சகோதரத்துவ குடியேற்றம் ஜெயபாலன் மற்றும் குமாரசிங்க
நிமால் அபேசிங்க
இலங்கையின் விவசாயத்துறை வளர்ச்சியானது இலங்கையில் உழவர் குடியிருப்புகளை நிறுவியதுடன் தொடர்புபட்டது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். உலர் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்கள் நிறுவப்பட்ட சந்தர்ப்பத்தில், அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் இந்திய தமிழர்களுக்கு இலங்கையில் நிலங்களை ஒதுக்க முயற்சித்தது. எனினும், முன்னாள் பிரதமரும் அப்போதைய அமைச்சருமான டி. எஸ். சேனாநாயக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்களான சிங்களவர்களுக்கு மட்டுமே நிலம் வழங்கப்பட வேண்டுமென அவர் உறுதியாக இருந்தார். அதன் நோக்கம் நாட்டில் விவாதப் பொருளாக உள்ளது.
எனினும், தொலைதூரத்திலுள்ள திகாமடுல்ல பிரதேசத்தின் (அம்பாறை) விவசாயக் குடியேற்றங்களில் குடியேறிய சிங்களவர்களுக்கும் அதனை அண்டிய கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களுக்கும் இடையே நட்புறவு பேணப்பட்டன. மக்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து, தமது மனங்களில் இனவாதம் இல்லையென காட்டினார்.
திகாமடுல்ல பிரதேசத்தின் விவசாயக் குடியேற்றமொன்றில் குடியேறிய குமாரசிங்கவும் அதனை அண்டிய கிராமத்தில் வசித்த ஜெயபாலனும் அத்தகைய பிரிக்க முடியாத சகோதரத்துவ உறவை வளர்த்துக்கொண்டனர்.
இவர்கள் இருவரும் அருகிலுள்ள நெல் வயல்களுக்கு உரிமையாளர்கள் ஆவர். வெற்றிலை, சுண்டைக்காய் மற்றும் சுண்ணாம்பு பரிமாற்றத்துடன் தொடங்கிய நட்பு, தேநீர், உணவு மற்றும் விவசாய உபகரணங்களை பரிமாறிக்கொள்ளும் அளவுக்குச் சென்றது. இருவரும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சந்திக்கவில்லையாயின், வீடுகளுக்குச் சென்று சந்திக்கும் அளவிற்கு இந்த சகோதரத்துவ உறவு காணப்பட்டது.
தீய சிந்தனை கொண்டவர்களால் நாடுமுழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத அலையிலிருந்து திகாமடுல்ல மக்களுக்கும் தப்பிக்க முடியவில்லை. தமிழ் பயங்கரவாதம் வளர்ந்த நிலையில், தமது மகன் ராஜூவை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஜெயபாலனுக்கு ஏற்பட்டது. அப்போது, விடுதலைப் புலிகளுக்கு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு இளைஞனை அனுப்ப வேண்டுமென்பது கட்டாயமாக காணப்பட்டது.
1990ஆம் ஆண்டு ஒருநாள் அதிகாலையில் குமாரசிங்கவை ஜெயபாலன் தேடிச் சென்றார்.
“குமாரசிங்க சகோதரர், குமாரசிங்க சகோதரர்” அச்சம் கலந்த குரலில் ஜெயபாலன் அழைத்தார்.
வீட்டிலிருந்து வெளியில் வந்த குமாரசிங்க, அச்சத்துடன் காணப்பட்ட ஜெயபாலனைக் கண்டார்.
“என்ன பிரச்சினை உங்களுக்கு?”
“சகோதரனே, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு என் மகனை சேர்க்க வேண்டும் என கூறுகின்றனர். எமது மகனை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்கின்றனர்”
“மகனை இங்கே அழைத்து வாருங்கள். அவரை நான் கவனித்துக்கொள்கின்றேன்” என்ற குமாரசிங்க, “மாலையில் அவரை அழைத்து வாருங்கள்” என கட்டளையிடும் தொனியில் குறிப்பிட்டார்
தனது 17 வயதான மகன் ராஜூவை அன்றைய தினமே குமாரசிங்கவின் வீட்டிற்கு ஜெயபாலன் அழைத்துச் சென்றார்.
“இன்னும் ஒரு மாத காலத்திற்கு இங்கு வராதீர்கள். இல்லாவிட்டால் அவர்கள் உங்களை சந்தேகிப்பார்கள்.” ஜெயபாலனிடம் குமாரசிங்க சிநேகமுடன் குறிப்பிட்டார்.
குமாரசிங்கவின் வீட்டில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட உட்புற அறையில் ராஜூ தங்கியிருந்தார். அவருக்கு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர். உணவு மற்றும் பாணங்களை அவருடைய பிள்ளைகளே அறைக்கு எடுத்துச் சென்றனர். சிறுநீர் கழிப்பதற்காகக்கூட ராஜூவை பகல்நேரத்தில் குமாரசிங்க வெளியில் அனுப்ப மாட்டார். அவரது பிள்ளைகளும் ராஜூவை தமது சகோதரர்களில் ஒருவராகவே கருதினர். அவர்கள் அனைவரும் ராஜூவை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டதோடு, அவரை பகல் நேரத்தில் வெளியில் செல்லவிட மாட்டார்கள்.
இதற்கிடையில், முழுக்குடும்பத்திற்கும் தேவையான இந்து பாரம்பரிய உணவுகளை சமைத்துக்கொண்டு எப்போதாவது குமாரசிங்கவின் வீட்டிற்கு ஜெயபாலன் செல்வார். ஒருநாள், சோகமான மனநிலையுடன் குமாரசிங்கவை சந்திக்க ஜெயபாலன் சென்றார்.
“என்ன பிரச்சினை ஜெயபாலன்?”
“மூத்த மகன் இல்லாவிட்டால் இளைய மகனை ஒப்படைக்குமாறு அவர்கள் கேட்கின்றனர்” அழும் தொனியில் ஜெயபாலன் பதிலளித்தார்.
“அந்த 15 வயது சிறுவனால் என்ன செய்ய முடியும்? சரி, அவரையும் அழைத்து வாருங்கள்” என்றார் குமாரசிங்க.
“நல்லது, சகோதரனே,” ஜெயபாலன் பதிலளித்தார்.
அவரை மறுநாள் அழைத்துவருவதாக ஜெயபாலன் கூறிச்சென்ற போதும், அதற்கு முன்னதாக புலிகள் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர்.
மறுநாள் குமாரசிங்கவை சந்தித்த ஜெயபாலன் இந்த விடயத்தைக் கூறினார். எனினும், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
எவ்வாறாயினும், இவ்விடயத்தை ராஜூவிற்கு கூறாமல் இரகசியமாக வைத்திருக்க முடிவுசெய்தனர். ஆனால், ஒருநாள் தனது சகோதரனை அழைத்துவருமாறு ராஜூ கேட்டுக்கொண்டார். பல விடயங்களைக் கூறி அதனை தவிர்க்க முயன்றபோதும், இறுதியில் உண்மையைக் கூறவேண்டிய நிலை ஜெயபாலனுக்கு ஏற்பட்டது.
சில தினங்களுக்குப் பின்னர் ராஜூ இரவு நேரத்தில் மலசலகூடத்திற்குச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. மறுநாள் அதிகாலையில் குமாரசிங்கவை சந்திக்கச் சென்ற ஜெயபாலன், ராஜூ தனது வீட்டிற்கு வந்ததாகவும் தனது சகோதரனை மீள அழைத்து வருவதற்காக தான் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொள்வதாகவும் கூறி வீட்டை விட்டு சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டார். பெருமூச்சு விடுவதைத் தவிர குமாரசிங்கவின் குடும்பத்திற்கு வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்தன. கிராமங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டதோடு, சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். குமாரசிங்கத்தின் கிராமத்தையும் தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர். தனது வீட்டிற்குச் சென்ற ராஜூ, குமாரசிங்கவின் குடும்பத்தாருக்கு இந்த தகவலை தெரிவிக்குமாறு ஜெயபாலனிடம் கூறினார். அவர் கூறியவாறே ஜெயபாலன் செய்தார். கிராம மக்களுக்கு சரியான நேரத்தில் குமாரசிங்க இவ்விடயத்தை கூறியதால், கிராமத்தவர்கள் காடுகளுக்குச் சென்று மறைந்துகொண்டனர். இதனால், குமாரசிங்கவின் கிராமத்தின் மீது புலிகளுக்கு தாக்குதல் நடத்த முடியவில்லை.
இதற்கிடையில், இரண்டு கால்களையும் இழந்த நிலையில் ராஜூவின் சகோதரர் வீடு திரும்பினார். புலிகளை விட்டு வெளியேற ராஜூவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும், தாக்குதல் நடத்த திட்டமிடும் சந்தர்ப்பங்களில் குமாரசிங்கவின் குடும்பத்தாருக்கு தகவல் வழங்க ராஜூ தயங்கவில்லை. இது இரகசியமாக இருந்த போதும், அந்த இரகசியம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இதனை புலிகள் கண்டுபிடித்துவிட்டனர். ஒருநாள், குமாரசிங்கவின் கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் ராஜூவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதன் பின்னர், குமாரசிங்கவின் கிராமமும் புலிகளின் இலக்காக காணப்பட்டது. அவர்கள் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் வாழ்ந்தனர். அக்கிராமத்தில் இராணுவ காவலரண் ஒன்றை அமைக்கும் தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
யுத்தம் முடிவுக்கு வந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். குமாரசிங்கவும் ஜெயபாலனும் இயற்கை மரணங்களை தழுவிக்கொண்டனர். ராஜூவை பற்றி, குமாரசிங்கவின் பிள்ளைகள் தமது குழந்தைகளுக்கும் கூறியுள்ளனர். இன்றும் அவர்கள் “ராஜன் மாமா” என நினைவுபடுத்துகின்றனர்.
Settlement Of Brothers: Jeyapalan And Kumarasinghe
සහෝදරත්වයේ ජනපදය – ජෙයපාලන් සහ කුමාරසිංහ