சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதானத்தைக் கட்டியெழுப்புவது பற்றிய எனது அனுபவங்கள்

அஜித் பெரகும் ஜயசிங்க

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் வித்தியாசமான ஒரு கருத்தாடலில் நான் பிரவேசித்தது, 1994 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சமாதான இயக்கத்துடன் தொடர்புபடுவதன் மூலமாகும். அப்போது ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட ஆட்சி தொடர்பில் விரக்தியடைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் ஏனையை சிவில் சமூக இயக்கங்கள் மற்றும் தனிநபர்களால் தலைமைத்துவம் வழங்கப்பட்ட இந்த இயக்கமானது, தேசிய பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கம் மூலம் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு அவசியம் என்றொரு கருத்தை ஊக்குவித்து வந்தது. ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு இப்போராட்டம் பின்னணியாக அமைந்தது.

அதற்கு முன்னர் நான் இனப் பிரச்சினை தொடர்பில் கொண்டிருந்த கருத்தானது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜேவீரவினால் எழுதப்பட்ட “தமிழீழ பிரச்சினைக்கு தீர்வு என்ன?” என்ற புத்தகத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட கருத்தாக இருந்தது. அந்த வகையில், தமிழீழம் என்பது, இலங்கையை பிரித்து, பலவீனப்படுத்தி, தமது புவியரசியல் மூலோபாயத்துக்கு கையகப்படுத்திக்கொள்ளும் ஏகாதிபத்தியவாத சதியின் ஒரு உத்தியாகும். அதேபோல், அது இந்திய விஸ்தரிப்பு திட்டத்தின் தேவையையும் நிறைவேற்றுகிறது. அந்த வகையில், பிற்போக்கான இப்போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும். சோசலிஸ இலங்கையினுள் தமிழ் மக்களின் “உண்மையான” பிரதிநிதிகளுக்கு சுய ஆட்சியை வழங்குவதற்கு இக்கருத்தின்படி எதிர்ப்பு இல்லை.

ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பாசிசவாத, இனவாத இயக்கமாக இருந்தபோதும், தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது என்பதே ஏனைய இடதுசாரி கட்சிகள் மற்றும் சிவில் இயக்கங்கள் பலவற்றினதும் கருத்தாக இருந்தது. எனவே, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதிகாரத்தை பகிரும் தீர்வுக்குச் செல்ல வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது. அது சோசலிஸ அரசாங்கமொன்று நிறுவப்படும் வரையில் பிற்போடாது, முதலாளித்துவ அமைப்புக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டியதொரு பிரச்சினை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

அதிகாரப் பரவலாக்கல் தீர்வொன்றுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உடன்படாவிட்டால், என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பிற்காலத்தில், சமாதானத்துக்கான யுத்தம் எனும் பெயரில் நடைமுறை தளத்தில் செயற்படுத்தப்பட்டது. அதாவது, புலிகள் இயக்கத்தை அடக்கியதன் பின்னர், ஏனைய சக்திகளுடன் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுக்கு வருதலாகும்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பில் மிகவும் தீவிர இடதுசாரி கருத்தியலைக் கொண்டிருந்த ஹிரு குழுவின் கருத்து என்னை மிகவும் ஈர்த்தது. ஹிரு குழு என்பது ஹிரு பத்திரிகையை வெளியிட்டவர்களும், அதனைச் சூழ ஒன்றுசேர்ந்த ஏனைய குழுக்களும், தனிநபர்களுமாவர். ஹிரு பத்திரிகை சுயாதீனமான ஒரு ஊடக நிறுவனமாக இருந்தபோதும், அது மக்கள் விடுதலை முன்னணியின் முன்னணி இயக்கமொன்றாக செயற்பட்டது. ஆனாலும், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பில் ஹிரு குழு மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக, ஹிரு குழு மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்தது. ரோஹித பாசன அபேவர்தனவின் கருத்தியல் தலைமைவத்தில் சென்றது. இந்த குழு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் மிகவும் தீவிரமான கருத்தொன்றை முன்வைத்தது.

சுயநிர்ணய உரிமை என்பது இனங்களுக்கு உள்ள பிரிந்துபோகும் உரிமை என்பதும், சுயநிர்ணய உரிமைக்காக போராடும் வடிவத்தை தீர்மானிப்பதும் சுயநிர்ணய உரிமையின் ஒரு பகுதி என்பதும் ஹிரு குழுவின் பார்வையாக இருந்தது. இங்கு தமிழ் மக்கள் தமது பிரதிநிதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தெரிவுசெய்வதாயின், அதனை எதிர்ப்பதற்கு சிங்கள அல்லது வேறு இனத்துக்கு உரிமை இல்லை என்பது ஹிரு குழுவின் கருத்தாக இருந்தது. தமிழ் இனத்துடன் ஒரு உடன்பாட்டுக்குச் செல்லும் அடிப்படையாக அமைவது, அவர்களின் போராட்டத்தை அவ்வாறே ஏற்றுக்கொள்வது என்றும், பேச்சுவார்த்தை மூலமான தீர்வுகள் அல்லது யுத்தம் தீர்மானிக்கப்படுவது அதன் அடிப்படையிலேயே என்றும் ஹிரு குழு கருத்து முன்வைத்தது.

