Transparency

கொவிட் தடுப்பு மருந்து வழங்கலின் முன்னுரிமையும் வெளிப்படைத் தன்மையும்

ஸ்கந்த குணசேகர

கொவிட் 19 தடுப்பூசி வழங்கலிலுள்ள முன்னுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றி பலதரப்பட்ட தரப்பினரும் அதனை கேள்விக்குட்படுத்தி குரல்களை எழுப்பி வருகின்றனர். சர்வதேச கண்காணிப்பு அமைப்புகளுடன் சேர்த்து மருத்துவ அமைப்புகளும் இவற்றுள் உள்ளடங்குகின்றன. 

தொற்று நோய்களுக்கான தேசிய ஆலோசனை (NACCD) சபையானது தேசிய நோய்த்ததடுப்பு தொழிநுட்ப ஆலோசனை சபையாகவும் (NITAG) தொழிற்பட்டு வருகின்றது.  இது கொவிட் 19 உள்ளிட்ட தடுப்பு மருந்துகளால் தடுக்க முடியுமான சகல நோய்களுக்கான தேசிய  நோய்த்தடுப்பு கொள்கைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கும் தேசிய அமைப்பாகவும் தொழிற்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வ நிறுவனமான இவ்வமைப்பு,  2021 ஜனவரி மாதம் கொவிட் 19 தடுப்பு மருந்து வழங்கலுக்கான தேசிய வேலைத்திட்டத்திற்கான அங்கீகாரத்தை வழங்கியதுடன் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளடங்கலாக சகல பங்குதார நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தை அனுப்பிவைத்தது. 

இத்திட்டம் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்ததுடன் முன்னணி சுகாதார பணியாளர்கள், முன்னணி பாதுகாப்பு தரப்பினர், பொலிஸ், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்களிலுள்ள  வேறுநோய்களுடன் அபாய நிலையிலிருப்பவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களையும் உள்ளடக்கியிருந்தது. 

இக் கொடிய கொவிட் 19 நோயின் பரவலை தடுத்து இதனால் சம்பவிக்கும் மரணங்களின் எண்ணிக்கையினை குறைப்பதுவே இத்தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

ஒவ்வொரு நாடுகளிலும் தடுப்பு மருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க  வேண்டி வந்ததற்கான காரணம் உலக அளவில் விநியோகத்துக்கு வந்த கொவிட் 19 தடுப்பு மருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தமையாகும் என உலக சுகாதார நிறுவனத்தினது மூலோபாய ஆலோசனை நிபுணர் சபையினது (SAGE) தடுப்பு மருந்து முன்னுரிமை வேலைத்திட்டமானது விளக்கமளித்துள்ளது.

“நிலவும் அவரச நிலை மற்றும் கொவிட் 19 இன் வியாபித்து வரும் தாக்கங்கங்களைக் கருத்திற்கொண்டு  SAGE ஆனது ஒரு அணுகுமுறையை உருவாக்கியது.  இது பல்வேறு தொற்றுநோயியல் மற்றும் தடுப்பூசி வழங்கல் நிலைமைகளின் போது எழக்கூடிய பல்வேறு பரிந்துரைகள் தொடர்பில் எழும் வாதப்பிரவாதங்களில் உதவக்கூடிய ஒன்றாகும்.  அதிகரித்துவரும் கொவிட்19 க்கு எதிரான தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளுக்கு உதவும் வகையில், SAGE கொவிட்19 தடுப்பூசிகளின் முன்னுரிமைப் பயன்பாட்டுக்கான ஒரு நிகழ்ச்சிநிரலை முன்மொழிகிறது. இது நிலவும் தொற்றுநோயியல் அமைப்பு மற்றும் தடுப்பூசி வழங்கல் நிலைமைகளுக்கு ஏற்ப தடுப்பூசி வழங்கப்படவேண்டிய மக்களை முன்னுரிமைப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சிநிரல் WHO SAGE யின் கொவிட் 19 தடுப்புமருந்து முன்னுரிமையளித்தல் மற்றும் ஒதுக்கீடு செய்தலுக்கான கட்டமைப்பு பெறுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது”

இலங்கை ஜனவரி 28 ஆம் திகதி  ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா கொவிட்ஷீல்ட் தடுப்பு மருந்தினை இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொண்டதுடன் 29 ஆம் திகதியே தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டினை முதலில் சுகாதாரத்துறை முன்னணி பணியாளர்களுக்கும் படையினருக்கும் வழங்கி ஆரம்பித்தது.

இருப்பினும், மார்ச் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் 4000 நிலையங்களுக்கூடாக நாட்டிலுள்ள சகல 30-60 வரையான வயதெல்லைக்குட்பட்ட பிரஜைகளும் இத்தடுப்பு மருந்தினைப் பெற்றுக்கொள்ள முடியும் என பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு, தொற்றுநோய்கள், கொவிட் 19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்திருந்தார். அத்துடன் நாளாந்தம் 2000 நிலையங்களுக்கூடாக தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

பெப்ரவரி 22 ஆம் திகதி,  சுகாதார நிபுணர்களையும் வல்லுனர்களையும் உள்ளடக்கிய முன்னணி சுகாதார நிறுவனமான இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரி (CCPSL)இ அரசின் இந்த 30-60 வயதுள்ளவர்களை தடுப்பு மருந்து வழங்க வேண்டிய முன்னுரிமைக் குழுவினருடன் இணைத்துக்கொள்ளும் தீர்மானம் பற்றிய கண்டனத்தை தெரிவித்தனர்.

“30 – 60 வயதுக்குட்பட்டவர்களை இலக்காகக் கொண்டு தடுப்புமருந்து வழங்கும் சுகாதார அமைச்சின் தீர்மானமானது ஒரு சில தெரிவுசெய்யப்பட்ட சமூக குழுவினரிடம் மாத்திரம் அமுல்படுத்தப்பட்டமையானது தேசிய தடுப்பு மருந்து வழங்கல் வேலைத்திட்டத்தின் விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்னுரிமைப்படுத்தல்களுடன் தெளிவாக முரண்படுகிறது. இந்நடைமுறை எந்தவொரு ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு நடைமுறையோ அல்லது பரந்த பொது சுகாதார மற்றும் பொருளாதார விளைவுகளை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட ஒரு பொது சுகாதார தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்ததோ அல்ல. இது நாட்டின் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளை தடம்புரளச் செய்யும் ஒன்று. அத்துடன் கொவிட் 19 தொடர்பில் எடுக்கப்படும் பொது சுகாதார நடைமுறைகளை குறிப்பாக கொவிட் 19 இனால் எழும் முரண்நிலைகள் மற்றும் மரணங்களை குறைக்கும் நோக்குகளை குறைத்து மதிப்பிடும் ஒரு செயற்பாடுமாகும்”

முன்னரே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி வழங்கும் திட்டத்திலிருந்து விலகிச்செல்வதானது ஒட்டுமொத்த பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

“இத்தகையதொரு கொவிட் 19 தொற்று நிலையில் NACCD யின் பரிந்துரைகளை புறந்தள்ளிச் செயற்படுவது ஒட்டுமொத்த கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளையும் பாதிக்கும் ஒன்றாகும்.  நோய்த்தடுப்பு கொள்கைகளில் தற்காலிக முடிவுகளை எடுக்காது ஏலவே விஞ்ஞான ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட  முன்னுரிமைப்படுத்தல் தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு சமூக வைத்தியர்கள் கல்லூரி சார்பாக வினயமாக அரசை வேண்டிக்கொள்கின்றோம்” என அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.  அத்துடன், இலங்கை ட்ரான்பேரன்சி இன்டர்நேஷனல் (TISL) நிறுவனம் அமுலில் இருக்கும் தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. பெற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பு மருந்துகள் பற்றி ஆராயப்பட்டு அதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டியது, கொள்முதல் மற்றும் விநியோகம் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறத்தக்க வகையிலும் செய்யப்பட்டிருக்க வேண்டியமை என்பவற்றை முக்கிய பிரச்சினைகளாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. 

TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி நதீஷானி பெரேரா குறிப்பிடுகையில்,  “ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு மருந்தைப் பெற்று அதை அவசரமாகவும் வினைத்திறன்மிக்கதாகவும் முன்னணிப் பணியாளர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் அரசு எடுக்கும் பிரயத்தனங்களை நாம் ஒப்புக்கொள்கின்றோம். இருப்பினும், கொவிட் 19 தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானதும் உயிர்காப்பதும் மிகப் பாரிய தலையீடுளை எதிர்கொள்ளக்கூடியதும் என்பதால் அது உலகளாவிய ரீதியாக ஊழல்கள் நிகழ அதிக வாய்ப்புள்ள ஒன்றாகவும் இருக்கிறது என்பதை அரசு கவனத்திற்கொள்ளவும் வேண்டும். எனவேதான் ஊழல் நடைபெறுவதற்கான அனைத்து வாயில்களையும் அடைப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் இந்த அத்தனை நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாக மாறுகிறது. பொது   நம்பிக்கை மற்றும் பொதுப் பொறுப்பு என்பன இதன்மூலம் கட்டியெழுப்பப்படும்” என தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்புமருந்துகள் மற்றும் அதனோடு தொடர்புடைய வேறு தடுப்பு மருந்துகள் கொள்வனவு, பொது மக்களுக்கான தடுப்பு மருந்து வழங்கல் திட்டம் மற்றும் பயனாளிகளை முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யும் வழிமுறை, குறித்த தடுப்பு மருந்துகளுக்கான உரிய மருத்துவ அங்கீகாரங்கள் போன்ற பல்வேறு தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் கோரி TISL பல விண்ணப்பங்களை  செய்துள்ளதாகவும் பெரேரா மேலும் தெரவித்தார். 

பெப்ரவரி 23 ஆம் திகதி சில தனிநபர்கள் தாம் கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவினது பெயர்ப் பட்டியலில் உள்ளதாகக் கூறி தமக்கு தடுப்புமருந்து வழங்குமாறு சுகாதார ஊழியர்களை வற்புறுத்தியாக பதிவாகியிருந்துது.  இது ஊழல் இடம்பெற்றுள்ளமைக்கும் தடுப்பு மருந்து வழங்கலில் வெளிப்படைத்தன்மை காணப்படவில்லை என்பதற்கும் ஒரு தெளிவான சான்றாகும்.

இது இவ்வாறிருக்க கொழும்பு மேயர் சார்பில் கருத்து வெளியிட்ட ஒருவர், கொழும்பு மேயர் ஒரு பிரத்தியேக பெயர்ப்பட்டியல் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன், தடுப்புமருந்து வழங்கல் நிலையத்துக்கு விஜயம் செய்த கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக அவர்கள் இது பற்றி கேட்டறிந்ததுடன் தன்பெயரை உபயோகித்துக்கொண்டு வரும் எவருக்கும் தடுப்புமருந்து வழங்கவேண்டாம் என சுகாதார ஊழியர்களை அறிவுறுத்தியதுடன் அரசின் முன்னுரிமைப் பட்டியலை எக்காரணம் கொண்டும் மீறி நடந்துகொள்ள வேண்டாம் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

கடந்த 2021 பெப்ரவரி 25 ஆம் திகதி வரை மொத்தமாக 393,469 பேர் தடுப்புமருந்தினைப் பெற்றிருந்தனர். 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts