எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து கடல் வளத்திற்கு சேதமா? ஆம்! இல்லை!
சபீர்மொஹமட்&ஹர்ஷனதுஷாரசில்வா
“எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீ அனாவசியமானதொரு பயத்தையே தோற்றுவிக்கின்றது. இதன் மூலம் பாரிய சுற்றாடல் பாதிப்புகள் இல்லை” என்ற தலைப்பின் கீழ் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியர் எஸ்.டி.எம் சின்தக தெரிவித்ததாக ஒரு கூற்று வட்ஸ்அப், முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசப்பட்டது. எனவே இதன் உண்மைத்தன்மை பற்றி ஆராய்வதற்காக நாம் முதலில் பேராசிரியரை தொடர்புகொண்டு இந்தப்பதிவு அவருடையதுதான், என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.
இந்த முகப்புத்தக பதிவுக்கு முற்று முழுதாக மாறுபட்ட ஒரு கருத்தினை பேராசிரியர் சரித்த பட்றியாராச்சி(Charitha Pattiaratchi) தனது கருத்தாக அந்த இடுகைக்கு கீழ் பதிவிட்டிருந்தார். அதாவது இந்த விபத்து காரணமாக ‘நாம் பல தலைமுறைகளுக்கும் மிகப்பெரிய ஆபத்துகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும்,’ என்பதே அவரது பதிவாக இருந்தது. பேராசிரியர் சரித்த பட்றியாராச்சி அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் (The University of Western Australia) கடல்சாரியல் துறையின் பேராசிரியராக கடமையாற்றுகின்றார். இதனை நாம் இமெயில் மூலம் அவரை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொண்டோம்.
இவ்வாறு சமீபத்தில் எம் வீ எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அதன் விளைவாக இலங்கை கடல் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வெவ்வேறு வல்லுநர்கள் ஒன்றுக்கொன்று முரணான பல கருத்துக்களையும் தெரிவித்ததுடன் அவை சமூக ஊடகங்களில், குறிப்பாக பேஸ்புக்கில் அதிகம் பேசப்பட்டன.
அத்துடன் அண்மைய காலங்களில் நிகழ்ந்த பல சம்பவங்களின் போதும் பல பேராசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் பெயர்களில், போலியான செய்திகள், மக்களை திசைதிருப்பும் வகையில் எழுதப்பட்ட பதிவுகள், வலம் வந்ததை அவதானிக்கமுடிந்தது.
அத்துடன் நாம் மேல் குறிப்பிட்டது போன்று, உண்மையாகவே சில பிரபலமான பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களால் எழுதப்பட்டவையாக இருந்தன. ஆனாலும் அவற்றில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன. இந்த அறிஞர்கள் விஞ்ஞான ரீதியில் இதனை அணுகுகின்றனரா? அல்லது அரசியல் ரீதியில் உள்ள தாக்கத்தினையும் மனம்கொண்டு இதனை அணுகுகின்றார்களா?
அதனால், பல்வேறு அறிஞர்களிடமும் இது பற்றிய கருத்தை கேட்டறிந்தோம். எம் வீ எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பில் அவர்கள் கூறியவை.
வழக்கறிஞரும் சுற்றாடல் ஆர்வலருமான கலாநிதி ஜகத் குணவர்தன:
“கடலலை காரணமாக கரைக்கு அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எரிந்து உருகிய நிலையில் காணப்பட்ட பொருட்கள் என்பன, இந்தக்கப்பல் விபத்தானது சுற்றாடல் தொகுதிக்கு ஏதோவொரு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகின்றது. கடலைப் பொறுத்தவரையில் எப்பேர்ப்பட்ட நச்சுப்பதார்த்தங்கள் மற்றும் பொருட்கள் அதனுடன் சேர்ந்தாலும் அவை மூலம் சமுத்திர வளத்திற்கு பாதிப்புகள் உண்டு. அத்துடன் இக்கப்பலில் 81 கொள்கலன்களினுள் 42 வகையான இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டுள்ளன. மேலும் கப்பலில் இருந்துள்ள எண்ணெய் எவ்வளவு எரிந்துள்ளது? கடல் நீருடன் எவ்வளவு கலந்துள்ளது? என்பன பற்றி எம்மால் சரியாக கூற முடியாது. சிலவேளை எரிந்த பதார்த்தங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து புதிய வகையான இரசாயன பதார்த்தங்களை உருவாக்கியிருக்கலாம். எது எவ்வாறாக இருந்தாலும் இவ்வாறு உருவாகின்ற பதார்த்தங்கள் ஒருபோதும் சுற்றாடலுக்கு சாதகமாக அமைந்து விடாது. இவை கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் தொகுதிக்கும் ஆபத்துக்களையே ஏற்படுத்தும், என்பது மட்டும் உறுதி. கடலில் இறந்த நிலையில் கரையொதுங்கும் உயிரினங்களை நோக்கும்போது அவை கப்பல் தீப்பற்றிய இடத்திலிருந்து சிறிது சிறிதாக விரிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. இறக்கின்ற விலங்குகளின் எண்ணிக்கையும் போகப் போக அதிகரிக்கின்றது. பொதுவாக காலம் செல்லச் செல்ல இறப்பு வீதம் குறைவடைகின்றதென்றால் ஒரே நேரத்தில் ஏதேனும் நச்சுப்பதார்த்தங்கள் உட்சென்றுள்ளது எனக் கொள்ளலாம். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையை விட இந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்த மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வாராந்தம் அதிகரித்துச் செல்கின்றன மரணங்கள் கடல் உயிரினங்களுக்கு குறித்த இரசாயன பதார்த்தங்கள் நீண்டகால அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளமையையே காட்டுகிறது.
விஞ்ஞான ரீதியில் ஆராயாமல், உறுதியான சான்றுகளின்றி, எதிர்வரும் வாரங்களில் கடலினங்களின் மரண வீதம் குறையலாம் என எவராலும் கூறிவிட முடியாது. தீப்பற்றி எரிந்த கப்பலினுள் காணப்பட்ட இரசாயன பதார்த்தங்கள் நீரில் கலந்துள்ளதா? இல்லையா? என்பது பற்றி ஊகங்களை தெரிவிப்பதை விட இரசாயன பதார்த்தங்கள் நீரில் கலந்துள்ளன எனக்கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்வதே உசிதமானது. அதாவது தற்போது நாங்கள் முகக் கவசம் அணிவது போல். கோவிட் வைரஸ் இருக்கின்றதா இல்லையா என்பது பற்றி ஆராயாது அனைவருமே பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிகின்றோம். எனவே சகலவிதமான சாட்சியங்களும் சேரும் வரை பொறுத்திருப்பதோ ஆபத்துக்கள் இல்லை என குறிப்பிடுவதோ இதற்கான தீர்வாக அமைந்து விடாது.” என தெரிவித்தார்.
அதேவேளை தென் மாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவி இயக்குனர் சன்ன சுரவீர இறந்த நிலையில் கரையொதுங்குகின்ற உயிரினங்கள் பற்றி இவ்வாறு தெரிவித்தார்.
“எம்மால் ஓரிடத்தில் ஒரு சம்பவத்தை மாத்திரம் வைத்து சுற்றுச்சூழலுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என கூற முடியாது. இதற்கு முன் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடல் வாழ் உயிரினங்களுடன் இவற்றை ஒப்பிடும்போது ஏதேனும் ஒரு அசாதாரண நிகழ்வின் விளைவாகவே இவ்வாறு இவை இறக்கின்றன, என்பதை புரிந்துகொள்ள முடியும்.
உடல் எரிந்து இறந்த நிலையில் சில டொல்பின்களை சமீபத்தில் நாம் கண்டுபிடித்தோம். அதனை நாங்கள் உடவளவை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லும்போது அதன் உடலில் ஈக்கள் மொய்த்தன. எனினும் நாங்கள் உடவளவைக்கு சென்று பார்த்தபோது அதன் மேல் இருந்த ஈக்கள் பல இறந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அதன்பின் இதில் அசாதாரண தன்மை உள்ளது என்பதை நாம் புரிந்து கொண்டோம். எனவே கிடைக்கக்கூடிய தகவல்கள் மற்றும் தரவுகளை வைத்து விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்த பின்னரே உறுதியான முடிவுக்கு வர முடியும்”
புகழ் பெற்ற கடல் உயிரியலாளர் டாக்டர் ஆஷா டீ வோஸ்
“இது பற்றிய ஆய்வுகள் முடியும் வரை என்னால் கருத்து தெரிவிக்க முடியாது, நான் இதுவரை குறிப்பிட்டுள்ள சகல விடயங்களையும் எனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளேன்” என பதிலளிப்பதை மறுத்தார்.
டாக்டர் ஆஷா டீ வோஸ் ஓஷன்ஸ்வெல் நிறுவனத்தின் ஸ்தாபகரும், கடற்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய நீரியல் ஆராய்ச்சி அபிவிருத்தி மையத்தின் (நாரா) இயக்குனர் சபை உறுப்பினராகவும் உள்ளார்.
சமுத்திர பல்கலைக்கழகத்தின் மீன் வளர்ப்பு மற்றும் கடல் உணவு ஆய்வு பீடத்தின் பீடாதிபதி கலாநிதி லங்கா விக்ரமசிங்க
“எம்மால் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின்னரே உறுதியான முடிவுகளை வழங்க முடியும். இந்த விபத்து தொடர்பிலான ஆராய்ச்சிகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அத்துடன் மீன்களை சாப்பிட முடியுமா முடியாதா என்பது பற்றியும் உறுதியாக எதுவும் கூற முடியாது. எனினும் இது போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் நீரில் இருந்தால் மீன்கள் அவற்றை உணவாக உட்கொள்ளும். அதன்பின் மீன்களை மனிதன் உண்டால் நிச்சயமாக அது ஆபத்தை ஏற்படுத்தும். எனினும் ஆய்வுகள் மூலமே இதனை உறுதியாக கூற முடியும்.
மேலும் சுற்றாடலுக்கு நீண்ட கால பிரச்சினைகள் ஏற்படுமா? என்ற விடயம் பற்றியும் ஆராய்ச்சிகளின் பின்னரே உறுதியாக கூறமுடியும். கடல் என்பது மிகச்சிறந்த ஒரு சமநிலைப்படுத்தும் கரைசல். அதாவது கடல் நீருடன் ஏதேனும் பதார்த்தங்கள் கலந்தால் கடல் நீரில் காணப்படும் சமநிலைப்படுத்தும் தன்மை காரணமாக ஒரு சில நாட்களில் அது திரும்பவும் பழைய நிலைக்கே மாறிவிடும். எனவே கடலின் இயற்கையான இந்த தன்மை காரணமாக ஏதேனும் நச்சுப் பதார்த்தங்கள் கடல் நீருடன் கலந்தால் சிறிது காலத்தில் அவை பழைய நிலைமையை அடைந்துவிடலாம்.
எனினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் கடலிலே ஒரே இடத்தில் இருக்கின்ற பவளப்பாறைகள் கடற் தாவரங்கள் என்பவற்றுக்கு அமில பதார்த்தங்கள் காரணமாக ஆபத்துகள் அதிகம். ஆகவே எம்மால் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாமல் யூகங்களை கூற முடியாது. ஆனபோதிலும் கோட்பாடுகளின் அடிப்படையில்நோக்கும் போது ஏதேனும் நச்சுப்பதார்த்தங்கள் சுற்றுச்சூழலுடன் சேர்வதால் சுற்றாடல் அமைப்பு, விலங்குகள் மற்றும் மனிதனுக்கு பாரிய அச்சுறுத்தல்களை அது ஏற்படுத்தக்கூடும்.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் வழக்கறிஞர் தர்ஷனி லஹந்தபுர (ஜூன்15ஆம் திகதி)
“சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறமுடியாது. மீன்வளம், கடற்சூழல், சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் இன்னும்பல பகுதிகள் உள்ளடங்களாக ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுடைய ஆய்வு நடவடிக்கைகள் முடிவடையும் வரை உறுதியான எந்தவொரு முடிவினையும் எம்மால் கூற முடியாது” மேலும் இது தொடர்பில் அண்மையில் மும்மொழிகளிலும் ஓர் அறிக்கையினையும் காணொளியையும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டிருந்தது.
இவ்வாறு, எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல் சம்பவத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதன் பெறுமானம் குறித்து இன்னும் திட்டவட்டமாக எவராலும் கூற முடியாது. இவர்களின் கருத்துக்களில் இருந்து ‘கடல்வளம் ஆபத்தில் உள்ளதா?’ ஆம்! இல்லை! என்று திட்டவட்டமாக முடிவெடுக்க முடியாது. இந்த முடிவுக்காக கடற்றொழிலாளர்கள், கடலுணவு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவோர், கடலுணவு உண்போர், உள்ளுர் உல்லாசபயணிகள், கடற்கரை விடுதிகள் என ஒட்டுமொத்த இலங்கை மக்களே காத்திருக்கின்றனர்.!
ஆனாலும் சுற்றாடல் ஆய்வாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துப்படி சுற்றாடல் அழிவொன்று ஏற்பட்டுள்ளது, என்ற விடயம் மாத்திரம் உறுதியாகின்றது.
(இக்கட்டுரையின் தரவுகள் #தலைமுறை இன் சரிபார்த்தலின் பொறிமுறையினூடாக எடுக்கப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை)
එක්ස්ප්රස් පර්ල් ඛේදාන්තයෙන් පසුව ශ්රී ලංකාවේ සාගර සම්පත්