உயிர்ப்பல்வகைமையில் தங்கியிருக்கும் இலங்கை பெண்களின் பொருளாதார சவால்கள்
அருள் கார்க்கி
தேசிய பொருளாதாரத்தில் இலங்கையின் பெண் தொழிலாளர்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றனர். பெருந்தோட்டத்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, கைத்தொழில் துறை என்று அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்களின் வகிபாகம் உயர்ந்து காணப்படுகின்றது. அதிலும் சூழல் சார்ந்து தொழில் புரியும் பெருந்தோட்டத்துறை மற்றும் விவசாயத்துறையில் ஒப்பீட்டளவில் ஆண்களை விடவும் அதிகமாக பெண்களே தொழில் புரிகின்றனர்.
பெண்களின் பொருளாதாரமானது, சுற்றுச்சூழலுடன் ஒரு கூட்டுறவைக் கொண்டுள்ளது. இது உயிர்ப்பல்வகைமையின் இழப்பிலும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களிலும் நேரடியாக தொடர்புபட்டதாகும். ஆகவே, பெண்களின் பொருளாதாரத்தை நிலைபேறான விதத்தில் சுற்றுச்சூழலுடன் இணைத்து பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுப்பது அவசியம்.
அண்மையில், சீனாவின் தலைமையில் கனடா மொன்ட்ரியல் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை மாநாட்டில் (COP 15) இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மாநாட்டின்போது 2030ஆம் ஆண்டில் அடையவேண்டிய நான்கு குறிக்கோள்கள் மற்றும் 23 இலக்குகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்புதலின்படி 30 சதவீதமான நிலப்பரப்பு, சமுத்திரங்கள், கரையோரப் பிரதேசங்கள், நன்னீர் ஆகிய வளங்களை பாதுகாக்க முனைகின்றன. பல்லுயிர் பெருக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் விடயங்களுக்கான அரச மானியங்களை வருடாந்தம் 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைப்பதற்கு இது அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதோடு, உணவு வீண்விரயமாதலை பாதியாக குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைக்கின்றது.
22 ஆவது நோக்கமானது பால்நிலை சமத்துவம், சம பங்கீடு மற்றும் தீர்மானம் மேற்கொள்வதில் பெண்களுக்கு சமமான அதிகாரம் வழங்குவதை பிரதானமாகக் கொண்டது. மேலும் சுற்றுச்சூழல் வளங்கள் மீதான பெண்கள், இளைஞர்கள், பழங்குடி சமூகங்கள், உள்ளுர் சமூகங்கள் ஆகிய குழுக்களுக்கு காணப்படும் உரிமைகளையும் இது வலியுறுத்துகின்றது.
சுற்றுச்சூழல் வளங்களை அணுகுவதில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார மற்றும் கலாசார தடைகளை நோக்குமிடத்து, இந்த இலக்குகளின் நோக்கங்களை அடைவது இலங்கைக்கு சவாலான விடயமாகும். பல்வேறு விதமான சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியான வரையறைகள் காணப்படுகின்றன. விவசாயம் சார்ந்த துறைகளில் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பொறுத்தவரை, நிலம், தமது பகுதியில் காணப்படும் நீர் மற்றும் அதற்கு ஈடான சுற்றுச்சூழல் வளங்களில் தங்கியிருந்தாலும், அந்த வளங்கள் மீது அவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் மட்டுமே உள்ளன.
இலங்கையின் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களில் பெரும்பாலானோர் தேயிலை, இறப்பர், மற்றும் தென்னை ஆகிய தொழிற்துறைகளில் ஈடுபடுகின்ற நிலையில், இவ்விடயத்தை நாம் தெளிவாகக் காணலாம். இவர்களில் கணிசமான தொழிலாளர்கள் பெண்களாவர்.
இவர்களின் பொருளாதார நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் வளங்களுக்கான வரையறுக்கப்பட்ட அணுகல் என்பது பெரும்பாலும் இரண்டு காரணிகளிலிருந்து உருவாகின்றன: அவர்கள் சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினர்களாக அடையாளப்படுத்தப்படுகின்ற நிலையில், அவர்களின் பால்நிலை மற்றும் அந்தஸ்தின் ஊடாக இவை உருவாகின்றன.
இப்பெண்கள் தொழிலாளர்களாக உள்ள தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய பெருந்தோட்டங்களை அரசாங்கத்துடனான குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. இந்த அந்நிய நிலங்கள் சட்டச்சிக்கல்கள் நிறைந்ததாக காணப்படுவதால், நிலத்தின் மீதான உரிமை இப்பெண்களுக்கு சிறிதளவோ அல்லது பூரணமாகவோ இல்லை.
பெண்கள், மற்றும் சிறுபான்மை குழுக்களுக்கான வளப்பங்கீடு சமமானதாகவும், நிலைபேறானதாகவும் இருக்க வேண்டியதை உறுதிசெய்வதை அடிப்படையாகக் கொண்ட நான்கு இலக்குகளை ஏற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் துறை அமைச்சர் கலந்துகொண்டிருந்தார். ஐக்கிய நாடுகளின் சர்வதேச உயிர்ப்பல்வகைமை வரைபின் ஒரு பங்காளர் என்பதன் அடிப்படையில், இங்கு எடுக்கப்பட்ட நோக்கங்களை அடைவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளது.
விவசாயம் சார்ந்து அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதாரங்களில், சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக ஏற்படும் சூழல் சமநிலையற்ற தன்மையானது, உள்ளூர் சமூகங்கள் தாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை மோசமாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் வளங்களை பெற்றுக்கொள்ளும் உரிமை பெண்களுக்கு எந்தளவு மறுக்கப்படுகிறதோ, அந்தளவிற்கு சுற்றுச்சூழல் கட்டமைப்பிற்கு பிரச்சினை ஏற்படுமென கூறப்படுகின்றது.
எனினும், நிலைபேறான அபிவிருத்தித் திட்டங்களை திட்டமிடுகையில், சுற்றுச்சூழல் வளங்கள் மீது குறிப்பாக சிறுபான்மை இனக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு காணப்படும் உரிமை மீது குறைந்தளவாகவே கவனஞ்செலுத்தப்படுகின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு பிராந்தியங்களில் வாழும் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் நிலை ஒன்றும் வேறுபட்டதல்ல. யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமது சமூக, பொருளாதார அடிப்படைகளை மீளக் கட்டியெழுப்புவதில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இப்பிரதேசங்களில் அதிகமான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றமை ஒரு முக்கிய சமூக பொருளாதார கரிசனையாக காணப்படுகின்றது. அவர்களுக்கான நிலவுரிமை முழுமையாக உறுதிசெய்யப்படவில்லை. அத்தோடு, யுத்தகாலத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் தாக்கங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, சுற்றுச்சூழல் வளங்களான நிலம், நீர் மற்றும் சுத்தமான காற்று போன்ற சுற்றுச்சூழல் வளங்களைச் சார்ந்துள்ள பெண் தொழிலாளர்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் இரட்டை நோக்கத்தை நிறைவேற்றுவதை அரசாங்கத்தின் திட்டங்கள் நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமென செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறித்த திட்டங்கள் உயிர்ப் பல்வகைமை மாநாட்டின் (COP15) நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்காக மட்டுமன்றி, திறன்மிக்க வள முகாமைத்துவத்தையும் உறுதி செய்யும்.
கரையோரப் பிரதேசங்கள், கடல் வளங்கள், அவற்றின் பல்வகைமை மற்றும் அவற்றைச் சார்ந்துள்ள மக்களை பாதுகாப்பது உயிர்ப் பல்வகைமை மாநாட்டின் ஒரு இலக்கின் நோக்கமாகும். நாட்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கையின் கடல்சார் மீன்பிடித் தொழிற்துறையில் கணிசமான பெண்கள் தொழில்செய்கின்றனர். கடலில் இருந்து இவர்கள் வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்ற போதும், அதன் வளங்கள் மீது அவர்களுக்கு உரிமை இல்லை.
இயற்கை வளங்களை தமது சொத்தாக வைத்திருக்கும் முதலாளிமாரே வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களின் நோக்கம் மிகை இலாபம் பெறுவதே தவிர, உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்போ, பெண்கள் மீதான அக்கறையோ இல்லையென ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
COP15 முன்வைத்திருக்கும் 23 நோக்கங்களில் பிரதான நோக்கமாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காணப்படுகின்றது. இந்நிலையில், இம்மாநாட்டின் ஒரு பங்காளர் என்ற அடிப்படையில், 2030ஆம் ஆண்டிற்குள் கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மற்றும் வளங்களை சமமாக பகிர்ந்தளிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தை இலங்கை துரிதப்படுத்துவது அவசியமாகும்.
சர்வதேச பரிந்துரை செயற்பாட்டு குழுவான Women4Biodiversity அமைப்பின் பணிப்பாளர் மிருனாளினி ராய் இதுபற்றி குறிப்பிடுகையில், “கடந்த வருடம் ஜூன் மாதம் நைரோபியில் நடைபெற்ற மாநாட்டில், குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே பெண்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் வரைபை ஏற்றுக் கொண்டன. ஆனால் இம்முறை மொன்ட்ரீயல் மாநாட்டின்போது பெண்கள் தொடர்பான இலக்காக உள்ள நோக்கத்தை (TARGET 22) அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு ஆரோக்கியமான விடயமாகும்“ என்றார்.
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெண்களுக்கான வளப்பங்கீடு மற்றும் சமமான வாய்ப்புகள் என்பவற்றை உறுதிசெய்ய வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
COP15இன்23 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசியக் கொள்கைத் திட்டம் ஒன்றை இலங்கை வடிவமைப்பதன் மூலம் பயன்பெற முடியுமென ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் ஊடாக பெண்களை வலுப்படுத்தும் அதேநேரம், ஆசியாவில் ஒரு முக்கியமான உயிர்ப்பல்வகைமை மையமாக இலங்கை பிரகாசிப்பதற்கான சந்தர்ப்பமும் இதுவாகும்.