அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது ஒரு நோயக் கிருமியல்ல (பாகம் – 2)
அசங்க அபேரத்ன
இலங்கையிற் பல்வேறு மதங்களிலும் தத்துவங்களிலும் நம்பிக்கையுடைய சமூகங்களைக் காணலாம். இருந்தபோதிலும், இவ்விடயத்தில், எங்கள் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மீறும் செயலெனக் குறிப்பிட முடிகிறது. எங்கள் அரசியலமைப்பில் ‘ஒருவருடைய மதத்தைப் பின்பற்றும் உரிமை’ என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் ஒருவர் தான் விரும்பினால் ஒரு மதத்தைப் பின்பற்றாதிருப்பதற்கு அவருக்கு இருக்கும் உரிமை பற்றிய ஏற்பாடுகள் எதுவும் இல்லாதிருக்கிறது. ஏனைய மதங்களைத் துன்புறுத்தவும் தண்டிக்கவும் அரசினால் முதலிடம் வழங்கப்பட்ட மதத்தைப் பயன்படுத்துவது ஒரு ICCPR உடன்படிக்கை மீறலாகும்
டெய்லி மிரர் பத்திரிகையில் ‘இஸ்லாமிய பயங்கரவாத்திலிருந்து சிங்கள பௌத்த வன்முறைக்கு’ என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை, இன மற்றும் மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் எழுத்தாளர் குசால் பெரேரா மற்றும் ‘ஆர்தா’எனும் சிறு கதையைப் பிரசுரித்ததற்காக ஷக்திகா சற்குமார ஆகிய இருவரினது கைதுகள் பற்றிப் பேசுகிறது. மலாக்கா தேவ பண்ணாரிய என்பரின் வானொலி நிகழ்ச்சியைத் தணிக்கை செய்தது பற்றியும் ‘புத்தாஸ் றஸ்தியாதுவ’ என்ற புத்தகத்கத்திற்குத் தடை விதித்தது பற்றியும் பேசுகிறது. இவை இரண்டும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர உரிமை மீதிருக்கும் அடக்குமுறையின் அண்மைய உதாரணங்களாகும். ஆதலால், நாங்கள் கண்டிக்க வேண்டியது அரசாங்கத்தின் சாதி மற்றும் மத அடிப்படையிலான கொள்கைகளையும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் மட்டுமே அல்லாமல் இவைகளை இயக்கும் அரசாங்கத்திற்கெதிராக விமர்சனம் செய்ய வேண்டியதில்லை
கருத்து வெளிப்பாட்டு சுதந்திர உரிமை நீண்ட காலமாக அடக்குமுறைக்கு உட்பட்டிருந்ததுடன் இந்தச்சுதந்திரத்தை அடக்குவதற்காகப் பாவிக்கப்பட்ட உத்திகளாக ‘வெள்ளை வான்’ கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் விதிமுறையற்ற கைதுகள் இருந்தன. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்கள், செய்தி வெளியிடுவதற்குத் தடை ஏற்படுத்தல், மொழிபெயர்ப்பாளரின்றி விசாரணை செய்தல் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களை அவமதித்தல் ஆகியவை இப்பொழுதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. குறிவைக்கப்படும் ஊடகவியலாளர்களுடன் பத்திரிகைகளையும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பவர்களும் சேர்க்கப்படுகின்றனர். அச்சுறுத்தலையும் மற்றும் அடிபணியவைத்தலையும் கொண்ட ஒரு அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் தனது அரசியல் அபிலாசைகளுக்கு இசைவாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திர உரிமையைக் கையாள முயல்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீது கட்டுப்பாடு விதித்தலை நியாயப்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய முதன்மைச் சட்டரீதியான ஆவணமாக 1978ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் இருந்தது. ஆனால் எமது சமுதாயம் ஒரு உண்மையான ஜனநாயக சமுதாயமாக இருக்க வேண்டுமாயின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், தகவலறியும் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் ஆகியன தொடர்ந்து செயற்பட வேண்டும். பெருந்தொற்றுக் கட்டுப்பாட்டிலுங்கூடப் பல நாடுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், தகவல் அறியும் உரிமை மற்றும் அந்தரங்கத்திற்கான உரிமையும் மடக்கப்பட்டுள்ளன. அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தும் பொழுது பல நாடுகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அடங்கலாக அடிப்படை மனித உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
உண்மை அடிப்படையிலான மற்றும் விஞ்ஞான ரீதியான தகவல்களின் ஓட்டம் நின்றால் என்ன நடக்கும்?
உலகப் பெருந்தொற்றிற்குப் பதில் வினையாற்றுவதெனில், உடலாரேக்கியத்துக்கு ஏற்படவுள்ள இடர் வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் சரியான நேரத்திற் கிடைப்பது மிகவும் கட்டாயமாகும். பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆகியவை அத்தியாவசியமாகும். இத் தொற்று நோய் பீடித்திருக்கும் காலப்பகுதியில் நாங்கள் சரியான தரவுகள் இன்றி இதிலிருந்து எங்களைப் பாதுகாக்க முடியாது என்றபடியால் கருத்துகளையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்நோய்க் கிருமியைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் உருவாக்குவதற்கு விஞ்ஞானரீதியான தரவுகளும் தொற்று நோயியல் சம்பந்தமான தகவல்களும் தேவைப்படுகின்றன. பெரும் தொற்று நோயுள்ள சூழலில் சமூக இடைவெளி பேணுதலையும் மிகச் சரியான தகவலின் பேரிலேயே செய்யமுடியும். ஆனால், சர்வாதிகார ஆட்சிகள் உண்மையையும் முக்கிய தகவல்களையும் திரிவுபடுத்துவார்கள். அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்வதற்குத் தங்கள் மீது தாம் கொண்ட நம்பிக்கையிலும் மூடநம்பிக்கைத் தீர்வுகளிலும் தங்கியிருப்பர். ஆகவே, தகவல் பெறும் உரிமை மட்டும் போதுமானதல்ல என்பதுடன் மிகவும் சரியான மற்றும் நம்பகரமான தகவல்களைத் தேர்ந்தெடுப்பதற்குச் சுதந்திரமான இடைவெளியும் அவசியமாகும். மிகக் குறைந்தது, மக்கள் தங்களுடைய அரசியல்வாதிகள் மேல் பாரம்பரியமாக வைத்திருக்கும் நம்பிக்கையிலிருந்து விலக வேண்டும். இன்றைய பெருந்தொற்றுச் சம்பந்தமான விடயத்தில் இதனுடன் தொடர்புள்ளவர்களான தொற்றுநோயியல் நிபுணர் போன்றோரைக் கலந்தாலோசிப்பதே சிறந்ததென்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உண்மை அடிப்படையிலான மற்றும் விஞ்ஞானரீதியிலான தகவல்களின் ஓட்டம் நின்றுவிடுமானால் இந்த வைரஸ் நோய் சுதந்திரமாகப் பரவிவிடும். இது மிகவும் ஆபத்தானது ஆனபடியால் நாங்கள் சுதந்திரமாகக் கருத்து வெளியிடும் உரிமையுடன் விரோதம் பாராட்டாது இந்த வைரஸிற்கு எதிராக விரோதம் பாராட்ட வேண்டும். அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை மெதுமெதுவாக அழிக்கும் விமர்சனங்களை அனுமதிப்பதால் இந்த வைரஸிலும் பார்க்க ஆபத்தான அரசியல் சூறாவளி ஒன்றை ஏற்படுத்தும் என அரசாங்கம் வாதிடுகிறது.
தனிநபர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு அனுமதிக்கப்படாவிட்டால் வைரஸ்கள் மனிதர்களின் உயிர்களை எவ்வகையிற் பாதிக்கும் என்பது தெளிவில்லாமல் இருக்கும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புச் சம்பந்தமான விசேட அறிக்கை இக் கொவிட் 19 யுகத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைக்கு அமைவாக நடக்கத் தவறிய பல நாடுகள் பற்றிக் கவனஞ் செலுத்துகிறது. எப்பொழுதும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைய நடக்காத சில அரசாங்கங்கள் தவறான தகவல்களைத் தடுப்பதற்குச் சட்டங்கள் இயற்றியுள்ளன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்குச் சட்டரீதியாக ஏற்படும் சவால்கள் சம்பந்தமாகத் தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலிருக்கும் நீதிபதிகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் UNESCO விசேட வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இவ்வழிகாட்டல்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் மனித உரிமைத் தரநியமங்களைக் கொண்ட கோட்பாட்டுரீதியான கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்துவது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு சட்ட ஏற்பாடுகள் மட்டும் போதாது. இதில் முக்கியமான விடயம் வித்தியாசமான அபிப்பிராயங்களைச் சகித்துக் கொள்ளல் மற்றும் சுதந்திரமான பேச்சை மதித்தல் போன்ற பழக்கங்களைத் தனிநபர்கள் தங்கள் மனதில் ஆழப் பதியவைத்தலாகும். இயற்பியல் விஞ்ஞானி அல்பேட் ஐன்ஸ்ரீன் ‘ஒவ்வொரு மனிதனும் தனது சிந்தனைகளைச் செல்வாக்குகள் ஏதுமின்றி வெளிப்படுத்தக்கூடியதாக இருப்பதற்கு முழுச் சனத்தொகையினரிடமும் சகிப்புத் தன்மை என்ற ஒன்று இருத்தல் வேண்டும்’ என ஒருமுறை கூறியுள்ளார்.