குளவிக் கொட்டு : மலையக மக்கள் எதிர்நோக்கும் உயிரச்சுறுத்தல்!
கீர்த்திகா
“ஹற்றன் – டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.”
“தேயிலை பறித்துக்கொண்டிருந்த 10 பெண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.”
“மஸ்கெலியா மற்றும் ஹட்டனில் இரட்டைக்குளவிக் கொட்டினால் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.”
இது போன்ற செய்திகளை இன்று தினமும் ஊடகங்களில் காண முடிகிறது. மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்கள் இன்று எதிர்நோக்குகின்ற அன்றாடப் பிரச்சினையாகவும் இந்தக் குளவிக்கொட்டு விவகாரம் மாறிவிட்டது.
ஆனாலும் யானை – மனிதன் முரண்பாட்டுக்கு வழங்கப்படுமளவு முக்கியத்துவம் மலையக மக்களின் குளவிகளுடனான போராட்டத்திற்கு வழங்கப்படுவதில்லை. ஏலவே அடிப்படை வசதிகளின்மை, தொழில்சார் உரிமைகள் மீறப்படுகின்றமை, போதிய சம்பளமின்மை, கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளின்மை என பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு குளவிக் கொட்டும் மற்றுமொரு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளமை துரதிஷ்டவசமானதாகும்.
உயிரச்சுறுத்தல்
குளவிக்கொட்டு தாக்குதல் அச்சுறுத்தல் நீண்ட காலமாக மலையகத்தில் நிலவுகின்ற போதிலும் இவ்வருடம் குளவிக் கொட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்த வருடத்தில் இதுவரை ஊடகங்களில் அறிக்கையிடப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் மலையகத்தைச் சேர்ந்த நால்வர் குளவிக்கொட்டினால் மரணமடைந்திருப்பதோடு, நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 25.05.2020 அன்று நியூஸ் பெஸ்டில் அறிக்கையிடப்பட்ட, ஹட்டன் டிக்கோயா நகரில் நான்கு பிள்ளைகளின் தாயொருவர் குளவிக்கொட்டினால் பலியான சம்பவம் பெருந்தோட்ட மக்களின் மத்தியில் ஏற்படுத்திய அச்சத்தையும், அதிர்ச்சியையும் அவர்களின் அழுகையின் ஓலம் பிரதிபலிக்கின்றது. (https://bit.ly/2JjSX5u)
“இரண்டு கிழமைக்கு முதல்ல எங்க தலையெல்லாம் குளவி கொத்தி ஆஸ்ப்பத்திரிக்கி போய் ஊசி போடு வந்தோம். எங்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கல. எங்களுக்கு குளவி கொத்தினது பத்தி எந்த நியூஸ்லையும் காட்டல.” என சூரியகாந்தி தேயிலை தோட்டத்தில் பணி புரியும் சகுந்தலா குறிப்பிட்டார்.
சிகிச்சை வசதிகள் உள்ளனவா?
“பெருந்தோட்டங்களில் பணிபுரியும் வேளைகளில் குளவிக்கொட்டுக்கு ஆளாகும் பணியாளர்கள் தோட்ட நிர்வாகத்தினரால் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுவதனால் அவர்களுக்கான சிகிச்சைகளும் விரைவாக வழங்கப்படும். ஆனால் வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ தனி நபர்கள் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துவருவதற்கு தாமதம் ஆகிறது. குளவிக்கொட்டினால் ஏற்படக்கூடிய மரணங்கள் பெரும்பாலும் தனிநபர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களிலோ அல்லது தாக்குதலின் வீரியம் அதிகரிக்கும் சமயங்களிலோ இடம்பெறுகின்றன. எவ்வாறாயினும் மலையகத்தைப் பொறுத்தவரையில் இது தொடர்ச்சியாக முகங்கொடுக்கும் சம்பவம் என்பதால் இங்குள்ள வைத்தியசாலைகளும் அதற்கு சிகிச்சையளிப்பதற்கான தயார்நிலையிலேயே எப்போதும் இருக்கின்றன.” என லிந்துலை பிரதேச செயலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆறுமுகம் ஜெயராஜன் தெரிவித்தார்.
ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு சில பெருந்தோட்ட நிர்வாகங்கள் மாத்திரமே குளவிக் கொட்டு தொடர்பில் தற்காலிக பாதுகாப்பு முறைகள் சிலவற்றை கையாண்டு வருகின்றன. உதாரணமாக குளவிக்கூடு கலைந்ததை தொழிலாளர்கள் அறிந்தவுடன் தம் உடலை அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக பொலித்தீன் போன்ற பாதுகாப்பு ஆடையை அணிந்துகொள்கிறார்கள். இது அங்கீகரிக்கப்பட்ட அல்லது சிபாரிசு செய்யக்கூடிய முறையா என்ற முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும் கூட தற்காலிகமாக தமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
குளவிக்கொட்டினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அதிர்ச்சியடைந்து காணப்படுவதோடு, சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. மேலும் சிலர் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் குளவிக் கொட்டினால் மேலும் பலமிழந்து செல்வதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. இவ்வாறான உடல் ரீதியான பிரச்சினைகளைத் தாண்டி உள ரீதியாக அவர்கள் பெருமளவிலான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். குளவிக்கொட்டுக்கு இலக்காகியவர்களுக்கு நாட்டு மருத்துவ முறைகளை பரீட்சித்துப் பார்ப்பதை தவிர்த்து விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு வரவேண்டியதன் அவசியம் குறித்து சுகாதாரத் துறையைச் சார்ந்தவர்கள் மக்களை அறிவூட்டி வருகிறார்கள். எனினும் இப் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வைப் பெறுவதற்கான எந்த முயற்சிகளும் அரசாங்க தரப்பில் செயல் வடிவம் பெறவில்லை எனவும் வைத்தியர் ஆறுமுகம் ஜெயராஜன் தெரிவித்தார்.
நிவாரணம் என்ன?
“தோட்டத்தொழிலாளர்களுடைய சம்பளம் தொடர்பாக இருக்கின்ற கூட்டு ஒப்பந்தத்திலே, தோட்டடங்களை துப்பரவாக வைத்திருக்க வேண்டும் என்பதும், தொழிலாளர்களுடைய தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு வேலை நேரங்களில் எதாவது விபத்து ஏற்பட்டால் நட்டஈட்டு கட்டளைச்சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடும் இருக்கிறது.” என சட்டத்தரணி இ. தம்பையா நியூஸ் பெஸ்ட்க்கு வழங்கிய கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் பொறுப்பு
இதனிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் குளவிகளை பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பாக சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளதோடு, குளவிக்கூடுகள் காணப்படும் ஒவ்வொரு தோட்டப்புறங்களிலும் 5 இளைஞர்களை தெரிவு செய்து அவர்களை இந்த பணிக்கு தயார்படுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“குளவிக் கூடுகளை அகற்றுவது மூலம் பல்லுயிர் விலங்குகளுக்கு விளைவுகள் ஏற்படும் என்பதாலும், கருத்திற்கொள்ள வேண்டிய விளைவுகள் இருப்பதனாலும், வனஜீவராசி அமைச்சகத்தின் ஒத்துழைப்பு வேண்டும் என புரிந்துகொள்கிறோம். எங்கள் தொழிலாளரின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மலையக பிரதேசத்திலுள்ள குளவிக்கூடுகளை அகற்றுவதற்கு வனஜீவராசி அமைச்சகம், பிரதேச பெருந்தோட்ட நிறுவனம், தொழிற்சங்கங்களை தொடர்புபடுத்துவதற்காக எங்களுக்கு போதுமான அனுமதி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் பெற்றுத்தருவதற்காக நீங்கள் ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அதனால் இப்பிரச்சினையை முழுமையாக தீர்ப்பதற்கு உங்கள் மேலான ஆதரவை எதிர்பார்ப்பதுடன், அது தொழிலாளர் மத்தியிலுள்ள மரண பயத்தை போக்குவதற்கும், தொழில் புரியும் சூழலை பாதுகாப்பாக உருவாக்குவதற்கும் முக்கியமாக அமையும். இவ்விடயம் சம்பந்தமாக உங்களின் உடனடி கவனத்தை எதிர்பார்க்கிறோம்.” என சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சிற்கு ஜீவன் தொண்டமான் கையளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிபவர்கள் குளவிக்கொட்டுக்குள்ளாகும் போது பெருந்தோட்ட நிர்வாகங்களால் அவர்கள் சிகிச்சை பெறும் தினங்களுக்கேற்ப வழங்கப்படும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்கப்படுகின்ற போதிலும் இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை. தாம் அங்கம் வகிக்கும் பெருந்தோட்ட சங்கத்தினால் வழங்கப்படும் மரணச்சடங்கிற்கான ஒரு சிறு நிதியைத் தவிர வேறு எந்தவித நஷ்டயீடுகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை.
பொதுவாகவே குளவித்தாக்குதல் போன்ற விலங்குகளினாலும், வனஜீவராசிகளினாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு காடழிப்பு, பூகோள வெப்பமாதல், வனங்களை சரியாக பராமரிக்காமை போன்றவையே பிரதான காரணங்கள் என சூழலியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பெருந்தோட்ட நிர்வாகங்களில் குளவிகளை கட்டுப்படுத்துவதற்கான அலகு (wasp control unit) இல்லாமை, மலையகத்தின் எல்லைப்புறங்களிலும் விருத்தியடைந்த மருத்துவ வசதியின்மை, மருத்துவ வசதிகளை விரைவாக பெற்றுக்கொள்ள தேவையான போக்குவரத்து ஒழுங்கின்மை, குளவி தாக்கியவர்கள் உடல் நிலை குறித்து தொடர்ந்தும் அவதானிப்பதற்கான சுகாதார நலன்புரி அமைப்பொன்றில்லாமை போன்ற குறைபாடுகள் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
மலையகத்தைப் பொறுத்தவரையில் தாய், தந்தை ஆகிய இருவரது வருமானத்தையும் நம்பியே அவர்களது குடும்ப கட்டமைப்புகள் அமைந்துள்ளன. எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும் அவற்றிற்கு என்றோ ஒரு நாள் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தினசரி வேலைக்கு செல்ல கட்டாயப்பட்டிருக்கிறார்கள். தலைமுறை தலைமுறைகளாக அத்தியாவசியங்களை பூர்த்தி செய்ய அவதிப்படும் அவர்கள் நம் நாட்டின் தனித்துவத்திற்காக உழைக்கும் விலைமதிப்பற்றவர்கள். அவர்களின் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டியதும் அதற்காக குரல் கொடுக்க வேண்டியதும் நம் அனைவரதும் கடப்பாடாகும்.