சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

மொரட்டுவ கடற்கரையில் தர்ம ராஜ்ஜியம்

மெலனி மனெல் பெரேரா

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மதத்தைப் பின்பற்றுகிறான். சில மதச்சார்பற்ற நபர்கள் மத நம்பிக்கைகளை நிராகரிக்கின்றனர். இருப்பினும், மதநம்பிக்கை வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் போது வாழ்க்கை மிகவும் வெற்றிகரமாகின்றது என்று சிலர் தங்கள் அனுபவத்தின் மூலம் வாதிடுகின்றனர். இத்தகைய நல்வாழ்வு மற்றைய இனங்கள் மற்றும் மதங்களிடையேயும் மனிதநேயத்தை பாதுகாக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிரான்சிஸ்கோ ஒழுங்கை, கடற்கரை வீதி மொரட்டுவவைச் சேர்ந்த P. சந்திர பெர்னாண்டோவும் மனிதநேயத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்தவராவார். அவர் தொழில்ரீதியாக பாரம்பரிய கரையோர மீனவராவார். அவர் பல மீனவர்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குகிறார்.

அறுபத்தொரு வயதான சந்திர மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். அவர் பிறப்பால் ஒரு கத்தோலிக்கர், ஆனால் அவரது மனைவியும்  குழந்தைகளும் மற்றொரு கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்தவர்கள். அவரது அயலவர்களில் சிலர் பௌத்தர்கள். மொரட்டுவ பௌத்தர்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் சம விகிதத்தில் வாழும் ஒரு தொகுதியாகும். சில முஸ்லிம்களும் இந்துக்களும் கூட வசிக்கின்றனர். சந்திர  அனைவருடனும் நட்பாக இருப்பதுடன், தேவைப்படும் போதெல்லாம் அவர்களுக்கு உதவுகின்றார்.

மொரட்டுவ பிரதேச மக்களில் பலர் பாரம்பரிய தச்சுத் தொழிலாளர்கள் என்பதுடன், பல ஆண்களும் பெண்களும் மரவேலைகளில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடி இங்குள்ள மக்களின் மற்றுமோர் பிரதான வாழ்வாதாரமாகும்.

“வழமையாக, மீனவர்கள் நேரடியாக எதையும் கதைக்கக்கூடியவர்கள்” என்று சந்திர கூறினார். “அவர்கள் கடலுடன் போராடுகிறார்கள், எனவே கடவுளின் கருணையை நம்புகிறார்கள். மீனவர்களில் பலர் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். நான் மதத்தால் கற்பிக்கப்பட்ட சத்தியத்தில் வாழ முயற்சிக்கிறேன். நான் சமுதாயத்திற்கு சேவையாற்ற முயற்சிக்கும் ஒரு மீனவன். ” என்று கூறினார்.

இருண்ட நிறமுள்ள இந்த மெல்லிய மனிதர், தான் மதத்தின் பராமரிப்பாளர் அல்ல என்று எங்களிடம் கூறினார், ஆனால் அவர் மதத்தின் போதனைகளை கடைபிடிக்க முயற்சிக்கிறார். மதம் கற்பிக்கும் உண்மை அதனைப் பின்பற்றுபவரின் இதயத்தில் இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார். இந்த கொள்கைகளால் அவர் மொரட்டுவவில் பிரபலமானவர்.

“மக்கள் இனம், மதம் மற்றும் அரசியல் கட்சி பற்றி பேசினாலும், நாம் அனைவரும் ஒரு மனித குலத்தைச் சேர்ந்தவர்கள். இது போன்ற விடயங்களை நாம் நன்கு அறிந்திருந்தால் நாம் ஒருபோதும் எமது வாழ்க்கையை போராடி அழிக்க மாட்டோம். நாம் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும், ஒன்றாக வாழ வேண்டும். அதுதான் நாள் முழுவதும் என் மனதில் இருக்கும் சிந்தனை, நான் அதைப் பயிற்சி செய்கிறேன், ”என்றார்.

“தனது துக்கத்தை மறைத்து மற்றவர்களை மகிழ்விக்கும் நபர் உன்னதமானவர் என்று ஒரு பழமொழி உண்டு. நான் அந்த பழமொழியை நேசிக்கிறேன், என்னை ஒரு உன்னத மனிதனாக மாற்றுவதை விடுத்து எதிர்காலத்திற்காக உன்னதமான ஆண்களையும் பெண்களையும் உருவாக்க முயற்சிக்கிறேன்.

“இந்த நாட்டில் உன்னதமான மக்கள் இருந்தனர். அரசியல்வாதிகள் தங்களுடைய நலனுக்காக மக்களைப் பிரித்து வகைப்படுத்தினர். எனது பார்வையில், அந்த பிரிவுகள் அனைத்தையும் மீறி நாம் அனைவரும் மனிதர்கள். கத்தோலிக்கர்களான நாங்கள் விகாரைக்கு உதவுகிறோம், பௌத்தர்கள் தேவாலயத்திற்கு உதவுகிறார்கள். நான் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். மீதமுள்ள நேரத்தை சமூக சேவைக்காக அர்ப்பணித்திருக்கிறேன். ” என்றார்.

அவர் மொரட்டுவவில் ‘திரு சந்திர, சந்திரஅண்ணா,சந்திர மாமா என்று அறியப்படுகின்றார். அவர் கிராம தேவாலயத்தின் ஈஸ்டர் நாடகத்தில் இயேசுவின் பாத்திரத்தில் நடிக்கும் சிறந்த நடிகருமாவார். அவர் கிராமம், நகரம், சந்தை, கடற்கரை மற்றும் எல்லா இடங்களிற்கும் கால்நடையாக செல்கிறார்.

“நான் நடப்பதற்கு விரும்புகிறேன், சைக்கிள் ஓட்டுவதைக் கூட விரும்புவதில்லை. நான் நடந்து செல்லும்போது மக்களை சந்திக்க முடியும். நான் அவர்களுடன் கதைப்பதுடன் அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள முடியும். நான் அவர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் முடியும், ” என்று சந்திர மகிழ்ச்சியுடன் கூறினார்.

அவரது மீன்பிடி வாழ்வாதாரமே அவரது பிரதான வருமான மூலமாகும். பணத்தின் அடிப்படையில் வருமானம் மிகக் குறைவு, ஆனால் அவர் சமூகத்திலிருந்து பல நட்புகளை சம்பாதித்திருப்பதுடன் பாதுகாத்துமுள்ளார். 

“மொரட்டுவவிலுள்ள மொரட்டுவெல கல்யாணி போதி விகாரையின் அபிவிருத்தி மற்றும் அனுஷ்டானங்களுக்கு அவர் பல வழிகளில் பங்களிப்பு செய்துள்ளார்” என்று விகாரையின் பிரதி தலைமை பிக்குவான வண. வரபிட்டிய பெமானந்த தேரர் கூறினார்.

விகாரையின் பக்தர்கள் சபையின் முன்னணி உறுப்பினர்களான சுதர்ஷனி பெர்னாண்டோ, நெலும் காஞ்சன, பிரியதர்ஷனி பெரேரா மற்றும் லால் டி சில்வா ஆகியோர் திரு. சந்திர வழங்கிய பெறுமதி மிக்க வழிகாட்டுதலுக்காக பாராட்டினர்கள்.

சந்திர சமூக சேவையின் அமைப்பாளர் என்பதுடன், ஏனைய நலன் விரும்பிகளின் ஆதரவோடு விகாரைகளையும் தேவாலயங்களையும் அபிவிருத்தி செய்ய உதவியிருக்கிறார். அவர் தற்போது மொரட்டுவவின் மீனவர்களின் தலைவராக இருப்பதுடன், தேசிய மீனவ சமாசத்தின் தேசிய அமைப்பாளராகவும், கொழும்பு மாவட்டத் தலைவராகவும் செயற்படுகிறார்.

“எனது அதிகாரங்கள், பதவிகள், சலுகைகள் மற்றும் ஏற்பாடுகள் அனைத்தும் பாகுபாடின்றி பொதுச் சேவைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. எனது சேவைகளைத் தொடருவேன். இது எனக்கான  மகிழ்ச்சி மற்றும் சுய திருப்தியாக இருக்கின்றது” என்று சந்திர பெர்னாண்டோ மகிழ்ச்சியுடன் கூறினார்.

Dharma Rajya At Moratuwa Beach

මොරටු වැල්ලෙන් මතුවු ධර්ම රාජ්‍ය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts