சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

ஒரு தந்தை, ஒரு காதலன் மற்றும் யுத்தம்

நிமால் அபேசிங்க 

இலங்கையில் நீடித்த 30 வருட கால யுத்தத்தின்போது சிங்களவர்களுக்கு இராணுவத்தினர் வீரர்களாக தெரிந்தனர். தமிழ் போராளிகள் தமிழர்களுக்கு வீரர்களாக தெரிந்தனர். பெரும்பான்மையினரான சிங்கள மற்றும் சிறுபான்மையினரான தமிழ் சமூகங்களிடையே கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இராணுவத்தில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் இரு கதைகளைக் கூறினார். யுத்தத்தின்போது எதிரெதிர் தரப்பில் செயற்பட்ட சிலரது இரக்க குணத்தை நிரூபிப்பதாக அக்கதைகள் அமைந்தன.

ஒரு கதையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தபோதும், மற்றொரு கதையை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நபர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டு கதைகளும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை மதிக்கும் மற்றும் கடைப்பிடிக்கும் இரக்க குணமுடைய இரு குழுக்களைப் பற்றியது. எமது சமூகத்திலுள்ள இன மற்றும் மத பிரிவினைவாதிகளிடமிருந்து வெளிப்படும் எதிர்மறையான பிரதிபலிப்பை தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மையான பெயர்களையும் இடங்களையும் நாம் இங்கு குறிப்பிடவில்லை.

1997ஆம் ஆண்டு, வடக்கை கடுமையாக பாதித்த யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமாகும். எமது பிரதான கதாபாத்திரமான இராணுவ சிப்பாய் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை கற்றுள்ளார். குறைந்தளவில் கல்வி கற்றுள்ள இந்த மனிதனது அணுகுமுறைகளை, இனவாதத் தீயிற்கு இன்னும் தூபமிட முனையும் தம்மை கல்வியியலாளர்கள்கள் எனக் கூறிக்கொள்வோரது அணுகுமுறையுடன் ஒப்பிட்டுக் காட்டுவதற்காக இந்த பிரதான கதாபாத்திரத்தின் கல்வித் தகைமை இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. 

எமது கதாநாயகனும் அவரது சகாக்களும் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டபோது, வடக்கில் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் திருப்பி துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் என சந்தேகித்த கிராமத்தில் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். 

பயங்கரவாதிகளைத் தேடி வீடு வீடாகச் சென்ற எமது இராணுவ வீரர், இறந்த உடல்களுக்கு இடையே அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தையைக் கண்டார். அவர் சகல விடயங்களையும் ஒருபுறம் வைத்துவிட்டு இரு கரங்களாலும் குழந்தையைத் தூக்கினார். அது ஒரு பெண் குழந்தை. இரண்டு மகன்களைக் கொண்ட தனது குடும்பத்தில் அந்த பெண் குழந்தையை இணைத்துக்கொள்ள அவர் மிகவும் விரும்பினார். அந்த பெண் குழந்தையை பார்க்கும்போது தனது இதயத்தில் தந்தை பாசத்தை உணர்ந்தார். அக்குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் வெளியே வந்தபோது, படைப்பிரிவின் தலைவர்கூட ஒரு வார்த்தையேனும் கூறவில்லை. 

குறித்த பெண்குழந்தையை அவர் புத்தளம் மாவட்டத்தின் நாவகத்தேகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு கொண்டுசென்றார். அவர் அதனை எவ்வாறு செய்தாரென நாம் குறிப்பிடப்போவதில்லை. அவரது மனைவி, அந்த பெண் குழந்தையை அதீத அன்புடன் வரவேற்றார். இறைவனால் தமக்கு சகோதரி ஒருவர் அனுப்பப்பட்டதைப் போல உணர்ந்த இரண்டு சிறுவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 

பதினைந்து வருடங்களாக அந்த கிராமத்தில் வளர்ந்து அவர் கல்வி பயின்றார். அந்த பெண்குழந்தை அவருக்கு எவ்வாறு கிடைத்ததென கேட்கும் துணிச்சல் அயலவர்களுக்கும் கிராமத்தவர்களுக்கும் ஏற்படவில்லை.

அந்தக் குழந்தை பிறப்பால் எந்த இனத்தைச் சேர்ந்திருந்தாலும் இப்போது முற்றுமுழுதாக சிங்கள இனத்தைச் சேர்ந்தது. இன்னும் சில வருடங்களில் குறித்த இராணுவ வீரர் ஓய்வுபெறவுள்ளார். இதற்கிடையில், அவரது மகன்மாரில் ஒருவர் ஏற்கனவே இராணுவத்தில் இணைந்துவிட்டார். இராணுவ வீரரும் அவரது குடும்பத்தினரும் குறித்த பெண் பிள்ளையை மிகவும் நேசித்தனர். அவளை அக்கிராமத்தில் வைத்திருந்தால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படலாமென சந்தேகித்த அவர்கள், வீட்டை விட்டு வெளியேறி வவுனியாவுக்குச் சென்றனர். 

இராணுவ வீரரும் அவரது குடும்பத்தாரும் அந்த பெண்பிள்ளையை இன்னும் நேசிப்பதோடு, தமது குழந்தைகளில் ஒருவரைப் போலவே அவளை பாதுகாக்கின்றமை இங்கு முக்கியமான விடயமாகும். இப்போது அவருக்கு 24 வயதாகின்றது. அத்தோடு, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார். இது உண்மையான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் அல்லவா? 

குறித்த இராணுவ வீரரின் கிராமத்திற்குச் சென்று அவரது நெருங்கிய உறவினர்களை சந்தித்து மற்றும் இராணுவ வீரரின் மகனுடன் தொலைபேசியில் உரையாடி இந்த கட்டுரையின் ஆசிரியர் இந்தக் கதையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் அனைவரும் இன, மத வெறுப்புணர்வின்றி மனிதநேயம் மிக்க உண்மையான மனிதர்கள். தமது செயல்களின் மூலம் அவர்கள் அதனை நிரூபித்துள்ளனர்.

இரண்டாவது கதையும் இராணுவத்துடன் தொடர்புடையது என்பதோடு, இது முதலாவது கதையை விட வியக்கத்தக்கது.

வடக்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இராணுவ வீரர், தனது சோதனைச் சாவடியை கடந்துசெல்லும் ஒரு இளம் தமிழ் பெண்ணை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். எவ்வளவு சிரமப்பட்டு பார்த்தாலும் அவரை திரும்பிப்பார்க்க அவள் நினைக்கவே இல்லை. நாட்கள் கடந்தன. குறித்த பெண்ணும் அந்த சோதனைச் சாவடியை தினமும் கடந்து சென்றாள். அந்த இளம் இராணுவ வீரர் அவளைப் பற்றி அறிந்துகொள்ளும் நோக்குடன்  அவளை பார்த்தார். ஆனால், அவள் எந்த தகவலையும் வழங்கவில்லை. எதிர்பாராத விதமாக ஒரு நாள், ஓர் அழகான புன்னகையுடன் குறித்த இராணுவ வீரரை அவள் பார்த்தாள். அந்த புன்னகை காதலாக மாறியது. இராணுவ வீரரின் நண்பர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்றும் இராணுவத்தின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக காதல்வயப்பட்டுள்ளதாகவும் நண்பர்கள் குறிப்பிட்டனர். காதலால் தலைகால் புரியாமல் இருந்த அந்த இராணுவ வீரர் இவற்றை நம்பவில்லை. 

இராணுவ வீரரின் நண்பர்கள் இந்த உறவை சந்தேகித்தனர். சிலர் அவருடனான நட்பை துண்டித்துக்கொண்டனர். ஆனால், எவ்வித மாற்றமும் இன்றி அவர்களது இளம் காதல் தொடர்ந்தது. 

காலம் கடந்தது. அந்த இளம் இராணுவ சிப்பாய் வேறொரு இடத்திலுள்ள முகாமுக்கு மாற்றப்பட்டார். அத்தோடு அவர்களது உறவு ஸ்தம்பிதமடைந்தது. எனினும், அவர்களது காதல் இருவரது இதயத்திலும் ஆழமாக பதிந்துவிட்டது. 

யுத்தம் என்பது ஒரு பயங்கரமான பேரழிவு. அதற்கு யார் பலியாகப் போகின்றனர் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அந்த கசப்பான உண்மையை நிரூபிக்கும் வகையில், எமது கதாநாயகனான இராணுவ வீரரை பயங்கரவாதிகள் பிடித்துவிட்டனர். 

அவரை ஒரு பயங்கரவாத சிறை முகாமுக்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் தடுத்து வைத்தனர். அவரது கணுக்கால் சங்கிலியிடப்பட்டு ஒரு தூணுடன் பிணைக்கப்பட்டிருந்தது. கழிவறைக்குச் செல்வதற்கு மட்டுமே சிறிதுநேரம் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். நாளொன்றிற்கு இரண்டு தடவைகள் அவருக்கு உணவு வழங்கியுள்ளனர். சில நேரங்களில் பெண் போராளி ஒருவரே உணவு கொண்டுவந்தார். அவர்களும் அவரிடம் கடுமையாகப் பேசினார்கள். இழிவான வார்த்தைகளால் அவரை திட்டி அவமதித்தனர். மரக் கம்புகளால் தாக்கப்பட்டுள்ளார். தம்மை அடிப்பார்கள் என்ற பயத்தில் பின்னர் அவர்களை பார்ப்பதையே தவிர்த்தார்.

ஒருநாள் அவரது செல்லுக்குள் உணவு தட்டு தள்ளிவிடப்பட்டபோது, வழமைப் போன்று வேறு திசையை பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், தனக்கு பரீட்சயமான குரலை கேட்டதும் ஆச்சரியமடைந்து நிமிர்ந்து பார்த்தார். அங்கு அவர் கண்டதைப் பார்த்து ஆச்சரியம் மேலிட்டது. கையில் துப்பாக்கியுடன், பயங்கரவாதிகளின் சீருடையில், கழுத்தில் சயனைட் குப்பி சகிதம் அவரது காதலி அங்கு நின்றுகொண்டிருந்தாள். தனது உதட்டில் கையை வைத்து சத்தமிட வேண்டாமென சைகை செய்துவிட்டு அவள் அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டாள். அவருக்கு பல தடவைகள் அவள் உணவுகொண்டு வந்தபோதும், ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. 

ஒருநாள் நள்ளிரவு வேளையில் தனது சிறைக்கதவு திறந்திருப்பதைக் கண்டார். அதுவே தனது இறுதிக்கட்டம் என நினைத்தார். எதுவும் பேசாமல் திரும்பிப்பார்த்தார். கதவைத் திறந்த அந்த பெண் போராளி விலங்கிடப்பட்டிருந்த அவரது காலையும் விடுவித்தார். அவள் யாரென பார்த்தார். அவர் ஆச்சரியப்படும் வகையில், அங்கு அவரது முன்னாள் காதலி காணப்பட்டார். அவள் தனது ஆட்காட்டி விரலை உதட்டின்மீது வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினாள். பின்னர், அவரது கையை பற்றிப் பிடித்துக்கொண்டு முகாமிலிருந்து தப்பித்தாள். 

அங்குள்ள ஏரிப்பகுதிக்கு அவர்கள் வந்தனர். இராணுவ வீரரை படகொன்றில் வைத்து ஒரு வார்த்தையேனும் பேசாமல் அவள் துடுப்பை அசைத்து படகை ஓட்ட ஆரம்பித்தாள். ஏரியின் மறு பகுதியை நெருங்கிய சந்தர்ப்பத்தில் அவள் பேச ஆரம்பித்தாள். தான் பலவந்தமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாக அவள் குறிப்பிட்டாள். பின்னர், படகிலிருந்து விரைவாக இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடிவிடுமாறு கூறினாள். அவரிடமிருந்து  விடைபெற்று மீண்டும், தான் வந்த இருளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். உதவியற்ற அந்த மனிதன், படகோட்டிச் சென்ற அந்த பெண்ணை சிறிதுநேரம் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். ஏரியின் சிறிது தூரத்தை கடந்த அவள், தான் கழுத்தில் அணிந்திருந்த சயனைட் குப்பியை கடித்தாள். மறுநாள், அவளது இறந்த உடலை சுமந்தவாறு அந்தப் படகு முகாமை நோக்கி மிதந்துகொண்டிருந்தது. 

இவ்வாறான கதைகளை நாம் கதைப் புத்தகங்களில் மாத்திரம் படித்திருந்தாலும், அவை கற்பனையானவை அல்ல என்பதை இந்த இரண்டு கதைகளும் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையான காதலின் பெயரில் சிலர் தமது வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர். இனவாதமற்ற சூழலில் காதல் மேலோங்கினால் இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும்!     

A Father, A Lover, And A War

යුධබිමේ හමුවු පියෙක් සහ පෙම්වතියක්

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts