இலட்சக் கணக்கானோரை பாதிக்கும் கொரோனா கால ”வேலையிழப்புகள்”
பா.கிருபாகரன்
கொரோனா என்னும் கொடிய வைரஸின் தாக்கம் உலகெங்கும் கட்டுக்கடங்காது பரவி ஒட்டுமொத்த உலகையுமே வீட்டுக்குள் முடக்கிவைத்துள்ளதுடன், உலக பொருளாதாரத்தையே குழி தோண்டிப் புதைத்து வருகின்றது. வல்லரசு நாடுகளில் தொடங்கி வளரும் நாடுகள்வரை, பணம் கொழிக்கும் நாடுகளிலிருந்து பட்டினி கிட க்கும் நாடுகள் வரை இந்த வைரஸிடமிருந்து தப்பவில்லை. பணக்காரர்கள் முதல் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துபவர் வரை கதற விட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் , 40 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவு வாங்கியதுடன் கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இந்த கொவிட்-19 என்ற உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று உலகப்போர்-11 இன் பின்னரான மிகக் கடுமையான உலகளாவிய நெருக்கடியாக மாறிவிட்டது. இதனால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவைப் போன்றே இலங்கையின் பொருளாதாரமும் மோசமான அழிவை சந்தித்து வருகின்றது.
இலங்கையில் 1 ஆவது கொரோனா அலையின் வைரஸ் தொற்று கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. சீனா நாட்டை சேர்ந்த பெண்ணொருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு முதல் முதலாக இலங்கையில் இலக்காகியிருந்தார். அதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கையர் இத்தாலியில் 2020 பெப்ரவரி இரண்டாம் திகதி அடையாளம் காணப்பட்டதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர், இலங்கைக்குள் 2020 மார்ச் 11 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். சுற்றுலா வழிக்காட்டியாக பணியாற்றிய 52 வயதான ஒருவரே இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்தார். அத்துடன் 2020 மார்ச் 28 ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.இலங்கையில் கொரோனா 1ஆவது அலை 2020 மார்ச் 11 ஆம் திகதி உருவாகி 2020 ஒக்டோ பர் 4 ஆம் திகதி வரையான 9 மாதங்கள் நீடித்து ஓய்ந்தது
இவ்வாறான சூழலில் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஆரம்பித்த கொரோனாவின் 2ஆவது அலை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிவரை அடித்து ஓய்ந்தது. இந்நிலையிலேயே இலங்கையில் கொரோனாவின் 3 ஆவது அலை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் தொடங்கி இன்று வரை இலங்கையரை மிக மோசமாக பாதித்து வருகின்றது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை நாம் கேட்கும் செய்திகள் எல்லாம் தொற்று, மரணம், நாடு முடக்கம், கிராமங்கள் முடக்கம், பயணத்தடை, தனிமைப்படுத்தல், வேலையிழப்பு, அதனால் வருமானம் இழப்பு, வாழ்வாதாரப்போராட்டம் பசி. பட்டினி என்பவையாகவே உள்ளன.
இலங்கையை வதைத்த கொரோனா அலை-1,கொரோனா அலை – 2 மற்றும் தற்போது வதைத்து வரும் கொரோனா அலை -3 ஆகியவற்றால் நாட்டில் தனியார் துறையினரும், தனியார் துறை ஊழியர்களும் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுமே மிக மோசமான இழப்புக்களையும் பாதிப்புக்களையும் சந்தித்து வருகின்றனர். இதில் நாம் தனியார் துறையினர் எதிர் கொண்டுள்ள வேலையிழப்புக்கள்,பாதிப்புக்கள் தொடர்பில் மட்டும் பார்ப்போம்.
வளரும் நாடுகளில், மக்கள் தொகையும் கல்வியும் அதிகமாகும்போது வேலைவாய்ப்பின்மையும் அதிகமாகும். அறிவியல் வளர்ச்சியால் கருவிகளின் , இயந்திரங்களின் ஆளுமையும் பயன்பாடும் அதிகமாகும் போது, மனித உழைப்பு தேவைப்படாததால் வேலைவாய்ப்பு குறைந்து போகும்.ஆனால், தற்போது கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோயால் ஒவ்வொரு நாடுகளும் ஊரடங்கு, பயணத்தடைகளை அமுல் படுத்துவதால் வேலைவாய்ப்புகள் மட்டுமன்றி இருந்த வேலைகளும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை அரச துறையில் மொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.1 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. அதேவேளை இலங்கையில் சுமார் 3.4 மில்லியன் தனியார் துறை ஊழியர்கள் உள்ளனர், அத்துடன் 2.7 மில்லியன் பேர் சுயதொழில் முயற்சியாளர்களாக இருப்பதுடன் 200,000 க்கும் அதிகமானோர் தனியார் துறை முதலாளிகளாகவும் உள்ளனர். சுருக்கமாக கூறினால் இலங்கை தொழிலாளர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் தினசரி சம்பளம் பெறுபவர்களாகவேயுள்ளனர். இலங்கையைப் பொறுத்தவரையில் தனியார் துறை என்னும் போது ஆடைத் தொழிற்சாலைகள், கைத்தொழில் பேட்டைகள், வர்த்தகத்துறை , தோட்டத்துறை , ஊடகத்துறை, சுற்றுலாத் துறை, தனியார் போக்குவரத்துத்துறை, கட்டுமானத்துறை போன்றவை முன்னிலை பெறுகின்றன. மேற்சொன்ன துறைகள் தவிர அனைத்து தனியார் துறைகளும் அவற்றின் தன்மைக்கேற்ப பெரும் தாக்கங்களை சந்தித்துள்ளன இவற்றில் பணிபுரியும் ஊழியர்கள்தான் இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்புக்களை, வருமானங்களை இழந்து தற்போது நிர்க்கதிக்கு ஆளாகியுள்ளனர்.
“ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு செய்யும்போது நீங்கள் கடைசி ஆளாக இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் பதவி உயர்வுக்குப் பணியாளர்களைப் பரிசீலிக்கும்போது நீங்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும்.” -இதுதான் நிறுவனங்களில் ஆளணி முகாமையாளர்கள் ஊழியர்களுக்குச் சொல்லும் மிக முக்கியமான அறிவுரை. இந்த அறிவுரையின் முக்கியத்துவம் என்ன என்பதை இன்று சகல தனியார் துறை பணியாளர்களும் உணரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு அறிவித்த பயணத்தடை,முடக்க அறிவுப்புக்களினால் தனியார் தொழில் நிறுவனங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கத்தினாலும் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் பணியாளர்களை பணிநீக்கம் செய்தல், தன்னார்வ ஓய்வு மற்றும் அடிப்படை சம்பள அளவை குறைத்தல், சிறப்பு சலுகைகளை இரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகளை இலங்கையின் தனியார் துறை நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. அவை தேவையென்றால் குறைந்த ஊதியத்துக்கு குறைந்த அளவுக்குப் புதியவர்களை எதிர்காலத்தில் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும் திட்டத்தில் உள்ளன. அத்துடன் ”வீட்டிலிருந்தே வேலை” என்ற கொரோனா கால நடைமுறையில் பாதி ஆட்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு, அவ்வேலையும் மற்றவர் தலையில் சுமத்தப்பட்டு ஒன்றரை மனித உழைப்பை ஒரு மனிதனிடம் தனியார் துறையினர் சுரண்டும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. .
எதிர்பாராத இந்த பொருளாதார இழப்பை ஈடுசெய்யவும் தங்களுடைய இலாபத்தை தக்கவைத்துக் கொள்ளவும் ஆட்குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடத்தொடங்கியுள்ளன. இதற்கு கொரோனா வைரஸின் தாக்கம், அதனால் அரசு அமுல்படுத்தும் பயணத்தடை, முடக்கம் போன்றவை மட்டுமே காரணமில்லை. இதற்கு மற்றொரு மறைமுக காரணமும் இருக்கிறது. அதாவது கொரோனாவுக்கு முன்னரான காலப்பகுதியிலேயே பல தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய விரும்பியபோதும் அதற்கான வாய்ப்புக்கள் இருக்காத நிலையிலேயே தற்போது இவ்வாறான நிறுவனங்களுக்கு இந்த கொரோனா கை கொடுத்துள்ளது. அதனால் கண்ணை மூடிக்கொண்டு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வோர் மற்றும் நிரந்தர ஊழியர்கள் அல்லாதோரை உடனடியாகவே வேலையை விட்டு தூக்கும் இந்த நிறுவனங்கள் நிரந்தர ஊழியர்களின் சம்பளத்தில் 10,20,50 வீதம் என்ற கணக்கில் குறைப்பு செய்கின்றன.
இதேவேளை கொரோனாவால் வேலை இழப்போரில் பெண்களே அதிகமாகவுள்ளனர். கொரோனா நெருக்கடி கால ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஒரு நிறுவனத்தில் 10 பேர் நீக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களில் 6 பேர் பெண்களாகவே இருக்கிறார்கள். குறைந்த சம்பளங்களில் பெண்களை வேலைக்கமர்த்தலாம் என்ற நிறுவனங்களின் எண்ணப்பாட்டால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் அதிகளவான பெண்களே வேலைகளுக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். இதனால் தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கையே அதிகமாவுள்ளதனால் வேலைநீக்கம் செய்யப்படும் போதும் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல்படுத்தப்படும் பயணத்தடை மற்றும் முடக்கத்தால் தனியார் துறையினர் மட்டுமன்றி கலைஞர்கள், சுய தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், சில்லறை வியாபாரிகள், எனப்பலதரப்பட்டவர்களும் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக பயணத்தடையுடன் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள், சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்படுவதனால் இவற்றை நம்பி வாழும் பலர் குறிப்பாக இசைக்கலைஞர்கள் ,புகைப்படக்கலைஞர்கள் வீடியோ கலைஞர்கள், சமையல் கலைஞர்கள்.ஒப்பனைக்கலைஞர்கள், மதகுருமார்கள், மலர் விற்பனையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் தமது தொழில்களை இழந்துள்ளதனால் அவர்களது வாழ்வாதாரமும் வருமானமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமான கால கட்டத்தில் வேலையை இழந்தால் புதிய வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. சாதாரணமான கால கட்டத்திலேயே வேலை இழப்பு என்பது பெரும் பொருளாதார நெருக்கடியையும், மனவேதனையையும் கொடுக்கும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் இந்த நேரத்தில் வேலை இழப்பு ஏற்படுவதனால் ஊழியர்களுக்கு வருமான இழப்பு மட்டுமன்றி மன உளைச்சலும் ஏற்படுகின்றது. இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து தனியார் நிறுவனங்களும் வேலைநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்த நேரத்தில் புதிய வேலையைத் தேடிக் கண்டுபிடிப்பதும் சவாலான காரியம். இதனால் வேலை இழந்த ஒவ்வொருவரினதும் அவர்களின் குடும்பங்களினதும் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியிலேயே உள்ளது.
தற்போது ஒட்டுமொத்த இலங்கையுமே கொரோனாவின் அச்சுறுத்தலினால் முடங்கிக் கிடக்கிறது. இதன்காரணமாக, இலங்கையின் தனியார் துறை ஊழியர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், நாளாந்த கூலியை எதிர்பார்த்து இருப்பவர்கள் வேலைகளை இழந்து எந்தவித வருமானமுமின்றி வீடுகளுக்குள் முடங்கிப்போய் இருக்கிறார்கள். நாளாந்த வருமானம் இல்லாத நிலையில், நாளாந்த அத்தியாவசிய தேவைகளுக்குத் தங்களது சேமிப்புகளைச் சிறுகச் சிறுகக் கரைத்துக் கொண்டிருக்க வேண்டியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் இலங்கையில் கொரோனா அலைகள் தொடர்வதனால் வேலையிழப்பு வீதமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதேவேளை புதிய வேலைவாய்ப்புகள் இன்னும் சில வருடங்களுக்கு உருவாகப் போவதுமில்லை . இதனால் இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தப்போகின்றது.
කොරෝනා කාලය තුළ “රැකියා අහිමිවීම”