அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது ஒரு நோயக் கிருமியல்ல(பாகம்- 1 )
அசங்கா அபேரத்ன
மனிதனை ஏனைய விலங்கினங்களிலிருந்து வேறுபடுத்தும் காரணிகள் பலவற்றில் முக்கியமானது மொழியாகும். மிருகங்களும் தங்கள் உணர்ச்சிகளை உள்ளுணர்வு மூலம் பரிமாறுகின்றன. மனித இனம் தொடர்பாடலில் மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. மானிடர்களுக்கு ஒரு மொழியில் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளில் அவைகளுக்கு ஒத்திசைவான தளங்களிற் தொடர்பாடல் செய்யும் ஆற்றல் உண்டு.
ஆகவே, தொடர்பாடல் மூலம் தனிப்பட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பது ஒரு மனித உரிமையென வாதிடலாம். ஆனால் ஒரு மொழியை அறிந்திருப்பதானால் மற்றும் தொடர்பாடல் வசதிகளை அணுகும் வாய்ப்புகள் இருப்பதனால் மட்டும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கவும் முடியுமா? இந்தக் கருத்துப் பற்றி வாதிடும் பொழுது ஒரு பழமொழி மனதிற் தோன்றுகிறது. அதாவது நாட்டைச் சூழவும் வேலி அமைத்தாலும் வாயைச் சுற்றி அதனை அமைக்கமுடியாது. (ஊர் வாயை மூடினாலும் உலை வாயை மூடமுடியாது). இப் பழமொழி ஒரு தலைமுறையிலிருந்து மற்றையதற்கு கொண்டுசெல்லப்படுவதுடன் அதன் உடன்பிறப்பான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் குறிக்கிறது. இங்கு மிகவும் முக்கியமான அம்சம் சுதந்திரமாகும். அது பிறிதொருவரின் அல்லது ஒரு குழுவினரின் செல்வாக்கிற்குட்படாமல் ஒருவர் தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு வேண்டிய உரிமையை வலியுறுத்துகிறது.
எவ்வாறான சூழ்நிலையிலும் ஒருவர் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தவும் கொண்டிருக்கவும் உரிமையுடையவராய் இருக்கிறார் என்பதுடன் அது சரியான கருத்தா அல்லது கோட்பாடா எனக்கூற எவ்வித தர நியமமும் கிடையாது. சர்வமும் ஒன்றே என்ற தத்துவத்தினுள்ளும் பல்வகையான கருத்துகளும் எதிரான கருத்து நிலைகளும் உள்ளன. “கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தில் எமக்கு நம்பிக்கை இல்லையெனில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்குக் கண்டனம் தெரிவிப்போம்” என நோஅம் சம்ஸ்கி கூறுகிறார்.
கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமையாகும்
ஐக்கிய நாடுகள் சபையால் 1948ல் ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் உறுப்புரை 19ல் ‘அபிப்பிராயம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கான உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு’ எனக் கூறுகிறது. ‘எதுவித தடங்கல்களுமின்றி ஒருவர் தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவதற்கும் எல்லைகள் தாண்டி எந்த விதமான ஊடகங்களின் ஊடாகவும் தகவல்களைப் பெறுவதற்கும் உரிய உரிமையும்’ இதிலடங்குகின்றன. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் யாவருக்குமுரிய அடிப்படையான மற்றும் தவிர்க்கமுடியாத உரிமையாகும். இது ஒரு ஜனநாயக சமூகம் சிறப்புடன் இருப்பதற்கு வேண்டிய ஒரு அத்தியாவசியமான குணாம்சமாகும். இப்பொழுது 175 பகுதியினரை உள்ளடக்கியிருக்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (1966 19.1) உறுப்புரை 13, மனித உரிமைகளுக்கான அமெரிக்கன் உடன்படிக்கையின் உறுப்புரை 13ன் பிரகாரம் ‘ஒவ்வொருவருக்கும் அபிப்பிராயம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கான உரிமையுண்டு’ எனக் கூறுகிறது.
இலங்கையின் 1978ம் ஆண்டில் நிறைவேறிய அரசியலமைப்பில் அத்தியாயம் 3ன் உறுப்புரை 14ல் ‘பேச்சுச் சுதந்திரம்’ உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் உறுப்புரை 15 முழுமையான உரிமைகள் எனக் கருதக்கூடியவைகளைக் கட்டுப்படுத்த இயலும் என வலியுறுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு அங்கத்துவ நாடாக இருப்பதனால் இலங்கை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை அங்கீகரிக்க வேண்டியிருப்பதோடு அது 1980 மே 11ல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையில் இது 2007லிருந்து வலுவிலுள்ளதுடன் அரசியலமைப்பில் உள்ளடக்கப்படாதிருக்கும் மனித உரிமைகள் சிலவற்றை நிலை நிறுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அதாவது, ‘பாகுபாடு, சாதி, இனம், மற்றும் மதம் முதலியவை ரீதியான போட்டி மனப்பான்மைகள் அல்லது வன்முறையைத் தூண்டும் செயல்கள்’ சட்ட விரோமானவையென்று கருதப்படும். இவைகள் நபரொருவரினால் மீறப்பட்டால் அதற்காக 10 வருடங்கள் வரையான சிறைத் தண்டனை வழங்கமுடியும். துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்த உடன்படிக்கை அரசாங்கத்தினாற் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.