Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் 19 : கல்வியமைச்சின் தீர்மானங்கள் வெற்றியளிக்குமா?

கீர்த்திகா மகாலிங்கம்

கொவிட் 19 பெருந்தொற்றுப் பரவல் ஆரம்பித்ததிலிருந்து உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுள் கல்வித்துறையும் முக்கியமானதாகும். பாலர் கல்வி நிலையங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை மாணவர்கள் ஒன்றுகூட முடியாத சூழல் மாணவ சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்நெருக்கடியிலிருந்து மாணவ சமூகத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் பல்வேறு திட்டங்களைத்தீட்டி செயற்பட்டு வருகின்றன. இலங்கையில் கொவிட் 19 பரவல் கல்வியமைச்சும் கல்வி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கான தீர்மானங்களை அவ்வப்போது நிறைவேற்றி அமுல்படுத்தி வருகிறது. எனினும் அவை எந்தளவு தூரம் வெற்றியளிக்கும் என்பதே இன்று பலரும் எழுப்பும் கேள்வியாகும். வீட்டிலிருக்கும் மாணவர்களுக்கு நவீன தொடர்பாடல் வழிமுறைகள் ஊடாக ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என கல்விச் சமூகமும் பெற்றோரும் முறைப்பாடுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

“நான் என் புலமைப்பரிசிலுக்காக தயாராகிக்கொண்டிருந்த வேளையில்தான் கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்கள் தினமும் வாட்சப்பில் அனுப்பும் கேள்விகளை அம்மா என்னை செய்ய வைப்பார். எனினும் எனக்கு கேள்விக்கு பதில் எழுதி மட்டும் படிப்பது அவ்வளவு விருப்பமில்லை.  என் தங்கையும் தரம் 3 இல் படிக்கிறாள், அவளுக்கும் ஆசிரியர்கள் கேள்விகளை அனுப்புவார்கள். எனவே எங்கள் 2 பேரில் யாருக்கு அம்மாவின் தொலைபேசி கிடைக்கும் என எப்போதும் போட்டிதான். ஆனால் அம்மா நான் புலமைப்பரிசில் தோற்றுவதால் எனக்கே முன்னுரிமை வழங்குவார்.” என கம்பஹா மாவட்டத்தில் வத்தளையிலிருந்து இம்முறை புலமைப்பரிசிலுக்கு தோற்றிய வர்ஷா கூறினார்.

இது போன்ற எண்ணற்ற பல மாணவர்களின் கதைகளை நீங்களும் அறிந்திருக்கக்கூடும். கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தொடர்வதற்கென கல்வியமைச்சினால் பல்வேறு தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அத் தீர்மானங்கள் நீடித்துநிலைத்து நிற்கத்தக்க தீர்வுகளைத் தரக்கூடியனவாக அமையவில்லை. மாறாக மேலும் கல்வித்துறையில் நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதாகவே அமைந்துள்ளமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும்.

இணையவழி கல்வி முறை

“பாரம்பரிய கல்வி முறையிலிருந்து இணையவழி கல்வி முறைக்கு மாறியமை முக்கிய ஒரு தீர்மானமாகும். இணைய கல்வி முறை என்பது இந்த கொரோனா சூழ்நிலையில் எமது நாட்டிற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், உலகம்  தழுவிய முறையில் இது ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒன்றாகும். இணையவழி கற்றல் முறை பல வருடங்களாக உலகளாவிய ரீதியில் சாத்தியமான ஒன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கையைப் பொறுத்தவரையில்  பல்கலைக்கழகங்களில்  மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. பல்கலைக்கழகங்களில் கடந்த காலங்களில் மாணவர்களுக்கு கற்றல் மேலாண்மை அமைப்பு (LEARNING MANAGEMENT SYSTEM) எனும் முறையில் வகுப்பறை கற்றலுக்கு அப்பால் தகவல்களை திரட்டிக்கொள்ள, உசாத்துணைகளை  பெற்றுக்கொள்ளவும் இணையவழி கல்வி முறை பயன்பட்டிருந்தாலும் பாடசாலை மட்டங்களில் இது புதியதொரு அனுபவமாகவே காணப்படுகின்றது” என யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைப்பிரிவின் பீடாதிபதியும், சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். ரகுராம் தெரிவித்தார்.

இலங்கையின் கல்வி முறையானது நேரடி கல்வி முறையாகும் (face to face). பாரம்பரியமாக நாங்கள் நேரடி கல்வி முறையில் பழக்கப்பட்டிருக்கின்றோம். எனவே திடீரென முன்னெடுக்கப்பட்ட  இந்த மாற்றம் ஆசிரிய மாணவர்கள் மத்தியில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

  • குடும்பங்களின் பொருளாதார நிலை காரணமாக இணைய பயன்பாட்டிற்கான கருவிகளை பெற்றுக்கொள்ள வசதியின்மை.
  • மிகச் செம்மையான மற்றும் இலவச இணையத்தொடர்புகள் இன்மை (internet connectivity)
  • இலங்கையில் எல்லா இடங்களிலும் இணையத்தொடர்புகள் வலுவூட்டப்பட்ட நிலையில் இல்லாமை(high strength) 
  • கல்வியை கற்பதற்கு உகந்ததான பௌதீக சூழ்நிலை எல்லோருக்கும் காணப்படாமை.
  • இணையவழி கல்விமுறைக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழுமையாக பரிச்சயமின்மை.
  • தொழில்நுட்ப பிரச்சினைகளும் அவற்றை கையாளும் திறனின்மையும். 
  • தொலை தூரத்திலிருக்கும் மாணவர்களின் கவனத்தை தக்க வைத்துக்கொள்ளல்.

போன்ற பல சவால்கள் இணையவழி கல்வியில் காணப்படுகின்றன. இணையத்தை முற்றுமுழுதான ஒரு மாற்று கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுது பல சவால்கள் எழுகின்றன.  சரியான இயல்தகைமையுள்ள சூழலை உருவாக்காமலும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமலும் இந்த இணையவழி முறைக்குள் நாங்கள் நுழைந்து விட்டோம். அதுவே இந்த சவால்கள் ஏற்படுவதற்கான காரணமாகும்.   இந்த சவால்களை வெற்றிகொள்வதென்பது அரசாங்கத்தாலும், சம்பந்தப்பட்ட தரப்பினர்களாலும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாக காணப்படுகின்றன.  இந்த சவால்கள் யாவும் நிவர்த்தி செய்யப்படால் மாத்திரமே இணையவழி கல்விமுறை சாதகமான நிலையை எட்டும் என மேலும் அவர் குறிப்பிடுட்டார். 

இலங்கை அரசாங்கம் சொந்த e- learning தளமான Thaksalawa  (https://www.e-thaksalawa.moe.gov.lk/  ) எனும் தளத்தை கொண்டிருக்கின்றது. இத்தளம் அனைத்து தரங்களுக்குமான பாடப்பரப்புக்களை மும்மொழியிலும் கொண்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கமைய  இதனை பாவிக்கும் பாவனையாளர்களிடமிருந்து எவ்வித கட்டணங்களும் அறவிடப்படாது. (http://www.colombopage.com/archive_20A/Mar25_1585117046CH.php ) எனினும் இதன் வினைத்திறன் மற்றும் இதனை பாவிப்பதில் உள்ள சிக்கல்தன்மை போன்றவை மீள ஆராய வேண்டிய விடயங்களாக உள்ளன.

பரீட்சை திகதிகள் குறித்த தீர்க்கமற்ற முடிவுகள்

கொரோனாவின் முதலாவது அலையுடன், ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தரப்பரீட்சை என்பன பிற்போடப்பட்டன. பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் சிலருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தபோதிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, உயர்தர எழுத்து மூல பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டன. எனினும் உயர்தர செயல்முறை பரீட்சை, சாதாரண தர பரீட்சை என்பன மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன.

பேராசிரியர் எஸ்.ரகுராம் இது தொடர்பில் குறிப்பிடுகையில், பொதுவாகவே சாதாரணதர, உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளையும் நேர சூசிகளையும் முன்கூட்டியே நிர்ணயிப்பதன் மூலமாகத்தான் பாடப்பரப்புகளை முடிப்பதற்கும், பாட விதானங்களை பூரணப்படுத்தும் செயல்முறைகளும் நடந்து வருகின்றன. எனவே மாணவர்களது உளநிலையும் பரீட்சைகளை நோக்கிய ஒரு இலக்கோடு திட்டமிடப்படுவதால் பரீட்சை திகதிகள் பிற்போடப்படுவது மாணவர்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் பாடவிதான பரப்புகள் பூரணப்படுத்தப்படாமல் அல்லது பகுதியாக முடித்து பரீட்சைகளில் மாணவர்களை குறித்த சமயத்திலே தோற்ற வைப்பதும் நியாயமற்ற செயல் எனக்கூறினார்.

இக்காலத்தில் திடீரென தொற்று அதிகரித்தல், புதிய கொத்தணிகள் உருவாதல் போன்ற விடயங்களால் கால நிர்ணயத்தில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. வெளிநாடுகளைப் பொறுத்தவரையில், பரீட்சைகளை / கல்வியாண்டையே தீர்க்கமாக நீண்ட காலத்திற்கே ஒத்திவைக்கும் வழக்கமொன்று காணப்படுகின்றது.  நாங்கள் குறுகிய காலத்திற்கு பிற்போடும்பொழுது மீண்டும் அது சாத்தியப்படாமல் செல்லும் போக்கை அவதானிக்க முடிகின்றது. இது பரீட்சைகளை குறிவைத்து கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு நிச்சயமாக பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பரீட்சைகளை நடத்துவதற்குரிய புறக்காரணிகளை மையமாக வைத்துக்கொண்டும், பாடசாலைமட்ட கணிப்பீடுகளை மையமாக வைத்துக்கொண்டும் ஒரு தெளிவான கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் போர்க்காலத்தில் இதே சம்பவங்கள் நடந்தன. பரீட்சைகள் பிற்போடப்பட்டு பிற்போடப்பட்டு நடாத்தப்பட்டன. எனினும் அது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு (manmade disaster). கொரோனா இயற்கையால் ஏற்பட்ட பேரழிவு. எனினும் இரண்டினதும் தாக்கங்கள் ஒன்றாகவே காணப்படுகின்றன. எனவே மாணவர்களின் பாடவிதானங்களை முழுமையாக பூர்த்தி செய்யாமல் பரீட்சைகளை மேற்கொள்வது மாணவர்களுக்கு பூரணமான கல்வி அறிவை வழங்காது. நீண்டகால நோக்குடன் சிந்தித்து பரீட்சை திகதிகள் தீர்க்கமாக பிற்போடப்பட்டால் அது இயல்பான பொறிமுறையொன்றை உருவாக்க வழிவகுக்கக்கூடும் எனவும் பேராசிரியர் எஸ். ரகுராம் தெரிவித்தார்.

பாடசாலைகளை மீளத்திறத்தல்

“கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை நிகழ்கால சவாலை ஏற்று சரியான சுகாதார முறைகளுடன் மீள திறக்கின்றோம்.” என கல்வியமைச்சு  தெரிவித்திருந்தது. எனினும் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்தும் இதற்கு எதிர்ப்பினையும் கண்டனங்களையும் தெரிவித்து வந்தது. இருப்பினும் மேல் மாகாணம் தவிர்த்து ஏனைய பகுதிகளில் நவம்பர் 23ஆம் திகதி தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. எனினும் இன்றுவரை திறக்கப்பட்ட பாடசாலைகள் பல மாவட்டங்களில் மீள மீள மூடப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. கொரோனா தொற்று காலத்தில் பாடசாலைகளை திறக்க வேண்டுமாயின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருக்கும் நிலையில் இலங்கையில் கல்வித்துறையினால் அவை பின்பற்றப்பட்டதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

(https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/question-and-answers-hub/q-a-detail/coronavirus-disease-covid-19-schools )

“பாடசாலைகளை மீளத்திறக்க புதிய சகஜ நிலைக்கு (new normal) தயாரா? நமது அரசு தயாரா? சுகாதாரத் துறை தயாரா? ஏன்பன போன்ற பல கேள்விகள் எம்மத்தியில் உள்ளன. வெளிநாடுகளில் புதிய சகஜநிலைக்கான தொடர் மருத்துவ, சுகாதார கண்காணிப்புகள் எல்லாம் காணப்படுவதால் அங்கு புதிய சகஜ நிலை சாத்தியம். ஆனால் எங்களது பண்பாடு, உட்கட்டமைப்பு வசதிகள் என்பன சுகாதார இடைவெளியை பேணக்கூடிய வகையில் இல்லை. சரியான போக்குவரத்து வசதிகள் இல்லை. மலசலகூடவசதிகள் இல்லை. மாணவர்களின் எண்ணிக்கைக்கும் வகுப்பறைகளின் அளவுக்கும் இடையில் நெருக்கடி நிலை. அடிப்படை வசதிகளற்ற பாடசாலைகள் அதிகம் காணப்படுகின்றமை போன்ற பல கள நிலவரங்கள் அரசின் எழுத்து மூலமான தீர்மானங்களுக்கு எதிர்மாறானதாகவே காணப்படுகின்றன. தொடர்ந்தும் பாடசாலைகளை ஆரம்பித்து இடைநிறுத்துவதும் ஆரோக்கியமானதன்று. மாணவர்களின் உளநிலையில் அது ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும். நிரந்தரத் தன்மையில்லாத போக்கை பாடசாலை சமூகத்தின் மத்தியில் இது உருவாக்குகிறது. எனவே ஆழமான கரிசனையோடு இதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் பேராசிரியர். எஸ்.ரகுராம் தெரிவித்தார்.

தொலைக்காட்சி மூலமான கல்வி கற்பித்தல் 

கொரோனாவின் முதலாவது அலையின் போது பாடசாலைகள் மூடப்பட்டதையடுத்து, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர ஏப்ரல் 20 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பங்களிப்போடு guru gedara (குருகுலம்) எனும் தொலைக்காட்சி மூலமான கற்றல், கற்பித்தல் முறை ஆரம்பிக்கப்பட்டது. தொலைக்காட்சி கற்பித்தல் முறை என்பது இலங்கையில் ஏற்கனவே காணப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும், குறிப்பிட்ட பாடங்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.

“தொலைக்காட்சி கற்பித்தல் முறை முற்றுமுழுதாக மாணவர்களுக்கு பயன் தருகிறதா என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. ஏனெனில் எமது கல்வி முறை கலந்துரையாடல் பாணியில் (interactive platform) ) காணப்படுகின்றது. தொலைக்காட்சியில் ஒரு வழி தொடர்பாடல் காரணமாக மாணவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு முறை வெகுசன ஊடகங்களில் சாத்தியமில்லாத ஒன்றாக காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் இம்முறையை பயன்படுத்தினாலும் இவை ஒரு பின்னடைவை கொண்டிருக்கின்றது.” என பேராசிரியர் எஸ்.ரகுராம் தெரிவித்தார்.

பாடசாலைக் கல்வி அடிப்படைக் கல்வியாக காணப்படுகின்றமையால், அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மாணவர்களின் உயர்கல்வியையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகிறது. சம்பிரதாயபூர்வமாக பரீட்சைகளை முடித்து உயர்கல்விக்கு அனுப்புவதன் மூலம் பயன் இல்லை. எனினும் பரீட்சைகளை மையப்படுத்திய கல்வி முறைக்குள் நாங்கள் சிக்குண்டு இருப்பதால் மாணவர்களின் அறிவு வளர்ச்சி பற்றிய மதிப்பீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. கல்விசார் தொடர்ச்சித்தன்மையை (educational Continuity) விலகலின்றி வழங்கக்கூடிய நடைமுறைகளை கையாள்வதன் மூலமாகவே கல்வி நெருக்கடிகளை தவிர்க்க முடியும் என பேராசிரியர் எஸ்.ரகுராம் குறிப்பிட்டார்.ஸ்திரமற்ற தற்காலிக முடிவுகளை எடுப்பதனால் அவை பல தருணங்களில் செயலற்றுப் போகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை வைத்துக்கொண்டு அதிரடியான தீர்மானங்களை எடுப்பதில் பயனில்லை. மாணவர்களின் உள நிலை, சமூக பௌதீக காரணிகள், வளங்களின் பற்றாக்குறை, பொது வசதிகளில் ஏற்பட வேண்டிய விருத்தி என்பன தொடர்பில்  ஆழமான கவனத்தோடு முடிவுகள் எடுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே கொவிட் மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ள கல்வி நெருக்கடியிலிருந்து இலங்கை விலக முடியும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts