COVID-19 தொற்றிய நபர்களிடம் காட்டப்படும் பாகுபாடு
திமிற எஸ்.ஜெயதுங்க
இலங்கையர்களின் அன்றாட வாழ்க்கையில் COVID-19 வைரஸின் தாக்கம் ஜூன் மாத இறுதியில் குறைவாக இருந்தது. COVID-19 தொடர்பில் உள்ளூர் ஊடகங்களின் கவனம் கந்தகாடு கொத்தணியைக் கண்டுபிடிக்கும் வரை அதிகமாக இருந்தது. அதன் பின்னர், ஊடகங்கள் மற்றும் மக்கள் இருவருக்கும் ஏனைய பிரச்சினைகள் முன்னுரிமையாக இருந்தன. அவ்வப்போது கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டாலும், சமூகம் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. இந்த தொற்றுச் சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களுடையவை என்று சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். தேர்தல் காய்ச்சலின் சூடு ஊடகங்களை மூழ்கடித்திருந்தது. செப்ரெம்பர் மாதம் முழுவதும் அயல் நாடான இந்தியாவில் இறப்பு விகிதம் நாளொன்றுக்கு 1,000 ஆக இருந்தபோதும் இலங்கை அதனை கருத்திலெடுக்கவில்லை.
இருப்பினும், அக்டோபர் 4 ஆம் தேதி மினுவாங்கொடையிலுள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் 39 வயது பெண் ஊழியர் COVID-19 தொற்றுடன் கண்டறியப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது. வைரஸின் மூலத்தைக் கண்டுபிடிப்பது கடினம், இருந்த போதிலும், இது தனிமைப்படுத்தல் மையங்களுடன் தொடர்புடையது அல்ல. சமூகம் இந்த சூழ்நிலையில் குழப்பமடைந்ததுடன் கொத்தணி உடனடியாக ஊடக கவனத்தை ஈர்த்தது. நோயாளிகளின் தனியுரிமை வெளிப்படையாக மீறப்பட்டதுடன் COVID-19 தொற்றுக்குள்ளான நபர்கள் சமூகத்தின் சில துறைகளால் குற்றம் சாட்டப்பட்டனர். குறிப்பிட்ட தொழில்முறை வர்த்தகங்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சும் காணப்பட்டது.
இந்நோய் பரவாமல் தடுக்க பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். வைரஸ் பரவலை தடுக்க சர்வதேச போக்குவரத்து, உள்நாட்டு பயணம் மற்றும் போக்குவரத்து வழிமுறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மக்களின் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும். இந்த பணிகளின் பொறுப்பு அரசு மற்றும் பொது நிறுவனங்கள் மீது உள்ளது. இருப்பினும், அரச சார்பற்ற அமைப்புக்கள், நிறுவனங்கள் மற்றும் ஏதேனும் நோக்கத்திற்காக மக்களை ஒன்று திரட்டுகின்ற நபர்களும் அடுத்த கட்டத்தில் பொறுப்பை ஏற்க வேண்டும். மேலும், ஒரு நபரிலிருந்து மற்றயவருக்கு வைரஸ் பரவாமல் தடுக்கும் நேரடியான பொறுப்பு சாதாரண குடிமகனுக்கு உள்ளது. COVID-19 நோயாளிகளை நாம் பாகுபாடு காட்டக்கூடாது. இருப்பினும், மக்களின் பொறுப்பற்ற நடத்தைகள் ஏதேனும் காணப்பட்டால் நாம் பொறுத்துக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ கூடாது.
மினுவாங்கொடை கொத்தணியிலிருந்து அடையாளம் காணப்பட்ட முதல் COVID-19 தொற்றுச் சம்பவத்தின் நபர் பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியராவார். அவரது தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவரது மகள் கூட பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அவர்களுக்கு எதிராக சில சமூக ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் வெறுக்கத்தக்க பேச்சுகளின் அலைகளைத் தூண்டியது. நோயாளிகள் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டபோது நோயாளிகளின் பாலினம் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி அலைவரிசை இந்த சம்பவத்தை நோயாளிகளின் பாலினத்தை நியாயமற்ற முறையில் எவ்வாறு எடுத்துக்காட்டுகிறது என்பதை பின்வரும் படம் காட்டுகிறது. செய்தியின் தலைப்பு வெறுக்கத்தக்க தொனியைக் கொண்டு பின்வருமாறு அமைந்திருந்தது, “தாய் மற்றும் மகளின் கொரோனா 2,000 க்கும் மேற்பட்டவர்களை பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்புகிறது; 72பேருக்கு ஏற்கனவே தொற்று உறுதி. ”
இந்த நெறிமுறையற்ற அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், ஊடக நெறிமுறைகளில் ஆர்வமுள்ள பலர் இதனைப் பற்றி பேசினர். இந்த இடுகைக்கு எதிராக சமூக ஊடகங்களிலும் பரவலான ஒருமித்த கருத்து இருந்தது.
இது வெறுக்கத்தக்க பேச்சு என்பதுடன், நோயாளிகளின் பாலினத்தை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வைரஸ் பரவுவதற்காக நோயாளிகளை குற்றம் சாட்டுகிறது. நோயாளி வேண்டுமென்றே பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்திருந்தால், அவரை விமர்சித்திருக்கமுடியும். ஆனால் தான் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பது நோயாளிக்கு தெரியாது. அவர் இணைந்துள்ள சமூகத்திலிருந்து தான் வைரசுடன் தொடுகையுற்றார் என்பதுடன் அவர் முதன்மை காவியாக இருக்க முடியாது. தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீரவும் பிராண்டிக்ஸில் பரவிய வைரஸின் ஆதாரம் அடையாளம் காணப்படவில்லை என்றாலும் அவர் அதனுடைய முதல் தொடர்பு நபராக இருக்க முடியாது என்று கூறினார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இந்த உண்மை சரியானது என்று குறிப்பிட்டிருந்தார். (https://www.youtube.com/watch?v=RTuqW4JCmSY) இந்த அறிக்கை பொறுப்பற்ற அறிக்கையிடலுக்கும், நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நோய்க்காக குற்றம் சாட்டுவதற்கும் ஒரு உதாரணமாகும்.
ஒரு பிரபலமான வானொலி அலைவரிசையின் காலை நிகழ்ச்சியில், ஆண் மற்றும் பெண் தொகுப்பாளர்கள் ஆடைத் தொழிலிலுள்ள பணியாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கையை இலக்கு வைத்து சில கேவலமான கருத்துக்களைப் பேசினர். பெண் ஆடைத் தொழிலாளர்கள் எப்போதுமே மிகவும் அஞ்சுவது எதற்கு? என்று தொகுப்பாளர் கேட்டதுடன், சிரித்தபடி ‘பொசிட்டீவ்க்கு’ (being positive) என்று பதிலளித்தார். இந்த அவமரியாதையை சமூக ஊடகங்களில் செயற்பாட்டாளர்கள் பரவலாக எதிர்த்தனர்.
சமூக ஊடகங்களிலும் கூட, பிராண்டிக்ஸ் கொத்தணியில் கண்டறியப்பட்ட முதல் நோயாளிக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சு அலைகள் தோன்றியிருந்தன. இந்த வெறுக்கத்தக்க பேச்சு அலைக்கு ஒரு முக்கிய காரணம், நோயாளி ஒரு பெண் என்பதாகும். சில நபர்கள் பெண்ணின் நடத்தை குறித்து கருதுகோள்களின் அடிப்படையில் வெறுக்கத்தக்க இடுகைகளை உருவாக்கியதுடன், இன்னும் சிலர் நையாண்டி செய்தனர், இருப்பினும் அந்த இடுகைகள் அவமரியாதையானவை.
இந்த சம்பவம் தொடர்பாக, சில அரசியல் ஆர்வலர்களால் வெளியிடப்பட்ட பதிவுகள் போன்ற பதிவுகள் உருவாக்கப்பட்டன. அரசியல் ஆர்வலர்கள் செய்த வெறுக்கத்தக்க உரையாக இந்த பதிவுகள் உருவாக்கப்பட்டன. இது போன்ற ஒரு போலி இடுகை கீழே வெளியிடப்பட்டுள்ளது, இது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட வேட்பாளர் நிருபா செரசிங்க அவர்களால் உருவாக்கப்பட்டது போல் தோற்றமளிக்கின்றது.
சுயாதீனமான உண்மை சரிபார்ப்பாளரால் (Independent fact-checker) இது ஒரு போலி பதிவு என்று உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த போலி இடுகைகள் சரிப்படுத்த முடியாத சேதத்தை ஏற்படுத்தின. இந்த இடுகைகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றாலும், அவை அதிகாரப் போராட்டங்களுடன் நேரடியாக தொடர்பில்லாத ஒரு சமூகத்தை பாதித்தன. அந்த சமூகம் வெறுக்கத்தக்க பேச்சுக்கு உட்பட்டதுடன், இடுகைகளை உருவாக்கியவர்களுக்கு அந்த சமூகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் இருக்கலாம்.
பிராந்தியங்களிடையிலான பிளவுகள் சுட்டிக்காட்டப்பட்டது இந்த வெறுக்கத்தக்க பேச்சு இடுகைகளின் மற்றொரு அம்சமாக இருந்தன. கம்பஹா மாவட்டத்தையும் அதன் மக்களையும் அவமானப்படுத்திய பல பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன, ஏனெனில் தொற்றுநோய் பரம்பலின் முக்கிய கொத்தணி கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டிருந்தது. அவை நகைச்சுவையானதாகத் தோன்றலாம், ஆனால் இது போன்ற கருத்துக்களை பொதுமைப்படுத்துவதன் மூலமான முடிவுகளை நாம் சிந்திக்க வேண்டும். சமீபத்தில், சில சம்பவங்கள் நடைபெறும் பகுதிகள் குற்றம் சாட்டப்படுகின்றதுடன், இந்த நிகழ்வு பிராந்தியங்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த அணுகுமுறைகளை நாம் வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும்.
மினுவாங்கொட கோவிட் -19 கொத்தணி அடையாளம் காணப்பட்ட உடனேயே பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெறுப்பு இடுகைகளின் அலைகளை நாங்கள் அவதானித்தோம். சில பிரதான ஊடகங்கள் செய்திகளைப் பரப்பும்போது ஊடக நெறிமுறையுடனான அறிக்கையிடலின் பொறுப்புகளை மறந்துவிட்டன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வெறுக்கத்தக்க இடுகைகளின் அலைகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் பாலினம், வர்த்தகம் மற்றும் குடியிருப்பு பகுதி முன்னிலைப்படுத்தப்பட்டன. இருப்பினும், சாதகமான காரணி என்னவென்றால், முற்போக்கு ஆர்வலர்கள் இந்த இடுகைகளை எதிர்க்க முன்வந்தனர். மற்றயவர்களைப் பற்றிய உணர்வற்ற தன்மை, போலி இடுகைகளின் பின்னடைவு பற்றிய அறியாமை மற்றும் வெளியீட்டாளர்களின் மனப்பான்மை ஆகியவை போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சின் எழுச்சிக்கு காரணமாக இருக்கலாம். இதற்கான தீர்வு ஊடக முகாமையாளர்கள், ஊடகவியலாளர்கள், பிற ஊடக ஊழியர்கள் மற்றும் பயனர்களிடையே மற்றயவர்களின் நிலையிலிருந்து பார்த்து சிந்திக்கும் தன்மையை வளர்ப்பதாகும்.