சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானமும் நல்லிணக்கமும்

இனப்பிரச்சினையால் தூண்டப்பட்ட 30 வருடகால ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகின்றது. எனினும், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் சிறிதளவிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீண்டகால மோதலொன்றின் முடிவானது ஒரு நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

சமாதானத்தை கட்டியெழுப்பும் செயன்முறையின் வரையறையை பல கோணங்களில் முன்வைக்கலாம். மோதலொன்றின் முடிவானது அந்த பாரிய செயன்முறையின் ஒரு சிறிய அம்சமாகும். பாதிக்கப்பட்ட மக்களை சொந்தக்காலில் நிற்கவைக்கும் சீரான அணுகுமுறை ஒன்று அவசியமாகின்றது. அது பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்துதல், பால்நிலை சமத்துவம், மீள்குடியேற்றம் போன்றவையாக இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் செயற்படுத்தப்படுவதை உறுதிசெய்வது அரசின் பாரிய பொறுப்பாகும்.

பால்நிலை சமத்துவத்தைப் பொறுத்தவரை, இவ்விடயம் பல வருடங்களாக அதிகளவில் பேசப்படுகின்றது. தொழிலாளர் படையின் பங்களிப்பைப் பார்க்கும்போது, தொழிலாளர் பங்களிப்பில் இலங்கை பாரியளவில் பால்நிலை இடைவெளிகளைக் கொண்டுள்ளது. தொழிலாளர் படையில் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கியல் (STEM) தொடர்பான துறைகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக காணப்படுகின்றது. இந்நிலையில், அந்த திறன்களை மேம்படுத்துவது அவசியம். நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை அதிகளவில் ஈடுபடுத்தும் வகையில், அப்பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம் இச்செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர்கள் இருப்பதை உணர வைக்கலாம்.

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு முக்கிய அங்கமாக மீள்குடியேற்றம் காணப்படுவதை, ஐக்கிய நாடுகள் சபை அதன் உடனடி பதிலளிப்பு ஏற்பாடு மூலம் ஆதரிக்கின்றது. இலங்கையின் மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு கடந்த 2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் ஆதரவு வழங்க ஆரம்பித்தது. இச்செயன்முறையிலிருந்து சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ள, இந்த முயற்சிகள் யாவும் நிலையானவை என்பதை உறுதிப்படுத்தக்கூடிய  சரியான பொறிமுறைகள் அவசியம். மீள்குடியேற்றப்பட்டவர்கள் இப்போது தமது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் அமையுமென்ற நம்பிக்கையுடன் வாழ்வார்கள்.

இந்த முயற்சிகள் அனைத்தையும் ஒன்றுசேர்ப்பதற்கு, நாட்டின் ஏனைய பகுதிகளுடன் வடக்கு மற்றும் கிழக்கிற்கு காணப்படும் இடைவெளியை இல்லாமல் செய்து அவற்றை இணைப்பது அவசியம். நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கையைப் பொறுத்தவரை, இந்த முன்னேற்றங்களுக்கான உழைப்பை பெற்றுக்கொள்வது முதலீட்டாளர்களின் முக்கிய கரிசனையாக காணப்படும். இந்த இடைவெளியை நிரப்புவதற்கும் சமாதானம் மற்றும் அபிவிருத்தி செயன்முறையிலிருந்து சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அதேபோல், சமாதானத்தை கட்டியெழுப்பும் செயன்முறையுடன் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சியுடன் இணைந்து செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும். அவ்வாறு செயற்படும் பட்சத்தில் சமாதானம் மற்றும் நல்லிணக்க செயன்முறையில் நிலையான தன்மையை உருவாக்கும். 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts