கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமூகம்

கொவிட் தடுப்பூசி வழங்கலும் தோட்ட சுகாதார முறைமையும்

மல்லியப்புசந்தி திலகர் 

கொவிட் -19 பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தவென தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை உலகளாவிய ரீதியாக இடம்பெற்று வருகிறது. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமானது என பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  பல நாடுகள் தேசிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.

இலங்கை அரசாங்கமும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனை  சுகாதாரத்துக்கு பொறுப்பான அமைச்சின் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களோடு இணைந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் மத்திய அரசாங்கத்தின் கீழும் மாகாண அரசாங்கத்தின் கீழும் சுகாதாரத்துறை இயக்கப்படுவதோடு அதற்குரிய திணைக்களங்களும் இயங்கி வருகின்றன.

MOH எனப்படும் சுகாதார அமைச்சின் ‘சுகாதார வலயங்கள்’ நாடு முழுவதும் பரவலாக செயற்பட்டு வருகின்றன. அவை RDHS எனப்படும் பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரிகள் காரியாலயத்தின் கீழ் இயங்குகின்றன. இவை மாகாண அரசாங்கங்களின் கீழ் இயங்குகின்ற போதும் அதற்கான ஒழுங்கு விதிகளை (Guidelines) மத்திய அரசாங்கத்தின் சுகாதார நிர்வாகத்தினரே முன்னெடுக்கின்றனர். 

இந்தப் பின்னணியில் தேசிய சுகாதார முறைமைக்குள் நேரடியாக உள்வாங்கப்படாத ‘தோட்ட சுகாதர முறைமை’ ( Estate Health Sector ) எனும் சுகாதார முறைமைக்கு கீழாகவே இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவர்களில் தங்கி வாழ்வோருக்குமான ஆரம்ப சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கு பொறுப்பாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம்  ( PHDT) உள்ளது. அந்த  சுகாதார பணிப்பாளர் சபையில் சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுபலபினராக உள்ளார். அதற்கு அப்பால் நிறுவனத்துக்கு என சுகாதார பணிப்பாளராக வைத்தியர் ஒருவர் உள்ளார். நுவரெலிய (2), பதுளை ( மொனராகலையும் சேர்த்து),  கண்டி ( மாத்தளையும் சேர்த்து), இரத்தினபுரி, கேகாலை(குருநாகலையும் சேர்த்து) காலி ( களுத்துறை ,காலி, மாத்தறை மாவட்டங்களும் சேர்த்து)  ஏழு பிராந்திய காரியாலயங்கள் ஊடாக ‘ட்ரஸ்ட்’ எனப்படும் PHDT அமைப்பு இயங்கி வருகிறது.    அதன் நிர்வாகப் பொறுப்பு பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் ( RPC) உடையது. எனவே மத்திய,  மாகாண சுகாதார துறைகளுக்கு அப்பால் தோட்ட சுகாதார துறை என ஒரு துறை இலஙலகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தோட்ட சுகாதார முறைமை இந்தியாவில் இருந்து தோட்டத் தொழிலாளர்களை அழைத்து வந்த காலத்தில் இருந்து தோட்டத் தொழிலாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு முறைமையாக உள்ளது. இதனை தேசிய சுகாதார முறைமைக்குள் (National Health Systems ) கொண்டு வருவதற்காக கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் இன்னும் அந்த நடவடிக்கை முழுமை பெறவில்லை.

சுமார் 50 தோட்ட வைத்திய நிலையங்களே தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இன்னும் 550 தோட்ட வைத்திய நிலையங்கள் தோட்ட சுகாதார முறைமையின் கீழாக தனியார் கம்பனிகளின் பொறுப்பிலேயே இயங்கி வருகின்றன.

அவற்றுக்கு பொறுப்பாக தோட்ட வைத்திய உதவியாளர்கள் (EMA – Estate Medical Assistance) செயற்பட்டு வருகின்றனர். 550 தோட்ட வைத்திய நிலையங்கள் உள்ள போதும் சுமார் 100 அளவான EMA அதிகாரிகளே உள்ளனர் என்பதும் ஒன்றுக்கு மேற்பட்ட நிலையங்களை ஒரு EMA மேற்பார்வை செய்வது,  EMA அல்லாத மருந்தாளர்களின் பொறுப்பில் இயங்குவது என அந்த தோட்ட சுகாதார முறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 

இவற்றுக்கு அப்பால் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சுகாதர அமைச்சில் “தோட்ட மற்றும் நகர சுகாதார அலகு”  (Estate & Health Urban Unit) எனும் பிரிவு இயங்கி வருகிறது. அதற்கென தனியான ஒரு பணிப்பாளரும் ஆளணியினரும் கூட உள்ளனர். இந்த அலகின் பணி, ட்ரஸ்ட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தோட்ட வைத்திய நிலையங்களுக்கு தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொடுப்பது மாத்திரமே.

அத்தகைய தோட்ட வைத்திய நிலையங்களின் தரத்திற்கும் அளவுக்கும் ஏற்ப எத்தகைய? அல்லது எவ்வளவு?  மருந்துகள் பெற்றுக் கொடுக்கப்படுகிறது என்பதனை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் இந்த அலகிற்கு வருடாந்தம் இதற்காக ஒதுக்கப்படும் நிதி 300 மில்லியன் மாத்திரமே. இதில் தோட்டங்களுக்கு மாத்திரமல்லாது நகரங்களில் உள்ள சிறு வைத்திய நிலையங்களுக்கும் பணியாற்றும் ஒரு பேரளவு அலகே அது. 

இது தவிர தோட்டப் பகுதிகளை அண்டி இருக்கும் MOH காரியாலயங்கள் ‘கர்ப்பிணித் தாய்மார், குழந்தை பிறப்பு’ முதலான விடயங்களில் மாத்திரம் தனது இடையீட்டை செய்து வருகிறது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ‘குடும்ப நல தாதியர்’ ( Midwife)  ஊடாக வழங்கி வருகிறது. தாய்ப்பாலூட்டும் தாய்மார்களினதும், குழந்தை ஐந்து வயதை அடையும் வரையான தடுப்பூசி, போஷாக்கு முதலான விடயங்களை கவனிப்பதும் இவர்களது பணி. 

இவை தவிர தோட்டப்பகுதியில் வாழும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்களினதும் ஒரு மில்லியன் அளவான சனத்தொகையினரதும் முதனிலை சுகாதார விடயங்களுக்கு பொறுப்பாக தோட்ட சுகாதார முறைமையே பொறுப்பாக உள்ளது. 

இலங்கையின் சமூகப்,பொருளாதார குறிகாட்டிகளை பெரும்பாலும் மூன்று துறைகளின் அடிப்படையில் அமைவதை  மத்திய வங்கி அறிக்கைகளிலும்  , குடிசன தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினதும் தரவுகளிலிருந்தும் அவதானிக்கலாம். அவை நகரம், கிராமம், தோட்டம் எனும் துறைகளின் அடிப்படையில் பிரித்து விபரிக்கப்படுவதுண்டு.

அதில் , குறிப்பாக சுகாதார குறிகாட்டிகளை எடுத்துக் கொண்டால் மந்தபோஷாக்கு அதிகம் நிலவும், சிசுமரண வீதம் அதிகம் உள்ள, இன்னும் பல பாதகாமான சுகாதார குறிகாட்டிகளை காட்டும் நிரலாக ‘தோட்டத்துறை’ ( Estate Sector ) அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும். 

அப்படி பார்க்கையில் மந்த போஷாக்கு அதிகம் நிலவும் மோசமான சுகாதார குறிகாட்டிகளைக் கொண்ட தோட்டப் பகுதியில் கொவிட் -19 போன்ற பெருந்தொற்று பரவுமிடத்து அவை பாரிய விளைவுகளை ஏற்படுத்தவல்லத. தோட்டங்களில் அமையப் பெற்றுள்ள வசதிகள் மிகவும் குறைந்த ‘லயன்’  ( Line room) வீட்டு முறைமையும் அதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது அவர்களில் தங்கி வாழும் வேறு தொழில் துறைகளில் உள்ளவர்களும் கூட அதே லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். 

உதாரணத்துக்கு 5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் எடை குறைந்தோர் ( low weight ) சதவீதம் தேசிய மட்டத்தில் 20 சதவீதமாக உள்ளபோது தோட்ட ப்பகுதியில் அதுவே 30 சதவீதமாக உள்ளது. தோட்டங்களில்  பிறப்பின் போது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு குழந்தை குறைந்த எடையுடனும் பிறப்பதாகவே புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இனப்பெருக்க வயதுடைய பெண்களில் தேசிய அளவில் 16சதவீத்தினர் குறைந்த போஷாக்கு உடையவராக அடையாளம் காணப்பட அதுவே தோட்டப் பகுதியில் 31 சதவீதமாக உள்ளது. இதுபோல் பல சுகாதார குறிகாட்டிகளை எடுத்துக் காட்டலாம். 

இந்தப் பின்னணியில் கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் தோட்டத்தில் வாழும் மக்கள் தொகையினரே ஆகும்.

இனம், மதம், மொழி அடையாளங்களுக்கு அப்பால் சமூக,பொருளாதார ரீதியாக இலங்கையில்  பின்னிலையில் உள்ள சுகாதார குறிகாட்டிகளில் ஒப்பீட்டளவில் பாதகமான புள்ளிவிபரங்களை காட்டி நிற்கும் தோட்டப் பகுதி வாழ் மக்களுக்கு அதனைக் கோருவதற்கான போதுமான நியாயங்கள் இருக்கின்றன.

நாட்டின் தேசிய வருமானத்திற்கு தமது உழைப்பின் மூலம் ஆண்டாண்டு காலம் பங்களிப்பு செய்துவரும் இந்த மக்கள் தொகையினர் கொவிட் தடுப்பூசி வழங்குதலின் போது உருவாக்கப்பட்ட ‘ தொழிற் படை’ ( workforce) பட்டியலில் சேர்க்கப்படாமை ஆச்சரியமிக்க ஒன்றாகும்.

தொழிற்சாலை மற்றும் காரியாலய பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள போதும், தோட்டத தொழிலாளர்களுக்கு தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும் எனும் பிரமாணம் ஒன்று தேசிய கொவிட் தடுப்பூசி நிகழ்ச்சித் திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. இப்போது கண்டி, நுவரெலிய , பதுளை மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ள கொவிட் தடுப்பூசி திட்டத்தில்  கிராம சேவகர்களின் இடையீட்டுடன் அறுபது வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினர் என்ற வகுதியில்  தோட்டத்தில் வாழ்பவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரே தவிர கொவிட் – 19 பெருந்தொற்று கொரொனா முடக்க காலத்திலும் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டிருக்கும் ‘ தோட்டத் தொழிலாளர்களுக்கு ‘ தடுப்பூசி பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தால் இயல்பாக திட்டம்  வகுக்கவில்லை. இதற்கு  தோட்டப்பகுதி சுகாதார முறைமை தேசிய சுகாதார முறைமைக்கு கீழ் இல்லாமை மிக முக்கிய காரணமாகும்.

சுகாதார அமைச்சில் உள்ள தோட்ட மற்றும் நகர சுகாதார அலகில் அல்லது மாகாண சுகாதர திணைக்களங்களில் தோட்டங்களில் வாழும் தொழிலாளர் எண்ணிக்கை குறித்தான பதிவுகள் இருக்க வாய்ப்பில்லை. அதனை தோட்ட சுகாதர முறைமைக்கு பொறுப்பாக இருக்கும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்திடமே பெற்றுக்கொள்ள முடியும். 

தோட்ட சுகாதர முறைமை மாற்றப்பட்டு அந்த மக்கள் தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேநேரம் அத்தகைய ஒரு திட்டம் நடைமுறைக்கு வரும் வரையில் தோட்ட சுகாதார முறைமை உரிய தரங்களுடன் நடைமுறைப்படுத்தப்படுதலும் அவசியமாகும்.

இத்தகைய உலகளாவிய பெருந்தொற்று நேரத்தில் தோட்ட சுகாதர துறையை மத்திய, மாகாண சுகாதார நிர்வாக முறைமையுடன் இணைத்து தடுப்பூசி திட்டத்தை தயாரிக்க அரசாங்கம்  முன்வர வேண்டும்.

பெருந்தோட்டத்துறையில் நேரடியாக தொழிலாளர்களாகவும் அவர்களில் தங்கி வாழ்வோராகவும் வாழும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூவர் தற்போதைய அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கி வரும் நிலையில் அவர்களது முனைப்புகள் அதிகமாக இது விடயத்தில் வேண்டப்படுகிறது.

அதேநேரம் எதிரணியில் உள்ள ஏனைய அறுவரும் கூட இந்த விடயங்களை ஊடக அறிக்கைக்கு வெளியே அரசாங்கத்துக்கு எழுத்து மூலமாக கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். தொடர்ச்சியான அரசியல் அழுத்தங்கள் மாத்திரமே தோட்டப் பகுதி மக்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி யைப் பெற்றுக் கொடுப்பதற்கு வகை செய்யும்.

பல ஆண்டு காலமாக இடர்நிறைந்த ( Vulnerable ) மக்கள் குழுமமாக இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்டு வரும் மலையகப் பெருந்தோட்ட மக்களை மாவட்ட எல்லைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாது ‘பெருந்தோட்டப் பிராந்தியம்’ எனும் நிலையில் நின்று நோக்குதலும் வேண்டும். ஏனெனில் இப்போதைக்கு அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற பிரதிநிதிகள் நுவரெலிய (5), பதுளை (2), கண்டி (1), கொழும்பு (1) என அமைந்த போதும் இந்த மாவட்டங்களுக்கு வெளியே இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொனராகலை, காலி, களுத்துறை, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களிலும் கூட தோட்டப்பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர்.அதனை ட்ரஸ்ட் நிறுவன நிர்வாக கட்டமைப்பில் புரிந்து கொள்ளலாம். இந்த பெருந்தோட்டத்துறை  பிரதேசம் விசேட கவனத்திற்குரியதாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2018 ஆம் ஆண்டு 32 ம் இலக்க பெருந்தோட்ட பிராந்தியத்திக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தில் ‘பெருந்தோட்டப் பிராந்தியம்’ (plantation region) என சட்ட வரைவிலக்கனம் செய்யப்பட்டுள்ளது என்பதுவும்  இங்கு நினைவு கூரத்தக்கது. அத்தகைய அதிகார சபை ஒன்று அரசாங்க அங்கீகாரம் பெற்ற தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை ஒன்றுடன் தோட்ட வீடமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது. அதன் வகிபாகம் இப்போது என்னவாக இருகலகிறது என கேட்பாரும் யாரும் இல்லை. 

இந்த நிலையில் தோட்டப்பகுதி மக்களுக்கு கொவிட் தடுப்பூசியை முறையாகப் பெற்றுக் கொடுக்க அவர்களது நிர்வாகத்தில் இணைந்திருக்கக் கூடிய அனைத்து அஅலகுகளின் மழபங்களிப்பையும் ஒன்றிணைப்பது அவசியம். 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts