சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானத்தை நோக்கிய பயணததில் இழந்த முக்கிய இரு சந்தரப்பங்கள்

எம்.எஸ்.எம். ஐயூப்

அது நான் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் அலுவலக நிருபராக கடமையாற்றிய காலம். வட பகுதி தமிழ் அரசியல் நிலைமையைப் பற்றி ஏதாவது எழுதுவதற்கு ஏதாவது துப்புக் கிடைக்குமா என்ற நோக்கில் 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி காலை சுமார் சுமார் 10 மணிக்கு அப்போதைய வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப் பெருமாளின் தகவல் அதிகாரியாகவிருந்த நெல்சனோடு சற்று அலவலாவுவதற்காக தொலைபேசியில் அழைத்தேன்.

நாட்டின் அரசியல் நிலைமை அப்போது மிகவும் கொந்தளிப்பாகவே இருந்தது. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இந்திய சமாதானப் படை என்ற பெயரில் இந்தியப் முப்படையினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் தமிழீழ விடுதலை புலிகளும் இந்தியப்ப படைகளை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

அவ்விரு சாராருக்கும் இடையே சமாதனப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பித்திருந்தன. எனினும் இந்தியப் படைகளை வெளியேற்றுவதைப் பற்றியே அவர்கள் கலந்துரையாடினர். தெற்கே மக்கள் விடுதலை முன்னணியினரும் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருந்தனர். இந்திய ஆதரவோடு வடக்கு கிழக்கில் ஆட்சியை நடத்தும் பெருமாளை பதவியிலிருந்து அல்லது உலகிலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே புலிகள் செயற்பட்டனர்.

இலங்கையில் இந்தியப் படையினரின் பிரசன்னம் தொடர்பாக இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்திக்கும் பிரேமதாசவுக்கும் இடையில் எழுந்த சர்ச்சை ஒன்றை அடுத்து அப்படையினர் நாடு திரும்ப ஆரம்பித்திருந்தனர். இது பெருமாளினதும் அவரது கடசியான ஈ.பி.ஆர.எல்.எப்பின் உறுப்பினர்களினதும் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்தப் பின்னணியிலேயே நான் நெல்சனுடனான உரையாடலை ஆரம்பித்தேன்.

“12 மணிக்குப் பிறகு கதைப்போமா? பெரிய ஒரு விஷயம் நடக்கப் போகுது” என்றார் நெல்சன். 12 மணி வரை பொறுமையாக இருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தேன். அப்போது திருகோணமலையில் நடைபெற்று வந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பெருமாள் தனித் தமிழ் நாடொன்றை பிரகடனபப்டுத்துவதாக அரசாங்கத்தை எச்சரித்தார் என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.

தமது கட்சி முன்வைத்திருக்கும் 19 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் முன்வராவிட்டால் அன்றிலிருந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் 1991 ஆம் ஆண்டு மார்ச் சமாதம் 1 ஆம் திகதி தாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்தவதாகவும் அது வரை தமது மாகாண சபை அந்த தனி நாட்டுக்கான அரசியலமைப்புச் சபையாக செயற்படும் என்றும் பெருமாள் தமது உரையில் கூறியிருந்தார். அது ஒரு பிரேரணையாக மாகாண சபையில் நிறைவேறியிருந்தது.

தமது வாதத்தை நியாயப்படுத்துவதற்காக அவர் தனி நாடாக இயங்க வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பொருளாதார வளங்களையும் மனித வளங்களையும் கொண்டிருப்பதாக சபையில் எடுத்துக் கூறியிருந்தார். மறுநாள் நெல்சன் பெருமாளின் உரை அடங்கிய ஒடியோ கஸட்டை அனுப்பியிருந்தார். பயங்கரப் போராக மாறியிருந்த இனப் பிரச்சினையின் ஒரு கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு முக்கிய ஆதாரமாக அது நீண்ட காலமாக என்னிடம் இருந்தது.

உண்மையிலேயே தெற்கே பலர் கூறி வருவதைப் போல் பெருமாள் அன்று தனித் தமிழ் நாட்டை பிரகடனப்படுத்தவில்லை. அவர் அதற்காக நிபந்தனையுடனான காலக்கெடுவையே விதித்தார். ஆனால் 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி வரை தமது மாகாண சபை சுதந்திர தமிழ் அரசாங்கமொன்றுக்கான அரசியலமைப்புச் சபையாக இயங்கும் என்று தெரிவித்த கருத்து சட்ட ரீதியாக அவரை சிக்கலில் மாட்டிவிட்டது. அதனைப் பாவித்தே ஜனாதிபதி பிரேமதாச 1990 ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி மாகாண சபைச் சட்டத்தையும் மாகாண சபைத் தேர்தல் சட்டத்தையும் திருத்தி வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்தார். அதற்கு முன்னர் மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரம் அரசாஙகத்திற்கு இருக்கவில்லை.

மாகாண சபை முறை இனப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்றே நான் நம்பினேன். ஏனெனில் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒபப்ந்தத்தின் கீழ் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனை புலிகள் தவிர்ந்த சகல தமிழ் கட்சிகள் மற்றும் இயக்கங்களும் மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த சகல இடதுசாரி கட்சிகள் மற்றும் குழுக்களும் ஏற்றுக் கொண்டன. இந்தியா மாகாண சபை முறையை ஒரு வித பாலாத்காரத்தை பாவித்து இலங்கை மீது திணித்த போதிலும் அம் முறையில் அதிகார பரவலாக்கல் என்ற எண்ணக்கருவின் அடிப்படை அம்சங்கள் உள்ளடங்கியிருந்தன.

அதேவேளை மாகாண சபைகள் என்ற எண்ணக்கரு இலங்கை இந்திய ஒப்பந்தத்தோடு வந்ததல்ல. இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கென ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1986 ஆம் ஆண்டு கூட்டிய அரசியல் கட்சி மாநாட்டின் (PPC) போது தமிழ் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் அதிகார பரவலுக்கான அலகாக மாகாணத்தையே தெரிவு செய்தனர். பிரேமதாச மாவட்ட அடிப்படையில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்றார். எனவே தமிழ் கட்சிகள் ஏற்ற மாகாண சபை முறைமையை நானும் ஒரு தீர்வாக ஏற்றிருந்தேன். அந்தத் தீர்வு தான் பெருமளின் உரையால் ஆபத்துக்குள்ளாகியது.

ஆனால் யார் அதற்கான் பொறுப்பை ஏற்க வேண்டும்? ஜனாதிபதி பிரேமதாச இலங்கையில் இந்திய செல்வாக்கை முறியடிக்க விரும்பினார். புலிகள் இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் திட்டங்களை முறியடிக்க விரும்பினர். அவர்கள் சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் பிரேமதாசவை ஏமாற்றினர். அந்தப் பேச்சுவார்த்தைகள் இந்திய படைகளை வெளியேற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தது. புலிகளின் திட்டம் வெற்றிபெறவே பெருமாள் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்பட்டார். எனவே புலிகளின் ஆயுதப்போருக்கு சவாலாக தனி நாட்டை பிரகடனப்டுத்துவதென்ற தமது இறுதி துருப்புச் சீட்டை பாவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அதுவும் பிழைத்துவிட்டது.

சமாதானத்தை நோக்கிய பயணத்தின் போது நாடு, அதையும் விட தமிழ் மக்கள் இழந்த முதலாவது சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும். அதனை அடுத்து பிரேமதாசவுடனான புலிகளின் பேச்சுவார்த்தைகளும் 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைகளும் மற்றும் இரண்டு சிறந்த சந்தர்பப்ங்களாகும்.

சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் கண்ணோட்டத்தில் எவ்வளவு பயனளிக்கக் கூடியது என்றால் 1995 ஆம் ஆண்டு சந்திரிகா சமர்ப்பித்த “பக்கேஜ்” என்று பலரால் வர்ணிக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை புலிகள் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என புலிகளின் ஆலோசகராக இருந்த கலாநிதி அண்டன் பாலசிங்கம் 2003 ஆம் ஆண்டு கிளிநோச்சியில் புலிகளின் நீதிமன்றத் தொகுதியைத் திறந்து வைக்கும் வைபவத்தின் போது கூறினார்.

இனப் பிரச்சினையோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஊடகவியலாளன் என்ற வகையில் நான் அறிந்த வரையில் 2002 ஆம் ஆண்டு பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சமாதானத் திட்டமே இனப் பிரச்சினை விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீட்டளவில் மிகவும் சிறந்த சமாதானத் திட்டமாகும். பாதுகாப்பு என்ற விடயம் ஜனாதிபதியின் கீழான விடயமாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பிரதமர் விக்கிரமசிங்க போர் நிறுத்த ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது சட்ட விரோதமானது என்று பலர் வாதிட்டாலும் போர் நிறுத்தம் சர்வதேச ரீதியாக கண்காணிக்கப்பட்டது. உலக வல்லரசுகள் சமாதானத் திட்டத்தை மேற்பார்வை செய்தனர். சமாதானத் திட்டத்தின் அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மறுவாழ்வு நிதியத்தை நிர்வகிக்க உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்துச் சங்கம் நியமிக்க்பட்டது.

ஆனால் சமாதான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலிருந்தே நான் சில கெட்ட சகுனங்களை அவதானித்தேன். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி 300க்கு மேற்பட்ட உள்ளுர் மற்றம் சர்வதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கிளிநொச்சியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டை சமாதானத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தமது பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வாகவே புலிகள் பாவித்தனர். சமாதான வழியில் நாட்டைப் பிரிப்பது என்பது நடைமுறை சாத்தியமாகாது என்பதால் புலிகள் தாம் தனிநாட்டுக் கொள்கையை கைவிடத் தயார் என்ற செய்தி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பிரபாகரனோ அல்லது பாலசிங்கமோ அந்த சமிக்ஞையை வழங்காதிருக்க கவனமாக நடந்து கொண்டனர்.

தாய்லாந்தில் நக்கோன் பத்தோமில் ரோஸ் காடன் ஹோட்டலில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்ததைகளின் இரண்டாவது சுற்றின் இடைநடுவே குறிப்பட்ட சில ஊடகவியலாளர்களுடன் பாலசிங்கம் நடத்திய ஒரு கலந்துரையாடலின் போது நான் இந்த விடயத்தைப் பற்றி கேள்வி எழுப்பினேன். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்று முன்வைக்கப்பட்டால் தாம் அதனை பரிசீலிக்கத் தயார் என்று புலிகள் ஏன் எப்போதும் கூறுகிறார்கள் என நான் கேட்டேன். தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக இருந்தால் புலிகளும் அதனை ஏற்கத் தான் வேண்டும். அதில் பரிசீலிக்க என்ன இருக்கிறது என்பதே எனது வாதமாகியது.

புலிகளின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அவர் முயன்ற போதிலும் தொடரந்து நான் அதே கேள்வியை எழுப்பிய போது பரிசீலிப்பது என்றால் ஏற்றுக் கொள்ளல் தான் என்று இறுதியில் பாலசிங்கம் முடித்து வைத்தார்.

இறுதியில் நான் சமாதான பேச்சுவார்த்தைகளில் கண்ட கெட்ட சகுனங்களின் பிரகாரமே அதன் முடிவும் அமைந்தது. புலிகள் உலக நாடுகள் முன் தமது நம்பகத் தன்மையை இழந்தனர் 32 நாடுகள் புலிகள் இயக்கத்தை தடைசெய்தன. சமாதானத் திட்டத்தின் விளைவாகவே புலிகள் அமைப்பு இரண்டாக பிளவுபட்டது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை அரச படைகளுக்கு உளவுத் துறையில் வெகுவாக உதவின. இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவது இந்தியாவிலும் அது போன்ற போரட்டமொன்றுக்கு அடித்தளமாகும் என்பதால் இந்தியா ஒருபோதும் இலங்கை பிரிவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று 1988 ஆம் ஆண்டிலேயே இந்தியா உத்தியோகபூர்வமாகவே கூறியிருந்தது. அதில் அடங்கியிருந்த புவி அரசியல் யதார்த்தத்தின் பின்னணியில் தமிழர்கள் கிடைத்த மிகச் சிறந்த சந்தர்ப்பத்தையும் முறையாக பாவிக்கவும் தவறிவிட்டனர். தமக்கு இருந்த மாபெரும் பேரம் பேசும் சக்தியான புலிகளையும் இழந்துவிட்டனர்.    

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts