இரவின் வித்தைக்காரர்கள்
சஜீவ விஜேவீர
நம்மத்தியில் அடிக்கடி சுற்றித் திரியும் பூனைகள் ஃபெலிடே என்ற இனத்தில் உள்ளடங்கும் விலன்கினமாகும். இந்தப் பூனைகள் உள்ளடங்கும் ஃபெலிடே குடும்பம், உலகில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விலங்கினத்தில் ஒன்றாகும்.
உலகில் பூனை குடும்பத்தில் 40 இனங்கள் காணப்படுகின்றன. அந்த 40 இனங்களில் 04 இனங்கள் அதாவது 10% இலங்கையில் காணப்படுவது விசேடமாகும். இது இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளது.
இந்த விலங்குகள் இரவில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றன. அதனால்தான் சாதாரண சுற்றுச்சூழலில் அவற்றைப் பார்ப்பது மிக அரிது. ஆனால் நடு இரவில் அந்த விலங்குகள் எமக்கு உணராத வண்ணம் உலாவிவருகின்றமை யாரும் நமக்குச் சொல்லி அறிய வேண்டிய அவசியம் இல்லை. அவற்றின் இருப்பு அவற்றின் கழிவுகள் மற்றும் கால்தடங்களால் அறியப்படுகிறது அல்லது வீட்டு வளர்ப்பு விலங்குகள் காணாமல் போவதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்த அற்புதமான உயிரினங்கள் உண்மையிலேயே இரவின் வித்தைக்காரர்கள்.
இலங்கை புலி
இலங்கையில் காட்டில் வாழும் ஃபெலிடே இனத்தைச் சேர்ந்த பெரிய இனமாகப் புலி அடையாளம் காணப்படுகின்றது. சிலர் சிறுத்தை என்றும் அழைக்கும் இலங்கைப் புலியானது விலங்கியல் ரீதியாக Panthara padus kotiya என்று அழைக்கப்படுகிறது.
புலி என்பது வறண்ட கால காடுகளிலும் ஈர மண்டல காடுகள் மற்றும் மலைக்காடுகளிலும் பரவலாகக் காணப்படும் ஒரு விலங்கு இனமாகும். யால மற்றும் வில்பத்து போன்ற உலர் வலயப் பூங்காக்களில் எளிதாகக் காணக்கூடிய புலிகளின் புகழ்பெற்ற வேட்டைத்தளமாக ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா அறியப்படுகிறது. ஆனால் ஹோர்டன் சமவெளியில் புலிகளைப் பார்ப்பது மிகவும் அரிது.
மலைக் காடுகளில் உள்ள புலிகள் தேயிலைத் தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் நாய்கள், பூனைகள், கோழிகள் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதால், அவை அடிக்கடி மனிதர்களின் தாக்குதல் மற்றும் விபத்துக்களை சந்திக்கின்றன. பன்றி போன்ற விலங்குகளைப் பிடிப்பதற்காகப் போடப்பட்ட பொறியில் புலிகள் சிக்கி உயிரிழப்பதுடன், கடந்த சில ஆண்டுகளாக மலையக ஈரப் பகுதியில் வாழும் ஏராளமான புலிகள் உயிரிழந்திருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. அவற்றில் மிகவும் அரிதான கரும்புலியும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீன்பிடி பூனை (பிஷிங் கேட்)
இந்நாட்டில் பலருக்கும் தெரிந்த மற்ற காட்டுப் பூனை இனம் மீன்பிடி பூனையாகும். ஆங்கிலத்தில் Fishing Cat என்று அழைக்கப்படும் இவை விலங்கியல் ரீதியாக Prionailurus viveriinus என்று அழைக்கப்படுகின்றன.
மீன்பிடி பூனை இலங்கை முழுவதும் பரவியுள்ள ஒரு விலங்கு இனமாகும். குறிப்பாக கொழும்பு மாநகரில் இந்தச் சிறுத்தைகள் சிறு வயது வரை கால்நடைகளுக்கு மத்தியில் வாழக்கூடிய அளவிற்கு இசைவாக்கமடைந்துள்ளமை விசேட அம்சமாகும். கொழும்பின் பிரதான வீதிகளில் கூட விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் மீன்பிடி பூனைகள் குறித்த செய்திகள், நாட்டின் தலைநகரில் அவை இன்னும் வாழ்கின்றன என்பதை உறுதிப்படுத்துகின்றன.
நகரமயமாதலுக்கு கூட அவைகள் இசைவாக்கமடைந்துள்ளமை இங்கு தெளிவாகிறது. நீர்வாழ் வாழ்விடங்களை விரும்பும் மீன்பிடி பூனைகள் சிறந்த மீன் வேட்டையாடுபவை. இதனாலேயே அவர்களுக்கு ஆங்கிலத்தில் Fishing Cat என்று பெயர் வந்தது. சதுப்பு நிலங்களை நிரப்புதல் மற்றும் பாரிய கட்டுமானம் காரணமாக அவற்றின் வாழ்விடங்கள் விரைவாக இழக்கப்படுகின்றன.
ஆனால், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, மீன்பிடி பூனைகள் எதையும் சாப்பிட்டு வாழப் பழகி வருவதாக விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
காட்டு பூனை
காட்டுப் பூனை(Wild cat) விலங்கியல் ரீதியாக Felis chaus என்று அழைக்கப்படுகிறது. இவை இலங்கையின் வறண்ட பிரதேசத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட விலங்கு இனமாகும். இவை உடவலவ தேசிய பூங்காவில் இலகுவாகக் காணக்கூடிய விலங்கினமாகும். மேலும் உலர் வலயத்தில் அமைந்துள்ள ஏனைய தேசிய பூங்காக்களிலும் காணப்படுகின்றன. மேலும், வறண்ட பிரதேசத்தின் காடுகளில் வாழும் காட்டுப்பூனை, புலி போன்று பகலில் சுற்றித்திரியும் விலங்கு இனமாகும். உலர் வலயக் காடுகளினூடாகச் செல்லும் நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் இந்த விலங்கினம் வீதி விபத்துக்களில் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏராளமாகப் பதிவாகியுள்ளன.
துரும்பன் பூனை
துரும்பன் பூனை இலங்கையில் காணப்படும் சிறிய பூனை இனமாகும். ஆங்கிலத்தில் Rusty spotted cat என்று அழைக்கப்படும் துரும்பன் பூனை விலங்கியல் ரீதியாக Prionailurus rubiginosus என்று அழைக்கப்படுகிறது.
துரும்பன் பூனை மிகவும் திறமையாக வேட்டையாடும் விலங்கினமாகும். பிதுருதலாகல மலையின் உச்சியிலிருந்து கடலோர சமவெளிவரை இலங்கையின் அனைத்து காலநிலை மண்டலங்களிலும் இந்த விலங்கினம் பரந்துபட்டு காணப்படுகின்றது. அதேபோலத் துரும்பன் பூனை விவசாயியின் நண்பனாகவும் கருதப்படுகின்றது. துரும்பன் பூனை ஓர் இரவு நேர இனமாகும். இது பயிர்களைச் சேதப்படுத்தும் எலி போன்ற கொறித்துண்ணி விலங்குகளை வேட்டையாடும். அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து கோழிக் குஞ்சுகளைப் பிடிப்பது போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இது தவிர துரும்பன் பூனை பூச்சிகளை அதிக அளவில் வேட்டையாடுகின்றன. துரும்பன் பூனை பாம்புகளைப் பிடித்து உண்ணும் விலங்கு இனமாகவும் அடையாளம் காணப்படுகின்றது.
துரும்பன் பூனையை யாரும் எளிதில் பார்க்க முடியாது. அவை வேகமாக நகரும், இரவில் பார்க்கக் கடினமான விலங்கினமாகும்.
இலங்கையில் காட்டில் வாழும் பூனை இனங்கள் தொடர்பில் ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக ஆய்வு மேற்கொள்ளும் மகப்பேறு மருத்துவர் திலக் ஜயரத்ன, மருத்துவர் ஜனக கலப்பத்தி, வனவிலங்கு ஆய்வாளர் திரு.நடிகா ஹப்புஆராச்சி மற்றும் காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் விலங்கியல் விஞ்ஞான ஆய்வாளர் மதுர டி சில்வா ஆகியோர் இலங்கையில் காட்டில் வாழும் பூனைகளின் விசேட பரவல், நடத்தை மற்றும் அவைகளின் உணவுச் சங்கிலி மேலும் அந்த விலங்கினங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர்.
புலி-மனித மோதல்
காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மதுர டி சில்வா கூறியதாவது:
“இலங்கையில் காணப்படும் 4 வகையான பூனை இனங்களில் ஒன்றான புலிக்கும் மனிதர்களுக்கும் இடையில் தற்போது பாரிய மோதல் ஒன்று காணப்படுகின்றது. குறிப்பாக மலைப்பகுதிகளில் இதனைக் காணலாம். மலைக்காடுகளை அழித்துத் தேயிலை மற்றும் பிற பயிர்களுக்குப் பயன்படுத்துதல், குடியேற்றம் போன்றவற்றால் புலிகள் தங்கள் வாழ்விடத்தை இழந்துள்ளன. அவைகளும் மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே வசிக்க வேண்டியுள்ளது. அதனால் புலிகள் உணவு தேடி கிராமத்திற்கு செல்கின்றன. கிராமத்திற்கு வரும்போது நாய், பூனை, கோழி, மாடு போன்ற விலங்குகளை எளிதாக வேட்டையாடுகின்றன. மனிதனுடன் ஒன்றிணைந்து வாழாத மற்றும் வளர்க்கும் விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கும்போது, இந்தப் புலிகளை அழிக்க மக்கள் பொறிகளை வைக்கிறார்கள். இப்போது இது மிகவும் தீவிரமான பிரச்சனையாக மாறியுள்ளதுடன் இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்,” என்றார்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் பூனை இனம் தொடர்பான மிக முக்கியமான தகவல்களைக் கொண்ட ஒரு புத்தகத்தையும் தொகுத்துள்ளனர்.