்றும் 2019 ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னரான முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன, மத வன்முறைகள் தொடர்பில் இந்த சிங்கள, ஆங்கில செய்திப்பத்திரிகைகள் ஊடக தர்மத்தை காலில் போட்டு மிதித்தே செயற்பட்டன.
இதற்கு அண்மைக்கால சிறந்த உதாரணமாக தமிழ் மக்கள் தரப்பால் அஹிம்சாவழியில் முன்னெடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கோரிய ”பொத்துவில் முதல் பொலிகண்டிவரை ”யான பாத யாத்திரைப்போராட்டத்தை குறிப்பிட முடியும் . இப்போராட்டம் முழு உலகின் கவனத்தையும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்த போதும் இலங்கையிலுள்ள சிங்கள,ஆங்கில செய்திப்பத்திரிக்கைகள் இப்போராட்டம் தொடர்பில் ஒரு சிறு செய்தியையேனும் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்திருந்தன. அதேவேளை தமிழ் செய்திப்பத்திரிக்கைகள் தலைப்பு செய்திகளாக பிரசுரித்திருந்தன. இது இலங்கையின் இணைப்பாகுபாட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
இது தொடர்பில் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அலெய்னா பி. டெய்லிட்ஸ் கூட இலங்கையின் சிங்கள,ஆங்கில செய்திப்பத்திரிக்கைகளின் பாரபட்ச தன்மையை சுட்டிக்காட்டியிருந்தார். இதுதொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட. அவற்றை நியாயமாக அக்கறையுடன் அணுக வேண்டும். ”பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபயணி குறித்து தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது குறித்து அறிந்தேன், கொழும்பை அடிப்படையாக கொண்ட ஊடகங்கள் ஏன் இதற்கு பரந்துபட்ட முக்கியத்துவத்தை வழங்கவில்லை என ஆச்சரியப்பட்டேன்’ (#Peacefulprotest is an important right in any #democracy and significant, legitimate concerns should be heard. I saw Tamil media coverage of the march from Pottuvil to Point Pedro and wondered why it was not more widely covered by Colombo-based media?)என தூதுவர் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் உள்ள சிங்கள ஆங்கில மொழிப்பத்திரிகைகள் இனவாத சிந்தனையுடன் தான் செயற்படுகின்றன என்று மட்டுமில்லை. தமது இன மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் கூட தட்டிக்கேட் கும் திராணியற்றவையாகவே உள்ளன. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டினால் அரச விளம்பரங்கள் கிடையாதுபோய்விடும் .தனியார் நிறுவனங்களின் தவறுகளை தட்டிக்கேட்டால் அவர்களின் விளம்பரங்கள் கிடையாது போய்விடும் என்ற இலாப நோக்கு சிந்தனையே இவற்றிடம் மேலோங்கியுள்ளது.
இதற்கு உதாரணமாக வெளிநாட்டு இறக்குமதியான குறிப்பிட்ட நிறுவனம் ஒன்றின் பால்மாவில் நச்சுப்பதார்த்தம் கலக்கும் தகவல்கள் வெளியானபோது அது தொடர்பான நிறுவனத்தின் விளம்பரங்களுக்காக அந்த தகவலை இந்த செய்திப்பத்திரிகைகள் பிரசுரிக்காது இருட்டடிப்பு செய்து மக்களுக்கு துரோகமிழைத்தன. அதன் பிரதியுபகாரமாக இந்த பத்திரிகைகளுக்கு அந்த நிறுவனத்தினால் சில நாட்கள் தொடர்ச்சியாக பல லட்சம் ரூபாவுக்கு விளம்பரங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று ஆளும் கட்சியின் விளம்பரங்களுக்காக அவர்களின் அனைத்து தவறுகளுக்கும் உடந்தையாக இருப்பது, தேர்தல்கள் வந்துவிட்டால் எந்தக்கட்சி அதிக விளம்பரங்களை கொடுக்கின்றதோ அந்தக்கட்சிக்கு ஆதரவாக செயற்படுவது ”கவர்” வாங்கிக்கொண்டு”கவர் ஸ்டோரி”எழுதுவது என நடு நிலை, நீதி ,நேர்மை,நியாயத்திற்கு விலை நிர்ணயிக்கின்றனர்.
ஜனநாயகத்தின் காவலர்களாக, மாற்றத்தின் தூதுவர்களாக இருக்க வேண்டிய பத்திரிகைகள் இன்று சுரண்டலின் காவலர்களாக, லாப வேட்டையின் தூதுவர்களாக மாறிப்போயிருப்பதைப் பார்க்கிறோம். நிதி மூலதனச் சூழலில் பத்திரிகைகள் அப்பட்டமாக, லாபத்தை அதிகரிக்கும் வர்த்தக இயந்திரங்களாக மாறிவிட்டன. அதிகபட்ச லாபம் மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன.
பத்திரிக்கைகளை பொறுத்தவரையில் அரசியல், முதலாளித்துவம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும்தான் செய்திகளைத் தீர்மானிக்கின்றன. வர்த்தக நோக்கம் என்பது மிக வலிமையானதாக இருக்கிறது. பெரும்பாலான ஊடகங்கள் வர்த்தக ரீதியாக விளம்பர வருவாயைச் சார்ந்தே இயங்குகின்றன. பத்திரிக்கைகளைப் பொறுத்தவரையில் அவற்றின் வருமானத்தில் பெரும்பகுதி வர்த்தக விளம்பரங்களில் இருந்துதான் கிடைக்கின்றன. பத்திரிகைகளுக்கு வாசகர்கள் கொடுக்கும் விலையிலிருந்து கிடைப்பது 15 வீதத்துக்கும் குறைவாகவே இருக்கின்றது. இந்நிலையில் மக்களுடைய தேவைகள், பிரச்சினைகள், கோரிக்கைளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா அல்லது விளம்பரதாரர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா?
கார்ல் மார்க்ஸ் ஊடகவியலாளராக பணியாற்றினார் என்ற தகவலை விடவும், ஊடகவியல் குறித்து அவர் என்ன சொன்னார் என்பது முக்கியம். பத்திரிகைத் தணிக்கை பற்றிய ஒரு விவாதத்தின்போது அவர், “தணிக்கை ஒருபோதும் ஒரு நன்னெறியாகாது, அது சட்ட பூர்வமானதாக இருந்தாலும் கூட. அடிமைத்தனம் சட்ட பூர்வமானதாக இருந்தாலும் அது எப்படி ஒரு நன்னெறியாகாதோ அதைப் போலத்தான் தணிக்கையும்” என்று சுதந்திர எழுத்துக்காகக் குரல் கொடுத்தார். இதழியல் ஒரு விற்பனைச் சரக்கு அல்ல. அது மாற்றத்துக்கான ஒரு பங்களிப்பைச் செய்கிறது என்றும் கூறினார். ஆனால் இன்று செய்திப்பத்திரிகைகள் தமது வர்த்தக நலன்களுக்காகவும் ,ஏனைய இனங்கள், மதங்களுக்கு எதிராகவும் சுய தணிக்கைகளில் ஈடுபடும் ஊடகவியலே இலங்கையில் உள்ளது.
ශ්රී ලංකාවේ පුවත්පත් කලාවේ ඛේදවාචකය
Are Sri Lankan Newspapers Neutral?