வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

போலி செய்தி தொற்றுநோயைக் கண்டுபிடித்து நிறுத்துங்கள்

பாவ்னா மோகன்

கடந்த சில வாரங்களாக தீவு முழுவதும் பரவிவரும் கோவிட் -19 இன் இரண்டாவது அலை, நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையை மீண்டும் முன்னணியில் கொண்டு வந்துள்ளது – அதுதான் “போலி செய்திகளின்” பரவல் ஆகும்.

முந்தைய பல சந்தர்ப்பங்களில், போலி செய்திகளின் விளைவுகளை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்த பிரச்சினை புதியதல்ல என்று சொல்ல தேவையில்லை.

2018 ஆம் ஆண்டில், திகனவில் முஸ்லிம்களுக்கும் சிங்கள பௌத்தர்களுக்கும் இடையில் வன்முறையைத் தூண்டும் விதத்திலான தவறான தகவல்களைக் கொண்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன, இது 2018 இல் மோசமான திகன கலவரத்திற்கு வழிவகுத்தது. ஒரு வருடம் கழிந்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் முஸ்லிம்களை தொடர்புபடுத்த முயற்சிக்கும் போலி செய்திகள் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டன, இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு வழிவகுத்தது.

இந்த ஆண்டு கூட, கோவிட் -19 இன் ஆரம்ப அலையின் போது இலங்கையில் போலி செய்திகள் அதன் தீய வடிவத்தை வெளிக்காட்டியது. கிழக்கு ஆசியாவில் முஸ்லிம்கள் இனவெறிக்கு ஆளாயினர். உணவகங்களும் இதே போன்ற நிறுவனங்களும் கூட அவர்கள் நுழைவதை மறுத்துவிட்டன. அதே நேரத்தில் சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் சுகாதார வழிகாட்டுதல்களை சரியாக பின்பற்றவில்லை என்பது போன்ற தவறான தகவல்களும் பரப்பப்பட்டன.

வீட்டு வைத்தியம் வைரஸைக் குணப்படுத்தியது, தேநீர் வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் போன்ற  பல போலி கூற்றுக்களையும் தவறான தகவல்களையும் பரப்புவது மக்களை ஒரு போலியான பாதுகாப்பு உணர்வுக்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். ஒரு தொற்றுநோய் காலங்களில் இதுபோன்ற செய்திகள் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

அதுமட்டுமல்லாமல், தொற்றுநோய் மருத்துவமனை (ஐ.டி.எச்) வெளியிட்டது போல் தோன்றும் வகையில், புனையப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள்] கொண்ட  ஆவணம் இணையங்களின் ஊடாக விநியோகிக்கப்பட்டது. வைரஸைக் குணப்படுத்தாக்கக்கூடியது என்று பிரச்சாரம் செய்யப்பட்ட இவை, பயனற்றதாகவும் நிரூபிக்கப்படாததாகவும் இருந்தன. வீட்டு வைத்தியம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தவறான ஆலோசனைகள் இதில் இருந்தன, இவற்றை வைரஸை கட்டுப்படுத்தக்கூடியது என்றும் சுயமாக நிர்வகிக்க முடியும் என்றும் குடிமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

தவறான தகவல்களைப் பரப்புவதால் நேர்மறையான விளைவுகள் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவு. பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முடிவதால், இதன் காரணமாக ஒரு சுழல் விளைவும் ஏற்படுத்த முடிவதால்  – அது பரவுகையில், அது அதிகமான மக்களைச் சென்றடைகிறது, மேலும் பொதுமக்களும் தவறான தகவல்களுக்கு ஏற்ப செயல்படுகிறார்கள், இது பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதனால் போலி செய்தி பிரச்சாரகர்கள் ஏமாற்றுவதற்காக எந்த அளவிற்கும் செல்வார்கள்; இந்த காரணத்திற்காக போலி செய்திகள் பல்வேறு வடிவங்களையும் எடுக்கின்றன என்பதை நாம் உணர  வேண்டியது அவசியம். குறிப்பிட்ட தகவல்களை பரப்புவதற்காக, அவற்றை சரியான தகவல்களாக காண்பிப்பதற்காக அவர்கள் தங்களால் முடிந்த அனைத்து வழிமுறைகளையும் கையாள்வர். தகவல் நுகர்வோரை திறம்பட ஏமாற்ற அவர்கள் பல்வேறு தந்திரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தகவலின் நம்பகத்தன்மையையோ அல்லது அதன் மூலத்தையோ கேள்விக்குட்படுத்தாது நுகர்வோரும் அவற்றை  பகிர்கிறார்கள்.

போலி செய்திகளின் அடிப்படை வரைவிலக்கணம் ‘உண்மையைப் போல சித்தரிக்கப்பட்ட தவறான தகவல்’ என்றாலும், தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் திறமையாக பரப்படுவதால் அவற்றை போலியென்று  கண்டறிவது அவ்வளவு எளிதல்ல (போலி செய்திகளை அடையாளம் காண்பதற்கான சில குறிப்புகள் கட்டுரையின் அடிப்பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன).

உண்மையைப்போன்று தோற்றமளிப்பதற்காக சில நம்பிக்கைகள் அல்லது எதிர்வினைகளைத் தூண்டுவதற்கு தகவல்களைக் கையாளக்கூடிய சில வழிகள் இதோ: தவறான இணைப்புகளை உருவாக்குதல், தகவல் மாற்றப்பட்ட உள்ளடக்கம், இட்டுக்கட்டப்பட்ட உள்ளடக்கம், விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளடக்கம் (இது விளம்பரம் செய்யப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்), தவறான உள்ளடக்கம் (உண்மையான தகவல் ஒன்று தவறான சூழல் தகவலுடன் பகிரப்படும் போது), நையாண்டி அல்லது பகடி (ஒரு நேர்த்தியான வரி, அதைப் படிக்கும் நபர் அதை எவ்வாறு உணருகிறார் என்பதைப் பொறுத்தது), மோசடி உள்ளடக்கம், பிரச்சாரம் மற்றும் பிழை (நிறுவப்பட்ட செய்தி நிறுவனங்கள் அறிக்கையிடும் போது தவறு செய்யும் போது).

ஊடகங்களால் தவறாக வழிநடத்தப்படவோ அல்லது தவறான தகவல்கள் பரப்பப்பட்டவோ கூடாது என்று எதிர்பார்ப்பது தவறல்ல. இருப்பினும், ஆன்லைனிலும் அதற்கப்பாலும் அதிகப்படியான தகவல்கள் வெள்ளம்போல் அடித்து வரும் காலத்தில், போட்டி அதிகரித்ததன் காரணமாக பத்திரிகைகள் கூட அதிகமான கிளிக்குகள் மற்றும் பகிர்தலை எதிர்பார்க்கின்றன. செய்தி ஊடகங்கள் தாம் வழங்கும் தகவல்கள்  முதல் ஆதாரமாக இருப்பதற்கும், அவர்களின் கதையுடன் ‘பிரேக்கிங் நியூஸ்’ குறிச்சொல்லை இணைப்பதற்கும் நேரத்துடன் போட்டியிடுகின்றன. இதன் காரணமாக ஆதாரங்களுடன் சரிபார்க்கப்படாத, குறுக்கு விசாரணை செய்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கப்படலாம். இதனால் தீங்கு விளைவிக்கும் தகவல்களைக் அறிந்துகொள்வதில் தவறு ஏற்படுவதால் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும். துரதிர்ஷ்டவசமாக, நிறுவப்பட்ட செய்தி நிறுவனங்களும் போலி செய்திகளை பரப்பலாம்.

அறிக்கையிடுகையில் பிழைகள் ஏற்படும்போது அதற்காக செய்தி வெளியீடு அவசர அவசரமாக மன்னிப்பு / திருத்தம் வெளியிடுகிறது, மன்னிக்கத்தக்கது, இருந்தாலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகத்தின் நிருபர்கள் தங்கள் பணியில் கூடுதல் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தங்கள் அறிக்கையை சுய-கட்டுப்படுத்தலை மேற்கொள்கின்றனர், அவர்கள் ஊடக ஒழுக்க நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள். இது ஊடகவியலாளர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளியீடுகளுக்கு ஒரே மாதிரியாக பொருந்தும், மேலும் இது 1973 ஆம் ஆண்டின் இலங்கை பத்திரிகை கவுன்சில் சட்ட எண் 5 இல் சேர்க்கப்பட்டுள்ளது. “ஒவ்வொரு பத்திரிகையாளரும் (அ) வெளியீட்டிற்காக அவர் எழுதிய எந்தவொரு கட்டுரையின் உண்மைத்தன்மையையும் உறுதிப்படுத்த வெளியிடுவதற்கு முன்னர் தன்னால் இயன்ற அனைத்து நியாயமான வழிகளையும் பயன்படுத்த வேண்டும்; (ஆ) அவர் அறிந்த அல்லது பொய்யான அல்லது துல்லியமற்றது என்று நம்புவதற்கு காரணமான எந்தவொரு விஷயத்தையும் அறிக்கையிடுவதை அல்லது அச்சிடுவதை அல்லது வெளியிடுவதைத் தவிர்ப்பது”.

போலி செய்திகளை தடுக்கும் பிற சட்டங்களும் உள்ளன. இவை குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்ட அமுலாக்கப் பிரிவினரால் பயன்படுத்தப்படலாம். தண்டனைச் சட்டத்தின் 465 மற்றும் 485 பிரிவுகள் சில வகையான தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகளைக் கையாளுகின்றன, அதே நேரத்தில் குற்றவியல் நடைமுறை நெறிமுறையும் அதை உள்ளடக்கியுள்ளது.

கடந்த ஆண்டு (2019) தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன, ‘பொய்யான செய்திகளை’ பரப்புவதை குற்றவாளியாக்குகின்றன, அங்கு ஒரு குற்றத்திற்கு ரூ. 1 மில்லியன் மற்றும் / அல்லது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை.

தற்போது, சட்ட அமலாக்க அதிகாரிகள் போலி செய்திகளின் சிக்கலைக் கையாளும் போது கறாராக இருக்கின்றனர். இதற்கு சான்றானது கடந்த இரண்டு வாரங்களில் செய்யப்பட்ட இரண்டு கைதுகள்; ஜனாதிபதி செயலக கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி ஊரடங்கு உத்தரவு தொடர்பாக போலி செய்திகளை வெளியிட்டதற்காக 18 வயது இளைஞரை மெட்டியாகொடையில் ரகசிய போலீசார் கைது செய்தனர், மேலும் கோவிட் -19 நிலைமை குறித்து போலி செய்திகளை வெளியிட்டதற்காக 60 வயதான குடியிருப்பாளர் ஒருவர் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டார்.

அடிப்படையில், இன்று நாம் எதிர்கொள்ளும் கோவிட் -19 தொற்றுநோய் போன்ற நெருக்கடி காலங்களில், குடிமக்களாகிய நாம் விடயங்களை பகிர்வதில் பொறுப்புமிக்கவர்களாக இருக்க வேண்டும். நாங்கள் டிஜிட்டல் யுகத்தில் வாழுகின்றோம். நாங்கள் ஒரு வாட்ஸ்அப் செய்தியை அனுப்பும்போது அல்லது பேஸ்புக் இடுகையைப் பகிரும்போது, அது விரும்பிய பெறுநரை அல்லது உங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களை மட்டும் அடையாது என்பதை நாம் உணர வேண்டும்; இது எங்களுக்குத் தெரியாத பலருக்கும் அனுப்பப்பட்டு பகிரப்படும்.

ஆகவே, நீங்கள் ஒரு விடயத்தை பகிர்வது தொடர்பாக மிகவும் கவனமாக இருங்கள், ஏனென்றால் நீங்கள் பகிர்ந்தவை போலியான அல்லது தவறான செய்தியாக இருந்தால், அது தவறான தகவலின் பரவலின் சிற்றலை விளைவைத் தொடங்கும், இது கோவிட் -19 ஐ விட வேகமாக பரவக்கூடிய தொற்றுநோயாகும்.

போலி செய்திகளை எவ்வாறு கண்டறிவது என்பதற்கான சில உதவிக்குறிப்புகள்:-

  • பல ஆதாரங்களைக் கொண்டுள்ளதா என்று பார்க்கவும்: கதையுடன் வரும் எந்த ஹைப்பர்லிங்க்களையும் கிளிக் செய்க. கொடுக்கப்பட்ட தகவல்கள் உண்மையில் கதையை ஆதரிக்கிறதா என்பதை தீர்மானிக்கவும். பிரதான ஊடகங்கள் அல்லது உண்மைச் சரிபார்ப்பு தளத்தையும் நீங்கள் சரிபார்க்கலாம்
  • அசல் மூலத்தையும் உள்ளடக்கத்தையும் கண்டறிந்து சரிபார்க்கவும்: தளம், அதன் பணி மற்றும் அதன் தொடர்புத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்று பாருங்கள்.
  • தலைப்புக்கு அப்பால் படியுங்கள்: கிளிக்குகளைப் பெறுவதற்கான முயற்சியில் தலைப்புச் செய்திகள் பரபரப்பானவை ஆக்கப்பட்டிருக்கலாம். முழு கதையையும் படித்து, அது தலைப்புக்கு ஏற்ப இருக்கிறதா என்று பாருங்கள்.
  • கோவிட் –19 இன் தரவை வெளியிடும்போது / பகிரும்போது நம்பகமான ஆதாரங்கள் தான் என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்
  • அச்சமூட்டும் அதிர்ச்சிக்குரிய விடயங்களையும் பரப்ப வேண்டாம்
  • தேதியைச் சரிபார்க்கவும்: பழைய செய்திகளை மறுபதிவு செய்வது தற்போதைய நிகழ்வுகளுக்கு பொருத்தமானது என்று அர்த்தமல்ல
  • எழுதியவரை சரிபார்க்கவும்: அவை நம்பகமானவை மற்றும் உண்மையானவை என்பதைத் தீர்மானிக்க எழுதியவர் பற்றிய தேடல் அவசியம்.
  • உங்கள் சார்புநிலையுடன் சரிபார்க்கவும்: உங்கள் சொந்த நம்பிக்கைகள் (விருப்பு/வெறுப்பு) உங்கள் தீர்ப்பை பாதிக்குமா என்பதைக் கவனியுங்கள்

(Sources: Groundviews.org, Reuters, World Health Organisation)

Capture.PNGhhhhh

இந்த மாத தொடக்கத்தில் மினுவாங்கொடையில் முதல் சில கோவிட் – 19 தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கைகளைத் தொடர்ந்து ஆன்லைனில் ஒரு போலி ஆவணம் பரப்பப்பட்டது.. போலி செய்தி பிரச்சாரகர்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம்; இது கவனத்திற்கு எடுக்க வேண்டிய ஒரு சிறந்த எடுத்துக்காட்டு – கடிதத்தலைப்பு மற்றும் உத்தியோகபூர்வ இலச்சினை போன்றவற்றை அவதானியுங்கள். இதன்  இயல்பு பற்றி சரிபார்க்க, உங்கள் முதல் படி தரப்பட்டுள்ள மூலங்களின் வலைத்தளங்களை சரிபார்க்க வேண்டும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts