நுண்கடன் பொறியில் சிக்காத தேசிய ஒற்றுமை
நிமால் அபேசிங்க
அதிகார பேராசையுடைய அரசியல்வாதிகள் இனவாதத்தை பரப்புகின்றனர். ஒரே நாட்டு மக்களை இனம், மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் பிரிக்கின்றனர். இனவாதத்தின் குறுகிய மனநிலையில் சிக்கியுள்ளவர்களுக்கு இது தெரியாது. இல்லாவிட்டால் தெரிந்துகொண்டே உண்மையை மறக்கின்றனர்.
இலங்கையில் இனம், மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த வறிய மக்களை இனவாத சிந்தனையால் மேலும் சிக்கவைத்து, இலங்கை அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது ஒன்றும் இரகசியமல்ல.
வறுமைக்கு இனவாதமோ மதமோ சாதியோ இல்லை. வறுமையின் பிடியில் சிக்கியுள்ளவர்கள் இந்த உண்மையை உணர ஆரம்பித்துள்ளனர். வறுமை காரணமாக இலங்கை முழுவதும் சுமார் 2.8 மில்லியன் மக்கள் நுண்கடன் பொறியில் சிக்கியுள்ளனர். கடன்பட்ட இந்த வறிய மக்களை அரசியல் களத்திற்கு அழைத்து வருவதன் மூலம் சிலர் அரசியல் ரீதியாக பயனடைந்தமையும் இரகசியமல்ல. எனினும், அவர்களுக்கு இன்னும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இலங்கை முழுவதும் நுண்கடன்களால் பாதிக்கப்பட்டுள்ள வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அண்மையில் பொலன்னறுவை ஹிங்குராகொட பகுதியில் 45 நாட்கள் அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கொவிட் -19 தொற்று காரணமாக இப்போராட்டங்கள் கைவிடப்பட்டாலும், இனங்களுக்கிடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வலுவான அடித்தளத்தை இந்த போராட்டம் இட்டுள்ளது.
நுண்கடன்களை நிர்வகிக்க மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழுக்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் அமைத்தன. ஒரே கிராமத்தில் இரண்டு இனக்குழுக்கள் இருந்தபோதும், இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்களில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களே அங்கம் வகித்தனர். அத்தோடு, ஒரு இனத்தவரின் பிரச்சினையை மற்றைய இனத்தவர் பொருட்படுத்துவதில்லை. இந்த பிரிவினை கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தது.
ஹிங்குராகொடயில் நடைபெற்ற போராட்டத்தால் இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்களை அணிதிரட்டுவதில் விவசாய சங்கத் தலைவர் கவுடுல்லே ஜயதிஸ்ஸ முன்னோடியாக செயற்பட்டார். கடன் பெற்ற பெண்களை இப்போது இன, மத பேதமின்றி ஒருங்கிணைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடன் பெற்ற பெண்கள் ஒரு அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில், அவர்களது துணைவர்கள் தனியான ஒரு அமைப்பாக ஒருங்கிணைக்கப்பட்டனர். இதனடிப்படையில், இந்த இரு அமைப்புகளின் பதவிகளும் எவ்வித பாகுபாடுமின்றி பகிரப்பட்டன. இந்த அமைப்புகளில், ஆணொருவர் நாளொன்றிற்கு 10 ரூபாயும் பெண் 5 ரூபாயும் சேமிக்க வேண்டும். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உன்னதமான செயற்பாடுகளை இந்த அமைப்புகள் முன்னெடுத்தன.
விவசாயத்தில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் ஒரு செயற்பாடு எமது விவசாய கலாசாரத்தில் காணப்பட்டது. இதனை “அத்தம்“ முறை என அழைத்தனர். இந்த முறை காலப்போக்கில் இல்லாமல் போயிருந்த நிலையில், இப்போது மக்கள் ஒருங்கிணைப்புடன் மீளவும் வந்துள்ளது. இந்த முறையின் படி, ஒரு நாளைக்கு ஒருவரது பண்ணையில் பலர் ஒன்றாக வேலைசெய்வார்கள். இன்னொரு நாள், இன்னொருவரின் பண்ணையில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்வார்கள். விவசாய நிலங்களை தயார்ப்படுத்தும் ஒரு துரித செயன்முறை இதுவாகும். இத்திட்டத்தின் கீழ் சிங்கள மற்றும் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் ஒன்றாக வேலைசெய்கின்றனர். இது ஒரு கூட்டுறவு அமைப்பை நோக்கிய பயணமாகும்.
இதிலுள்ளவர்கள் அனைவரும் கடன்பட்ட வறிய மக்களே தவிர இன, மத குழுக்களைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பது இதன் சிறப்பம்சமாகும். கூட்டுறவுகளின் கலாச்சார மற்றும் சமூக அடிப்படையே “அத்தம்“ செயன்முறை என்பது விவசாய சமூகத் தலைவர் ஜயதிஸ்ஸவின் கருத்தாகும். ஒன்றரை ஏக்கர் பண்ணையை சுமார் 15 பேர் இணைந்து சுத்தம் செய்கின்றனர். இதனால் சுமார் 15 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படுகின்றது.
இம்மக்கள் கடனாளிகள். இவர்கள், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக எழுந்த நிதி ரீதியான சிக்கல்களுக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர். இதனால், சிலரது நெல்வயல்கள் அடகு வைக்கப்பட்டன அல்லது குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த கூட்டுறவு இயக்கம் உதவுகின்றது.
ஹிங்குராகொட தம்பலா பிரதேசத்தைச் சேர்ந்த யூ. ரவுஃப் மற்றும் நலிஃபா ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இவர்கள் 300,000 ரூபாய் நுண்கடன் பெற்றுள்ளதோடு, அதற்கு 100,000 ரூபாய் வட்டி செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர். நலிஃபாவின் பெயரிலேயே கடன் வாங்கப்பட்டுள்ளது. ரவுஃபின் ஆலோசனை மற்றும் சம்மதத்தின் பேரில், நலிஃபா இப்போது பெண் கடனாளிகள் சங்கத்தின் ஒரு வலுவான உறுப்பினராக செயற்படுகின்றார்.
“எமக்கு கடன் வழங்கப்பட்டபோது, மூன்று குழுக்களை அமைக்குமாறு கூறினார்கள். முஸ்லிம்கள் மூவர் இக்குழுவில் இணைந்துகொண்டனர். இக்கடன் பற்றி சிங்கள மக்களிடம் நாம் கதைக்கவே இல்லை. ஆனால், ஹிங்குராகொட போராட்டத்தின் பின்னர் நாம் அனைவரும் சிங்கள மக்களுடன் இணைந்து கொண்டோம். இது எமக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது. இச்சமுதாயத்தின் மூலம் கடன் பிரச்சினையை மாத்திரமன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்” என்று நலிஃபா குறிப்பிட்டார்.
தம்பல மற்றும் சுங்கவில ஆகிய இரண்டு கிராமங்களிலும் சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் ஒன்றாக வாழ்கின்றன. இங்கு 120 பேர் கடன்பெற்றவர்கள் ஆவர். எதிர்காலத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களும் இந்த முறையின் கீழ் ஒன்றிணையும். அதற்கான உறுதியான அத்திவாரம் ஏற்கனவே இடப்பட்டுள்ளது.
வெளியிலிருந்து தீர்வு கிட்டும்வரை நீங்கள் காத்திருக்க முடியாது. வினாக்களை கொண்டுள்ள மக்களே அதற்கான பதில்களை கண்டுபிடிக்க வேண்டும். அவ்வப்போது தெரிவுசெய்யப்படும் அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இப்பிரச்சினைகளை தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்கின்றார்களே தவிர, அவற்றிற்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வருவதில்லை. இந்த யதார்த்தத்தை மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர். அதிகார பேராசையுடைய அரசியல்வாதிகளின் எண்ணங்களில் காணப்படும் இன, மத, சாதிப் பிரச்சினைகள் தமக்கு ஒருபோதும் உதவப் போவதில்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளமை முக்கியமான விடயமாகும்.
ஹிங்குராகொட நெலும்புர பகுதியில் சிங்கள சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒன்றாக வாழ்கின்றன. முஸ்லிம்களே இங்கு பெரும்பான்மையாக வாழ்கின்றனர். நுண்கடன் பெற்றுள்ள நிமாலி என்பவர், இங்கு ஏழு சிங்கள குடும்பங்களும் எட்டு முஸ்லிம் குடும்பங்களும் இணைந்து இப்போது ஒரு சங்கத்தை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டார். “அத்தம்“ முறையின் கீழ் விவசாயம் செய்கின்ற அதே சந்தர்ப்பத்தில், இதன் உறுப்பினர்கள் நாளொன்றிற்கு 5 ரூபாய் சேமிக்கின்றனர். நெல்வயல் வேலை முடிந்துவிட்டதோடு, பெரும் போகத்தில் பயிரிடுவதற்கு நிலம் தயாராக உள்ளது.
கொவிட்-19 தொற்றுநோயானது இம்மக்களின் அமைப்பு ரீதியான செயற்பாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. இல்லாவிட்டால், அவர்கள் வெகுதூரம் முன்னோக்கிச் சென்றிருப்பதோடு, தமது பொருளாதார சிக்கல்களுக்கும் தீர்வு கண்டிருப்பார்கள். அவ்வாறு நடந்திருக்குமாயின் சகவாழ்வும் நல்லிணக்கமும் இன்னும் மேம்பட்டிருக்கும்.
A United Approach Against The Microfinance Debt Trap
ක්ෂුද්ර මූල්ය ණය උගුලට හසුනොවු ජාතික සමගිය