சமாதான இயக்கத்தில் இருந்த பல்வேறு குழுக்களும் வெவ்வேறு வகையில் யுத்தத்தை எதிர்த்தபோதும், அக்குழுக்களுக்கு யுத்தம் தொடர்பில் வெவ்வேறு நிலைப்பாடுகள் இருந்ததும், இறுதியாகப் பார்க்கையில், யுத்த எதிர்ப்பு மற்றும் சமாதானம் என்பது சுருக்கமான ஒரு கருத்தல்ல என்பதும் தெளிவாகின்றது. எந்த யுத்தத்தை எதிர்ப்பது என்பது எந்த சமாதானம் தேவை என்பதன் மூலம் தெளிவாக நிர்ணயிக்கப்படுகின்றது.

அந்த வகையில், எமக்குத் எந்த சமாதானம் தேவை என்பது பற்றி ஆழமான கலந்துரையாடலொன்று சமூகத்துக்கு தேவைப்படுகின்றது. சமாதானத்தை கட்டியெழுப்பல் எனப்படும் peacebuilding, நிலைமாற்று நீதி எனப்படும் transitional justice மற்றும் நல்லிணக்கம் எனப்படும் reconciliation போன்ற கருத்துக்கள் பயன்பாட்டுக்கு வந்தது சற்று அண்மைக் காலத்திலாகும். குறிப்பாக, இக்கருத்து பயன்பாட்டுக்கு வந்தது யுத்தம் முடிவடைந்ததன் பின்னராகும் அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் 2009 இல் யுத்தத்தில் தோல்வியடைந்ததன் மற்றும் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றதன் பின்னராகும். புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தையும், அதன் உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கையினரையும் படுகொலை செய்து, அவர்களின் யுத்த பலத்தை அழித்து, பல தசாப்தங்கள் மேற்கொண்டு வந்த உத்தியோகபூர்வமற்ற அரசாங்கத்தை இரத்துச் செய்ததன் பின்னராகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோல்வியை வெறுமனே ஒரு இயக்கத்தின் தோல்வியாக அடையாளப்படுத்த முடியாது. அந்த இயக்கம் நல்ல வழி மற்றும் தீய வழி என இரு வழிகளிலும் தமிழ் சமூகத்தில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியிருந்தது. தமிழ் தேசிய உரிமைகள் தொடர்பிலான போராட்டத்தின் தலைமைத்துவத்தை அவர்கள் தமது கைகளுக்கு எடுத்திருந்தனர். அவர்கள் தமிழீழ உத்தியோகபூர்வமற்ற அரசாங்கமொன்றையும் கட்டியெழுப்பியிருந்தனர். அந்த வகையில், அதுவொரு எளிய இயக்கமல்ல. பொலிஸ், இராணுவம், நீதிமன்றம், வரி சேகரிக்கும் கட்டமைப்பு முதலியவற்றை நிறுவி, வன்னி பூகோள எல்லைக்கு அப்பாலும் இலங்கை தமிழ் சமூகத்தை அடையும் கருத்தியல், அரசியல் மற்றும் இயக்க ஆதிக்கத்தை நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றாக ஒழித்ததன் பின்னர் தமிழ் சமூகத்தில் ஒரு வெற்றிடம் உருவாகியிருப்பது தெரிகிறது.

இந்த வெற்றிடத்தில் தமிழ் தேசிய உரிமைகள் பற்றிய கருத்தாடலின் ஒரு பிரதான காரணியான அரசியல் கருத்தாடல் முதலிடத்தை இழந்துள்ளமையையும் அவதானிக்க முடியும். 1940 களில்; அரசாங்கத்தில் சிங்களவர்களுக்கு 50% இடமும், ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு 50% இடமும் கோரிய ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை முதல் இன்று வரையிலான காலப் பகுதியில் தமிழ் அரசியல் போராட்டம் பல திருப்புமுனைகளை தாண்டி வந்திருக்கின்றது.

எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழ் அரசுக் கட்சி எனப்படும் பெடரல் கட்சியின் உருவாக்கம்ரூபவ் 1950 களின் இறுதிப் பகுதியில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க மற்றும் செல்வநாயகத்துக்கு இடையிலான உடன்படிக்கை மற்றும் அதிகாரப் பரவலாக்கத்துக்காக முன்மொழிவு, அம்முயற்சி தோல்வியடைதல், 1960 களின் இறுதிப் பகுதியில் பிரதமர் டட்லி சேனாநாயக்க மற்றும் செல்வநாயகத்துக்கு இடையிலான உடன்படிக்கை மற்றும் அதன் தோல்வி, 1970களின் இறுதிப் பகுதியில் தமிழ் இயக்கங்களை ஐக்கியப்படுத்தி தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகுதல் மற்றும் தனியான தமிழ் தேசம் மற்றும் நாட்டை கருத்தியல்படுத்திய வட்டுக்கோட்டை முன்மொழிவு, 1977 பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் அம்முன்மொழிவை அங்கீகரித்தல், தமிழ் ஆயுதப் போராட்டம், 1987 இலங்கை – இந்திய உடன்படிக்கை மற்றும் மாகாண சபைகள், உத்தியோகபூர்வமற்ற அரசாங்கம் முதலியன அத்திருப்புமுனைகளாகும்.

இதற்கு சமாந்திரமாக சிங்கள மைய அரசும் தமிழ் போராட்டத்துக்கு எதிரான அரசியல் வெற்றிகள் பலவற்றை பதிவு செய்தது. சுதந்திர சிங்கள நாட்டில் சிங்கள தேசிய ஆதிக்கத்தை உறுதிப்படுத்தல், சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகங்களுக்கென இருந்த விசேட பாதுகாப்புக்களை இரத்துச் செய்தல், 1972 மற்றும் 1978 அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் சிங்கள மைய ஒற்றை அரசாங்கத்தை உறுதிப்படுத்தல், ஆறாவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் தனியான நாடு குறித்து பேசுவதைக்கூட சட்டவிரோதமாக்குதல், 2009 இல் முப்பது வருட யுத்தத்தை வெற்றிகொள்ளல் முதலியன அத்திருப்புமுனைகளாகும்.

2009 இல் யுத்தம் முடிந்ததன் பின்னர் சமாதான கருத்தாடலில் ஸ்தம்பிதமடைந்த சமாதானத்தை கட்டியெழுப்பல், நிலைமாற்று நீதி, நல்லிணக்கம் போன்ற கருத்துக்களில் தமிழ் அரசியல் போராட்டத்தின் கோரிக்கைகள் குறித்து அவ்வளவு கவனம் செலுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை, இழப்பீடு, யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை போன்ற விடயங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றன.

1987 இல் இனங்களுக்கு இடையில் அதிகாரத்தை பரவலாக்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறை, திரிபுபடுத்தப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இலங்கை – இந்திய உடன்படிக்கையின்படி, தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடமாகக் கருதி, 1988 மாகாண சபை சட்டத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபைகள் பின்னர் பிரிக்கப்பட்டு இரு மாகாண சபைளாக ஆக்கப்பட்டன. யுத்தத்தின் பின்னர் இம்மாகாண சபை இரண்டும் மீண்டும் நிறுவப்பட்டன. இனப்பிரச்சினை தொடர்பில் 13 ஆம் அரசியலமைப்புக்கு அப்பால் சென்ற அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வொன்றைத் தேடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்துடன் உடன்பட்டுள்ளபோதும், அது செயற்படுத்தப்படவில்லை.

அண்மைக் கால சமாதானத்தை கட்டியெழுப்பும் செயற்றிட்டங்களுடனும் ஓரளவு நெருக்கமாக செயற்படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த சமாதான செயற்றிட்டங்கள் சமாதானம் மீறப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்த அரசியல் பிரச்சினையை வேண்டுமென்றே தவிர்ந்து, வேறு விடயங்களை மேலெழுப்புவதற்கு முயற்சிப்பதாகத் தெரிந்தது. உதாரணமாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 2250 ஆம் இலக்க இளைஞன், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய முன்மொழிவு தொடர்பில் சமாதானத்தை கட்nடியழுப்பும் செயற்றிட்டங்களில் கருத்தாடலொன்று ஏற்பட்டது. ஆனாலும், அக்கருத்தாடலானது கச்சிதமான முறையில் அரசியல் பிரச்சினையை தொடுவதைக் காண முடியவில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பச் சபையின் 1325 ஆம் இலக்க முன்மொழிவுத் தீர்மானம் எனப்படும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய முன்மொழிவுத் தீர்மானம்கூட பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் போன்ற யுத்தத்தின் விளைவுகள் தொடர்பில் செலுத்திய முக்கியத்துவத்தை, அரசியல் பிரச்சினை தொடர்பில் செலுத்தவில்லை என்பதுவே எனது அவதானம்.

சமாதானம் தொடர்பிலான அரசியலில் எனது அனுபவங்களின் அடிப்படையில் பதிவு செய்த இந்த சிறிய
குறிப்பில் நான் வலியுறுத்தும் பிரதான விடயம் யாதெனில், இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு இனப் பிரச்சினையின் அரசியல்சார்ந்த சிக்கலை நிச்சயமாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதாகும். மிகவும் எளிமையாகக் கூறுவதாயின், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் அதிகாரம் தொடர்பிலான தெளிவான ஒரு பிரச்சினை இருக்கின்றது. அவர்கள் தமது சக்தியைப் பயன்படுத்தி, சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வகையில் அதிக சுதந்திரமும், பலமும் கிடைக்கின்ற வகையில் இலங்கை தேசத்தை மீள்கட்டமைக்க வேண்டும். அது சமாதானத்தின் பிரதான நிபந்தனையொன்றாகும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமின்றி இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது.

Peace-Building In Sri Lanka: The Path Taken And The Path Ahead

සුළු ජාතීන්ගේ දේශපාලන අයිතිය පසෙකලා සාමයට මග සෙවීම

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts