கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

ஐக்கிய நாடுகளின் அவதானத்தைப் பெற்றுள்ள இலங்கையின் மருத்துவக் கழிவு முகாமைத்துவம் 

அருண லக் ஷ்மன் பெர்னாண்டோ

மாநகர சபையின் கழிவுப் பிரச்சினையை சமாளிக்கும் முயற்சியாக, கொழும்பிற்கு வெளியே மீள்சுழற்சி நிலையங்களை அமைப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தாம் வாழும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கரிசனையின் அடிப்படையிலேயே மக்கள் எதிர்ப்பை முன்வைத்தனர்.  

பொதுவாக இலங்கையில் நகர்ப்புறத்தில் காணப்படும் கழிவுகளை அகற்றுவது பற்றி மாத்திரமே பேசப்படுகின்றது. சிறந்த வாழ்க்கை முறைக்கும் ஆரோக்கியமான  சமூகத்திற்கும் நகர்ப்புற கழிவு முகாமைத்துவம் முக்கியமானது என்பதை நாம் அறிந்துள்ள போதும், பொதுச் சுகாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மருத்துவக் கழிவு முகாமைத்துவம் பற்றி, ஒரு சமூகமாக நாம் அறிந்திருக்கவில்லை.

எவ்வாறாயினும், வைத்தியசாலை கட்டமைப்பினால் உருவாக்கப்படும் மருத்துவக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வது பற்றி, 2019ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கவனஞ்செலுத்துகின்றது. சுகாதாரத் துறையில் உருவாகும் மருத்துவக் கழிவுகள், பாரிய சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக அமையலாம் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் (கழிவு முகாமைத்துவம்) ஜே. எம். இந்திரரத்னவிடம் இதுபற்றி கேட்டபோது, இலங்கையின் மருத்துவக் கழிவு முகாமைத்துவத்தில் கடந்த 2018ஆம் ஆண்டுவரை பிரச்சினைகள் காணப்பட்ட போதும், தற்போது அவை யாவும் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளதென கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியன இணைந்து நடத்திய மதிப்பீட்டு ஆய்வின் மூலம் இக் கூற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தனவிடம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி றொபெர்ட் ஜூகம் அண்மையில் அறிக்கையைக் கையளித்தார். குறித்த அறிக்கையில், மருத்துவக் கழிவு முகாமைத்துவம் மற்றும் தரப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள், ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள், மருத்துவ ஆய்வுகூடங்கள் மற்றும் சுகாதார நிலையங்கள் மீதான புதிய வரிவிதிப்பின் மூலம், மருத்துவக் கழிவு முகாமைத்துவத்தை மேலும் நெறிப்படுத்த முடியுமென குறித்த அறிக்கை முன்மொழிகின்றது. இலங்கையின் மருத்துவக் கழிவு முகாமைத்துவமானது, முற்றுமுழுதாக அரச நிதியினால் முன்னெடுக்கப்படும் திட்டமல்ல. இரு தனியார் நிறுவனங்களின் நேரடி பங்களிப்பையும் இது கொண்டுள்ளது. இதுபற்றி பிரதிப் பணிப்பாளர் (கழிவு முகாமைத்துவம்) ஜே. டி. இந்திரரத்னவிடம் வினவியபோது, குறித்த இரு நிறுவனங்களும் சுமார் 17 தொன் மருத்துவக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதாகக் குறிப்பிட்டார். 

“இலங்கையில் வைத்தியசாலைகள், சுகாதார சிகிச்சை நிலையங்கள், ஆய்வுகூடங்கள் போன்றவற்றில் தினமும் சுமார் 40 தொன் மருத்துவக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. அதில், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளை பயன்படுத்தி ஒரு நிறுவனம் 15 தொன்களை முகாமைத்துவம் செய்வதோடு, மற்றொரு நிறுவனம் இரண்டை நிர்வகிக்கின்றது. முன்னைய நிறுவனத்திற்கு கெரவலப்பிட்டியவில் எரிகூடம் (எரியூட்டும் இயந்திரம்) உண்டு. அடுத்த நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டையில் எரிகூடம் உண்டு” என பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார். 

கொவிட்-19 தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் நாளொன்றிற்கு சுமார் 12 மெட்ரிக் தொன் அளவிலான மருத்துவக் கழிவுகள் அதிகரித்ததாகவும், தற்போது தொற்றுநோயின் தீவிரம் குறைவடைந்துள்ள நிலையில் இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் கூறினார். 

17 தொன் அளவிலான மருத்துவக் கழிவுகளை தனியார் துறையின் பங்களிப்புடன் முகாமைத்துவம் செய்த நிலையில், எஞ்சிய 23 தொன்கள் எவ்வாறு அகற்றப்படுகின்றன என்பது குறித்து நாம் அதிக கரிசனை செலுத்தினோம். அப்போதுதான், பல அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் சொந்தமாக எரிகூடங்கள் இருக்கின்றமை தெரியவந்தது. “சிலாபம், அநுராதபுரம், நீர்கொழும்பு மற்றும் பொலனறுவை ஆகிய பகுதிகளிலுள்ள பல வைத்தியசாலைகளில் மருத்துவக் கழிவுகளை எரிக்கக்கூடிய எரிகூடங்கள் உள்ளன. அதேபோன்று இராணுவ வைத்தியசாலை, நவலோகா மற்றும் ஆசிரி போன்ற பாரிய தனியார் வைத்தியசாலைகளிலும் இவ்வாறான எரிகூடங்கள் உள்ளன. ஆகவே, அவர்கள் தமது வைத்தியசாலை மருத்துவக் கழிவுகளை அவர்களாகவே எரித்துக்கொள்கின்றனர்” என பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

மருத்துவக் கழிவுகளை மிகவும் எச்சரிக்கையுடன் எரிக்கவேண்டும். காரணம், அவை வெளிப்படுத்தும் அசுத்தங்கள் மோசமான விளைவை ஏற்படுத்தும். 

தனியார் வைத்தியசாலைகளில் கூட எரிகூடங்கள் உள்ள நிலையில், இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கழிவுகளை எரிக்கும் எரிகூடம் இல்லையென்பது இங்கு மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தினமும் உருவாக்கப்படும் 1.5 தொன் அளவிலான மருத்துவக் கழிவுகள், சிசிலி ஹனாரோ எனும் தனியார் நிறுவனத்தின் ஊடாக அகற்றப்படுகின்றன. இவ்வாறு தனியார் நிறுவனங்கள் ஊடாக மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டாலும், குறித்த செயற்பாடானது முற்றுமுழுதாக சுற்றுச்சூழல் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகின்றது.  

ஏனைய கழிவுகளை அகற்றும்போது கடைப்பிடிக்கப்படுவதைப் போன்று, மருத்துவக் கழிவுகளை அகற்றும்போதும் கழிவுகளை பிரித்தெடுப்பது முக்கிய அம்சமாகும். இதற்கென சர்வதேச வகைப்படுத்தல் முறை உள்ளதோடு, அது இலங்கையிலும் பயன்படுத்தப்படுகின்றது. அதன் பிரகாரம், அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கூர்மையான கத்திகள் முதலாவது வகையைச் சேரும். புண்களுக்கு கட்டும் துணிகள், பருத்தி மற்றும் பிளாஸ்டர்கள் இரண்டாவது வகையில் அடங்கும். உடம்பிலிருந்து வெட்டி அகற்றப்படும் உடற்பாகங்கள், ஆய்வுகூடத்தில் சேகரிக்கப்படும் இரத்தம் மற்றும் ஏனைய திரவங்கள் மூன்றாவது வகையிலும், முகக்கவசங்கள் போன்ற அகற்றக்கூடிய பொருட்கள் நான்காவது வகையிலும் அடங்கும்.

தமது நிறுவனத்திற்கென சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்ட வைத்தியசாலைகளில் இருந்து தாம் மருத்துவக் கழிவுகளை சேகரிப்பதாக, 15 தொன் அளவிலான மருத்துவக் கழிவுகளை அகற்றும் சிசிலி ஹனாரோ நிறுவனத்தைச் சேர்ந்த சினெத் பெரேரா எம்மிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “சர்வதேச நியமங்களுக்கேற்ப இந்தக் கழிவுகளை நாம் மிகவும் கவனமாக சேகரிக்கின்றோம். இதற்கென சிறப்பாக பயிற்சிபெற்ற பணியாளர்கள் எம்மிடம் உள்ளனர். அத்தோடு, வாகனங்களும் உள்ளன. இந்தக் கழிவுகளை கொண்டுசெல்வதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமாகும். இச்செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது எமது குழுவினர் சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துகின்றனர். நாம் சேகரிக்கும் கழிவுகளை தரமான முறையில் எரிக்கின்றோம்” என்றார்.

ஏனைய கழிவுகளுடன் மருத்துவக் கழிவுகள் மாசுபடுவதை தடுப்பது, மருத்துவக் கழிவு முகாமைத்துவத்தின் ஒரு முக்கிய படிமுறையாகும். இச்செயன்முறையை, வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த சிறு பணியாளர்கள் முற்றுமுழுதாக கையாள்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றியதையும் அவதானிக்க முடிந்தது. 

வைத்தியசாலைகளின் துப்புரவுப் பணியாளர்களில் 80 வீதமானோர் பெண்களாவர். இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை முறையற்ற ரீதியில் அகற்றும் செயற்பாட்டில் ஈடுபடும்போது, பெண்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, அவர்களுக்கு முறையான பயிற்சிகளையும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்குவது அவசியமாகும். 

ශ්‍රීලංකාවේ සායනික අපද්‍රව්‍ය කළමනාකරණය ගැන එක්සත් ජාතීනගේ අවධානය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts