தழிழ் பெண்ணாக ஊடகத்துறையுள் (1992-2004)
கௌரி மகா
பொதுவாக தமிழ் பெண்கள் என்னதான் படித்து வேலைசெய்தாலும் குடும்ப அலகை மையப்படுத்தி, அதிலிருந்துதான் பெண்ணின் அனைத்து திறன்களையும் வடிவமைக்கும், கருத்துருவாக்கம் செய்யும் பண்பு பொதுவெளில் உள்ளது. எனவே பொதுவெளியில் வெளிப்படும் பெண்ணின் திறன்கள் பொதுவெளியை மையமாக வைத்து மதிப்பிடப்படுவதில்லை. ஆண்களுக்கு அப்படியல்ல பொதுவெளியில் அவர்களது திறன்கள் அடைவுகள் பொதுவெளியை மையமாகவைத்து மதிப்பிடப்படுகிறது. எனவே பொது வெளியான (தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், அறிந்த இடம் அறிதாய இடம் என எங்கும் போய் அனைவருடனும் உரையாடக்கூடிய பரந்த வெளி) ஊடகத்துறைக்குள் அதுவும் பெண்ணாக, அதிலும் தமிழ் பெண்ணாக, அதிலும் சிங்கள மொழி கோலோச்சும் பெருநகரில் சிங்களமே தெரியாத ஒரு பெண்ணாக 1992இல் வந்தபோது நேர்முகப்பரீட்சையிலேயே இந்த துறை உங்களுக்கு சரிவராது என ஆலோசனை வழங்கப்பட்டது. நேர்முகம் செய்தவர்கள் “நீங்கள் பெண்ணாக இருக்கிறீர்கள், இது 24 மணித்தியால வேலை திருமணம் முடித்தால் இந்த வேலை உங்களுக்க சரிவராது.” என்ற கருத்தை முன்வைத்தனர். அவர்கள் எனக்கு நல்லது செய்வதாகவே எண்ணியிருக்கவேண்டும். எனக்கு ஆசிரியர் வேலைதான் உகந்தது என சிபார்சும் செய்தனர். “இந்தவேலை தான் வேண்டும்” என விடாபிடியாக நின்றதால் என்னை உள்வாங்கினர் என நினைக்கிறேன். இங்கேயே ஆரம்பித்துவிட்டது நான் பெண் என்பதால் எனக்கான வேலை எதுவென இந்த சமூகம் தீர்ப்பிடுவது.
அலுவலகத்திற்குள்ளும் எனக்கான வேலை எது என்பதை அவர்கள் தீர்மானித்தார்கள். பெண்கள் பகுதி, சிறுவர் பகுதி, சிறுகதை, விவரணக்கட்டுரை என்பதே எனக்களிக்கப்பட்டவை. ஏற்றுக்கொண்டு பெண்கள் பகுதியில் இருந்து பிரச்சினை ஆரம்பமானது. பெண்கள் பகுதியின் தலைப்பானது, வீட்டில் இருந்து கணவன், குழந்தை என சமையலும் அழகும் பிரதானம் என எண்ணவைக்கும் பெண்ணை மட்டுமே சுட்டி நின்றது. தலைப்பை மாற்ற எடுத்த முயற்சி தோற்றுபோனது. “தலைப்பு அப்படித்தான் இருக்கவேண்டும் கட்டாயம் சமையலும் அழகுக் குறிப்பும் வரவேண்டும் மிகுதி நீங்கள் ஏதும் போடலாம்” என்ற பணிப்பு ஆசிரியரிடம் இருந்து வந்தது. சரி.. ஏற்றுக்கொண்டு மிகுதியில் பெண்கள் பிரச்சினைகள் பற்றி எழுத ஆரம்பித்தேன். “பார்த்ததும் சிந்தித்ததும்” , “கேள்வி நாங்கள் விடைகள் நீங்கள்” என பல பிரச்சினைகளை கிளறி விட்டேன். ஆண்கள் உலகத்தில் பெண்கள் பற்றிய படிமங்கள் எத்தகையதாக உள்ளது என அனுபவத்தினூடு சில சம்பவங்களை எழுதினேன். ஆண்களின் உலகத்தில் பெண்கள் பற்றிய படிமங்கள் உடலுக்கு அப்பால் செல்லவில்லை என்பதை முன்வைத்த கருத்துக்களும் எழுதப்பட்டன. “நீங்கள் எங்கள் அலுவலகத்தில் உள்ள ஆண்களைப்பற்றிதான் எழுதியுள்ளீர்கள்” என்ற குற்றச்சாட்டுடன் ஆசிரியரால் விசாரிக்கப்பட்டேன். “இல்லை நான் பொதுவாக எழுதினேன் தொப்பிகளை நீங்களாகவே போட்டுக்கொண்டால் நான் என்ன செய்வது?” எனக்கேட்டேன். “இனிமேல் இப்படி செய்யாதீர்கள்” என்ற கண்டிப்பு முன்வைக்கப்பட்டது.
ஆக என்ன வேலை செய்யவேண்டும், எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும் என்ற எல்லாமே ஊடக அலுவலகங்களில் இருக்கும் முடிவெடுக்கும் ஆண்களால் தீர்மானிக்ப்படுகிறது. அதை செய்யமுடியாது போனால் அந்த இடந்தில் இருந்து நாம் அகற்றப்படுவோம். அதனால் அதில் இருந்துகொண்டு கிடைக்கும் வெளியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிதான் நான் சிந்தித்தேன். பொது வெளியில் இருந்து பால்நிலை சமத்துவக் கருத்துக்களை பெற்று பிரசுரிக்கபிரசுரிக்க அழகுக் குறிப்பு எழுத இடம் இல்லாமல் போனது. சமையல் குறிப்பை விளம்பரமாக போடவேண்டிய நிலை வந்தது. சந்தோசம்தான்.
ஒரு முறை ஆசிரிய தலையங்கத்திற்குப் பக்கத்திற்கு கட்டுரை இல்லாத நிலையில் எப்பவோ நான் எழுதிய அரசியல் கட்டுரை (பெண் என்பதால் கிடப்பில் போடப்பட்டது) பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அதில் எனது
சொந்த பெயரை போடுவதற்கு அனுமதி இல்லாது முதலெழுத்துக்கள் மட்டும் போடப்பட்டு பிரசுரமானது. வாசித்து நான்தான் என அறிந்த அலுவலக சகாக்கள் “நீங்கள் எழுதினீர்களா!” என ஆச்சரியத்துடன் கேட்டார்கள். ஏனெனில் பெண்கள் அரசியல் கட்டுரை எழுதுவதில்லை. என்பதும் அவர்கள் எழுதினால் அதை வாசிக்க மாட்டார்கள் என்பதும் அவர்களது மனகற்பிதம். அதிலிருந்து அவர்கள் வெளிவருவது அவர்களுக்கு சிரமமாகதான் இருந்தது.
வேறு ஒரு ஊடகத்திற்கு முடிவெடுக்கும் பதவி பெற்று போனபோது பெண்கள் பக்க தலைப்பை மாற்ற முடிந்தது. எவ்வாறான கட்டுரைகள் வரவேண்டும் என தீர்மானிக்க முடிந்தது. கருத்தளவில், கருத்துருவாக்கத்தில் பால்நிலை சமத்துவத்தை உணரவைக்கமுடிந்தது. ஆனாலும் புதிய சிந்தனைகளை எழுப்புவதில் சிரமம் இருந்தது. குடும்ப அலகு ஆண்டான் அடிமைப் பண்பில் கட்டமைக்கப்பட்டுள்ளமையையும் குடும்ப அலகில் ஜனநாய பண்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை எழுதியபோது அலுவலக சகபாடிகள் அதில் பெண்களும் இருந்தனர், பொதுமக்கள் என்ற போர்வையில் மொட்டைக் கடிதங்கள் எழுதினர். பெண்களின் கண்ணியத்தை மனதை அந்தக் கட்டுரை குழப்புவதாகவும், அதனால் எனது சுய ஒழுக்கம், வாழ்க்கை பற்றி மிகவும் கீழ்தரமாக எழுதப்பட்ட கடிதங்களை ஆளணி முகாமையாளர் என்னிடம் காட்டி “உள்ளுக்குள் இருக்கும் சகபாடிகளுடன் கவனமாக இருங்கள்” என்று மட்டும் கூறினார்.
ஒரு பெண் ஊடகவியலாளர் பொதுமக்கள் மத்தியில் கருத்துருவாக்கத்தை மேற்கொள்கின்றபோது அதை ஏற்றுக்கொள் முடியாத மனநிலை பொதுக்கருத்தாக்கத்தில் உள்ளது. அரசியல் பொருளாதாரம் என
எழுதப்பட்டால் அதை பெண்தான் எழுதினாரா என சந்தேகப்படுவதும், இந்த ஆண்மைய சிந்தனையில் உருவான வாழ்வை புதிய சிந்தனைகளில் நின்று பார்த்து எழுதினால் அதை எதிர்க்க முதலில் எடுக்கும் ஆயுதம் பெண்ணின் ஒழுக்கம்! பெண் ஊடகவியலாளருக்கு எதிராக உள வன்முறைசெய்யமுடியும் என்றால் அது பெரும்பாலும் அலுவலகத்திற்குள் இருந்துதான் முதலில் வருகிறது என்பதும் உண்மை. அதற்கான நடைமுறை விதிகள், ஒழுக்காற்று நடைமுறைகள் இன்று வரை அலுவலகங்களில் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
90களின் பிற்பகுதியில் அதிகளவு பெண்கள் ஊடக நிறுவனத்திற்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் ஊடகவியலாளராக மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகளுக்குள்ளும் (கணினி, கணக்கு,முகாமைத்துவம், விளம்பரம்…) இருந்தனர். ஆனாலும் பால்நிலை சார்ந்து சமத்துவமான கருத்துக்களை கட்டியெழுப்புவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. பெண்களின் “கற்பு”பற்றிய கருத்துக்கட்டமைப்புகளைக் கேள்விக்குள்ளாக்கவோ, மறு உற்பத்தி சார் விடயங்களையோ, பாலுறவு சார் உணர்வுகளை பெண்கள் புரிந்துகொள்ளும் வகையில் பகுத்தாராய்வதோ ஊடகத்துறைக்குள் சாத்தியமற்று இருந்தது. “பாலுணர்வும், பெண்கள் புரிந்துகொள்ளவேண்டியதன் அவசியமும்” என்ற கட்டுரை எழுதியபோது முடிவெடுக்கும் நிலையில் நான் இருந்தாலும் அதை ஊடகத்தில் பிரசுரிப்பதற்கு எனக்கு மேல் உள்ள கட்டமைப்பில் இருந்து அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் அதை ஒரு மாதாந்த பெண்கள் சஞ்சிகையிலேயே வெளியிடமுடிந்தது. அது சவாலாகவும் அமைந்தது. அந்தக் கட்டுரையை பார்த்த அலுவலக சகபாடிகள் (பெண்கள் உட்பட) இதை ஏன் எழுதினீர்கள்? நீங்கள் எழுதியிருக்கக்கூடாது. இந்த விடயங்கள் பொதுவெளியில் கதைப்பதற்கானதல்ல என வாதிட்டனர்.
இவ்வாறு பால்நிலை சமத்துவம் மிக்க கூருணர்வு கருத்தாக்கங்களை மக்கள் மத்தியில் விதைப்பதற்கு முயற்சித்தாலும் மொழி பெண்களுக்கு உவப்பதானதாக இருக்கவில்லை. இதனால் தான் பெண் மொழிபற்றிய சர்ச்சைகளும் உருவானது. ஊடகவியலாளர் என்பது கூட ஆண் ஊடகவியலாளர்களைச் சுட்டத்தான் பயன்படுகிறது. பெண்ணை சுட்டவேண்டுமென்றால் “பெண் ஊடகவியலாளர்” என எழுதவேண்டிய நிலைதான் உள்ளது. “ஆண் உடகவியலாளர்” என ஒருபோதும் எழுதுவதில்லை.
அலுவலகத்தினுள் இந்த நிலை என்றால், வெளியில் நாம் பெண் என்பதால் எல்லோரும் எம்முடன் கதைப்பதற்கு முன்வரும் அளவுக்கு தகவல் தருவதில் முன்னிற்பதில்லை. தகவல்களைத் தருவதற்கு முன்னர் எமது உத்தியோகபூர்வ தகவல்களை விட எமது சுயவிபரங்களை அறிவதில் ஆர்வமாக இருப்பார்கள் பலர். அது ஒரு சலிப்பான விடயமாக தேவையற்ற விடயமாக பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். நாம் எந்த நேரத்திலும் எங்கும் சென்றுவரவேண்டிய ஒரு தொழிலில் இருந்ததால் எம்மிடம் பாலியல் ரீதியாக அணுகுதல் தவறில்லை என சிலர் நினைத்திருக்கலாம். இதை அவர்களின் சில நடவடிக்கைகள் மூலம் உணர முடிந்தது. அவ்வாறானவர்களிடம் நான் நேரடியாகவே அவர்களுடன் கதைத்துவிடுவேன். எனக்கு இதில் ஆர்வமும் இல்லை, உடன்பாடும் இல்லை, இத்துடன் இந்த மாதிரியான அணுகுமுறையை நிறுத்துங்கள் என நட்புடனே எடுத்துரைத்துள்ளேன். அவ்வாறு பலர் விலகி நடந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
1990களின் இறுதிப்பகுதியிலும் 2000இன் ஆரம்பங்களிலும் உள்ளநாட்டு கலவரம் உச்ச நிலையில் இருந்தது. வெளியில் செய்தி சேகரிக்கும் இடங்களில் மட்டுமல்ல பாதுகாப்புப்படையினரும் சுயவிபரங்களை
அறிவதில் அதிக ஆர்வம்கொண்டிருந்தனர். எனது அடையாள அட்டை குறித்த ஒரு பிரதேசத்தில் நான் பிறந்தேன் என்பதைக்காட்டியதால், ஊடகவியலாளராகவும் இருந்ததால் பலமுறை வீதிகளில் மறிக்கப்பட்டேன் விசாரிக்கப்பட்டேன். ஒரு வருடத்திற்கும் மேலாக எனது சொந்த இடத்திற்கு போகமுடியாமல் இருந்தேன். காரணம் ஊடகவியலார்களுக்கு அந்த இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதே நேரம் குறித்த அந்த இடத்தில் போராளிக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகம் இருந்ததால் போக்குவரத்தில் எப்போதும் எனக்கு அதிக விசாரணைகளும் சிலமணிநேர தடுப்புகளும் இருந்தன. இதனால் வெளியில் சென்று செய்தி சேகரிக்க எனது அலுவலகமும் விரும்பவில்லை. வெளியில் செல்கின்றபோத சிங்கள ஊடகவியலாளர்களுடன் சேர்ந்து செல்லும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதன்போதும் எம்மை தனியாக வைத்து விசாரிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தன. அதன்போது சிங்கள் ஊடகவியலாளர்கள் “அப்போ எங்களையும் விசாரியுங்கள் என வந்து நிற்பார்கள்”. அதன்போது ஆண்களால் வரகூடிய பாதிப்புகள் எவ்வாறு எமது சக ஆண்களால் தீர்க்கப்படுமோ அதேபோல் சிங்களவர்களால் வரகூடிய பிரச்சினைகளுக்கு எமது சக சிங்களவர்களாலே தீர்க்கப்பட்ட சம்பங்களும் இருந்தன.
ஊடகவியலானர் என்ற ரீதியில் அலுவலகங்களில் தரவுகள் பெறுவது வெகு சிரமமாக இருந்தது. நாம் தமிழ் என்பதால் எந்தவிதமான தரவுகளையும் தருவதற்கு அவர்கள் தயாரில்லை. நாம் பயங்கரவாதிகளாகவே
பார்க்கப்பட்டோம். சாதாரண தரவுகளைகேட்பதே ஆபத்தானதாக இருந்தது. ஒரு முறை ஒரு அலுவலகத்தில் கதைத்து கல்வி சம்பந்தமாக தரவுகளை கேட்டேன். ஒரு கிழமை கழித்து புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் ஊடகத்தில் கட்டுரை பிரசுரிக்க வருவதுபோல் அலுவலகத்துள் நுழைந்து எனது மேசைக்கும் வந்துவிட்டார்கள். வந்து அமர்ந்தபின் என்னை விசாரிக்கத்தொடங்கினர். ஜனாதிபதியின் பல்வேறு கூட்டங்களில் என்னை தொடர்ச்சியாக சந்திப்பதாகவும் ஆனால் எனது பெயரில் செய்திகள் எதுவும் வருவதில்லை என்றும் பொய் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தனர். நான் வாராந்த பத்திரிகையின் பிரதி ஆசிரியராக இருக்கிறேன் அலுவலகத்துள் வேலை அதிகம் நான் வெளியில் செல்வதே இல்லை என்க் கூறியும் அவர்கள் விடுவதாக இல்லை. என்னை தாங்கள் கண்ணால் பார்த்ததாக கூறினர். அப்போது நிருவாகத்துடனும் பிரதம ஆசிரியருடனும் தொடர்புகொண்டு உண்மையை அறியும்படி அவர்களை அங்கே அனுப்பிவைத்தேன். அங்கே கதைத்தவிட்டு போய்விட்டனர்.தங்களுக்கு இந்த அலுவலகத்தில் இருந்து மொட்டைக்கடிதம் வந்ததாக கூறினார்களாம். எந்த உண்மையும் இல்லாத ஒரு சின்ன தகவல் எமக்கு எதிராக இருந்தாலும் நாம் விசாரிக்கப்படவோ கைது செய்யப்படவோ ஏதுவான காலமாக அது இருந்தது.
இவ்வாறு ஒரு தமிழ் பெண் ஊடகவியலாளராக அலுவலகத்துள்ளும் அலுவலகத்தின் வெளியிலும் சவால்கள்
அதிகமாகவே இருந்தன.
ජනමාධ්ය තුළ දමිළ කාන්තාව (1992-2004)