தகவல் அறியும் உரிமை மற்றும் ஊடகங்களின் பங்கு – பகுதி 1
ஹரோல்ட் ஜே. லஸ்கியின் கூற்றிற்கிணங்க, துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நாடு, என்றாவது ஒரு நாள் ஏனையவர்களின் அடிமையாக காணப்படும். அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான திறப்பாக தகவல் அறியும் உரிமை உள்ளதென இதன்மூலம் புலனாகின்றது. இலங்கையில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இந்த திறப்பு இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், நாட்டின் எந்தவொரு குடிமகனும் அரசின் பாதுகாப்புப் பெட்டகங்களைத் திறந்து தகவல்களை ஆராயும் வாய்ப்பு ஏற்பட்டது. தகவல்களை தேடி ஆராய்ந்து அறிக்கையிடும் பணியை மேற்கொள்ளும் ஊடகவியலாளர்கள் இப்போது இதனை ஒரு வரப்பிரசாதமாக பயன்படுத்தலாம்.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் இலங்கை ஊடகவியலாளர்கள் இந்த திறப்பை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். தகவல் அறியும் உரிமையை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் ஊடக கலாச்சாரம் படிப்படியாக உருவாகி வருகிறது. அத்தோடு அதனை பயன்படுத்தும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கையும் அதனை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து வருகின்றன. தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதிலும் மேற்கோள்களை வழங்குவதிலும் ஊடகவியலாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.
அயல் நாடுகளுடன் நோக்கும்போது இலங்கையின் நிலை
உலக நாடுகளுக்கு தகவல் அறியும் உரிமை புதிய அனுபவம் கிடையாது. எனினும், ஆசிய பிராந்தியத்தில் தகவல் அறியும் உரிமையில் அயல் நாடான இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், இதில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தகவல் அறியும் உரிமைக்கான போராட்டங்கள் இந்திய சமுதாயத்தின் அடிமட்ட நிலையில் ஆரம்பித்து, சிவில் சமூகம், சமூகத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பரவியது. தகவல்களை வழங்குமாறு கோரி பல சந்தர்ப்பங்களில் ஊழல் நிறைந்த நிறுவனங்களுக்கு முன் பல நாட்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்திய மக்கள் இறுதியில் வென்றனர். அதற்காக போராடிய இந்திய மக்களாட்சிக்கு தகவல் அறியும் உரிமை வழங்கப்பட்டது.
எனினும், இதில் இலங்கைக்கு காணப்படும் அனுபவம் வித்தியாசமானது. தகவல் அறியும் உரிமை என்பது பாமர மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடையே காணப்படும் ஒரு கவர்ச்சி சொற்றொடர் அல்ல. ஆட்சியமைப்பில் குடிமக்கள் பங்குகொள்வதற்கான வாய்ப்பை 1987ஆம் ஆண்டின் உள்ளூராட்சி சபை சட்டம் வழங்கியது. ஆனால் அதனை பயன்படுத்திக்கொள்ளும் அளவிற்கு அரசியல் கலாச்சாரம் வளர்ச்சியடையவில்லை. மாறாக, மக்கள் பிரதிநிதிகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களும் கட்சி அரசியலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டன. தகவல் அறியும் உரிமையை நாட்டின் பிரஜைகள் அனுபவிக்கவில்லை என்ற போதும் அவர்களின் பிரதிநிதிகள் அதனை அனுபவித்தனர். பதில்களை எதிர்பார்த்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள், தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான மிகவும் சக்திவாய்ந்த கருவியாக காணப்பட்டது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை மிகவும் அரிதாகவே பயன்படுத்தினர். பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை சாதுரியமான முறையில் பயன்படுத்த வேண்டுமென, அவர்களை தேர்ந்தெடுத்த சிவில் சமூகமும் போராடவில்லை.
மேல்நிலையிலான போராட்டம்
இலங்கையில் தகவல் அறியும் உரிமைக்கான வாதம் ஊடகங்கள் மற்றும் அரசியலமைப்பு திருத்தத்தில் ஆர்வமுள்ள சிவில் சமூகத்திலிருந்து ஆரம்பமானது. ஊடக சமூகத்தை பொறுத்தளவில் தகவல் அறியும் உரிமைக்கான கோரிக்கை சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஒரு சில அமைப்புகளால் 1998 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமையின் முதலாவது வரைபு அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சிவில் உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், பத்திரிகை ஆசிரியர்கள், ஆர்வலர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் உள்ளடங்களான குழுவினரால் 2003 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. குறித்த வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியபோதும் அது பாராளுமன்றில் நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய அதனை தனிநபர் பிரேரணையாக முன்கொண்டு சென்றபோதும் அதனை செயற்படுத்த முடியவில்லை. எனினும், 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்த வரைபு 2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மேம்பட்ட பிரேரணைக்கு அடிப்படையாக அமைந்தது. அதன் பூர்வாங்க செயற்பாட்டின் விளைவாக, நல்லாட்சி அரசாங்கம் அதன் பாதையிலிருந்து விலகிச்செல்வதற்கு முன்பாக ஒரு வருடத்திற்குள் இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது. தற்போதைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு என்ற தலைவிதியிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் இவ்வாறே காப்பாற்றப்பட்டது.