இருண்ட எதிர்காலத்திற்குள் அடுத்த தலைமுறையினரை தள்ளுகின்றோமா?
அமெரிக்காவின் 39 வது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் ஒருமுறை “போர் சில நேரங்களில் அவசியமான தீமையாக இருக்கலாம். ஆனால் எவ்வளவு அவசியமாக இருந்தாலும், அது எப்போதும் ஒரு தீமையேயன்றி ஒருபோதும் நன்மையல்ல. ஒருவருக்கொருவர் குழந்தைகளை மாறிமாறிக் கொல்வதன் மூலம் ஒன்றாக நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதை நாங்கள் கற்றுக்கொள்ள மாட்டோம்.” எனக் கூறினார். இலங்கையர்களாக நாங்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போதோ அல்லது பஸ்ஸில் பயணிக்கும்போதோ, பெரிய பையுடன் ஒரு நபரைப் பார்க்கும்போதோ பயத்தை அனுபவித்திருக்கின்றோம். இப்போது அது அனைத்தும் மாறிவிட்டதுடன் நாங்கள் அமைதி மற்றும் ஒற்றுமையின் அலைகளைத் தழுவுகிறோம்.
தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, நாம் நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு எளிய கேள்வி உள்ளது: நமது அடுத்த தலைமுறையையும் ஒரு இருண்ட எதிர்காலத்தைத் தழுவ அனுமதிக்கலாமா? நாம் எப்போதாவது நமது சுதந்திரத்தையும் அமைதியையும் சிதைக்க விரும்புகிறோமா? என்பதே அதுவாகும்.
அண்மையில், முஸ்லீம் சமூகத்திற்குள் கோவிட் -19 உயிரிழப்புகள் தொடர்பான சடலங்களை புதைக்கலாமா அல்லது தகனம் செய்யலாமா என்பது குறித்து பல சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் சர்வதேச சமூகத்திடமிருந்து இந்த பிரச்சினை தொடர்பாக பெரும் அழுத்தம் வந்துள்ளது. எமது வரலாற்றைப் பார்க்கும்போது, 1956 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க உத்தியோகபூர்வ மொழிச் சட்டத்தின் கீழ் சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாக மாற்றியதும், அது நிர்வாகம் தமிழர்களின் வாழ்க்கையை எவ்வாறு கடினமாக்கும் என்ற வதந்திகளின் விளைவாக, குழப்ப உணர்வை உருவாக்கியிருந்தது. இதுபோன்று, 1958 முதல், நமது தேசம் பல இனக் கலவரங்களைக் கடந்து வந்துள்ளது, இது இறுதியில் உலகின் மிக ஆபத்தான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான விடுதலைப் புலிகள் அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.
இந்தக் கதையின் கருத்து சிறிய விடயங்கள் எப்போதும் முக்கியம் என்பதாகும். இளம் தலைமுறையினர் எப்போதுமே சமூக ஊடகங்களை தங்கள் முக்கிய தகவல் மூலங்களாகப் பயன்படுத்துவதால் இந்தக் கருவிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே, தகவல் பகிர்வுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒழுக்கத்தை கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. மூத்த தலைமுறையினர் தாங்கள் அனுபவித்த விளைவுகளைப் பற்றிய தங்களின் அறிவை இளைய தலைமுறையினருக்கு பரிமாற்ற வேண்டும். மேலே குறிப்பிட்டபடி, ஒவ்வொரு இலங்கை குடிமகனும், அவர்கள் சிங்களவர்களாயினும் முஸ்லீம்களாயினும் அல்லது தமிழர்களாயினும், அவர்கள் எப்போதாவது தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ள விரும்புகிறார்களா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.