சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பத்திரிகையாளராக ஒரு நினைவுக்குறிப்பு: நுகேலந்த – பிள்ளையாரடி வயலிலிருந்து கற்ற பாடங்கள்!

சீ. தொடாவத்த

திகதி சரியாக நினைவில் இல்லாத, தொன்நூறுகளின் இறுதி அரைப் பகுதியில் ஒரு நாள், பத்திரிகை அறிக்கையிடல் பணியொன்றுக்காக, நான் நுகேலந்த கிராமத்துக்கு சென்றேன். அது 1999 ஆம் ஆண்டாக இருக்கலாம் என்று அனுமானிக்கலாம். அம்பாறை மாவட்டத்தின், உஹன பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த, அக்காலத்தில் அடிக்கடி எல்.ரீ.ரீ.ஈயின் தாக்குதல்களுக்கு உள்ளான, எச்சரிக்கை வலயத்தில் அமைந்திருந்த ஒரு பின்தங்கிய கிராமமாகும்.

இக்கிராமத்தின் இறுதி எல்லையாக, ஒரு கீலோ மீற்றர் அளவு அகலமான கங்கை போன்று நெடுகே விரிந்து செல்லும், பெரிய வயல்வெளி இருந்தது. வயலின் அடுத்த பக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையாரடி தமிழ் கிராமம் அமைந்திருந்தது.

இந்த வயல்வெளியை அண்மித்து ஒரு விசேடமான சம்பவமொன்று அறியக் கிடைத்தமையினாலேயே, ஒரு ஊடகவியலாளராக, அந்த நாளில், நான் நுகேலந்த கிராமத்துக்குச் சென்றேன். எனது நினைவின்படி நான் கொழும்பிலிருந்து கீரத்திடியே பஞ்ஞாசேகர தேரருடன் சென்றேன்.

நாம் அங்கு செல்லும்போது, அக்கிராமத்தில் ஓரளவு பதட்டமான சூழ்நிலை நிலவியது. அதற்கான காரணம் யாதெனில், மறுநாள் இடம்பெறவிருந்த ஒரு நிகழ்வுக்கு பாதுகாப்பு பிரிவின் உரிய அனுமதி கிடைக்காமையாகும்.

நாம் நிலைமையைப் புரிந்துகொள்ள முயற்சித்தோம். கல்ஓயா குடியேற்ற திட்டத்துக்குரிய இப்பிராந்தியத்தில், 1950 தசாப்தத்தின் இறுதியில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த நாட்டு இனப் பிரச்சினையின் ஆரம்பம் முதல் விவசாய குடியேற்ற திட்டமும், பிரச்சினையின் பிரதான காரணியொன்றாக, விவாதத்துக்கு உட்பட்டிருந்தது. யுத்தம் ஆரம்பமானதன் பின்னர், சிங்கள கிராமங்களில் எஸ்.ரீ.எஃப் சிப்பாய்களும், தமிழ் கிராமங்களில் எல்.ரீ.ரீ.ஈ. சிப்பாய்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். இதன் விளைவாக இரு யுத்த முகாம்களினதும் எல்லையாக வயல் மாறியிருந்தது. யுத்த கள மொழியிலேயே சொல்வதாயின், வயல்வெளியானது மனிதர்கள் அற்ற (No man land) சூனியப் பிரதேசமாக மாறியிருந்தது.

ஜீவனோபாயத்தை இழப்பதனால் இருபக்கத்து விவசாய மக்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தேசிய மட்ட விவாதத்துக்கு வரவில்லை. ஊடகங்களின் கவனம் பிரதானமாகக் குவிந்திருந்தது யுத்த மோதலிலன்றி, பொது மக்களின் பிரச்சினைகளின் மீதல்ல. ஆனால், அவ்வாறான கீழ் மட்ட மக்கள் எதிர்கொள்கின்ற பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியவர்களும் இருந்தனர்.

இவர்களுள் நுகேலந்த கிறிஸ்தவ கோயிலிலிருந்த நிர்மால் மென்டிஸ் அருட்தந்தையும் ஒருவர். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருந்த குமாரி குமாரகமகே இன்னுமொருவர். கிராமத்து பௌத்த விகாரையின் தேரர்களும், விவசாயத் தலைவர்கள் சிலரும் இதில் அடங்குவர். இக்கலந்துரையாடல்கள் சில நாட்களில் இரு கிராமங்களுக்கும் இடையிலான கலந்துரையாடலாக மாற்றம் கண்டது. ஓரளவு மட்டத்திலான சில கலந்துரையாடல் சுற்றுக்களைத் தொடர்ந்து, நுகேலந்த விவசாயத் தலைவர்கள் பொலிஸ்மா அதிபர் உட்பட தெற்கின் பாதுகாப்பு பிரிவு பிரதானிகளைத் தொடர்பு கொண்டனர். பிள்ளையாரடி விவசாயத் தலைவர்கள் பிரதேசத்தின் எல்.ரீ.ரீ.ஈ. தலைமைத்துவத்தை சந்தித்தனர். தத்தமது வயல்களில் சுதந்திரமாக வேலை செய்வதற்கு இடமளியுங்கள் என்பதே இரு தரப்பினரதும் பொதுக் கோரிக்கையாக இருந்தது. “வயல்வெளிக்கு சமாதானம்” என்பதே அது.

சில சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் ஒரு பச்சை ஒளி ஏற்றப்பட்டிருந்தது. வயல் வேலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த சுப வேளையை ஆரம்பிக்கும் மங்களகரமான தருணத்தை அறிக்கையிடுவதற்காகவே நாம் அங்கு சென்றோம்.

ஆனால், உரிய தினதுக்கு முன்னைய நாள் நாம் அங்கு செல்லும்போது, மீண்டும் நிலைமை மாறியிருந்தது. அதனால்த்தான் கிராமம் பதட்டமாக இருந்தது. பாதுகாப்பு பற்றிய உறுதியான உத்தரவாதம் இல்லாமலிருந்தது அதற்கான காரணமாக இருந்தது.

ஆனால், மறுநாள் வேலைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் கிராமத்தவர்கள் ஏற்பாடு செய்து முடித்திருந்தனர். சுப திருவிழாவொன்றுக்கான ஏற்பாடுகளைப் போல், இனிப்புப் பண்டங்களும் தயார் நிலையில் இருந்தன. பாதுகாப்பு பிரிவுடனான பேச்சுவார்த்தை மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பெறுபேறானது நினைத்தளவுக்கு அனுகூலமாக இல்லாதிருந்தபோதும், கிராமத்தவர்கள் அனுகூலமான நாளாக நினைத்து அந்த தினத்துக்காக தயாராகினர்.

மறுநாள் சூரிய உதயத்துடனான எதிர்பார்ப்புக்கள் ஆயிரம் உருவாகின. கத்தி, மண்வெட்டிகள் போன்று இனிப்புப் பண்டங்களையும் சுமந்தவாறு, கிராமத்தவர்கள் காலையிலே கிராமத்துக்கு மத்தியில் ஒன்று கூடினர். புதிய எதிர்பார்ப்புகள் எவ்வளவு இருந்தபோதும், அதனோடு சந்தேகமும், ஆர்வமும் அதிகரித்த வண்ணமிருந்தன. எங்கிருந்து, எவரது ஆயுதம் சுடும் என்று சொல்லக்கூடிய நிலையில் எவரும் இல்லை.

மறுநாள் காலை வயல் மீது உதய சூரியனின் கதிர்கள் படரும்போது, அனைத்து சந்தேகங்களையும் மனதில் சுமந்தவாறு, காடாகிப் போயிருந்த காலடிப் பாதைகள் ஊடாக கிராமத்தவர்கள், வெறிச்சோடிப்போயிருந்த தமது வயல்களுக்குப் பயணம் செய்தனர்.

நுகேலந்தயிலிருந்து வெளிக்கிளம்பிய மக்கள் பேரணி வயலுக்கு மத்தியில் செல்லும்போது, வயல்வெளியின் மறு எல்லையில் பிள்ளையாரடி கிராமத்திலிருந்து வெளிக்கிளம்பிய, இதேபோன்ற மக்கள் பேரணி வயல் மத்தியை நோக்கியை வந்து கொண்டிருந்தது. இவர்கள் வயல்வெளி மத்தியில் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, ஆனந்தக் கண்ணீர் மல்க சந்தித்தனர்.

இவர்கள் வயலுக்கு மத்தியில் பாற்சோறு சமைத்து, உண்டு, அந்த வெற்றித் தருணத்தைக் கொண்டாடினர். பார்த்த பார்வையில் அது ஒரு வெற்றித்தருணம் போன்றிருந்தாலும், அதன் பின்னால் நாம் ஒருவரும் காணாத, ஒரு இரகசியம் மறைந்திருந்ததாக நான் உணர்ந்தது வயல்வெளி வைபவம் முடிவடைந்ததன் பின்னர், மீண்டும் நுகேலந்தவுக்கு வரும்போது ஆகும்.

“வேலை வெற்றிபெற்றபோதும், இப்போதே அது பற்றி எதுவும் பத்திரிகைகளுக்கு எழுத வேண்டாம்.”

நிகழ்ச்சியுடன் தொடர்புபட்ட செயற்பாட்டாளர்களிடமிருந்து அவ்வாறான ஒரு உபதேசம் கிடைத்த தருணம், என்னால் எதுவும் நினைக்க முடியவில்லை. எதையேனும் எழுதும் சுதந்திரம் மற்றும் எழுதாமலிருக்கும் பொறுப்புக்கு இடையில் சங்கடத்துக்கு முகம் கொடுத்தவாறு, அன்றைய இரவை நுகேலந்தயில் கழித்து விட்டு, மறுநாள் நாள் நான் கொழும்புக்கு வந்தேன்.

அன்றிலிருந்து இருபத்தியிரண்டு வருடங்கள் அளவில் கடந்துபோயுள்ள நிலையில், பழைய நினைவுகள் பெரும்பாலும் மறந்து போய்விட்டன. இக்கதைகளை அவ்வப்போது பழைய நண்பர்களுடன் நினைவுகூர்வது மாத்திரமே.

அன்று இந்த செயற்பாட்டில் கொழும்பிலிருந்து இன்னுமொரு குழுவும் தொடர்புபட்டிருந்தது. அக்கழுவிலிருந்த உதய களுபதிரனவுடன், அண்மையில் பழைய நினைவுகளை கிளறிக் கொண்டிருந்தபோது, இக்கதை மீண்டும் நினைவுக்கு வந்தது. அதன் ஊடாக குமாரியுடனும், குமாரியின் நினைவின் ஊடாக நுகேலந்த கிராமத்தில் அன்றிருந்த செயற்பாட்டாளர் ஒருவருடனும் பேசினேன். அவரின் பெயர் டப்ளியூ.எம். விஜேகோன் ஆகும். அக்காலத்தில் கிராமத்தில் தலைமைத்துவப் பாத்திரமொன்றை அவர் வகித்துக் கொண்டிருந்தா

.

“இன்று பார்க்கும்போது, இதுவொரு வீரச் செயலாக இருந்தபோதும், அன்று இது எமது வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விளையாட்டு, அது சற்று நீண்டு சென்றபோதுதான் நாமும் உணர்ந்துகொண்டோம்…”

அது அவ்வாறாக இருந்ததற்கு ஊடகங்களும் அதில் தாக்கம் செலுத்திய விதத்தை அவர் இவ்வாறு விளக்கினார்:

“எமது வயல்களை இழப்பது எமக்கு பிரச்சினையாக இருந்தபோதும், அனைவருக்கும் அது பிரச்சினையாக இருக்கவில்லை. இந்த நாட்டின் சில ஊடகங்கள் இவற்றை யுத்தத்தைப் பார்ப்பது போன்று தான் பார்த்தன. இந்த வேலைகளின் மூலம் எல்.ரீ.ரீ.ஈ. பலன் பெறும் என்ற கருத்தை அவர்கள் கட்டியெழுப்பினர். இதேநேரம், இதனால் சிங்களவர்களுக்கு நலன் கிடைக்கும் என்று எல்.ரீ.ரீ.ஈ. தரப்பு நினைத்தது. சிங்கள, தமிழ் மக்கள் ஒற்றுமையாக வேலை செய்வதை அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஆச்சரியம் என்னவென்றால், எமது சில பத்திரிகைக்காரர்களுக்கு அதையேனும் புரிந்துகொள்ள முடியாதிருந்தமையாகும். இதேநேரம் இந்த பத்திரிகைக்காரர்கள் கூறிய சில விடயங்களை எமது மக்களில் சிலர் ஏற்றுக்கொண்டனர். நாம் இவ்விரு பக்கத் தாக்குதல்களுக்கும் உட்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.”

“அன்று வயலுக்குச் செல்வதற்கு முன்னைய இரவு, எமது வீடு மரண வீடு போல் இருந்தது. போகவே வேண்டாம் என்று வீட்டார் அழுதுஅழுது கூறினர். ஆனால், போகாமல் முடியாது என்ற நிலையில் நான் இருந்தேன். எனவே, இரு மனதுடன் சென்றேன்.”

“ஒரு புறம் தமிழ் மக்கள் எல்.ரீ.ரீ. ஈ யுடன் வந்து கிராமங்களை தாக்குவர் என்ற பயம் கிராமத்தில் பரவியது.”

“இக்கருத்தை அந்த ஊடகங்கள் தான் உருவாக்கினர். அன்று முதல் பல வாரங்களாக நாம் உயிர்ப் பயத்துடன் தான் வீட்டில் தூங்கினோம். யாராவது கிராமத்தை நோக்கி சுட்டால், எமக்கு என்ன நடக்கும் என்பதை நினைக்கவும் முடியவில்லை. எம்மைக் கொல்வது புலிகள் அல்ல, கிராமத்தவர்கள். அதற்கான கருத்தியலை உருவாக்கியது அந்த ஊடகங்களே…”

“எனவே தான், இதைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று அன்று நாம் உங்களுக்குச் சொன்னோம். இச்செய்தி ஊடகங்களுக்குச் சென்றால், அவர்கள் இதற்கு எதிராக இன்னும் எழுதத் தொடங்குவார்கள். நாம் இன்றும் மாட்டிக்கொள்வோம்.”

ஊடகங்கள் பற்றி அவர்களிடம் எவ்வாறான ஒரு அங்கீகாரம் இருந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, இன்னும் வார்த்தைகள் தேவையில்லை.

எவ்வாறாயினும் வயல்வெளி சமாதானம் ஒரு போகத்தை விட அதிக காலம் நிலைக்கவில்லை. அடுத்த போகத்தில் வயல் வேலைக்கு வந்த ஒரு முஸ்லிம் நபரின் ட்ரக்டரை கடத்திச் சென்றதனால், வயல்வெளி சமாதானமும் மறைந்து போனது.

காலப்போக்கில் இப்போது எஞ்சியிருப்பது அது பற்றிய இன்னுமொரு முறைசாரா நினைவு மட்டுமே. ஆனால், அதன்  மூலம் கற்றுக் கொள்ள வேண்டியவை அதிகம் உள்ளன. குறிப்பாக, இந்த நாட்டின் மோதல்கள் நிறைந்த வரலாற்றில் பொதுவாக ஊடகங்கள் மேற்கொண்ட பாத்திரம் என்ன என்பதை, இந்த அனுபவங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேவேளை, இந்த நாட்டு ஊடகங்கள் பற்றி மக்களுக்கு மத்தியிலுள்ள நம்பிக்கையின் அளவும் இதன் மூலம் தெளிவடைகின்றது.

இந்த சம்பவம் தவிர கல்ஓயா குடியேற்ற கிராமங்கள் பலவற்றுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது, நான் அங்கு சென்று, அவ்வழிவுகளை கண்களால் பார்த்து, அறிக்கையிட்டிருக்கிறேன். எம்மைப் போன்றே, இந்த நாட்டின் அனைத்து ஊடகங்களும் அச்சம்பவங்களை அறிக்கையிட்டன.

ஆனால், அதன் மூலம் இந்நாட்டு வாசகர்களுக்கு அச்சம்பவங்கள் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்வதற்கான வெளிச்சம் கிடைத்ததா,? அல்லது அதன் மூலம்கூட வாசகர்களின் உணர்வுகளை கோபப்படுத்தி, மேலும் இருள் உருவாக்கப்பட்டதா? என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

நாம் பெரும்பாலும் அச்சம்பவங்களை, அவற்றின் வரலாற்று ஓட்டம் மற்றும் சூழமைவின் ஊடாக முன்வைப்பதற்கே முயற்சித்தோம். இது பயன்பாட்டிலிருந்து கிடைத்த அனுபவமும், முன்னோடிகளிடமிருந்து கிடைத்த வழிகாட்டலின் அடிப்படையிலானதுமாகும். முறையான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னராகும். எனவே, இவ்விடயங்களில் அனைத்துக்கும் மேலாக உள்ளே இருந்து வரும் புரிதல் முக்கியமானது என்று நான் இன்றும் நம்புகிறேன்.

ஊடகத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மோதலை சந்திக்க கிடைப்பது யுத்தத்தில் மட்டுமல்ல. இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்னர், விவசாயம் மற்றும் சூழல் விவகாரங்கள் பற்றிய ஆர்வம் காட்டும் ஒருவராகவே, நான் ஊடகத் துறைக்கு முதலில் பிரவேசித்தேன். மனிதனுடன் மனிதனும் மோதும் யுத்த கள போராட்டத்தைத் தாண்டி, அங்கு மனிதன் தனது பூமியுடன், சூழலுடன் மோதுகின்ற விதத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல், இதன் விளைவுகளை நாம் இன்னும் அனுபவித்து வருகிறோம். இதுவும் இன்னும் முடிவடையாத ஒரு போராட்டமாகும். யுத்தம் முடிவடைந்துள்ளபோதும், இனங்கள் மற்றும் இன்னும் பல பன்மைத்துவங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் இன்னும் நீண்ட தூரத்தில் தான் உள்ளது. இதற்காக மிகவும் சிறந்த ஊடகப் பயன்பாடு தேவைப்படுகின்றது.

வேறுபாடுகள் உள்ளபோதும், நாம் ஒரு பெரிய சமூகத்தின் உறுப்பினர்கள் என்பதையும், ஒவ்வொரு துண்டு துண்டாக பிரிக்கப்பட்டிருந்தாலும், நாம் ஒரே வயலில் அறுவடை செய்கின்ற விவசாயிகள் என்பதையும், சமூகத்துக்கு புரிய வைக்க முடியுமான ஊடகப் பயன்பாடு பிறக்கும் நாள், இந்த உலகம் இதையும் விட அழகானதாக மாறும். இன்றிலிருந்து இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னர் நுகேலந்த மற்றும் பிள்ளையாரடி வயல்வெளியிலிருந்து நான் கற்ற ஊடகவியல் பாடம் இதுதான்.!

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts