பயங்கரவாத தடைச்சட்டமும் ஜனநாயகமும்
சி. ஜே. அமரதுங்க
இக்கட்டுரை எழுதப்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அவர் விளக்கமறியலில் இல்லையென தகவலறிந்த சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும்போது எதற்காக அவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸார் விளக்கமளிக்க வேண்டும். சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்கு பொலிஸார் கோரலாம். அத்தோடு இந்த விவகாரங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சந்தேகநபரை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி ஆஜராக முடியும். சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதா இல்லையா என்பதை நீதவான் தீர்மானிப்பார். இவை அனைத்தும் நீதிமன்ற நடைமுறைகளாகும்.
ரிஷாட் பதியுதீன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அத்தோடு, முன்னாள் அமைச்சரும் ஆவார். அவரது சில செயற்பாடுகள் எதிர்ப்பை ஏற்படுத்தின. எனினும், அவற்றை எந்த கண்ணோட்டத்திலிருந்து பார்த்தாலும் அவை அனைத்தும் இனப்பிரச்சினையுடன் தொடர்புடையவை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். ஆகவே, இந்த விவகாரங்களை கவனமாக கையாள வேண்டும்.
இந்த சட்ட நடைமுறைகள் ஏதுமின்றி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது. 1979ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கடுமையான சட்டம், விசேட சந்தர்ப்பங்களின்போது மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சட்டத்தின் கீழ், நீதிமன்ற நடைமுறைகள் இன்றி ஒருவரை தடுத்துவைக்க முடியும். அத்தோடு, பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தான் கருதும் ஒருவரை தடுத்துவைக்கும் சிறப்பு அதிகாரங்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு உண்டு. தடுப்புக்காவல் உத்தரவுக்கு எந்த விளக்கமும் வழங்கத் தேவையில்லை. சந்தேக நபரை மூன்று மாதங்கள் தடுத்து வைக்க முடியும் என்பதோடு, அந்தக் காலத்தை 18 மாதங்கள் வரை நீடிக்கவும் முடியும்.
இவ்வகையான தடுப்புக்காவல் நீதித்துறை செயற்பாடு அல்ல. ஆனால், நிர்வாக கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.
தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக திரு. சரத் வீரசேகர செயற்படுகின்றார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவரென அவர் கருதுகின்றார். அரசியல் காரணங்களால் அவர் அவ்வாறு நினைக்கலாம். ஒட்டுமொத்தத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யாமல் தனது அதிகாரங்களை பயன்படுத்தி அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிப்பது தொடர்பாக இடம்பெற்ற விவாதத்தின்போது இச்சட்டத்தின் ஆபத்தான பக்கம் புலப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதால் அவரை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர முடியாதென்பது அமைச்சர் சரத் வீரசேகரவின் நிலைப்பாடாக காணப்பட்டது.
இவ்விடயம் இடம்பெற்ற மற்றும் இந்தக் கட்டுரை எழுதப்பட்ட சந்தர்ப்பத்தில் இரண்டு தடவைகள் பாராளுமன்றம் கூடியது. பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க அவரை அனுமதிக்க வேண்டுமென சபாநாயகரிடம் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தது. எனினும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
மக்களின் இறையாண்மையை பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் தமது பணிகளைச் செய்வதற்காக பாராளுமன்ற சிறப்புரிமைகள் உண்டு. பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு காணப்படும் உரிமையானது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு காணப்படும் குறிப்பிடத்தக்க சிறப்புரிமையாகும். அதனை யாரேனும் தடுத்தால், அவருக்கெதிராக பாராளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கலாம்.
எவ்வாறாயினும், இப்பிரச்சினையை அமைச்சர் சரத் வீரசேகர உருவாக்கினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் கலந்து கொள்ள அவரை அனுமதிக்க வேண்டாமென சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விசாரணைகளுக்கு அச்சுறுத்தலாக அமையுமென அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது குறித்து அரசாங்கம் மூன்று வாதங்களை முன்வைத்தமை குறித்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டினார். முதலாவது, குற்றவியல் விசாரணை குறித்த வாதமாகும். அதாவது, பாராளுமன்ற உறுப்பினரை அமர்வுக்கு அழைப்பதற்கான கோரிக்கை சபாநாயகராலேயே முன்வைக்கப்பட வேண்டும் என்றும் படைக்கள சேவிதரால் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். இரண்டாவது, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் குறிப்பிடப்பட்ட காரணமாகும். அதாவது, கொவிட்- 19 நிலைமையே இதற்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டது.
மூன்றாவது, அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்த வாதமாகும். அதாவது, இவ்விடயம் பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்புடையதென குறிப்பிட்டிருந்தார். இதில் எது உண்மையென லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பாக, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கருத்தை முன்வைத்தனர். இதன் சட்டப் பின்னணி குறித்து விளக்கிக்கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தடுத்து வைத்திருப்பது நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயம் என்றும் குறிப்பிட்டார். இது நீதிமன்ற உத்தரவு அல்ல என வாதிட்ட சுமந்திரன், நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டாலும் பாரம்பரியமாக பாராளுமன்ற உறுப்பினர்கள், சபை அமர்வுகளில் கலந்துகொள்ள அனுதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானபோது மாத்திரம் இந்நிலை மாறியதென குறிப்பிட்டார்.
அமைச்சர் ஒருவரின் நிர்வாக நடவடிக்கை பாராளுமன்ற சிறப்புரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்த முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.
இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதாக சபாநாயகர் உறுதியளித்ததை தொடர்ந்து விவாதம் நிறைவுக்கு வந்தது.
ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆபத்தான நிலைமையை இங்கு காண முடிகின்றது. இச்சட்டத்தின் கீழ் உரிய ஆதாரங்கள் இன்றி ஒருவரை தடுத்துவைக்க முடியுமென நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த விடயத்தை நோக்கும்போது இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவார்.
அரசாங்கத்திற்கு விரோதமாக செயற்படும் எந்தவொரு நபரையும், அமைச்சருக்கு ஏற்படும் சந்தேகம் என்ற சாதாரண காரணத்தின் பிரகாரம் இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் வழிவகுக்கின்றது.
சாதாரண சட்டத்தின் கீழ் குற்றங்களாக கருதப்படாத விடயங்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றங்களாக கருதப்படுகின்றன. பயங்கரவாதி ஒருவரை பற்றி அறிந்தவர், அதனை பொலிஸாருக்கு அறிவிக்காத காரணத்திற்காக அவருக்கு ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதேபோன்று, பயங்கரவாதி ஒருவர் யாரேனும் ஒருவரது வீட்டில் ஓர் இரவு தங்கியிருந்தாலும் பயங்கரவாதியை பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த வீட்டின் உரிமையாளருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறான சந்தேகத்தின் பேரிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளார். தடுப்புக்காவலில் வைக்க வெறும் சந்தேகம் போதுமானதாக காணப்படுகின்றது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு ரிஷாட் பதியுதீன் சூழ்ச்சி செய்ததாக குற்றஞ்சாட்டியவர்கள் எவரும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க வரவில்லை.
மொத்தத்தில், இது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் தனிப்பட்ட பிரச்சினையல்ல. பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு கடுமையான சட்டமாகும்.
Prevention Of Terrorism Act And Democracy
ත්රස්තවාදය වැළක්වීමේ පනත සහ පාර්ලිමේන්තු ප්රජාතන්ත්රවාදය