இதயமற்ற யுத்தமும் வெறிச்சோடிய அறுகம் குடாவும்
கபிலகுமார கலிங்க
அறுகம் குடாவுக்கு (அறுகம்பே) வருகைதரும் மக்கள் தொகை யுத்தகாலத்திலும் குறையவில்லை. ஆனால், அறுகம் குடாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது யுத்தத்தை விட கொடூரமானது. அங்கு பயணிக்கும் அனைவரும் இப்போது வருந்துகின்றனர்.
முன்பு நான் எனது வெளிநாட்டு, உள்நாட்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அறுகம் குடாவுக்குச் சென்றுள்ளேன். அத்தோடு, வேலை நிமித்தம் மற்றும் ஓய்வுக்காகவும் நான் தனியாகச் சென்றுள்ளேன். இத்துடன் நான் எத்தனை தடவைகள் அறுகம் குடாவுக்குச் சென்றுள்ளேன் என்பது பற்றி சரியாக நினைவில்லை.
அறுகம் குடாவை பார்க்கச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியுடன் தயாரானேன். இலங்கையின் ஒவ்வொரு சுற்றுலாத் தளங்களையும் பார்வையிட்ட ஒருவர் என்ற ரீதியில், அறுகம் குடா மீது எனக்கு தனிப்பட்ட ஆர்வமுண்டு. அதற்கான காரணத்தை யாரேனும் கேட்டால், நேரடியான பதில் என்னிடம் இல்லை. (ஆனால், இந்தக் கட்டுரை அதற்குரிய பதிலாக இருக்கலாம்)
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தின் ஒரு சிறிய மக்கள் குழுவினரைக் கொண்ட இடம் அறுகம் குடாவாகும். அறுகம் குடாவில் முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். உயர்ந்த அலைகளுடன் அரைவட்ட கடற்கரை அமைப்பைக் கொண்ட அறுகம் குடாவானது, அலைச்சறுக்கல் விளையாட்டிற்கு உலக பிரசித்திபெற்ற இடமாகும். இதற்காக உலகெங்கிலுமுள்ள அலைச்சறுக்கல் ஆர்வலர்கள் அறுகம் குடாவிற்கு வருகை தருகின்றனர். நகரின் எல்லா இடங்களிலும் அலைமிதவைப் பலகைகளை வாடகைக்கு வழங்கும் கடைகளை நீங்கள் காணலாம். இது அச்சமூகத்தின் பிரதான வருமானம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இவற்றைத் தவிர, ஹோட்டல்கள், சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களால் அறுகம் குடா கடற்கரையும் நகரமும் நிரம்பியுள்ளன. விசேடமாக, ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் அறுகம் குடா சுற்றுலாப் பயணிகளால் நிரம்பிக் காணப்படும். உயர்ந்த அலைகள் மற்றும் உகந்த காலநிலை என்பன அலைச்சறுக்கலுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றமையே இதற்கு காரணமாகும்.
நகரின் வணிக உரிமம் முஸ்லிம்கள் வசம் காணப்பட்டது. நகரத்திலிருந்து சற்றுத் தொலைவில் காணப்படும் கிராமங்களில் வசிக்கும் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் மீன்பிடித் தொழிலில் பிரதானமாக தங்கியிருந்தனர். அவர்களில் சிலர் நெல் விவசாயம் மற்றும் பாரம்பரிய மானாவாரி பண்ணை சாகுபடியில் ஈடுபட்டனர்.
கடற்கரையின் ஒரு முனையில் முகுது மகா விஹாரை காணப்படுவதால், உள்ளுர் சிங்கள பௌத்த பயணிகளுக்கு அறுகம் குடா முக்கியமான ஒரு இடமாகும். துட்டுகைமுனு மன்னனின் தாயான விஹாரமஹா தேவியை சுமந்த கப்பல் கரையை அடைந்த இடமாக இது கருதப்படுகின்றது. சிங்கள பௌத்த யாத்திரீகர்கள் இப்பகுதிக்கு அடிக்கடி வருகைதந்தனர். ஆனால், கொடூர யுத்தம் காரணமாக இச்செயற்பாடு ஸ்தம்பிதமடைந்தது. பின்னர் மீண்டும் யாத்திரீகர்கள் வரத் தொடங்கியதோடு, விஹாரையும் அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டது.
நாம் பயணித்த வாகனம் விஹாரைக்கு அருகில் நிறுத்தப்பட்டபோது அறுகம் குடாவில் நான் நன்கறிந்த ஹலீம் என்ற பழைய தொழிலதிபர் என் நினைவில் வந்தார். நான் அறுகம் விரிகுடாவுக்கு வரும்போதெல்லாம் அவரைப் பார்க்க மறக்கவில்லை. ஹலீம் ஒரு அறுபது முதல் எழுபது வயது மதிக்கத்தக்க மனிதர். ஆனால், அவர் வாழ்ந்த கடுமையான வாழ்க்கை அதனை விட முதுமையான தோற்றத்தை அவருக்குக் கொடுத்தது.
கடற்கரையை நோக்கியவாறு காணப்பட்ட நகரின் முடிவில் ஹலீமின் கடை அமைந்திருந்தது. அவரது கடையிலிருந்து சிறிது தொலைவில் அவர் வாழ்ந்தார். ஹலீமின் கடையிலுள்ள அலைமிதவைப் பலகைகள் கடைக்கு முன்னால் நிமிர்த்தி சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. நகரில் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாக இது காணப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் இவற்றை மணித்தியாலங்கள் அல்லது தினசரி அடிப்படையில் பெற்றுச் செல்வார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கான குளிர்பானங்கள், பிஸ்கட் மற்றும் பழங்கள் போன்றவற்றையும் அவர் கடையில் விற்பனை செய்தார். அத்தோடு, தேநீர், கோப்பி மற்றும் சிற்றுண்டிகளையும் விற்பனை செய்தார். இதனால் அயலவர்களும் வெளிப்பிரதேச மக்களும் அவரது கடைக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அவரது மனைவி மரணித்தபோது அவரது ஒரே மகனான அஷாட்டிற்கு 15 வயது. அவரை மற்றுமொரு திருமணம் செய்துகொள்ளுமாறு உறவினர்கள் கட்டாயப்படுத்தியபோதும் மகனின் சகல விடயங்களையும் தானே கவனித்துக்கொள்ள முடிவெடுத்தார். உச்சரிப்பில் முஸ்லிம் சாயல் காணப்பட்டாலும் அவர்கள் இருவரும் நன்றாக சிங்களம் கதைப்பார்கள். ஹலீம் ஆங்கிலத்திலும் உரையாடுவார். அஷாட் ஆங்கிலம் மட்டுமன்றி ஜேர்மன் மற்றும் இத்தாலி மொழிகளையும் ஓரளவு பேசுவார். சுற்றுலாத்துறைக்கு இது மிகவும் உதவியாக அமைந்தது.
இவர்கள் இருவரையும் நான் அறிந்திருந்த சந்தர்ப்பத்தில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் நிழல்கள் ஏற்கனவே பரவியிருந்தன. சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறைந்துவருவதை அறுகம் குடா சமூகமும் உணர்ந்தது. ஆனால் அவ்வப்போது விடுமுறையை கழிக்க சுற்றுலாப் பயணிகளின் குழுக்கள் அலைச்சறுக்கலுக்காக வந்ததால் இச்செயற்பாடுகள் முழுவதுமாக நிற்கவில்லை. அவர்கள் இதற்கு முன்பு அறுகம் குடாவிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என்பதோடு, அப்பகுதிக்கு மிகவும் பரீட்சயமானவர்கள்.
கடையில் வருமானம் குறைவாக காணப்பட்டதால் அஷாட் ஆடை விற்பனையை ஆரம்பித்தார். மட்டக்களப்பில் ஒரு நண்பரிடமிருந்து ஆடைகளைப் பெற்று கிராமங்களில் வீடுவீடாகச் சென்று அவற்றை விற்பனை செய்தார். சில சந்தர்ப்பங்களில் அவர் வீட்டிற்கு வருவதில்லை. தனது மகனை நினைத்து ஹலீம் வருந்தினார். மகன் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தனிமையை உணர்ந்தார். குறிப்பாக தனது மகன் தமிழ் பிரதேசங்களுக்கு ஆடைகளை விற்பனை செய்ய சென்றபோது அவர் பயந்தார். யுத்தம் தொடர்பான செய்திகள் அவரது கவலையை மேலும் அதிகரித்தன.
யுத்தத்தின் ஆரம்ப கட்டங்களில் முஸ்லிம் சமூகம் விடுதலைப் புலிகளால் நேரடியாக பாதிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் காலத்திற்கு முன்னர் சில முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுக்களோடு இணைந்திருந்தனர். ஆனால், புலிகள் படிப்படியாக முஸ்லிம் சமூகத்தை சந்தேகிக்கத் தொடங்கினர். தமிழர் தாயகத்தில் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெறுவதை எதிர்த்தனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் முஸ்லிம் கிராமங்களை தாக்கினர். 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தரவிட்டமை, முஸ்லிம் விரோத உணர்வுகளின் உச்சமாக காணப்பட்டது.
ஹலீம் போரை விரும்பவில்லை. ஒரு தொழிலதிபராக சுதந்திரமாக வாழ்வதற்கு அவருக்கு சமாதானம் அவசியமாகக் காணப்பட்டது. தனது இருப்புக்கு தடையாக இருக்காதவரை அவர் யுத்தத்தையும் ஒரு பொருட்டாக கருதவில்லை.
மொழி என்பது ஒரு இனத்தின் முதுகெலும்பு என்று ஒரு பழமொழி உண்டு. இலங்கையில், முஸ்லிம் சமூகத்தின் பிரதான மொழியாக தமிழ் காணப்படுகின்றது. சாதாரண முஸ்லிம் சமூகத்தின் குழந்தைகள் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். ஆனால் வசதிபடைத்த முஸ்லிம் சமூகத்தினர் தமது குழந்தைகளுக்கு ஆங்கில மொழிமூலம் கல்வியை வழங்குகின்றனர்.
தமிழ் மொழி ஊடாக தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களுக்கிடையே ஒரு பாலம் காணப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அது தகர்க்கப்பட்டது. முஸ்லிம்கள் தமிழ் பேசியபோதும், அவர்களை தமது சகோதரர்களாக புலிகள் கருதவில்லை. இதன் காரணமாக, தமிழ் பேசினாலும் தாம் தமிழ் சமூகத்தால் தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் என்று முஸ்லிம்கள் உணர்ந்தனர்.
“தமிழர்கள் தமக்கு ஒரு தனிநாடு கோரி போராடுகின்றனர். ஹலீம், நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” ஒருநாள் நான் இவ்வாறு அவரிடம் கேட்டேன்.
“அவர்கள் சிங்கள அரசாங்கத்தை நம்பாத காரணத்தால் இவ்வாறு செய்கின்றனர்” என அவர் சற்றும் யோசிக்காமல் பதிலளித்தார்.
ஹலீம் அதிகம் கல்வி கற்கவில்லை என்றாலும் அவர் ஒரு முட்டாள் அல்லர். ஆனால், அவர் தானாக சிந்தித்து அந்த பதிலை வழங்கியிருப்பார் என நான் நினைக்கவில்லை.
“உங்கள் மகன் ஈழம் பற்றி என்ன நினைக்கின்றார்?” என நான் கேட்டேன்.
“அவர் அதனை விரும்புகின்றார். இளம் வயது தானே?”
“ஹலீம்… ஆனால் ஈழம் என்பது தமிழர்களுக்கான நாடு. அதற்கு முஸ்லிம்கள் சொந்தமானவர்கள் அல்லர்”
இதற்கு ஹலீமிடம் பதிலின்றி, அவர் வேறு திசையை நோக்கினார்.
தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மொழியைப் பேசும் இரண்டு இனங்களாக இருந்தபோதிலும், மற்றொரு முக்கிய காரணி அவர்கள் ஒன்றுபடுவதைத் தடுத்தது. அதுதான் மதம். தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்தபோதிலும், அவர்களில் கத்தோலிக்கர்களும் பௌத்தர்களும் இருந்தனர். ஆனால் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய மக்கள் மட்டுமே இருந்தனர்.
முஸ்லிம்கள் ஒருபோதும் இந்துக் கோயில்களுக்குச் சென்றதில்லை. அதேபோன்று தமிழர்களும் பள்ளிவாசல்களுக்குச் சென்றதில்லை. மத அச்சத்தின் முகத்தில் மொழியின் அன்பு மீண்டும் விழுகின்றமைக்கு இது ஒரு உதாரணமாகும்.
ஹலீமிடம் கடையைப் பெற்ற ஒருவர் மூலம் அவர் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அறுகம் குடாவை விட்டு வெளியேறிவிட்டதாக எனக்கு அறியக்கிடைத்தது. ஹலீம் எங்கே இருக்கின்றாரென அவருக்குத் தெரியாது. ஆனால் அவர் புத்தளம், மன்னார் அல்லது பேருவளையில் இருக்கலாமென நம்பினார். பின்னர் அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிருடன் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புண்டு.
ஹலீமின் மகன் காணாமல் போனதால் அவரது வாழ்க்கை சோகமாக மாறியது.
அஷாட் தனது வணிக பயணத்தின்போது சந்தித்த ஒரு தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்தார். ஹலீம் அவர்களது திருமணத்தை முற்றிலும் எதிர்த்தார். அஷாட் தனது மனைவியுடன் அறுகம் குடாவிற்கு வரவில்லை. தனது தந்தை சுகயீனமுற்றிருப்பதை அறிந்த அஷாட், சிறிது நாட்களின் பின்னர் வந்தார்.
கடற்புலிகளுக்கு எரிபொருள் வழங்கிய சந்தேகத்தில் இலங்கை இராணுவம் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களை கைதுசெய்தமை, அறுகம் குடா சமூகத்தினரை அதிர்ச்சியடைய வைத்தது. அவர்களுள் அஷாட்டும் உள்ளடங்குவதாக சிலர் சந்தேகித்தனர். ஆனால் அதில் உண்மையில்லை என்பதை, இராணுவ முகாமுக்குச் சென்று ஹலீம் கண்டறிந்தார்.
எவ்வாறாயினும், அந்த சம்பவத்தின் பின்னர் அஷாட் மீண்டும் அறுகம் குடாவுக்கு வரவேயில்லை. அவரது மனைவியும் குடும்பத்தினரும் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதை ஹலீம் கண்டறிந்தார். என்ன நடந்ததென அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.
இறுதியில் அவர் நோய்வாய்ப்பட்டதோடு, தொழிலும் நட்டமடைந்தது. அவர் சமூகத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். யுத்தத்தில் காணாமல் போனவரைப் போல அவர் இருந்தார். அந்த உதவியற்ற மனிதனின் தலைவிதிக்கு காரணம் யுத்தமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன்.
பின்குறிப்பு
யுத்தம் பற்றிய இரண்டு கருத்துக்கள் எனது மனதில் உண்டு.
- யுத்தத்திற்கு உடல் இருந்தாலும், இதயமில்லை.
- தன்னை நோக்கி பார்ப்பவனையும் வேறு திசையில் பார்ப்பவனையும் யுத்தம் சமமாகவே நடத்துகின்றது.
- ரஷ்ய எழுத்தாளரான அலெக்ஸி டொல்ஸ்டோயின் “The Russian Character” என்ற புகழ்பெற்ற சிறுகதையில் கூறப்பட்டுள்ளதாவது,
“யுத்தத்தின்போது மக்கள் தொடர்ந்து மரணத்தின் வாசலில் இருப்பதால் மக்கள் உண்மையில் நல்லவர்களாக மாறுகின்றனர்”
நான் அறிந்தவரை, ஹலீமையும் அசாட்டையும் தமிழ் போராளிகள் கொல்வதற்கு நியாயமான காரணம் இருக்கவில்லை.
யுத்தத்தை விலகியிருந்து பார்த்தவரே ஹலீம் மற்றும் அஷாட் அதனை மறைமுகமாக எதிர்கொண்டிருக்கலாம்.
எவ்வகையிலும் நல்ல மனிதர்களாக நான் கருதும் தந்தை மற்றும் மகன், நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள் என்றும் எங்காவது அவர்களை சந்திப்பேன் என்றும் கருதுகின்றேன்.
The Heartless Body Of War And Deserted Arugam Bay
ශරීරයක් ඇති හදවතක් නැති යුද්ධය – ආරුගම්බේ පාළුවට ගොසිනි