ஆண் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவது ஒரு நகைச்சுவையா?
இலங்கையில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவது புதுமையான ஒரு விடயம் கிடையாது. பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் புதுமையான ஒரு விடயம் கிடையாது. ஆனால் கடந்த ஒக்டோபரில் ஆசிரியை ஒருவர் 15 வயது பாடசாலை சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மாற்றமாக பல ஆண்கள் மத்தியில் அது நகைப்புக்குரிய விடயமாகவே தோன்றியது.
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை (வயது 27) வெலிகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த செயலை ஆதரித்து அதை ஊக்குவிக்கும் வகையில் அந்த சிறுவனை அதிர்ஷ்டசாலி’ என்றும் ‘கொடுத்து வெச்சவன்’ என்றும் பெருமித உணர்வுடன் பல ஆண்கள் பின்னூட்டம் அளித்து வருகின்றனர். பல ஆண்கள் நாங்கள் பாடசாலை செல்லும் காலத்தில் எங்களுக்கு இப்படி ஒரு ஆசிரியை இருக்கவில்லையே என்று பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கையறுநிலையுடன் பதிவிடுவது வேடிக்கையாக இருக்கிறது.
சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட செய்திகளை கண்டால் வழக்கமாக நடக்கின்ற ஒன்றுதானே என்று மக்கள் அதை சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். ஆண் சிறுவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அதை நேரடியாக ஊக்குவிக்கும் வார்த்தைகளை எந்தவித தயக்கமும் இன்றி வெளியிடுகின்றார்கள். இதற்கான பொதுப்புத்தி மனநிலைதான் என்ன? ஆண்மைய உலகில் ஆணுக்கு நடக்கும் அநியாயத்தைக்கூட நியாயமானதாக மாற்றி கனவுகாணும் நிலைதான் இது. அதிலும் பாலியல் தொடர்பான புரிதல், பெண்களின் ஒழுக்கத்தை மையப்படுத்தியும் ஆண்களின் அதிகாரத்தை மையப்படுத்தியும் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆண்ஆனாலும் பெண் ஆனாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது என்ற மனநிலை பொதுப்புத்திக்கு தெரியவேண்டும்.
துஷ்பிரயோகத்தை நகைப்புக்கிடமாக்கி தமது கருத்துக்களைப்பதிவிடும் சமூகத்தில் பால் சமத்துவம் பற்றி இன்னும் இன்னும் அழுத்திக் கூறவேண்டியுள்ளது. துஷ்பிரயோகத்திலும், வன்முறையிலும் சுகம் காணும் அல்லது சுகம் காண உற்சாகப்படுத்தும் குரூர மனநிலையை கொண்டுள்ளதா இந்த சமூகம்? என ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ளவேண்டும்.
இவ்வாறான அனர்த்தங்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு நடந்தாலும் தன்பிள்ளை கொடுத்துவைத்த பிள்ளை என கூறும் மனநிலையை இவர்கள் கொண்டிருக்கிறார்களா? அவ்வாறு குற்றம் புரிந்த ஆண்களை பாராட்டுவார்களா? இவற்றை எப்படி அடியோடு களைய நினைக்கிறோமோ அதேபோல் ஆண்குழந்தைகளுக்கு நடந்தாலும் அவற்றை களையும் மனநிலையில் நாம் இருக்கவேண்டும். இல்லையேல் ஆண்குழந்தைகள் அதிகளவில் ஆண்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதையும் தவிர்க்க முடியாதுபோய்விடும்.
இலங்கையில் பால் உறவில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவிப்பதற்கான குறைந்தபட்ச வயது 16 ஆகும். எனவே அந்த ஆசிரியை இந்த சிறுவனிடம் சம்மதம் பெற்றிருந்தால் கூட அது ஏற்றுக்கொள்ளக் கூடிய சம்மதமாக அமையாது. எங்களது காலத்தில் இப்படியொரு ஆசிரியை இருக்கவில்லை என வருத்தப்படுகின்றவர்கள் குற்றத்தை தூண்டுபவர்கள் அதற்கு உடந்தையாகும் கருத்துகளை பரப்புபவர்களாகின்றனர்.
இந்நிலையில் சிறுமிகளை விட ஆண் சிறுவர்களே அதிகளவில் பாலியல் துஷ்பிரயோகளுக்கு உள்ளாகுவதாகவும் இது கண்டுகொள்ளப்படாத ஒன்றாக இருப்பதாகவும் விரிவுரையாளர் அஸ்வினி பெர்னான்டோ தெரிவிக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் “சிறுமிகளைப் போல ஆண் சிறுவர்களில் கன்னித்தன்மை, கர்ப்பம், என்பனபற்றிய எண்ணப்பாடோ பயமோ இல்லாததால் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாலும் கண்டுகொள்ளப்படாதவர்களாக இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 5242 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுள் 1642 துஷ்பிரயோககள் பாலியல் துஷ்பிரயோகங்கள் ஆகும். சிறுவர்கள் எந்தவொரு பாலினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படும் சந்தர்ப்பங்களில் அதற்கு எதிரான குரல்கள் மற்றும் எழுத்துக்களே பதிவு செய்யப்பட வேண்டும். அவற்றை ஏதாவது ஒரு வகையில் ஆதரிக்கின்ற எழுத்துக்கள் கட்டுரைகள் பின்னூட்டங்கள் போன்றவற்றை கண்டால் அதற்கு எதிராக செயற்பட நாம் தயங்கக் கூடாது.
மேற்சொன்ன சம்பவத்திற்கு வந்த நகைப்புடனான கருத்துக்கள் பின்னூட்டங்கள் போல இன்னொரு முறை வருவதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. இது நகைப்புக்குறிய விடயம் அல்ல. அதற்கு மாற்றமாக இது பாரியதொரு சுகாதார மற்றும் மன நல பிரச்சினை என்பதை நாம் அனைவருக்கும் முதலில் தெளிவு படுத்த வேண்டும். இனிமேல் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து பேசும்போது ஆண் சிறுவர்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.