மாகாண சபையை பராமரிக்க வருடாந்தம் 27 கோடி ஒதுக்கீடு!
கமனி ஹெட்டிஆரச்சி
இலங்கையில் மாகாண சபை முறையானது 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்து-லங்கா உடன்படிக்கையினூடாக ஸ்தாபிக்கப்பட்டது. அதிகாரப் பரவலாக்கம் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரால் கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு அன்றைய அரசியல் எதிர் கட்சிகளின் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய அரசியல் கட்சிகள் நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்திருந்தனர். எவ்வாறாயினும், அண்மையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோஷமிட்ட பலர் மாகாண சபைகளைக் கலைத்து தேர்தலை நடத்தும் காலம் கடந்துவிட்டது என்பதை மறந்துவிட்டார்கள்.
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாண சபை முறைமை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு மாகாண சபை உருவாக்கப்பட்டதுடன், அது விரைவில் கலைக்கப்பட்டது. பிரச்சினை மிகவும் அழுத்தமாக இருக்கும் பகுதிகளில் இந்த மாகாணசபை திறம்பட செயல்படவில்லை, அவற்றின் பிரதான நோக்கத்திலிருந்து விலகிச் சென்றது.
மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினை அதன் ஆரம்பம் முதல் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்தச் சபைகளுக்கு உத்தேசிக்கப்பட்ட பல அதிகாரங்கள், குறிப்பாக நிலம், நிதி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக ஆரம்பம் முதலே மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தக்கவைத்துக்கொண்டதன் காரணமாக மாகாண சபையை ஒரு பயனற்ற நிறுவன கட்டமைப்பாகச் சிலர் கருதுகின்றனர். வடக்கு-கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை, குறித்த பிரச்சினைக்குப் போதுமான தீர்வை வழங்க முடியாத காரணத்தால் தேவையற்ற ஒரு நிறுவனத்தை நாட்டிற்குள் நிறுவியதாகப் பல விமர்சனங்களை எதிர்கொண்டது. மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் போன்ற நிறுவன கட்டமைப்புகள் காணப்படுவதால், மாகாண சபை முறைமை என்பது அத்தியாவசியமான நிறுவனக் கட்டமைப்பா என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாகாண சபையின் அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள், ஒருங்கியை நிரல் அதிகாரங்கள் என்பன அந்தந்த நிறுவனங்களின் அதிகாரங்களை அமுல்படுத்துவதில் தொடக்கம் முதலே பல சிக்கல்களை உள்ளடக்கியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஆளும் கட்சி மாகாண சபைகளுக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழிவகுத்துள்ளது, மேலும் அவர்கள் தற்போது மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கின்றனர். மாகாண சபைகள் ஒவ்வொரு மாகாணத்தின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்பக் கொள்கைகளை வகுக்காமல், மத்திய அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் கருவியாகவே மாகாண சபைகள் இயங்கி வருகின்றன.
எவ்வாறாயினும், ஒரு சாதகமான விடயம் என்னவென்றால், மாகாண சபை முறைக்கு எதிரான எதிர்க்கட்சிகள் இப்போது இந்தச் சபைகளுக்குள் செயல்படுகின்றன. இது ஒரு ஜனநாயக வெற்றியைக் குறிக்கிறது. மேலும், மாகாண சபைகள் மாகாண அரசியல் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கு சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், மாகாண மட்டத்தில் அரசாங்க சேவைகளை வழங்குவதிலும் மாகாண மக்களுக்கு நன்மை பயக்கும் பங்களிப்பை வழங்கியுள்ளன. மாகாண சபைகளின் திறனை அதிகரிக்க, மாகாண சபையின் அதிகாரம் தொடர்பான பட்டியல் அல்லது ஒருங்கியை நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாகத் தெளிவான தேசியக் கொள்கையை உருவாக்கி அதிகாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது அவசியம்.
மாகாண சபைகளின் சுயாதீனத்தை பாதுகாப்பதன் மூலம், பயனுள்ள பொதுச் சேவையை வழங்கும் முக்கியமான நிறுவன முறைமையாக மாகாணசபைகளை மாற்ற முடியும். துரதிஷ்டவசமாகத் தேர்தல் நடைபெறாததால் மாகாண சபைகளின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளன. மேலும் , வினைத்திறனான சேவைகளை வழங்குவதில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், மாகாண சபைக்குள் பொது நிதியைச் செலவிடுவது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டோம்.
மேல்மாகாண சபையின் 2018 ஆம் ஆண்டுக்கான செலவினங்களுக்காக நாற்பத்து ஏழு கோடியே பத்து இலட்சத்து இருபத்து இரண்டு ஆயிரம் (ரூ. 471 022 000) ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக மேல்மாகாண, மாகாண செயலகத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் விண்ணப்பத்திற்கு அனுப்பப்பட்டுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக வருடமொன்றுக்கு எவ்வளவு தொகை, மாகாண சபை உறுப்பினர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்குச் செலவிடப்படுகிறது? என்பது தொடர்பில் மேல்மாகாண செயலகத்திற்கு தகவல் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து அது தொடர்பில் வினவினோம்.
கிடைத்த பதில்களின்படி, மாகாண சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஒரு நாளைக்கு 4, 38, 445 ரூபா செலவிடப்படுகிறது. மாகாணசபை மாதம் இரண்டு நாட்கள் கூடுவதுடன், மாதாந்தம் 8,76,890 ரூபா செலவாகின்றது.
மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் அடிப்படைச் சம்பளமாக 27142.50 ரூபாவும் போக்குவரத்து கொடுப்பனவாக 5000 ரூபாவும், எழுதுபொருள் கொடுப்பனவாக 4000 ரூபாவும், அலுவலக கொடுப்பனவாக 50,000 ரூபாவும், நகல் கொடுப்பனவாக 5000 ரூபாவும் தபால் கொடுப்பனவுகளாக 5291.67 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
இந்த நாட்டில் 09 மாகாண சபைகள் செயற்படுவதுடன், அந்த அனைத்து மாகாண சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ளன. மாகாண சபைகள் தொடர்பான சகல செயற்பாடுகளும் ஆளுநர் தொடக்கம் மாகாண செயலாளர் வரையிலான அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேல் மாகாண சபையின் பதவிக்காலம் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர் மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநருக்கு மாற்றப்பட்டுள்ளன.
மாகாண சபைக் கூட்டத்தை நடத்துவதற்கும், மாகாண சபை உறுப்பினர்களைப் பராமரிப்பதற்கும் வருடமொன்றிற்கு இவ்வளவு தொகை செலவழிக்கப்படுவதுடன், மேலும் மாகாண சபைகளை நிறுவுவதின் முதன்மை நோக்கம் அதிகாரப் பரவலாக்கம் என்ற குறிக்கோளும் நிறைவேறவில்லையென்றால் மாகாண சபைகள் தேவையா என்ற கேள்வி தவிர்க்க முடியாது.