நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?
ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை ஆணையாளர் அறிவித்துள்ளார். மேலும் மாநகர சபையின் ஊடாகப் பெற்றுக்கொடுத்த கால எல்லைக்குள் குறித்த கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளபடாவிட்டால் நீதிமன்ற உத்தரவினூடாகக் குறித்த சட்டவிரோத கட்டுமானத்தை முழுமையாக அகற்ற வேண்டி ஏற்படும் என்றும் நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளர் திருமதி எஸ்.பீ.கே போதிமான எழுத்துமூலமான அறிவிப்பை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி கழிவு நீரை வெளியேற்றும் குழாயை தனது வீட்டை நோக்கி திருப்பிய காரணத்தால் அயல்வீட்டு நபரால் தாக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், நுவரெலியா மாநகர சபைக்குப் பொலிசார் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பில் நுவரெலியா மாநகர சபை உண்மைகளை ஆராய்ந்தபோது, மாநகர சபை உறுப்பினரான குறித்த வேட்பாளரின் வீடு 1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை திருத்தச் சட்டத்தின் பிரிவு 8 (1) இனை முழுமையாக மீறி கட்டப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. நுவரெலியா மாநகர சபையின் மாநகர ஆணையாளர் திருமதி எஸ்.பி.கே.போதிமான்ன, குறித்த வேட்பாளருக்கு முதல் நினைவூட்டலை அனுப்பியுள்ளதாக நுவரெலியா பொலிஸாருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
அவ்வாறு முன்வைக்கப்பட்ட எழுத்துமூலமான கடிதத்தை தருமாறு 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நுவரெலியா மாநகர சபையின் தகவல் அதிகாரியிடம் நாம் விடுத்த கோரிக்கைக்குப் பதில் கிடைத்தது. இதற்கமைய மாநகர சபை ஆணையாளரின் கையொப்பத்துடன் கூடிய நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்வைத்த கடிதம் மற்றும் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு அனுப்பிய எழுத்துமூல முதல் அறிவிப்பின் பிரதி ஆகியன கிடைக்கப் பெற்றன.
இதற்கமைய நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளர் திருமதி எஸ். பீ.கே போதிமான கையொப்பமிடப்பட்டு அனுப்பிய சட்டவிரோத கட்டுமானம்பற்றிய முதல் அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
“1982 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை திருத்தச் சட்டத்தின் பிரிவு 8 (1) ஐ மீறும் வகையில், ஜீ.ஏ ரஹீம் என்றவரினால் மாநகரசபை அனுமதிப்பத்திரமின்றி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டிடம் மற்றும் திட்டமிடல் ஒழுங்குமுறைகளை மீறி நுவரெலியா ஹாவாஎலிய லேடி மெக்கலம் வீதி 280 ஆம் இலக்கம் என்ற இடத்தில் சட்டவிரோதமாகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக நகர ஆணையாளர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, ஜூலை 24, 2023 அன்று அல்லது அதற்கு முன், மேற்கூறிய கட்டிடப் பணிகளை (அங்கீகரிக்கப்படாத கட்டுமானம்) நிறுத்தி, மேற்படி கட்டிடப் பணிகள் நடந்த அல்லது மேற்கொள்ளப்பட்ட நிலம் அல்லது இடத்தை அதன் அசல் நிலைக்கு மீட்டெடுப்பதுடன் மேலும் அபிவிருத்தி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்பட்சத்தில் குறித்த நடவடிக்கையை உரிய சட்டவரையறைக்குள் நின்று செயற்படுமாறு ஜீ ஏ ரஹீம் என்பவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படாவிட்டால் எவ்வித முன்னறிவித்தலுமின்றி நகர அபிவிருத்தி அதிகாரசபை (சிறப்பு ஏற்பாடுகள்) 1984 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 1982 இல் திருத்தப்பட்ட நகர்ப்புற அபிவிருத்தி அதிகாரசபை சட்டம் எண் 4 இன் பிரிவு 28 யு (3) இன் கீழ் நீதிமன்ற உத்தரவொன்றை பெற்று அந்தச் சட்டவிரோத கட்டிடத்தை அல்லது கட்டுமானத்தை இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இடம்பெறும் இவ்வாறான அனுமதியற்ற சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அரசியல் மற்றும் சமூக ஆர்வலர் திரு.மைக்கேல் எகுலஸ், மேற்கண்ட அனுமதியற்ற கட்டுமானத்திற்கு நுவரெலியா மாநகர சபையே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நுவரெலியா நகரில் அதிகளவான அனுமதியற்ற கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அரசியல் அதிகார துஷ்பிரயோகங்களால் அவை அனுமதியின்றி நிர்மாணிக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய வீடு நிர்மாணித்து முடிவடையும் வரை மாநகர சபையின் ஆணையாளர் உட்பட பொறியியலாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? வீடு கட்டும் வரை இது கண்ணில்படவில்லையா? யாரிடமிருந்தாவது ஆட்சேபனை வரும்போது மாத்திரம், விதிமீறல் கட்டுமானம் குறித்து நினைவூட்டல் அறிவிப்பை அனுப்பிவிட்டு இருந்துவிடுகின்றனர். இது நுவரெலியாவிற்கு பழக்கப்பட்ட ஒரு விடயமேயாகும். மேலும் அரசியல் பின்னணி எதுவாக இருந்தாலும் இவ்வாறான சட்டவிரோத நிர்மாணங்களை விரைவாக அகற்ற நுவரெலியா மாநகர சபையின் மாநகர ஆணையாளர் செயற்படுவாரென நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மாநகர சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் எனும் அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்தி, சட்டத்தைமீறி கட்டுமானங்களை எழுப்ப ஒருபோதும் மாநகர சபை அதிகாரிகள் அனுமதி வழங்க முடியாது. கட்டிடங்களுக்கான அனுமதியை வழங்கும்போது உரிய சட்ட ஏற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். இன்றேல் அவற்றை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.