வன்முறைகளிலும் சமாதானத்திலும் பெண்கள் (பகுதி 111)
தனுஷ்க சில்வா
இலங்கையில் யுத்த காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு அவர்களுக்காக செய்ய வேண்டிய அடிமட்ட உதவி திட்ட வழிகள் பற்றிய அவதானங்களை செலுத்தி சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் திட்டங்களையும் முன்வைத்தன. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் (மட்டக்களப்பு), மகளிர் ஆய்வு மற்றும் போரம் (கல்முனை மற்றும் கொழும்பு) மற்றும் சர்வோதய அமைப்பு ஆகியன இந்த செயற்றிட்டங்களின் முக்கியமான பங்காளர்களாவர். இந்த மகளிர் நலன்கள் தொடர்பாக கவனம் செலுத்திய அமைப்புக்கள் யுத்த காலத்தில் பலவிதமான பாதிப்புக்களுக்கு உள்ளான பெண்களின் நிலைமைகள் தொடர்பாக அவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் விளைவாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இன, மத வேறுபாடு இன்றி அவர்களது அடிப்படை வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தவும் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பவும் குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் திட்டங்களை முன்வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள்
2009 ஆம் அண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் முகாம்களில் தங்கி இருந்த உள்நாட்டில் இடம்பெயர்ந்திருந்த 300,000 அளவிலான அகதிகள் அவர்களது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்ப ஆரம்பித்தவுடன் சிவில் சமூகம் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளது நலன்களை கவனிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அரசாங்கமும் யுத்த முரண்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்தது. மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் முன்னேற்றுவது தொடர்பாக 2011 – 2016 வரையான காலப்பகுதியை இலக்காக கொண்ட நடவடிக்கைக்கான திட்டம் (NHRAP) முன்வைக்கப்பட்டதோடு அதில் அரசாங்கம் இரண்டு இலக்குகளை அடைவதை இலக்காக கொண்டிருந்தது.
சமூகத்தில் பெண்கள் அவர்களாக பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது தொடர்பான தாக்கம் உள்ள பெண்கள் ஒருங்கிணைப்பு நடவடிக்கை
யுத்தம் காரணமாக விதவைகளாக மாறி உள்ள பெண்களுக்கான அபிவிருத்தி கொள்ளை திட்டம்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீள் கட்டமைப்புக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் (LLRC), யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் விடயத்தில் அரசாங்கம் மேலும் கவனம் செலுத்தியது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு பிரதேசங்களில் குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் படைத் தளபதி ஆனந்தி சசிதரன் போன்ற பெண்களையும் உள்ளடக்கியதாக பெண்கள் தொடர்பாக இயலுமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வடக்கில் இயங்கும் வடமாகாண பெண்கள் செயற்பாட்டளார்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாக கூடுதலாக கவனத்தை செலுத்தி அவர்களது பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளை வழங்கக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தி தேசிய சர்வதேச அவதானத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டன.
2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் சமாதானம் குறித்து நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகமாக துளிர்விட ஆரம்பித்தது. மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட முன்வைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் அத்தகைய சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விடயம் கூடுதலாக தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பால் நிலை வன்முறைகள் மற்றும் குடும்ப வன்முறைகளை தடுப்பது மற்றும் பெண்கள், குழந்தைகள் தொடர்பாக கவனம் செலுத்தும் வகையில் பிரதேச செயலக மட்டங்களில் மகளிர் அபிவிருத்தி அதிகாரிகளை அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. இந்த நடவடிக்கையானது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை பாதுகாத்து பலமடையச் செய்வதற்கான சிறந்த திட்டமாக அமைந்தது. ஐ.நா. அபிவிருத்தி திட்டப்பிரிவின் உதவியுடன் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் அதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் செயற்பாடுகளை நவீன மயப்படுத்தலுக்கு உட்படுத்துவது பாராளுமன்ற நவீனமயப்படுத்தல் திட்டம் என்ற பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் மட்டுமல்லாமல் சட்டம் வகுத்தல் போன்ற செயற்பாடுகளிலும் பெண்கள் ஈடுபடுத்துவதன் மூலம் ஐ.நா. அமைப்பின் 1325 ஆம் இலக்க திருத்தம் (UNSC) மற்றும் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்தல் தொடர்பான ஐ.நா. திட்ட பிரிவின் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபரில் செய்யப்பட்ட 30 ஆவது சிபாரிசு போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை உடன்பட்டிருக்கின்றது என்ற விடயங்களும் முக்கியத்துவம் பெறுவதாக அமைகின்றது.
இந்த நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக பயங்கரவாதத்தை பெண்களைக் கொண்டு எவ்வாறு தோற்கடிப்பது என்ற சிந்தனை இலங்கையில் இப்போது ஆழமாக வேரூன்றி வருகின்ற சிந்தனையாகும். எவ்வாறாயினும் பெண்கள் முகம் கொடுத்து வருகின்ற சவால்களை மேலும் பலமான முறையில் எதிர்கொள்ளும் வகையில் அவர்களது பங்களிப்பை அதிகரிப்பது அல்லது ஈடுபடுத்துவதென்பது இதன் அர்த்தம் அல்ல. கடந்த மூன்று தசாப்தங்களாக முரண்பாடு காரணமாக எதிர்நோக்கிய துன்பங்கள் துயரங்கள் என்பன பயங்கரவாதத்தை தோற்கடிப்பது மற்றும் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவது போன்ற நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்புடன் இனியும் கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்படக் கூடாது என்பதனை படிப்பினையாகக் கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுகின்றது.