Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இராணுவ சர்வாதிகாரமா அல்லது முழுமையான ஜனநாயகமா? வலிமையான ஒரு தலைவன் என்னும் மாயை -பாகம் 1.

இந்தத் தசாப்தத்தில் இலங்கை அரசியல் தீவிரமான முடிவெடுக்கும் ஒன்றாய் இருக்க வேண்டியுள்ளது. மறுபுறத்தில் நம் நாடே சிறந்ததென எண்ணும் மிதமான நாட்டுப்பற்று முடிந்துவிட்டது. அதேபோல இடதுசாரி இயக்கமும் நலிவான நிலையில் உள்ளது. தற்போதிருக்கும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாளும் கட்சியின் பிரபல்யமும் அதன் மீது மக்கள வைத்த நம்பிக்கையும் வீழ்ச்சியடைந்த பின்னரும் வலதுசாரிகள் சார்பான ஜனரஞ்சகம் இன்னும் ஏன் விடாப்பிடியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற மிக முக்கியமான கேள்வியுள்ளது. கார்ல் மார்க்ஸ கூறியது போல முதலாளித்துவம் நிச்சயமான நெருக்கடி ஒன்றை நோக்கிச் செல்கிறது. இருப்பினும் இருபத்தோராம் நூற்றாண்டின் மார்க்சிய வாதப் புலமையாளர்கள் கடுமையாகச் சிந்திக்க வேண்டியவர்களாய் உள்ளனர்.  அதாவது முதலாளித்துவம் நெருக்கடியிலிருக்கிறதென்றால் அந்த முதலாளித்துவம் ஏன் தொடர்ந்தும் இருக்கிறது. வேறு வார்த்தைகளிற் கூறுவதென்றால், முடிவு ஏன் முடிவு ஆகவில்லை? இந்த நெருக்கடிகூட முதலாளித்துவத்தின் ஒரு வர்த்தக நாமமா?

 

இக் குணம்சங்களை இலங்கை அரசியலில் மிகுதியாகக் கவனத்திலெடுக்க வேண்டியுள்ளது. இராணுவ ஆட்சியினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றியும் இவ்வாறான ஆபத்துகளிலிருந்து மீளும் மார்க்கம் பற்றியும் கலந்துரையாட வேண்டும். இப்பொழுது நாங்கள் தீர்மானம் எடுப்பதில் மிகையானவர்களாய் இருக்க வேண்டியதுடன் இராணுவ சர்வாதிகாரமா அல்லது முழுமையான ஜனநாயகமா? என்ற கேள்வியை எங்களை நாங்களே கேட்க வேண்டும். இவ்விடயம் பற்றி ஒரு அரசியல் கலந்துரையாடலாக இராணுவ மயமாகும் அரசியல் பற்றிப் பின்வரும் வகையில் விரிவாக ஆராய்வோம்.

 

இந்த நாட்டில் 1978ம் ஆண்டிலிருந்து அவ்வப்போது சர்வாதிகார ஆட்சிகள் இருந்த போதிலும் 2009ம் ஆண்டு வரையிலும் இராணுவ ஆட்சிக்கென ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறவில்லை. 2019ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் அபிப்பிராயத்தை இராணுவ சர்வாதிகாரம் சார்பாக உருவாக்கியது யார் என்ற கேள்வியிலேதான் இப்பொழுது இடர்நேரும் வாய்ப்பு உள்ளது, இனத்துவேஷ மதிப்பாய்வுகளையும் சமூக விழுமியங்களையும் அடக்கியொடுக்கும் சந்தர்ப்பங்கள் இராணுவ சர்வாதிகாரங்களில் ஏன் ஏற்படுகின்றன? எனவே இது விடை தேட வேண்டிய ஒரு கேள்வியாக உள்ளது.

 

ஒரு வலிமையான தலைவன் என்ற புனைவு: நவீன யுகத்தில் அரசியல் தலைமைத்துவம் (2014) எனும் நூலை வெளியிட்ட அரசறிவியல் விஞ்ஞானி, வரலாற்றாசிரியர் மற்றும் ஒக்ஸ்போர்ட பல்கலைக் கழகத்தில் அரசறிவியல் பேராசிரியருமாயிருந்த ஆர்ச்சி பிறவுண் (Archie Brown)(1938) ஒரு வலிமையான தலைவன் என்ற புனைவு ஒரு அரசியல் மாயை என வலியுறுத்துகிறார்.

 

ஒரு நாட்டின் அபிவிருத்தியும் அரசியல் முன்னேற்றமும் அந் நாட்டின் தலைவனின் / ஆள்வோனின் ஆளுமையிலும் அவனது தனிப்பட்ட பிம்பத்திலும் தங்கியுள்ளதெனப் பலர் நம்புகின்றனர். ஆதலால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ ஒழுக்கமுடையவரெனவும் ஆளுமை மிக்கவரெனவும் வியத்மக மக்களை நம்பவைக்கிறது. வியத்மக என்ற கூட்டணியூடாக ஒரு அமைச்சராக வந்த சரத் வீரசேகர இந்த நாட்டு மக்களுக்கு ஒழுக்க உணர்வைக் கற்றுக் கொடுப்பதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இராணுவப் பயிற்சி வழங்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தார். இராணுவத்தில் ஒழுக்கம் இருக்குமாயின் படுமோசமான பாதாழ உலகத் தலைவர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ஆமி, நேவி, எஸ்எப் (Army,Navy,SF) பெயர்களை ஏன் பயன்படுத்துகிறார்கள். இதைப் பாடசாலை செல்லும் ஒரு சிறுவனாற் புரிந்து கொள்ளமுடிந்தாலும் என்னால் அதனைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

 

30வருட யுத்தம், பயங்கரவாதம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தைப் பற்றிய பொய்கள் எல்லாமாகச் சேர்ந்து ஜீ.ஆர் போன்ற ஒரு வலிமையான தலைவனின் வரவிற்கு வழிவகுத்துள்ளன. தேசபக்கி இலட்சியங்கள் சீர்கெட்டுப்போன  அதே அளவிற்கு தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டமும் ஒழுங்கும் சிதைவடைந்துள்ளன. அத்துடன் பொருளாதார சுமையிலிருந்து விடுதலை போன்ற தீவிர பிரச்சனைகளின் தீர்விற்குச் சிறந்த தூரநோக்கும் திட்டமுமற்ற ஒரு சர்வாதிகாரியின் பின்னால் மக்களைத் திரளச் செய்வது சுலபம். இதற்கொரு சிறந்த உதாரணம், முதலாவது உலக மகா யுத்தத்தில் ஜேர்மனியின் தோல்வியும் அதன் மீளமுடியாத பொருளாதார நிலைமையும் அடோல்ப் ஹிற்லர் மிகவும் பிரபலமடையக் காரணமாயிருந்தன.

 

ஆர்ச்சி பிரவுணின் கூற்றுப்படி, மோசடி, ஊழல், சட்டமீறல்கள், கலவரங்கள், யுத்தங்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படுதல் முதலியன தொடர்ந்து நடைபெறும்போது மக்கள் வலிமையான ஒரு தலைவனையே விரும்புவர். தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கோரும் ஒரு தலைவனைக்காட்டிலும் கூடுதலான தவறுகளைச் செய்வபனாய் ஒரு தலைவன் இருந்தாலும் பிறிதொரு நபருக்கு, குழுவிற்கு அல்லது நிறுவனத்திற்குக் கீட்படியாது அரசாளும் ஒருவனை குடிமக்கள் பாராட்டுவார்கள்.  அரசியல் என்பது அதிகாராத்திற்கான ஒரு போராட்டமன்றி மனஅமைதிக்கான தியானமல்ல என்பதனால் மக்கள் அரசாளும் ஒருவனிடமிருந்து கடினமான இறுக்கத்தையன்றி எளிமையை அல்லது அமைதியை எதிர்பார்க்க மாட்டார்கள். ஒரு அரசாங்கம் இனத்துவேஷக் கொள்கைகளிலே செயற்படுகிறதெனப் பொது மக்களுக்குக் கூறினால் அந்த அரசை அவர்கள் நம்பமாட்டார்கள் என்பதை இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவந்த அரசியல் பிரசாரங்களின் சூர்திரதாரிகள் நன்கு அறிந்திருந்தனர் என ஜீ.ஆர் கூறினார்.

 

பாரம்பரிய அரசியல் தலைமைத்துவங்கள் வழக்கிழந்த போதிலும் நாட்டை ஒரு இராணுவத் தலைவனிடம், வர்த்தகரிடம் அல்லது மத குருவிடம் கையளிக்க வேண்டுமென்ரொரு வலுவான கோரிக்கை சமூகக்திலுள்ளது. கோட்டபாய ராஜபக்ஷ ஒரு அரசியல் பிரமுகராய் இல்லாது ஒரு யுத்தத்தை நிருவாகஞ் செய்தவர் என்றபடியால் அதிகாரத்திற்கு வந்தார்.  குழப்பத்திலிருக்கும் ஒரு சமூகம் வலிமையான ஒரு தலைவரைத் தெரிவுசெய்யுமானால் அதனால் உள்நாட்டிலும் வெளியிலும் ஏற்படக்கூடிய சேதங்கள் பிரமாண்டமானதாய் இருக்கும். அரசியலுக்கு ஒரு அந்நியராய் இருப்பதனால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவ்விதமான நடத்தையை வெளிப்படுத்துகிறாரா? அல்லது மிருகத்தனமான இராணுவ ஆட்சியை மட்டுமே அவர் அறிந்திருப்பதனாலா? பீ.பீ.சீ.யின் (BBC) கேள்விக்குப் பதிலளிக்கையில் மூத்த அரசறிவியல் ஆய்வாளரான அர்ஜுணா பரக்ணரமகே இது ஒன்றுக்குள் ஒன்று சேர்த்து முறுக்கப்பட்ட ஒரு சிக்கலானகட்டமைப்பின் விளைவாக ஏற்பட்டதுடன் ஆரம்பத்திலிருந்தே இராணுவத்தினால் மட்டுமே விமோசனம் கிடைக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. எனக் கூறினார்;. ஆதலால் மஹா நாயகர் ஒருவர் விரும்பிய ஹிற்லர் இப்போது வந்துவிட்டார்.

 

பாகம் 2ல் இது பற்றி மேலும் உரையாடுவோம்.

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts