மியன்மார் பெண்களும்!! இலங்கைப் பெண்களும்!!
நயனதாரா ஜயதிலக்க
“எனது உடலின் மிகவும் வலிமையான பகுதி எனது முழங்கால்கள் ஆகும். நான் ஒருபோதும் முழந்தாளிட மாட்டேன்” என ஆங் சான் சூகி குறிப்பிட்டார்.
இந்த கட்டுரை எழுதப்பட்ட சந்தர்ப்பத்தில், மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 100 நாட்கள் கடந்துவிட்டன. இராணுவ தோட்டாக்களை எதிர்த்து மக்கள் ஜனநாயகத்திற்காக போராடுகின்றனர். இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்யக்கூடிய, பெயரளவிலான ஜனநாயகம் குறித்த அச்சம் உள்ளது. இந்நிலையில் ஆசியான் அமைப்பின் நேர்மறையான பதிலில் அவர்கள் திருப்தியடையவில்லை.
மியன்மாரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ஆம் திகதி தேர்தல் நடைபெற்றதோடு, ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அதில் பெரும்பான்மையான அதிகாரத்தை பெற்றுக்கொண்டது. 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஆனால், அன்று காலை இராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது. ஜனாதிபதி வின் மைன்ட், அரச ஆலோசகர் ஆங் சான் சூகி, ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒரு வருடம் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தோடு, பிரதி ஜனாதிபதியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மைன்ட் ஸ்வே நாட்டின் பதில் ஜனாதிபதியாக ஆட்சியில் அமர்ந்தார். இராணுவத் தளபதி ஜெனரல் மின் ஆங் லைங்கிடம் அவரது அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன.
ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் அவர்களின் தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்கவும் கோரி மியன்மார் மக்கள் வீதிகளில் போராடுகின்றனர். அவர்களது வெற்றி குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர். மியன்மாரில் மக்கள் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் சார்பில் 150 பெண்கள் போட்டியிட்டதோடு, அவர்களில் 134 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு 12.7 சதவீதமாக காணப்பட்டது. பெண் தலைவர்களில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கல்வியியலாளர்கள் உள்ளடங்கலாக துறைசார் நிபுணர்களும் தொழில்சார் வல்லுநர்களும் உள்ளனர். இது 2011இல் 3.5 சதவீதத்திலிருந்து சற்று அதிகரித்தது. எனினும், இந்த சதவீதம் 2019இல் 11.32 சதவீதத்திற்கு குறைவடைந்தது. அரச சேவையில் பெண் பணியாளர்களை 30 சதவீதமாக உயர்த்துவதற்கு மியன்மார் முன்மொழிந்தது.
மியன்மாருடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5.3 வீதமாக காணப்பட்டது. அதாவது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 12 பேர் பெண்களாவர்.
இந்தக் கட்டுரை எழுதப்பட்ட சந்தர்ப்பத்தில் மியன்மார் இராணுவம் குழந்தைகள் உள்ளடங்கலாக 700இற்கு அதிகமானோரைக் கொன்றுவிட்டது. ஆயிரக்கணக்கானோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு சான்ஸ் தலைவர்களான சுமார் 24,000 அரசியல் கைதிகளை இராணுவ ஆட்சிக்குழு விடுதலை செய்தது. தொழிற்சங்க மற்றும் மகளிர் தலைவியான டாவ் மையோ ஆயே என்பவர், அண்மையில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட ஒரு முக்கிய தலைவராவார்.
மியன்மாரின்
ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட வின் மைன்ட் தலைமையில், எதிர்க்கட்சியானது இராணுவத்திற்கு எதிராக ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பிள்ளைகளை சுடவேண்டாம் என இராணுவத்தினரிடம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் கோரும் ஒளிப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. மியன்மாரில் சமாதானத்தை ஏற்படுத்த மதத் தலைவர்களும் முன்வருகின்றமையை இச்சம்பவம் காட்டுகின்றது. பௌத்த மேலாதிக்கம் காணப்படும் மியன்மாரில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர்.
உலகில் ஜனநாயகம் மற்றும் கமாதானத்திற்கான பெரும்பாலான போராட்டங்களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றதை நாம் அவதானிக்க முடியும். இலங்கையில் 30 வருட கால யுத்த நிலைமை இதற்கு விதிவிலக்கல்ல. 2010ஆம் ஆண்டு இலங்கை மகளிர் விவகார அமைச்சு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் 89,000 பெண்கள் போர் விதவைகளாகியுள்ளனர். அவர்களில் 49,000 பேர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்தவர்களாவர். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களே மோதலின் முக்கிய இலக்கு என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியது. இந்த விதவைகளில் பெரும்பாலானோர் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தலைவர்களாகவும் முதியோர்களையும் நோயாளர்களையும் கவனித்துக்கொள்ளும் முதன்மைப் பராமரிப்பாளர்களாகவும் உள்ளனர்.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் நடந்த போராட்டத்தின் போது மா கியால் சின் என்ற 18 வயதான யுவதி இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான பெண்களும் யுவதிகளும் ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் இணைகின்றனர்.
உலகின் முதலாவது பெண் பிரதமரை இலங்கை உருவாக்கியிருந்தாலும், ஆங் சான் சூகி போன்ற அரசியல் ஆளுமையை நாம் இன்னும் உருவாக்கவில்லை. அத்தகைய பெண் ஆளுமைகள் தலைமைப் பதவிக்கு வருவதை இலங்கையின் அரசியல் கட்டமைப்பு தடுக்கின்றது.
இலங்கையுடன் ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் 12.6 சதவீதமாக காணப்படுகின்றது. நேபாள பாராளுமன்றத்தில் 32.7 சதவீதம் பெண் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது. 2018ஆம் ஆண்டு முதல் உள்ளூராட்சி மன்றத்தில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட போதும், அதுமாத்திரம் பெண் தலைமையை உருவாக்காது என்பதோடு, பெண்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்காது. இலங்கையில் ஒருசில அரசியல் மற்றும் சமூக இயக்கங்கள் மட்டுமே பெண்ணிய கண்ணோட்டத்துடன் செயற்பட்டு, பெண்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. தீவிரமாக செயற்படும் பெண்கள் சமூகப் பிரச்சினைகளில் பங்கேற்காமை இந்நிலைமைக்கு மற்றுமொரு காரணமாக அமைகின்றது.
நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட 2.9 மில்லியன் மக்களில் பெரும்பாலானோர் பெண்களாவர். இந்த மாஃபியாவுக்கு எதிரான போராட்டத்தை இப்போது பெண்களே வழிநடத்துகின்றனர். ஒரு தசாப்தகாலமாக தாய்மார், போர் விதவைகள் மற்றும் அவர்களது குழந்தைகள் நீதிக்காக போராடி வருகின்றனர்.
(படம்: திரும்பி வராத பிள்ளைகள். மோஜோ வீடியோ https://youtu.be/z_9B-rvHAXY)
மியன்மார் பெண்களைப் போல ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு இலங்கை பெண்களுக்கும் ஒரு அணுகுமுறை அவசியம். துரதிஷ்டவசமாக, இலங்கையின் அரசியல் கட்டமைப்பு அதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை இராணுவம் மற்றும் ஏனைய கடும்போக்கு வாதங்கள் தற்போது லிபியா, எதியோப்பியா, கொங்கோ, பொலிவியா, துனிசியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற பல நாடுகளில் பெண்கள் மற்றும் ஏனைய விளிம்புநிலை சமூகங்களை மேலும் அடக்குவதற்கு வழிவகுத்தன. இந்த நாடுகளிலுள்ள பிரச்சினைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன. உதாரணமாக, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட மியன்மார் தொடர்பான கடிதத்தில் உலகின் 137 மனித உரிமை அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன. இலங்கையின் மனித உரிமை அமைப்பும் அதில் ஒன்றாகும்.
மியன்மார் பெண்கள் தங்களுக்கு ஆங் சான் சூகியின் தலைமைத்துவம் அவசியம் என்பதையும் இவ்வாறான தலைவர்களுக்காக தமது உயிரையும் தியாகம் செய்வார்கள் என்பதையும் உலகிற்கு காட்டியுள்ளனர். மியன்மாரில் இடம்பெற்றுள்ள இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு தோற்கடிக்கப்பட்டு ஜனநாயகம் மீள நிலைநாட்டப்பட வேண்டும் என்றே ஒட்டுமொத்த ஜனநாயக உலகமும் விரும்புகின்றது.
The Struggles Of Women In Myanmar And The Sri Lankan Woman
අරගල භූමියේ මියන්මාර් ස්ත්රිය සහ ලාංකික ස්ත්රී භූමිකාව