பொலீஸ்! குற்றவாளியா? சுற்றவாளியா?
எம்.பி. முகமட்
நாட்டில் மீண்டும் பொலிஸ் துன்புறுத்தல்கள் (Police Brutality) பற்றிய கதையாடல்கள் சமூக வலைத்தளங்களில் இடம்பிடித்துள்ளன. #Endpolicebrutality எனும் ஹாஷ்டெக்கினை பயன்படுத்தி பலரும் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொயிட் எனும் கறுப்பினத்தவர், பொலிஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட போது சீற்றமடைந்த நாம், இலங்கையில் பொலிஸ் பொறுப்பிலிருக்கும் சந்தேக நபர்கள் உயிரிழக்கும் போது மௌனம் காப்பது எந்த வகையில் நியாயம் என பலரும் கேள்விகளை எழுப்புகின்றனர்.
நாட்டில் அண்மையில் 3 வாரங்களுக்குள் பொலிசாருடன் தொடர்புடைய மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளமையே இந்த விவகாரம் அதிகம் பேசுபொருளாகக் காரணமாகும். சட்டத்தைக் காத்து நீதியை நிலைநாட்ட வேண்டியவர்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும் என எண்ணவைத்த சந்தர்ப்பங்கள் இவை.
கடந்த மே 17 ஆம் திகதி வெலிகமவில் ஒருவரும் கடந்த ஜுன் 3 ஆம் திகதி மட்டக்களப்பில் ஒரு இளைஞரும் கடந்த ஜுன் 6 ஆம் திகதி பாணந்துறையில் ஒருவரும் இவ்வாறு பொலிசார் முன்னிலையில் மரணித்துள்ளனர்.
பாணந்துறையில் நடந்தது என்ன?
ஜுன் 6 ஆம் திகதி காலை 8.45 மணியளவில் 42 வயதான கூலித் தொழிலாளியான சாகுல் ஹமீது முஹம்மது அலி கான், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். பொலிசார் அவரைக் கைது செய்து தமது வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது அவர் தப்பிக்கும் நோக்கில் வாகனத்திலிருந்து பாய்ந்ததால் படுகாயமடைந்ததாகவும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகிறார்.
“நடமாடும் கண்காணிப்புக்களில் ஈடுபட்டிருந்த பாணந்துறை வடக்கு பொலிஸார் வத்தல்பொல பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 42 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்த சந்தேகநபரை பொலிஸ் வாகனத்தில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது அவர் வாகனத்திலிருந்து கீழே குதித்துள்ளார்.
இதன் போது காயமடைந்த குறித்த சந்தேகநபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்த உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர் தானாக வாகனத்திலிருந்து கீழே குதித்திருந்தாலும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமையாகும். அதற்கமைய இதற்கான நடவடிக்கைகள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் நீதிமன்ற நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இந்த சம்பவம் தொடர்பில் இரு விசேட பொலிஸ் குழுக்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டிருந்தார்.
மனைவியின் குற்றச் சாட்டு
இருந்தபோதிலும் தனது கணவர் பொலிசாரின் தாக்குதலிலேயே உயிரிழந்ததாக அவரது மனைவி ஊடகங்கள் முன்னிலையில் குறிப்பிடுகிறார்.
“எனது கணவர் பிள்ளைகளுக்கு காலை உணவு தயாரிக்க சீனி வாங்கவே கடைக்குச் சென்றார். அவர் அதிக தூரம் செல்லவுமில்லை. வீட்டிற்கு அருகிலுள்ள சில்லறைக் கடைக்கே சென்றார். பொலிசார் கூறுவது போல எனது கணவர் ஜீப்பிலிருந்து பாய்ந்து மரணிக்கவில்லை. பொலிசார் தாக்கியதிலேயே எனது கணவர் உயிரிழந்துள்ளார்” என உயிரிழந்த கூலித் தொழிலாளியான சாகுல் ஹமீது முஹம்மது அலி கானின் மனைவி குறிப்பிடுகிறார்.
“ எனது இரண்டு பிள்ளைகளும் இன்று அனாதையாகிவிட்டார்கள். அப்பா எங்கே என்று கேட்டால் நான் அவர்களுக்கு என்ன பதில் சொல்வேன். பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கத்தானே அவர் வெளியில் போனார். அது குற்றமா? எனது கணவரை பொலிசார் துரத்திச் சென்று தாக்கியதாக கண்ணால் கண்ட பலரும் கூறுகிறார்கள். அவர் ஜீப்பிலிருந்து பாய்ந்து உயிரிழந்ததாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது. கடந்த வாரமும் ஒருவர் பொலிசாரின் தாக்குதலில் உயிரிழந்தாக நாம் கேள்விப்படுகிறோம். எனது கணவர் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்றும் அவரது மனைவி குறிப்பிடுகிறார்.
இதனிடையே “குறித்த நபர், வேகமாகப் பயணிக்கும் பொலிஸ் வாகனத்திலிருந்து கீழே விழும் சி.சி.ரி.வி. காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் குறித்த நபர் தானாகவே தப்பிக்கும் நோக்கில் வெளியில் குதித்தாரா அல்லது பொலிசாரினால் அவர் வாகனத்திலிருந்து தள்ளிவிடப்பட்டாரா என்பதை இதுவரை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை குடும்பத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் மரணத்திற்கான உண்மையான காரணத்தை எம்மால் அறிய முடியாதுள்ளது” என வத்தல்பொல பிரதேச சபை உறுப்பினர் முன்ஸிர் குறிப்பிடுகிறார்.
“ இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது. இவர் ஜீப் வண்டியிலிருந்து விழுவதற்கு முன்னர் பொலிசாரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர். வேறு சில சி.சி.ரி.வி. ஆதாரங்களின்படி சுமார் 1 கிலோ மீற்றர் தூரம் பொலிசார் இவரைத் துரத்திச் சென்றே பிடித்துள்ளனர். பின்னர் இவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ” என்றும் பிரதேச சபை உறுப்பினர் முன்ஸிர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே மரணித்தவரின் பாணந்துறை, வத்தல்பொலவில் உள்ள வீட்டுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் விஜயம் செய்தனர்.
இதன்போது மரணித்தவரின் குடும்பத்தினர் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களைச் சந்தித்து உரையாடிய இவ்விரு எம்.பி.க்களும் இச் சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தாம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுப்போம் என்றும் உறுதியளித்தனர்.
இங்கு சுமந்திரன் எம்.பி. ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், “வேலியே பயிரை மேய்வது போல பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிசாரே இவ்வாறு நடந்து கொள்வது கவலையளிக்கிறது. இவ்வாறான மூன்று சம்பவங்கள் கிட்டிய காலத்தில் பதிவாகியுள்ளன. இதற்கு நாம் இடமளிக்க முடியாது. உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்றார்.
இங்கு சாணக்கியன் எம்.பி. கருத்து வெளியிடுகையில், “நாட்டில் இவ்வாறான மூன்று சம்பவங்கள் அண்மைக் காலத்தில் நடந்துள்ளன. பாணந்துறையில் மரணித்தவரின் விடயம் தொடர்பில் வேறுபட்ட பல கதைகள் கூறப்படுகின்றன. இதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளவே நாம் நேரில் இங்கு வந்தோம். இவர் போதைப் பொருளுடன் தொடர்புடையவர் என்று அதனால்தான் பொலிசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு அவர் போதைப் பொருளுடன் தொடர்புபட்டிருந்தால் அதனை சட்ட ரீதியாகவே கையாள வேண்டும். அதனை விடுத்து தமது விருப்பத்திற்கேற்ப சட்டத்தை அமுல்படுத்த முற்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே அலி கானின் மரணத்திற்காக உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பில் நான் பாராளுமன்றத்திலும் பேசியுள்ளேன். இச் சம்பவம் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் கவனத்திற்கும் இதனைக் கொண்டு சென்றுள்ளேன். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்க அனுமதிக்க முடியாது” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பியிருந்தார்.
வெலிகமவில் நடந்தது என்ன?
மே 17 ஆம் திகதி கொவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த தனது குடும்பத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய வெலிகம பிரதான வீதிக்கு வந்த 47 வயதான சுசில் இந்திரஜித் எனும் குடும்பஸ்தர் இரு பொலிசாரின் முன்னிலையில் மற்றொரு நபரால் தாக்கப்பட்டு கீழே விழுவதும் பின்னர் அவர் மீது பஸ் ஒன்று ஏறிச் செல்வதுமான காட்சி சிசிரிவியில் பதிவாகியிருந்தது.
பிரதான வீதியில் மோட்டார் சைக்களில் பயணித்த இவரை, வீதியில் கடமையிலிருந்த இரு போக்குவரத்துப் பொலிசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். இதன்போது இந்திரஜித் மீண்டும் தனது மோட்டார் சைக்களில் பயணத்தை தொடர முற்பட்ட போது, இந்திரஜித் மீது தாக்குதல் நடத்துமாறு குறித்த இரு பொலிஸ் அதிகாரிகளும் தமது உதவியாளர் ஒருவரை கோரியுள்ளனர். இதனையடுத்து குறித்த பொலிஸ் உதவியாளர் இந்திரஜித்தை வீதியில் தள்ளிவிட அவர் கீழே விழுகிறார். அவர் விழுந்தவுடன் குறித்த நபரும் அங்கிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் தமது மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விலகிச் செல்கின்றனர். அதே நேரத்தில் வீதியால் வந்த பஸ் வண்டி ஒன்று இந்திரஜித்தின் மீது ஏறிச் செல்கிறது. இக் காட்சிகள் சிசிரிவியில் தெளிவாக பதிவாகியுள்ளன.
இச் சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பலத்த கண்டனத்தை வெளியிட்டனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட இரு பொலிஸ் அதிகாரிகளும் இந்திரஜித் மீது தாக்குதல் நடத்திய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வெலிகம நகர சபை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுசில் இந்திரஜித்தின் மரணம் தொடர்பில் நீதி கோரி அவரது குடும்பத்தினால் உயர்நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரெஹான் ஜயவிக்ரம குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் நடந்தது என்ன?
இதே நேரம் கடந்த ஜுன் 3 ஆம் திகதி மட்டக்களப்பில் பொலிசாரினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட 21 வயதான சந்திரன் விதுஷன் எனும் இளைஞரும் இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டில் குறித்த இளைஞரை பொலிசார் விசாரணைகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த நிலையில் அவர் சுகவீனமுற்றதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர். எனினும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை பொலிசார் கடுமையாகத் தாக்கி அழைத்துச் சென்றதாகவும் பொலிசாரின் தாக்குதலிலேயே தனது மகன் உயிரிழந்ததாகவும் குறித்த இளைஞரின் தாயாரும் குடும்பத்தினரும் குற்றம்சாட்டுகின்றனர்.
சட்டம் என்ன சொல்கிறது?
மேற்கூறிய குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தாத சந்தேகத்திற்கிடமான குற்றச்சாட்டுகளாக இருக்கலாம். இவ்வாறு நடப்பது ஓரிரு சம்பவங்களாகவும் இருக்கலாம். ஆனால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இவை பெரும் இழப்புக்கள்! ஆறாதா துயரங்கள்! இறந்தவர்கள் குற்றவாளிகளாக இருந்தாலும் சட்டம் நிருபிக்கும் வரை அவர்கள் நிரபராதிகள். பொலீசாரின் கைகளில் அவர்கள் இருக்கும்போது அவர்களைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு பொலிசாருக்கும் உண்டு. இதுபற்றி சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எச்.எம். றிஸ்வி குறிப்பிடுகையில்,
“சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்படும் போது அல்லது விசாரிக்கப்படும்போது குறித்த சந்தேக நபருக்குள்ள உரிமைகள் சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை துன்புறுத்தலுக்குள்ளாக்க கூடாது. அவர் சட்டத்தரணி ஒருவரின் உதவியை பெற அனுமதிக்க வேண்டும். சந்தேக நபரை அவரது குடும்பத்தினர் அல்லது அவரது உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அவர் கைது செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு இணங்க கைது செய்யப்பட்ட 24 முதல் 48 மணி நேரங்களுக்குள் நீதிபதி ஒருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் போன்ற உரிமைகளை சட்டத்தின் பல ஏற்பாடுகள் அவர்களுக்கு உறுதிப்படுத்துகின்றன” என்றார்.
அதேநேரம், இலங்கையில் ஒருவர் கைது செய்யப்படுகின்ற போது இவ்வாறான சட்ட ரீதியான உரிமைகள் சந்தேக நபர்களுக்கு கிடைப்பததை பொலிசார் உறுதிசெய்யாமை பெருங்குறைபாடு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் தரப்பின் விளக்கம்
எனினும் பொலிஸ் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தான் முற்றாக மறுப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் குறிப்பிடுகிறார். “ இங்கு பொலிஸ் துன்புறுத்தல்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஒப்பீட்டளவில் ஆங்காங்கே ஓரிரு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நாம் பொலிஸ் திணைக்களத்தின் கட்டமைப்பை மாற்றியமைக்க விரும்பவில்லை. மாறாக மக்களை மையப்படுத்தியதாக பொலிஸ் துறையின் சேவையை விஸ்தரிக்கவே முயற்சிக்கிறோம். இதற்காக பல பொலிஸ் பொறுப்பதிகாரிகளை கிராமப்புறங்களில் நியமிக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிடுகிறார்.
மறுசீரமைப்புகளை வேண்டி நிற்கும் பொலிஸ் துறை
இலங்கையின் பொலிஸ் துறை அரசியல்மயப்பட்டுள்ளமையே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறக் காரணம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும குறிப்பிடுகிறார். “பொலிஸ் அதிகாரிகள் தவறிழைக்கும் போது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதவாறு பிரதேச அரசியல்வாதிகள் பாதுகாக்கின்றனர். இதனால் பொலிசார் அச்சமின்றி இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் தவிர்க்க பொலிஸ்துறையை முதலில் அரசியல்மயப்படுத்தலிலிருந்து பாதுகாக்க வேண்டும். பொலிஸ் திணைக்களத்தை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரம்
பொலிஸார் தவறிழைக்கும்போது அது பற்றி முறையிட்டால் நடவடிக்கை எடுக்க முடியும் என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் பொலிஸ் பொலிஸ் மா அதிபருமான சந்திரா பெர்ணான்டோ கூறுகிறார். “ பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் முறையிடும்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை 20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளார். பொலிஸ் துன்புறுத்தல்களானாலும் சரி வன்முறைகளானாலும் சரி அதுபற்றி ஆணைக்குழுவுக்கு முறையிட்டால் அது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் எமக்குள்ளது. அவ்வாறு தவறிழைத்த பொலிஸ் அதிகாரிகள் குறித்து கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாம் பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரைப்போம்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
பொலிசாரின் பொறுப்பிலிருந்த சமயம் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பில் ஓரிரு முறைப்பாடுகளே ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் அதுபற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கையில் பொலிஸாருடன் தொடர்புடைய இவ்வாறான மரணங்கள் தொடர்ந்தும், தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன. இவை எமக்கு ஓரிரு சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் இழந்த குடும்பங்களுக்கு பெரும் சரித்திரங்கள்! ஆறாத ரணங்கள்! நாட்டின் ஜனநாயகத்திற்கும் , மனித உரிமைக்கும் எதிரான கரும்புள்ளிகள்! பொது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் நேய பொலிஸ்துறை கட்டியெழுப்படவேண்டும்.