கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொரோனாவோடு பரவும் சமூகவலைத்தள போதை!

இன்று பலரது வாழ்க்கையில் சமூகவலைத்தளங்கள் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக மாறி விட்டன. 2020 இல் உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அங்கம் வகிப்போரின் எண்ணிக்கை 3.6 பில்லியன்களாகும். இது உலக சனத்தொகையில் அரைவாசியாகும். 2025 ஆம் ஆண்டாகும் போது இவ்வெண்ணிக்கை 4.41 பில்லியன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (https://www.statista.com/statistics/278414/number-of-worldwide-social-network-users/#:~:text=Social%20media%20usage%20is%20one,almost%204.41%20billion%20in%202025.)

கொரோனா வைரஸின் வருகைக்குப் பின்னர் நாம் அனுபவித்த அல்லது அனுபவிக்கின்ற முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகள் என்பனவும் உலகளவில் சமூக ஊடக பாவனை அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும். இது நம்மில் பலரை சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாக மாற்றியிருக்கிறது என்றால் அதுவும் மிகையாகாது.

ஒரு பதின்ம வயதினர் அல்லது இளைஞர் ஒருவர் தினமும் சமூக வலைத்தளங்களில் சுமார் 4 – 6 மணித்தியாலயம் வரையான நேரத்தை செலவிடுகிறார். இது ஒருவரின் உடல், உள ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது.

சமூக வலைத்தளங்களின் தீமைகள்

இலங்கையைப் பொறுத்தவரையில் பேஸ்புக் என்ற சமூக ஊடகத்தையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றார்கள். புள்ளிவிபரங்களின்படி 2020 இல் இலங்கையில் 7.2 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.

மேற்சொன்னது போல பேஸ்புக் பெரும்பாலானோரின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகி போதை நிலையை ஏற்படுத்தியுள்ளது. கொவிட் முடக்கம் அமுலிலுள்ள காலப்பகுதியில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அனைவரும் பேஸ்புக்கினை பயன்படுத்துகின்றார்கள் என்பதை ஆரோக்கியமான விடயமாக கருதினாலும் கூட அதன் எதிர்மறையான பக்கத்தையும் கவனிக்க வேண்டும். தேவையின்றி நட்பு வட்டாரத்தை பெருக்கிக் கொள்ளுதல், போலிச் செய்திகளை பதிவிடுதல் , அவற்றை பகிர்தல், இனவாதம் பேசுதல், வெறுப்பு பிரசாரம், தவறான உறவுகளை பேணுதல் என்பன தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமான ஒரு விடயமாக கருத முடியாது.

கொரோனா வைரஸினைப் போல சமூக வலைத்தள பயன்பாடும் இன, மத, வயது, பால் வேறுபாடின்றி அனைவரையும் பாதித்துள்ளது. இதனால் தமது பொன்னான நேரத்தை இழந்து கைசேதப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச்  சேர்ந்தவர்கள் மாத்திரம் கிடையாது.

உங்களுக்குநோமோபோபியாஇருக்கிறதா?

நோமோபோபியா என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? இது பதற்றத்தை எற்படுத்தும் ஒருவகை உளவியல் சார்ந்த வியாதி. போபியா என்பது தேவையற்ற பதற்றத்தை குறிக்கும். இது பல வகைகளில் இருக்கும். இன்று அறிந்தும் அறியாமலும் பலருக்கு இருக்கும் வியாதியாக நோமோபோபியாவை குறிப்பிடலாம். நாம் எமது தொலைபேசியை ஏதாவது ஒரு காரணத்தினால் சிறிது நேரத்துக்கு பயன்படுத்த முடியாமல் போய்விட்டால் எமக்கு ஒரு பதற்றம் வருமானால் அது நோமோபோபியா என்ற உளவியல் பிரச்சினையாகும். மருத்துவ ஆலோசனை பெறாத வரை இந்த நோய் குணமாகுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

காலையில் எழுந்தவுடன் மொபைலை தேடுதல், தூங்கச்செல்லும் முன்னர் மொபைலை பார்த்தல், அடிக்கடி மொபைலுக்கு சார்ஜ் ஏற்றுதல், எப்போதும் தனது பார்வையின் கீழ் மொபைல் இருக்க வேண்டும் எனக்கருதுதல் என்பன நோமோபோபியாவுக்கான அறிகுறிகளாகும். மூன்றாம் உலக நாடுகளில் சுமார் 66 சதவீதமான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மொபைலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முடக்கம் நிலவும் காலப்பகுதியில் இந்த நோயின் வீதம் அதிகரித்துள்ளது என்பது உளவியலாளர்களின் கருத்தாகும்.

எவ்வாறு கவனமாக பயன்படுத்தலாம்?

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாது தவிர்ந்திருங்கள் என வலியுறுத்துவதை விட அப் பாவனையை வரையறைக்குள் வைத்திருங்கள், பொறுப்புடன் பயன்படுத்துங்கள் என ஆலோசனை வழங்குவதே சரியானதாகும்.

சமூக வலைத்தளங்களின் பாவனையை கட்டுப்படுத்தி, அதனை அளவாக ஒரு வரையறைக்குள் நின்று எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி உளவளத்துணையாளர் லுக்மான் ஹக்கீம் பின்வருமாறு விளக்கினார்.

அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த தருணத்தில் எல்லோருக்கும் பிரதான பொழுதுபோக்காக தொலைபேசியும் சமூக வலைத்தளங்களும்தான் மாறியுள்ளன. எந்த வேலையும் இல்லாத இந்த தருணத்தில் சமூக வலைத்தளங்களை பாவிக்காதே என்று யாரிடமும் சொல்ல முடியாது. ஆனால் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனையை வழங்கலாம். சாதாரணமாக ஒருவர் ஒரு நாளைக்கு 45 நிமிடம் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம். இந்த கால அளவு சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கும் பொருந்தும்.

ஒரு நாளைக்கு 3 அல்லது 4 மணித்தியாலயம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது உளவியல் ரீதியான பிரச்சினைகளை தோற்றுவிக்கும். கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை மக்கள் அடிக்கடி பார்ப்பது மற்றும் கேட்பது உள ரீதியான அழுத்தங்களை அதிகரிக்கும். அடிக்கடி கொரோனா தொடர்பாக எதிர்மறையான விடயங்களை எங்களது காதுகள் கேட்கின்றன. இதனால் எதிர்மறை சிந்தனை ஒன்று எமக்குள் உருவாகிவிடும். இதனைத் தவிர்க்க கொரோனா பற்றிய தரவுகளை தேடுவதைக் காட்டிலும் ஏனைய பயனுள்ள விடயங்களில் கவனம் செலுத்துவது சிறந்ததாக அமையும்.

குடும்ப சூழலில் நேரத்தை செலவிட நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அதற்கு வழி செய்ய வேண்டும். மனைவி மற்றும் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். வீட்டில் இருக்கும் பலர் சமுக வலைத்தளங்களில் தவறான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அந்த வாய்ப்பையும் இழந்து நிற்கிறார்கள். மேலும் பலர் ஆபாச காணொளிகளுக்கும் அடிமையாகி இருக்கிறார்கள். இந்த நிலைமையில் இருந்து விடுபட சுய நேரசூசி ஒன்றை அமுல்படுத்த இரவு 9 மணிக்குப் பின்னர் தொலைபேசியை பயன்படுத்துவதில்லை என்று ஒருவர் திடசங்கற்பம் பூண்டு அதை நடைமுறைப்படுத்தினால் இவற்றிலிருந்து விடுபடலாம்.

என்றாலும் இவ்வாறான விடயங்கள் குறுகிய காலத்தில் தீர்வு காணக்கூடியவை இல்லை என்பதையும் சொல்ல வேண்டியது. ஒவ்வொருவரும் தாம் இந்த நிலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் அல்லது இந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்காத வரை இதற்கு தீர்வு கிடையாதுஎன்றார்.

மேலும் உளவியலாளர்களின் கருத்துபடி, வழக்கமாக நாம் செய்கின்ற விடயங்கள் உட்பட எங்களுடைய கல்வி, தொழில் உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்பு இல்லாதவாறுதான் சமூக வலைத்தள பாவனை இருக்க வேண்டும். உதாரணமாக, குளித்தல், சாப்பிடுதல் போன்ற அடிப்படை விடயங்களுக்கு பாதிப்பு இருக்குமானால் அது போதை என்ற ஒரு நிலைக்கு இட்டுச் செல்லும். இவ்வாறானவர்கள் நிச்சயமாக தம்மை மாற்றிக்கொள்வதற்கான சுய ஒழுங்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கத்தைய நாடுகளில் அதிகரித்த சமூக வலைத்தள பாவனை மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறித்த கருத்தாடல்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் சமூக வலைத்தளங்களின் தாக்கங்கள் குறித்த உரையாடல்கள் குறைவாகும். மக்கள் இதுபற்றி அறிவூட்டப்பட வேண்டும். இதன் மூலமே இந்த ஆபத்தை ஓரளவு குறைக்க முடியுமாகவிருக்கும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts