13ஐ தக்க வைத்துக்கொள்வதே, தமிழ் மொழியின் உரிமையை உறுதிப்படுத்தலுக்கான ஒரேவழி
ஆர்.ராம்
“13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும், பகுதியாக அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிங்களத் தலைமைகளும், 13ஆவது திருத்தச்சட்டத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைமைகளும் பகிரங்கமாகவே கூறிவிட்டன. எனினும் 13ஆவது திருத்தச்சட்டம் தான் ஏட்டளவிலாவது தமிழ் மொழி உரிமை உறுதிப்படுத்தப்படுத்தப்படுவதற்கு அடிநாதமாக இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது”
பல்லின இலங்கைத்தீவின் ஆட்சியுரிமை பிரித்தானியர்களிடத்திலிருந்து சுதேசிகளிடத்தில் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி கையளிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள, பௌத்த மறுமலர்ச்சியால் பெரும்பான்மைவாதம் மேலெழுந்து சிறுபான்மை இனக்குழுமங்கள் அதிகாரங்களை பயன்படுத்த உரித்தற்றவர்கள் என்ற சிந்தனை சித்தாந்த ரீதியாக விதைக்கப்பட்டது.
இந்த சிந்தனை விதைப்புக்கு குடிப்பரம்பலை மாற்றல், காணி அபகரிப்பு, பிரஜாவுரிமை நீக்கம், பண்பாடு, கலாசாரத்தை வரலாற்று ரீதியாக திரிவுபடுத்தல், மொழிப்புறக்கணிப்பைச் செய்தல், சுதந்திரங்களை மறுதலித்தல் என்று பல்வேறு விடயங்கள் மூலோபாயங்களாக பயன்படுத்தப்பட்டன.
இதில் மிக முக்கியமாக 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் இயற்றப்பட்டு இலங்கைத்தீவில் வாழும் தமிழ் பேசும் இனக்குழுமங்களின் மொழி உரித்து பறிக்கப்பட்டது. அத்துடன், சிங்கள மொழித் திணிப்பு பரவலாக இடம்பெற்றது.
இவ்வாறு, மறுக்கப்பட்ட தமிழ் மொழியின் உரிமையானது 1987ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்திற்கு அமைவாக, தற்போது நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தத்தச் சட்டத்தின் பிரகாரம் மீள உறுதி செய்யப்பட்டது.
அதேநேரம், 1988ஆம் ஆண்டு இதே இரண்டாவது குடியரசு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 16ஆம் திருத்தச் சட்டத்தின் படியும் தமிழ் மொழியின் உரித்தானது மேலும் வலுவாக உறுதி செய்யப்பட்டது. இதனைவிடவும் மொழி உரிமையானது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் பற்றிய மூன்றாவது அத்தியாயத்தின் 12(2)ஆவது சரத்தில் உள்ளீர்க்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டும் உள்ளது.
ஆனால், இற்றைக்கு 34 ஆண்டுகளுக்கு பின்னரும் தமிழ் மொழி உரித்தினை உறுதி செய்துகொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் நீடிப்பதாக அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஆசிரியருமான சி.அ.யோதிலிங்கம் குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக தமிழர்கள் தாயகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு,கிழக்கில் நிருவாக மொழியாக தமிழ் மொழியே உள்ளபோதும், போர் நிறைவுக்கு வந்த 2009 மே 18 இற்கு பின்னரான நிலைமையில் சிவில் நிருவாக நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழ் மொழியில் பூர்த்தி செய்ய முடியாத நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
உதாரணமாக கூறுவதாயின், போரிற்கு பின்னரான சூழலில் வடக்கு, கிழக்கில் மீளத்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் நிருவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமைகள் நீடித்துக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டுகின்றார்.
அதேநேரம், வடக்கு, கிழக்கில் சொற்ப அளவில் இருக்கும் சிங்கள மொழி பேசுபவர்களின் நிருவாகச் செயற்பாடுகளை இலகுவாக்குதவற்காக தென்னிலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரும்பான்மை சிங்கள சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் தேவைக்கு அதிகமாக மாவட்ட செயலகங்கள் முதல் அனைத்து பிரிவுகளிலும் உட்புகுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறான நிகழ்வுகள் ‘கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் கூறுகளே’ என்று விழிக்கும் அவர், நாட்டினை ஆட்சி புரிபவர்கள் மாற்றப்பட்டாலும், இவ்விதமான செயற்பாடுகள் முற்றுப்புள்ளியின்றி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறுகின்றார்.
அதிகளவில் தமிழ்மொழி பேசுபவர்கள் வாழும் வடக்கு, கிழக்கிலே நிலைமைகள் இவ்வாறு காணப்படுகின்ற நிலையில் இருமொழி பேசும் மாவட்டங்களில் நிலைமைகள் எவ்வாறு இருக்கும் என்று பிரத்தியேகமாகக் கூற வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
அதுமட்டுமன்றி, இத்தகையதொரு சூழலில் புதிய அரசிலமைப்பு உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் “ஒரேநாடு ஒரே சட்டம்” என்ற சிந்தனையுள்ள ஜனாதிபதி கோட்டாபயவின் கீழ் நடைபெறுவதானது தமிழ் மொழி உரிமையின் அடிப்படையாக அமைந்திருக்கும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் நீடிக்குமா என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறிருக்க, “இலங்கையின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்கும் சிங்களமும், தமிழும் அரசகரும மொழிகளாகவிருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழ் மொழியாகவிருப்பதுடன் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி சிங்களமாகக் கூறப்பட்டுள்ளது” என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளர் த. மனோகரன் குறிப்பிடுகின்றார்.
இருப்பினும் “நாட்டின் எப்பகுதியிலும் எந்தவொரு குடிமகனும் அரசகரும மொழியிலாவது தனது கருமங்களை ஆற்றிக் கொள்ளவும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பது அரசியலமைப்பின் கூற்றாகும். கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட மொழிப்புறக்கணிப்பு போன்ற மொழி வெறிச்சிந்தனைகளே நாட்டை முப்பதாண்டு கால போருக்குள் தள்ளின என்பதை மறுக்க முடியாது. அதனால் அரசகரும மொழிகள் கொள்கை பேச்சளவிலும், ஏட்டளவிலும் மட்டும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமானதாகும்” என்றும் த.மனோகரன் வலியுறுத்துகின்றார்.
இந்த விடயங்கள் அனைத்தும், 13ஆவது திருத்தச்சட்டத்திலும், 16ஆவதுதிருத்தச் சட்டத்திலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிடும் அவர் இவ்விரண்டு சட்டங்களும் மொழி உரித்தினை உறுதிப்படுத்துபவையாக இருக்கின்றன. ஆகவே அவற்றை நிலைபெறச் செய்யவேண்டியது இன்றியமையாத விடயமாகின்றது. இதனைப் புரிந்து கொள்ளாது, 13ஆவது திருத்தச்சட்டத்தினை ‘அதிகாரப்பகிர்வு விடயத்தினை’ மட்டும் மையப்படுத்தி தமிழ் அரசியல் பிரதிநிதிகள் புறக்கணித்து வருகின்றமை கவலையளிக்கும் விடயமாகும் என்றும் கூறுகின்றார்.
இவ்வாறிருக்க மொழிக்கொள்கை அமுலாக்கம் சம்பந்தமாக தற்போதைய ஆட்சியாளர்கள் பிரதிபலிப்புக்கள் முற்றிலிலும் வித்தியாசமானதாக மாறியிருக்கின்றன. குறிப்பாக கூறுவதானால், தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலாக ‘அரச கரும மொழிகள் வாரம்’ ஜுலை முதலாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டது.
அப்போது விடயதானத்திற்கு பொறுப்பாகவிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனின் தற்துணிவில் மேற்படி ஐந்து நாட்களில் முதலாம் நாள் அரசகரும மொழிகள் தினமாகவும், இரண்டாம் நாள் அரசகரும மொழிகள் பாடசாலைத் தினமாகவும், மூன்றாம் நாள் அரச கரும மொழிகள் பொதுமக்கள் தினமாகவும், நான்காம் நாள் அரசகரும மொழிகள் இளைஞர் தினமாகவும், ஐந்தாம் நாள் அரசகரும மொழிகள் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகள் தினமாகவும் பெயரிடப்பட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த ‘அரச கரும மொழிகள் வாரம்’ என்பது சிங்கள மொழியை நடைமுறையில் உறுதிப்படுத்தல் என்பதை விடவும், தமிழ் மொழியை நடைமுறையில் தேசிய மொழியாக ஏற்கச் செய்தல் என்பதே பிரதான நோக்கமாகும். ஏனென்றால் சிங்கள மொழி பிரயோக ரீதியில் உள்ள ஏழு மாகாணங்களில் தமிழ் மொழி பிரயோகத்தில் இன்மையே காரணமாகும்.
எனினும் 2019ஆம் ஆண்டு நவம்பர் 18இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதன் பின்னர் மேற்படி விடயமொன்று பற்றிய கரிசனையே கொள்ளப்படவில்லை. இதற்கு கொரோனா வைரஸ் பரவல் என்ற பொதுப்படையான காரணியை நோக்கி ஆட்சியாளர்கள் சுட்டு விரல் நீட்டலாம்.
ஆனால், போதைப்பொருள் ஒழிப்பு வாரம், அன்னையர் தினம், தொழிலாளர் தினம், ஆசிரியர் தினம் ஆகியவற்றுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடதானங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் ஊடக அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் அரசகரும மொழிக் கொள்கையை அதாவது சிங்களமும், தமிழும் இந்நாட்டின் தேசிய மற்றும் அரசகரும மொழிகள் என்பதை உறுதிப்படுத்தி, உணரவைத்து நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு காணப்படுகின்ற ஒரே சந்தர்ப்பமான அரச மொழிக் கொள்கை வாரத்தினை ஆகக்குறைந்தது நினைவில் கொள்வதற்கு கூட தாயராக அவர்கள் இருக்கவில்லை. இது அவர்களின் இரண்டாந்தர மனோநிலைமையின் வெளிப்பாகவே கொள்ள வேண்டியுள்ளது.
இதனைவிடவும், தற்போதைய ஆட்சியாளர்கள் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றதன் பின்னர் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற அறிவிப்பை பாதுகாப்பு செயலாளராக இருக்கும் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரட்னவே முதலில் வெளிப்படுத்தியவராக இருக்கின்றமையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதேவேளை, தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாமை குறித்து சிரேஷ்ட சட்டத்தரணியும், பேராசிரியருமான பிரதீபா மஹானாமஹேவா “தேசிய கீதம், நாட்டில் மாறுபடுகின்ற அரசாங்கங்களின் கொள்கைக்கு அமையவே இசைக்கப்படும்” என்று தெரிவித்து அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டிற்கு முகமூடி அணிவித்திருந்தார்.
மேற்படி, இரண்டு சம்பவங்களும் அரசாங்கத்தின் மொழிக்கொள்கை அமுலாக்கம் என்பதை விடவும் ‘தமிழ் மொழி’ மீதான கரிசனையை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. இவ்விதமான அரசாங்கத்தில் அதியுச்ச நிறைவேற்று அதிகாரத்தினை கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபயர ராஜபக்ஷ ‘ஒரேநாடு ஒரே சட்டம்’ என்ற புதிய சித்தாந்தத்தினை அமுலாக்குவதற்கு முனைந்து கொண்டிருக்கின்றார்.
இதற்காக, இவருடைய பணிப்பின் பேரில் புதிய அரசியலமைப்பினை வரைவதற்கான வரைபினை தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரெமேஷ் த சில்வா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவினை நியமித்திருக்கின்றார்.
அதேநேரம், இவர் பதவியேற்ற வேளையோடு இந்தியாவிற்குச் சென்றிருந்த நிலையில் இந்து பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், “அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது, பிராந்திய நலனுக்கு நல்லது என்றாலும், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாது” என்று கூறியிருக்கிறார்.
இந்தக்கூற்று வெறுமனே 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பிடுங்குவதாக காணப்பட்டாலும் மேற்படி ‘ஒரேநாடு ஒரேசட்டம்’ என்ற கூற்று ஒட்டுமொத்தமாக 13இல் கை வைக்கும் நிலைமையையே வெளிப்படுத்தி நிற்கிறது.
மறுபக்கத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான தற்போதைய ஆட்சியாளர்களின் உள்நாட்டுக் கோசங்கள் உள்ளுராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்த ரியர் அட்மிரல் சரத்வீரசேகரவின் பதவி மாற்றத்துடன் தற்காலிகமான ஓய்வுக்குச் சென்றிருக்கின்றன.
ஆனால், 13 ஆவது திருத்த சட்டம் பயனற்றது என்றும் அது தோல்வி அடைந்துவிட்ட ஒரு முறைமை என்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முதல் அமைச்சரவைப் பேச்சாளர்களான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, உதய கம்மன்பில, உள்ளிட்டவர்கள் ஏற்கனவே பிரஸ்தாபித்துள்ளனர். அவர்கள் தற்போது வரையில் தமது நிலைப்பாட்டை மாற்றியதாக அறிவிக்கவில்லை.
இதனடிப்படையில் 13ஆவது திருத்தச்சட்டத்தில் நிச்சயமாக மாற்றங்கள் இடம்பெறப்போகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் ஒட்டுமொத்தமாக 13ஆவது திருத்தத்தினையே இல்லாமலாக்கிவிட்டால் ‘தமிழ் மொழி உரிமை’ வெறுமனே ஏட்டளவில் இருப்பதற்கான சந்தர்ப்பம் கூட அற்றுப்போய்விடும்.
இவ்விதமான நிலைமை ஏற்பட்டிருக்கின்ற நிலையில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் இந்த விடயத்தில் அதீத அக்கறை கொள்ள வேண்டியவர்களாகின்றனர். அவர்கள் “13 ஐ ஏற்றல் தமிழர்களை ஒற்றை ஆட்சிக்குள் தள்ளிவிடும் முயற்சி” என்றும் “13 ஒரு ஓட்டைப் பானை” என்றும், “13ஐ தும்புத்தடியாலும் தொடமாட்டோம் என்றும் இந்திய இலங்கை ஒப்பந்தம் எமது விருப்பில் செய்யப்படவில்லை என்றும் அபிப்பிராயங்கள் கூறிக்கொண்டிருந்தால் ஈற்றில் ‘தமிழ் மொழி உரிமை’ வலிந்து காணாமலாக்கப்பட்டு விடும். ஏனென்றால் 13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மொழி உரிமையின் அடிநாதம்.
The 13th Amendment & The Tamil Language
දහතුන් වැනි සංශෝධනය සහ දෙමළ භාෂාව