கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நீதிக்கு முரணான வகையில் இடம்பெறும் கொலைகள்: சமூகத்திற்கு அச்சுறுத்தல்

புத்தகங்களை வாசிப்போரும் திரைப்படங்களை பார்ப்போரும் “பொலிஸ் என்கவுண்டர்” என்ற வார்த்தையை அறிந்திருப்பர். இது ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவுடன் தொடர்புடையது. பொலிஸ் என்கவுண்டர் என்பது பெரும்பாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஆனால் சட்டவிரோத கொலைகள் என்பது உலகளாவிய அச்சுறுத்தலாகும். அமெரிக்கா, சிலி, கொங்கோ, பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா, புருண்டி மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நீதிக்கு புறம்பான கொலைகள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் என்கவுண்டர்களால் பாதிக்கப்படுபவர்களை பெரும்பாலும் எமக்குத் தெரியாது. ஆனால், சில சந்தர்ப்பங்களில் எமக்குத் தெரிந்தவர்களும் இதில் பலியாகின்றனர். விசாரணையுடன் தொடர்புடைய செயற்பாடுகளின்போது பொலிஸாரை தாக்க முயன்றதால் சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பெரும்பாலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கொல்லப்பட்டோரில் பெரும்பாலானோர் பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் மோசடியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஆவர். 

நீதிக்கு புறம்பான கொலைகள் தொடர்பாக, பொலிஸ் பாதுகாப்பில் இருந்த ஒரு கொலை சந்தேகநபரின் மரணம் குறித்து, 2010ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி துரைராஜா தீர்ப்பு வழங்கியபோது பின்வரும் கூற்றை வெளியிட்டார். “இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும். இந்த வழக்கில், அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது என்றும் இறந்தவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என்பதையும் நான் காண்கின்றேன்”

சந்தேகநபரின் வசமிருந்த பொருளொன்றை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில், இந்த மரணம் நிகழ்ந்ததாக பொலிஸார் வாதிட்ட இந்த வழக்கில், உயர் நீதிமன்றம் நியாயத்தை குறிப்பிட்டது. 

பொலிஸ் காவலில் இருந்தபோது சம்பவித்த இத்தகைய மரணங்கள் பற்றிய கதைகளை பார்த்தால், பொருட்களை கண்டுபிடிப்பதற்காக மேலதிக விசாரணை நடத்தப்பட்டபோது நிகழ்ந்தவையாக உள்ளன. ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்ய முயற்சிக்கும்போது சந்தேக நபர்களைக் கொல்வது அரிதாகவே நிகழ்கின்றது. 

அமெரிக்காவின் சித்திரவதை உயிரிழப்புகளைத் தடை செய்யும் சட்டத்தின் பிரிவு 3 (அ) நீதிக்கு முரணான கொலைகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றது: ‘’நாகரிக மக்களால் இன்றியமையாதவை என அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நீதி உத்தரவாதங்களையும் வழங்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அங்கீகரிக்கப்படாத கொலை, திட்டமிட்ட கொலையாக காணப்படுகின்றது”

நீதிக்கு புறம்பான கொலைகள் தொடர்பான மிக முக்கியமான சர்வதேச சட்டமாக, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 3ஆம் சரத்து காணப்படுகின்றது. “வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் ஒருவரின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு”. அதன்படி, வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. அத்தோடு, அந்த உரிமையை மீறுவது மனித உரிமை மீறலாகும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ஐ.சி.சி.பி.ஆர்) பிரிவு 6 (1) இவ்வாறு குறிப்பிடுகின்றது, “ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கான உள்ளார்ந்த உரிமை உண்டு. இந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்படும். யாரும் தன்னிச்சையாக அவர்களுடைய வாழ்க்கையை பறிக்க மாட்டார்கள்”

மேலதிக சட்ட, தன்னிச்சையான மற்றும் முழுமையான, நியாயமான விசாரணைகளின்றி நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் பயனுள்ள தடுப்பு மற்றும் விசாரணை தொடர்பான ஐ.நா. கோட்பாடுகளின் பிரிவு 1 இவ்வாறு குறிப்பிடுகின்றது. “சட்டத்திற்கு புறம்பான, தன்னிச்சையான மற்றும் முழுமையான விசாரணைகளின்றிய மரணதண்டனைகளை அரசாங்கங்கள் தடைசெய்யும்.”  

இலங்கையின் அரசியலமைப்பானது வாழ்வதற்கான உரிமையை உள்ளார்ந்த ரீதியில் அங்கீகரிக்கவில்லை. எனினும், பிரிவு 11 சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. “எந்தவொரு நபரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான செயற்பாடுகளுக்கு அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.” தன்னிச்சையாக கைது செய்யப்படுதல், தடுப்புக்காவல், தண்டனை மற்றும் பின்னோக்கிய அபராதம் (சென்ற காலத்தையும் உள்ளடக்கியவாறான அபராதம்) விதிப்பதை அரசியலமைப்பின் 13ஆவது பிரிவு தடுக்கின்றது. இலங்கையில் வழங்கப்பட்ட நீதித்துறை தீர்ப்புகளின் மூலம் வாழ்வதற்கான உரிமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, நீதிக்கு புறம்பாக இடம்பெறும் கொலைகள் தொடர்பான எந்தவொரு ஏற்பாட்டையும் இலங்கையின் சட்டம் திறம்பட விலக்கியுள்ளது. எவ்வாறாயினும், வழக்குகளை நிரூபிப்பதில் உள்ள சிரமம், சிறைச்சாலைகளை பராமரிப்பதில் உள்ள செலவு மற்றும் குற்றவாளிகள் ஏதோ ஒரு வகையில் சட்டத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற காரணங்களுக்காக, சட்டத்திற்கு புறம்பான தண்டனைகள் குற்றங்களைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும் என்று சமூகத்தின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர். 

“எந்தவொரு நபரும் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி என்றே கருதப்படுவர்: குறிப்பிட்ட உண்மைகளை நிரூபிக்கும் பொறுப்பு, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது முன்வைக்கப்படலாம்” அவ்வாறான பின்னணியில், சட்டரீதியாக தண்டனை வழங்கப்படாமல் ஒருவர் சட்டவிரோத வழிமுறைகள் மூலம் கொல்லப்பட்டால், அத்தகைய செயல் எமது சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts