அனைவருக்கும் இயங்கலை கல்வி வசதிகளை இலங்கை வழங்க முடியுமா?
கல்வி என்பது இலங்கையரின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பகுதியாகும். பதிவிலிருக்கும் கல்விமுறை வரலாறு கி.மு 6ம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. நவீன கல்விமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தபின் இலங்கையின் தலைவர்கள் கல்வி அமைச்சின் அதிகாரத்தின் கீழ் அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினர். இலங்கையின் அரசியலமைப்பு, பிரஜைகள் அனைவருக்கும் இலவசக் கல்வியை பெறும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது. அரசியலமைப்பானது கல்வியறிவின்மையை ஒழிக்கவும் உறுதியளிக்கிறது. அரசாங்கத்தால் நிறுவப்பட்ட 10,169 பாடசாலைகளில் 5 – 17 வயதுக்கு இடையேயான 4.3 மில்லியன் மாணவர்கள் தொகையொன்று காணப்படுகிறது. தனியார் பாடசாலைகளின் எண்ணிக்கை 118 அங்கு இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 139,070 ஆகும். இவற்றை தவிர 796 பிரிவென பாடசாலைகளும் காணப்படுகின்றன.
2015 மற்றும் 2017ம் ஆண்டு அரசாங்க மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வயதுவந்தோர் மத்தியில் 96.3% கல்வியறிவும் 28.3% கணினிக் கல்வியறிவும் காணப்பட்டது. பிராந்திய தராதரத்தின்படி இது ஓர் திருப்திகரமான சராசரியாகும். இலங்கையர்களுக்கு கல்வி ஓர் முக்கியமான அங்கம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
எவ்வாறாயினும், 2020ஆம் ஆண்டில் கோவிட் – 19 சர்வதேச தொற்றுநோய் பரவலால் இலங்கையின் கல்வி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மொத்த மாணவர் தொகையும் கட்டாயமாக வீட்டில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே, மைக்ரோசொஃட், சூம் மற்றும் பிற செயன்முறைகள் போன்ற இயங்கலை வகுப்புகள் மூலம் கல்வியை தொடர முயற்சிகள் எடுக்கப்பட்டன. 2 – 3 மணித்தியால இயங்கலை வகுப்பறைகள் தனியார் மற்றும் அரசாங்க பாடசாலைகளில் முடக்க காலப்பகுதியில் பிரபலமாக இருந்தது. எவ்வாறாயினும், இது எல்லா மாணவர்களுக்கும் சாதகமாக அமையவில்லை. ஏனெனில், சில பாடசாலைகளும் மாணவர்களும் தொலை தூர கல்வியின் பயனை அனுபவிக்க தேவையான வசதிகளையும் அதற்கான கருவிகளையும் கொண்டிருக்கவில்லை. எனவே, இயங்கலை கல்விமுறையானது, கிராமப்புற மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து வரும் பெரும்பான்மையான பிள்ளைகளுக்கு ஒரு தோல்வியான முறை என கருதப்பட்டது.
கல்வியை பெற முடியாத சந்தர்ப்பங்கள்.
கல்வியில் ஏற்படும் இடையூறு, கற்றல் இழப்பை தாண்டி நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். பாடசாலை செல்வதை நிறுத்திவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் விளைவாக ஏற்கனவே குறைந்த ஆதாயமுள்ள குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் எதிர்கால வருமானம் குறையும் என்ற அச்சம் ஏற்படுகிறது. இது எதிர்காலத்தில் ஏழைகள் பணக்காரர் மத்தியில் உள்ள இடைவெளியை அதிகரிப்பதோடு, மேற்கொண்டு சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக்கூடும். தற்போது நிலவும் சூழ்நிலையில் எவரையும் கல்வியில் பின்தங்கிய நிலையில் விட்டுவிடாது, கல்வியை பெற்றுக்கொள்ளும் சம வாய்ப்பை எல்லோருக்கும் வழங்குதல் அவசியம்.
“அனைவருக்கும் கல்வி” என்னும் எமது தேசிய கருத்தை பராமரித்தல்.
கோவிட் 19 எப்பொழுது முடிவடையும் என்று அறியாத நிச்சயமற்ற நிலையில், இயங்கலை கல்வி தொடர்வதற்கான நிகழ்தகவு அதிகமாக உள்ளது. எனவே, இலங்கை அரசாங்கம் இயங்கலை கல்விக்கான வாய்ப்புகளை மேம்படுத்தி ஒவ்வொரு பிள்ளைக்கும் அதனை வழங்கும் பாரிய தீர்மானத்தை எடுக்கவேண்டியிருக்கும். இது மிகப்பெரிய பணியாகும். இந்த அர்ப்பணிப்பு முயற்சியின் மூலம், தொலை தூரக் கல்வியை மிகவும் ஏழ்மையான மாணவர்கள் கூட அடையக் கூடிய வகையில் செயல்படுத்தக் கூடிய முழுமையான ஆராய்ச்சிக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலுள்ள நிபுணர்களின் அறிவும் அர்ப்பணிப்பான முயற்சிகளும் தேவைப்படலாம்.
தொலை தூரக் கல்வியை வித்தியாசமாகப் பார்த்தல்.
இயங்கலை கற்பித்தல் ஒரு புதிய அனுபவமாகும். ஆசிரியர்களுக்கு மெய்நிகர் வகுப்புகளை திறம்பட செயற்படுத்துவதற்கான திறன், அறிவு மற்றும் வசதிகள் தேவைப்படுகின்றன. சில ஆசிரியர்கள் தொலைதூரக் கல்வி பயனற்றது என கருதி, நேரடித் தொடர்புடனான கல்விக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் வரை காத்திருக்கின்றனர். மாணவர்களும் குறிப்பெழுதுவதற்கு பழகியபடியால் சுயாதீன கல்வியையும் சுய படிப்பையும் மேற்கொள்ள தயாராக இல்லை. இத்தகைய பின்னணியில், ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் இத்தொற்று நோய் பரவலுக்கு முன்பிருந்தே கற்பிக்கப்படும் பாரிய திறந்த இயங்கலை பாடநெறிகள் (MOOC) போன்ற சிறந்த நடைமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் இயங்கலை கல்வியை பலப்படுத்த வேண்டும். இலங்கையின் கல்வி முறையின் பொருத்தம் பற்றிய கேள்விகள் பல்வேறு கருத்தரங்குகளில் மீண்டும் மீண்டும் காலாகாலமாக எழும்பியுள்ளன. தற்போதுள்ள கல்விமுறை மிகவும் கடினமான போட்டித்தன்மையை கொண்டது என்பதும் அது திருத்தப்பட வேண்டும் என்பதும் சில பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் கருத்தாகும்.
இந்த சர்வதேச தொற்றுப்பரவலினால் கல்விமுறையில் புரட்சியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, மற்றைய நாடுகளிலுள்ள மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப புரட்சியை எமது பாடசாலைகளிலும் ஏற்றக்கொள்ளக் கூடிய வாய்ப்பு அமைந்துள்ளது. இது இயங்கலை, பிற தொலைதூர கற்பித்தல் முறை மற்றும் வேறு சிறந்த நடைமுறைகளையும் கொண்ட ஆசிரியர் பயிற்சி திட்டங்களை ஆரம்பிக்கும் மனப்பான்மையுடைய மாற்றங்களை ஏற்படுத்தும் உரிமையை கோரக்கூடும்.
இந்த சூழ்நிலையில், ஆசிரியர்களுக்கு தமது பாடத்திட்டங்களை உருவாக்கவும், மாணவர்களின் செயல்முறைகளை தரப்படுத்தவும் மற்றும் கற்பித்தலின் தராதரத்தை உயர்த்தும் சில வழிகாட்டிகளை ஏற்படுத்தவும் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆதரவைப் பெறுவது மிகவும் பயனுள்ளதாக அமையும். இது மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து, கற்கும் வழிமுறைகளை பயனுள்ளதாக்கும்.
2021 இல் அதிகமான எதிர்பார்ப்புகள் உண்டு.
இன்றும் கிராமப்புரங்களிலுள்ள மக்கள் சமூகங்கள் மின்சாரம், இணையத்தள அணுகல், கணினி மற்றும் இயங்கலை கல்வியில் பங்குபெற தேவையான கணினி, லப்டொப், மென்பொருட்கள் போன்ற சாதனங்கள் இல்லாத பழைமைவாய்ந்த சூழ்நிலையில் வாழ்கின்றனர். இவை குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள். தீவிரமாக பரவும் அதிக காலம் நீடிக்கும் இந்த சர்வதேச தொற்றின் போது கல்வி தொடர வேண்டுமென்றால் இத்தேவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கல்வியமைச்சு 2021 ஐனவரி மாதம் பாடசாலைகளை ஆரம்பிக்க தயாராகின்ற போதிலும், தற்போது நிலவும் சுகாதார கேடுகள் மத்தியில், தெளிவற்ற மற்றும் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் இல்லாத நிலமையில் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் சாத்தியக்கூறு மிகவும் குறைவாகும். பாடசாலைகளை திறக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மற்றவர்களோடு நேரடி தொடர்பு இல்லாமல் பொலிதீனால் மூடப்பட்ட சிறிய அறைகளில் இருந்துகொண்டு, நெருக்கடியான வகுப்பறைகளில் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள என்று அவர்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? தற்போது வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட சிறிய தொகையான 126 மில்லியனில், 192 மில்லியன் அன்றாட செலவிற்கும், 23 மில்லியன் மூலதன செலவிற்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், நிலவும் சர்வதேச தொற்று நோய் பரவல் சூழ்நிலையில் இருக்கும் சவால்கள் மத்தியில் கல்விக்கு ஒதுக்கப்படும் தொகை கணிசமான முறையில் குறைவாகவே இருக்கும். எனவே, ஒவ்வொரு பிள்ளையின் கல்விக்கும் முன்னுரிமை கொடுக்கும் பாரிய மறுசீரமைப்பை ஏற்படுத்தும் மேலதிக பொறுப்பை எவ்வாறு அமைச்சு ஏற்க முடியும்?
உலகம் “சமத்துவம் மற்றும் நீதி” என்ற கருப்பொருளின் அடிப்படையில் 2030ஆம் ஆண்டில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு தசாப்த கால நடவடிக்கையை மேற்கொள்ளும் வேளையில், பயனுள்ள கற்றல் முறையை ஏற்படுத்தும் வகையில் சமமான அணுகல் மற்றும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கை எல்லா பிள்ளைகளுக்கும் கல்வியை அணுகக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா?