கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலம் என்ன?
ந.மதியழகன்
வலி. வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் போர்க் காலத்தில் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலம், பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தெரிந்ததுதான். இங்கு அரசினால் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலம் குறித்த கேள்விகள் தமிழ் மக்களிடம் எழுந்திருக்கின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு மேற்கே 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது கீரிமலைக் கிராமம். இந்த கிராமத்தின் ஜே/226 நகுலேஸ்வரம் கிராம சேவகர் பிரிவின் கீழே 5 கட்டிடத்தில் குறித்த மாளிகை 2012ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த ஜனாதிபதி மாளிகையாகும்.
இங்கே மொத்தமாக 117 ஏக்கர் நிலம் காங்கேசன்துறை கடற்படை தளம், துறைமுகம், துறைமுக அதிகார சபை, வலி . வடக்கு பிரதேச சபை, சீமேந்து ஆலையின் ஒரு பகுதி உள்ளிட்ட பெரும் பகுதி தற்போது வரையில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இப் பகுதியின் நிலத்தின் ஒரு பகுதியிலேயே ஜனாதிபதி மாளிகையும் அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைத் தொடர் 2019-09-02 யாழ். மாவட்ட நில அளவைத் திணைக்களத்தின் வரைபடத்தின் பிரகாரம் 12. கெக்டேயர் நிலம் மாளிகையை சுற்றியுள்ளது. ஐனாதிபதி மாளிகை மட்டும் 9.95 கெக்ரேயர் நிலப்பரப்பிற்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 9.95 கெக்ரேயர் நிலமும் 17 தனியாருக்குச் சொந்தமான உறுதிக் காணிகளாகும். கடற்படையினர் வசம் உள்ள 117 ஏக்கர் நிலத்திலும் 62 ஏக்கர் நிலத்தை விடுவிக்க நல்லாட்சி அரசின் இறுதிக் காலத்தில் இணக்கம் காணப்பட்டு அதற்காக ஓர் வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதன்போது 62 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் இந்த மாளிகையும் உள்ளடக்கப்பட்ட பகுதியே மக்கள் பாவனைக்கு விடுவிக்க இணக்கம் காணப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஜனதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன முதன் முதலாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வந்தபோது முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சகிதம் இந்த மாளிகைக்கு நேரில் சென்று பார்வையிட்ட சமயம் குறித்த மாளிகையினை மாகாண சபையின் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுமாறு அப்போதைய ஜனாதிபதி தெரிவித்திருந்தார். குறித்த விடயம் மறுநாள் குடாநாட்டு பத்திரிகையில் முக்கியத்துவத்துடன் பிரசுரமானது.
இந்த ஜனாதிபதி மாளிகையே தற்போது சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் என்னும் பெயரில் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக ஏலத்தில் வழங்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதனால் இந்த மாளிகை சீனாவிற்கு வழங்கப்படவுள்ளதாக இப் பகுதி நில உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் அரச தரப்போ இந்த மாளிகை அரச நிறுவனங்களிற்கே வழங்கப்படும் என்று தற்போது வாய்மொழி மூலம் கூறுவதனால் அரச நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டவரை பங்காக கொண்ட நிறுவனத்திற்கு வழங்கப்படுமா என்பதே கேள்வியாகவுள்ளது. அந்த வெளியாரின் நிறுவனம் என்பது இன்றைய சூழலில் இலங்கையை பொறுத்த மட்டில் அது சீன நிறுவனமாக இருப்பதற்கே அதிக வாய்ப்பு உள்ளது என்பதே தமிழ் மக்களின் கருத்து.
இதேநேரம் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள சூழலின் நில உரிமையாளர்களில் இருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் தமது நிலத்தை விடுவிக்க கோரியும் சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரியும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை தாக்கல் செய்தவர்களில் ஒருவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் மகன் ராகவன் ஆகும். இதேநேரம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தொலைவில் இந்த ஜனாதிபதி மாளிகை இருப்பதனால் இந்த துறைமுகத்தின் ஊடான ஓர் வர்த்தக நடவடிக்கை அல்லது முதலீட்டினை ஏற்படுத்தும் திட்டத்தில் சீனா முயலக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
மாளிகையை சுற்றியுள்ள மரபுவழி நினைவிடங்கள் அழிக்கப்படும் அபாயம்.
நகுலேஸ்வரம் ஜனாதிபதி மாளிகையை சூழ சடையம்மா சமாதியுடன் கூடிய மடம், கிருஸ்ணன் கோவில், கதிரை ஆண்டவர் கோவில், சோலை வைரவர் கோவில், என நூற்றாண்டிற்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மத வழிபாட்டுத் தலங்கள் அடங்கிய பெரும் பகுதியும் இப் பகுதி மக்களின் இறுதி அடக்கம் செய்யும் சுடலைக்கு செல்லும் பாதை என்பனவும் இன்றும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
ஜனாதிபதி மாளிகை வெளியாரின் வேறு தேவைக்காக வழங்கினால் இவை அனைத்தும் அழிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அதிக நிலத்தை கொண்டவர்களில் ஒருவரான வைத்தியர் இந்திரநாதன் ஆசீர்வாதம் என்னும் கனடாவில் வசிப்பவரிற்கு மட்டும் 52 பரப்புக் காணி உள்ளது. இக் காணியின் தத்துவத்தை அவரது மைத்துனரான பேராசிரியர் இரட்ணஜீவன் எச்.ஹூலிற்கு வழங்கியதன் பெயரில் அவர் தனது காணியினை பிரதேச செயலகத்தில் உரிமை கோரியுள்ளார். இதேநேரம் தற்போது மூவர் நீதிமன்றை நாடியுள்ள நிலையில் தேவை ஏற்படின் தானும் நீதமன்றை நாட தயாரக இருப்பதாக பேராசிரியர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனை தொடர்பு கொண்டு கேட்டபோது,
கோயில்கள், நன்நீர் ஊற்று, பழைய கீரிமலை, குகை, சிவபூமி என மிக முக்கியமான 64 மையங்கள் உள்ள பகுதியே இந்த ஜனாதிபதி மாளிகைப் பிரதேசம். அதேநேரம் காங்கேசன்துறை சந்தியில் இருந்து மேற்கே 500 மீற்றர் தூரம் சென்றால் எமது சபையின் ஆரம்ப அலுவலகம் இன்றும் படையினரின் பிடியிலேயே உள்ளது. இதேநேரம் நகுலேஸ்வரம் பகுதியில் பல நிலங்களை விடுவிப்பதாக பிரச்சாரப்படுத்தி அதற்கான சான்றிதழ் மட்டும் விநியோகம் செய்யப்பட்டது இருப்பினும் நிலம் மட்டும் விடுவிக்கப்படவில்லை என்றார்.
இதேநேரம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகே அருகே இருக்கும் இந்த ஜனாதிபதி மாளிகை துறைமுக பாவனைக்காக மட்டுமன்றி காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள சீமேந்து தொழிற்சாலையினையும் இலக்காக்கொண்டே முதலீட்டு சபையிடமிருந்து பெற்றுக்கொள்ள திட்டமிடப்படுமானால் சீமேந்து ஆலைப்பகுதி ஒரு தொழில் மையமாக வரக்கூடிய நிலையில் தொழிற்சாலையை வழங்கியபின்பு இப் பிரதேசத்தின் கோரல் அதிகமாகும். அப்போது இங்கே ஓர் இடத்தைப் பெறுவதானால் தற்போதைய பெறுமதியின் இரட்டிப்புத் தொகையை செலுத்த வேண்டி ஏற்படும். மாறாக அதன் விபரத்தை தெரிவித்து அந்த இடத்தை தற்போது வழங்கும்போது வர்த்தக ரீதியில் அதிக தரகுப் பணம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அரசின் வியாபார நோக்கமாகவே உள்ளது.
இவற்றின் அடிப்படையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த , தனியாருக்குச் சொந்தமான வர்த்த ரீதியிலும் கேந்திர முக்கியத்துவம் கொண்ட நிலத்தினை இலங்கை அரசு குத்தகைக்கு வழங்க முன்வருகின்றது என்றால் அது முக்கியமான ஒரு விடயம்தான். .
கீரிமலை கடல் பிரதேசமானது மாதகல் முதல் பருத்தித்துறையான பகுதிகளை தொழில் நுட்ப ரீதியில் இலகுவில் கட்டுப்படுத்தக்கூடிய பகுதியை உள்ளடக்கியது. இதிலே 20 கடல் மைல் நீளப் பிரதேசம் உள்ளடங்கும். இங்கே காங்கேசன்துறை துறைமுகம் விரைவில் இந்தியாவினால் புனரமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதோடு இதனை அண்மையில் இந்தியத் தூதுவர் யாழ். வந்த சமயமும் உறுதிப்படுத்தியிருந்தார். இதனால் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து எதிர்காலத்தில் இந்தியாவிற்கான சரக்கு கப்பலும் இராமேஸ்வரத்திற்கான பயணிகள் கப்பல் சேவை நீண்டகால கோரிக்கையாக இருப்பதனால் முன்கூட்டிய திட்டமிடலாகவும் கருதப்படுகின்றது.
இலங்கையின் மேற்கு பகுதியான மன்னார், புத்தளம் பகுதிகள் இந்தியாவிற்கான பயணத்திற்கு அண்மையாக இருப்பினும் இப் பகுதிகளின் ஊடாக சர்வதேச பெருங்கடலை அடைய முடியாது. இதனால் இப் பரப்பில் இலங்கை மற்றும் இந்தியர்கள் அல்லாதோர் பயணிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதனால் கீரிமலை கடல் பகுதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமையும். இதனால் கீரிமலை அல்லது காங்கேசன்துறை கடல்பகுதியில் ஓர் இடம் கிடைப்பது அதனைப் பெற்றுக்கொள்ளும் நாட்டுக்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த்ததாக இருக்கும். இதேநேரம் ஜனாதிபதி மாளிகையை அண்டிய பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் எவையும் இன்மையால் தொலைத்தொடர்பு சாதனங்களின் பாவனையில்கூட சந்தேகம் எழுவதற்கு வாய்ப்புக்கள் கிடையாது.
The Question Of The Future Of The Keeramalai Presidential Palace
කීරිමලෛ හි ජනාධිපති මන්දිරය සහ දෙමළ ජනතාවගේ ඉඩම් අයිතිය