Uncategorized

இலங்கையில் பெண்களின்பாதுகாப்பு சீர்குலைந்துள்ளதா?

க.பிரசன்னா

சம்பவம் 1 : 06.05.2024 – வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் 78 வயதுடைய பெண்ணொருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் 2 : 17.05.2024 – யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் 44 வயதுடைய பெண்ணொருவர் துணியொன்றால் கழுத்து நெரிக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்ட பரலினுள் தலை மூழ்கிய நிலையில் சடலமாக மீட்பு.

சம்பவம் 3 : 06.06.2024 – மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை.

சம்பவம் 4 : 29.06.2024 – பாதுக்க, வடருக்க பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
இவை சமீப காலங்களில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் சிலவாகும் என்பதுடன் இந்த கொலைகள் அனைத்தும் அவர்களுடைய வீடுகளிலேயே இடம்பெற்றுள்ளமை முக்கியமாகும். இவ்வாறான குற்றங்களின் பின்னணியில் இலங்கையில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு கேள்வி எழுந்துள்ளது.

 
கடந்த 10 வருடங்களில் 74 வீதமான குற்றங்கள் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் காயங்களை ஏற்படுத்தியவையாகவும் பாலியல் தாக்குதலுடன் தொடர்புடையாகவும் அமைந்துள்ளன.

2015 – 2024 ஜூன் வரையான 10 வருடக் காலப்பகுதியில் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் 77,470 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் ஒன்றாக மாறிவிட்டது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்களினாலேயே பெண்கள் அதிகளவில் வன்முறைகளுக்கு உள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. வீடு, போக்குவரத்து, வேலைத்தளம், இணையம் உள்ளிட்ட பெண்களின் பங்குபற்றல் காணப்படும் சகல இடங்களிலும் பெண்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நிலை காணப்படுகின்றது. எனவே அவற்றை தடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உண்டு. பெண்களுக்கு எதிராக அதிகமாக வீட்டு வன்முறைகளே பதிவாகும் நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறை சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துச் செல்லும் நிலையினையே அவதானிக்க முடிகின்றது.

பெண்கள் மீதான வன்முறைகள்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் நிலையில் அதிகமாக கடந்த 10 வருடங்களில்  45 வீதமான குற்றங்கள் பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் காயப்படுத்தலாகவும் 29 வீதமான குற்றங்கள் பாலியல் ரீதியான தாக்குதலாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2015 – 2024 ஜூன் வரையான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு வருடமும் பதிவு செய்யப்படும் குற்றங்களில் 38 – 50 வீதம் வரையான குற்றங்கள் பெண்கள் மீதான தாக்குதல் மற்றும் காயப்படுத்தலாகவும் 25 – 33 வீதம் வரையான குற்றங்கள் பாலியல் ரீதியான தாக்குதலாகவும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவற்றை விடவும் கொலை, கொலை முயற்சி, படுகாயம் ஏற்படுத்தல், கடத்தல், துஷ்பிரயோகம், பாராதூரமான பாலியல் வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல், கருக்கலைப்பு, விபசாரத்தில் ஈடுபடுத்தல், வீட்டு வன்முறை, மனித வியாபாரம், உறவினர்களால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தல், மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல், சட்டவிரோத கருக்கலைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் பெண்கள் மீதான வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளில் இழிவுபடுத்தல் அல்லது கடுமையாக புண்படுத்தல், வன்புணர்வு, அறைதல் அல்லது அடித்தல், தள்ளிவிடுதல், கழுத்தை நெறிக்க முற்படுதல், வீட்டுக்குள் முடக்குதல், தள்ளிவிடுதல், தீ வைத்தல் போன்ற செயற்பாடுகள் தனது நெருக்கமான துணையினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Woman in Need அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த 10 வருடங்களில் 838 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 139 கொலை முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. வீட்டு வன்முறைகளின் காரணமாக 7000 க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2000 க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிர காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான குற்றங்கள்

இலங்கையில் பெண்களுக்கான குற்றங்களில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்பில் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. சிறுவர்கள் மாத்திரமின்றி பெண்களும் அதிக பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இலக்கு வைக்கப்படுகின்றனர். பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், பொது இடங்களில் பெண்களை மோசமாக நடத்துதல், பாலியல் வன்புணர்வு, கடுமையான பாலியல் தொல்லை, இயற்கைக்கு மாறான உறவு, உறவினர்களால் பாலியல் து~;பிரயோகத்துக்கு உட்படல், பாலியல் தாக்குதல் போன்ற பல்வேறு ரீதியில் பெண்களை இலக்குவைத்து குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

கடந்த 10 வருடங்களில் பதிவு செய்யப்பட்ட 25 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பெண்களுக்கெதிரான பாலியல் ரீதியான குற்றங்களுடன் தொடர்புடையவையாக காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை பெண்களுக்கெதிரான பாலியல் தாக்குதல்களுடன் தொடர்புபட்டவையாகும்.

பெண்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது?

தற்போதைய காலத்தில் நகர்புறங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தது போல தோற்றமளித்தாலும் கிராமங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து கொண்டே  இருக்கின்றன. சில பெண்கள் சமூக அந்தஸ்து, பயம் விரும்பாமலோ அவற்றை வெளிப்படுத்துவதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியில் வேறொருவரின் கீழ் தங்கியிக்கின்றமையினால் இந்நிலைமை ஏற்படுகின்றது. பிரதேச செயலக மட்டங்களில் கணவனை இழந்த பெண்கள், கணவன் கைவிட்டுச்செல்லுதல், அடித்து துன்புறுத்தல், குழந்தைகளை கைவிடுதல் போன்ற உடலியல் வன்முறைகளை விட மன ரீதியான அழுத்தங்கள் பெண்களுக்கு அதிகமாக இருக்கின்றது.

மகளிர் தினத்துக்கு மாத்திரம் பெண்களை கௌரப்படுத்தி விட்டு மற்றைய நாட்களில் அவர்களை எவ்வாறு அடிமைப்படுத்துவது என பலரும் யோசிக்கும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது. எனவே பெண்களுடைய பாதுகாப்பு முதலில் வீடுகளில் இருந்தே ஆரம்பமாக வேண்டும். பெண்களுக்கான சமவுரிமை இங்கிருந்தே வழங்கப்பட வேண்டும். அப்போது சமூகத்தில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக பெண்கள் இருக்கும் நிலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கெதிரான வன்முறைகளில் அதிகம் வீட்டு வன்முறைகளாக இருக்கும் நிலையில் வீடு பெண்களுக்கான பாதுகாப்பு அரணாக மாறுமாயின் பிரச்சினைகளை பாதியளவாக குறைக்கலாம்.

வேலைத்தளங்கள், போக்குவரத்து, விளையாட்டு உள்ளிட்ட பெண்களின் பயணங்கள் அதிகமுள்ள இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் வகையிலான கட்டமைப்புகள் உருவாக்கப்படுவது அவசியம். ஆரம்ப கல்வி முதலே பாலின சமத்துவம் அத்தியாவசிய பாடமாக கருதப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைப்பதற்கு ஆண்களுக்கும் மிகப்பெரிய பங்குள்ளது என்பதை சமூகம் உணர வேண்டும்.

பாதுகாப்பு உதவிகளை எங்கு பெறுவது?

வீட்டு வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 0702611111 இலக்கத்தை குடும்ப சுகாதார பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்குவரத்துகளில் எதிர்கொள்ளும் வன்முறைகள் மற்றும் ஏனைய இடங்களில் எதிர்கொள்ளும் வன்முறைகளை தவிர்ப்பதற்கும் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கும் 1938 இலக்கத்தில் பெண்களுக்கான தேசிய குழுவிடமும் 119 பொலிஸ் துரித இலக்கம் மற்றும் 0112433333 என்ற இலக்கத்துடனும் இலங்கை போக்குவரத்து சபையின் 1955 மற்றும் 0117555555 இலக்கத்துடனும் அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.

சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு பணியகம், சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, சிறுவர் பாதுகாப்பின்மை, சிறுவர் தொழிலாளர், சிறுவர் கொடுமை போன்றவற்றை விசாரித்து தடுக்கிறது.

cwb.online@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் 109 மற்றும் 0112444444 ஆகியவற்றின் ஊடாக எவராலும் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும். 24 மணி நேரமும் செயல்படும் பொது முறைப்பாட்டு மையம், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்கிறது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts