கபில குமார கலிங்க

நகரமொன்றில் ஆண்களிடையே தொலைந்துபோன ஒரு சீனப் பெண்ணுக்கு, தனது கணவனை கண்டுபிடிப்பது சவாலான விடயமென சிலர் கூறுகின்றனர். சீன ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதால் இவ்வாறு கூறுகின்றனர். ஆனால், சீன மக்கள் அத்தகைய பிரச்சினைக்கு முகங்கொடுப்பதில்லை. ஏனையோருக்கு முடியாவிட்டாலும் அவர்கள் வேறுபாடுகளை அறிந்துகொள்கின்றனர். 

எமது முகம் மற்றும் தோற்றம் குறித்து நாம் அதிகம் பெருமைப்படக் கூடாது. நாங்கள் இந்தியாவிற்குச் செல்லும்போது இலங்கையர்கள், இந்தியர் என தவறாக அடையாளம் காணப்படுகின்றனர். தனிப்பட்ட முறையில் நான் இதனை பல தடவைகள் அனுபவித்துள்ளேன். மொழியால் மட்டுமே நாம் அவர்களிடமிருந்து வேறுபடுகின்றோம். 

வருடாந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நான் முதற்தடவையாக இந்தியாவிற்குச் சென்றேன். ஒரு தொலைதூர மாநிலத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், ஹிந்தி அல்லாத மொழியில் என்னிடம் உரையாடினார். எனது இனத்தை தவறாக அடையாளம் கண்டுகொண்டமையே அதற்கு காரணம். அவருக்கு ஆம், இல்லை என்று மாத்திரம் பதில் வழங்கிய நான், அதன் பின்னர் அவரை சந்திப்பதை தவிர்த்துக்கொண்டேன். எனது நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுப்பதற்காக என்னை மேடைக்கு அழைத்தபோது நான் இலங்கையைச் சேர்ந்தவர் என அவர் பின்னர் அறிந்திருக்கலாம். அவரும் ஒரு புன்னகையுடன் என்னுடனான உறவை மட்டுப்படுத்திக்கொண்டார். அந்த வயதான நபர் என்னுடன் என்ன மொழியில் உரையாடினார் என இன்னும் தெரியாது. நான் அந்த மொழியைப் பேசும் இனத்தைச் சேர்ந்தவர் என அவர் நிச்சயமாக கருதியுள்ளார். 

சில இந்தியர்கள் எனது பெயர் குறித்து ஆச்சரியப்பட்டனர். எனது பெயரின் மூன்று பகுதிகளும் இந்தியரைப் போன்று காணப்படுவதாக குறிப்பிட்டனர். அவர்கள் கூறியவை சரியானது. ஆகையால் நான் வாதிடவில்லை. நானும் ஓர் இந்தியரைப் போலவே தோற்றமளித்தேன். 

இந்தியர்கள் என்னை கபில் என அழைத்தனர். எனது பணிக்குழாமில் இருந்த ஒரு இந்திய பெண் என்னை சில சந்தர்ப்பங்களில் கபிலா என அழைத்தார். ஒரு மனிதனுக்கு மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் பொதுவாழ்க்கையில் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு மட்டுமே பெயர் தேவைப்படுகிறது. ஆகையால், நான் அதுபற்றி கவலையடையவில்லை. 

பாடசாலைக் காலத்தில் எனது மூன்று பெயர்களினதும் முதல் மூன்று எழுத்துக்களை சேர்த்து கேகேகே என ஆசிரியர் ஒருவர் என்னை அழைத்தார். அமெரிக்காவில் கேகேகே என்பது கு குளுஸ் கிளன் என்ற ஒரு வெள்ளையின இனவாத அமைப்பை குறிக்கின்றது. 

1970களில் இருந்து இலங்கையர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தத் தொடங்கினர். அது நான் பாடசாலை சென்றுகொண்டிருந்த காலம். அதற்கு முன்னர் தபால் திணைக்களத்தினாலேயே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. அவற்றை கல்விப் பொதுத் தராதர பத்திர பரீட்சைகளில் தோற்றுவதற்கு நாம் பயன்படுத்தினோம். 

பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்பட்ட காலத்தில் அடையாள அட்டை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக காணப்பட்டது. கேட்கும்போதெல்லாம் காட்டுவதற்காக அதனை கையில் தயாராக வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டைகள் இல்லாதவர்கள் பிரச்சினைகளுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) இரவு நேரங்களில் அடையாள அட்டைகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் மக்கள் அவற்றை கையளிக்கவேண்டி ஏற்பட்டது. புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் செல்லும்.    

சமூக தேவைகளுக்காகவே பெயர், பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை மனிதர்கள் உருவாக்கினர். எவ்வாறாயினும், ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சீன மனிதனின் பொதுவான அம்சத்தைப் போன்று, உலகம் முழுவதும் ஒரு பொதுவான வாழ்க்கை முறை விரவிக்கிடக்கின்றது. அவர்கள் வெவ்வேறு தோல் நிறங்களை கொண்டிருந்தாலும், வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றினாலும் அவர்கள் அனைவருமே சிவப்பு நிற இரத்தத்தைக் கொண்டுள்ளனர். அத்தோடு, மகிழ்ச்சி, துக்கம் மற்றும் வலிக்கு ஒரே மாதிரியாகவே பதிலளிக்கின்றனர். அன்பு, கோபம், பொறாமை, ஆசை போன்றவற்றையும் அனுபவிக்கின்றனர்.   

மனிதனின் கண்ணீர் ஒரேமாதிரியானது. ஒரே மாதிரியான நிறத்தையும் ஏனைய பண்புகளையும் கொண்டுள்ளது. மாறுபட்ட வண்ணங்களைக் கொண்ட மனிதர்கள் தங்கள் கலாச்சார ஆடைகளை அகற்றினால், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க மாட்டார்கள். கறுப்பின ஆபிரிக்கர்கள் நிர்வாணமாக வரிசையில் நிற்கும்போது, அவர்களை இனம்  அல்லது நாடுகளின் அடிப்படையில் அடையாளம் காண முடியுமா? நைஜீரியர்களுக்கும் கென்ய மக்களுக்கும் இடையில் உடல் ரீதியான வேறுபாடுகள் உள்ளனவா? சிங்கப்பூர், கொரிய அல்லது சீன நாட்டினரை நாம் ஒரே மாதிரியாக வேறுபடுத்த முடியாது. நாம் மானுடவியலாளர்கள் அல்லர். ஆகவே மனித அம்சங்களில் காணப்படும் நுட்பமான மாற்றங்களை எம்மால் அடையாளம் காண முடியாது. ஆகவே, எமது அடையாளத்தை காட்டுவதற்கு தேசிய உடைகள், ஆபரணங்கள் மற்றும் ஏனைய கலாசார உடைகள் என அழைக்கப்படும் விடயங்கள் எமக்கு அவசியமாகின்றன. 

சிங்கள நபர் ஒருவர் தமிழர்கள் அணியும் வேட்டியை அணிந்து, நெற்றியில் திருநீறு அணிந்திருந்தால் அவர் ஒரு தமிழரைப் போன்று தோன்றுவார். இதேபோன்று தமிழர்களும் சிங்களவர்களைப் போல தோற்றமளிக்கலாம். 

நான் பணியாற்றிய விளம்பர நிறுவனமொன்றின் சக ஊழியர் ஒருவர், ஒருதடவை சல்வார் உடையணிந்து கருத்தரங்கொன்றில் பங்கேற்றார். அவர் ஒரு மலாய பெண் என தவறாக புரிந்துகொண்ட முஸ்லிம் பங்கேற்பாளர் ஒருவர், அவருடன் தமிழில் பேசினார். புர்கா அல்லது நிகாப் அணிந்தால் எலிசபெத் மகாராணியும் முஸ்லிம் பெண் போன்றே தோன்றுவார். 

பழம்பெரும் எழுத்தாளர் ஐவன் அல்விஸ் அண்மையில் தனது சுயசரிதையை எழுதினார். அவரது கையெழுத்துப் பிரதியை நான் படித்தபோது நகைச்சுவை கலந்த தொனியில், ஆனால் உள்ளார்ந்த அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விடயத்தை அவதானித்தேன். 

பெருந்தோட்டப் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராயும் ஒரு சர்வதேச ஊடகக் குழுவை ஐவன் சந்திக்க வேண்டியிருந்தது. பெருந்தோட்டப் பகுதிக்குச் செல்வதற்கு முன்பாக, குறித்த ஊடகக் குழுவினருக்கும் அருட்தந்தை போல் கஸ்பேர்ஸ்க்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கண்டி கஹிரவகந்த எனும் இடத்திலுள்ள சத்யோதய நிலையத்தில் இடம்பெற்றது. பழம்பெரும் இசைக்கலைஞர் ஹேக் கருணாரத்னவும் இதில் பங்கேற்றார். 

மலையக தமிழ் மக்களுடனான தனது அனுபவத்தை சுமார் ஒரு மணித்தியாலம் விபரித்த பின்னர், அருட்தந்தை கஸ்பேர்ஸ் கேள்விகளுக்கான சந்தர்ப்பத்தை வழங்கினார். 

மலையகத் தமிழர்களை அடையாளம் காண்பதற்கு ஏதுவான உடல் ரீதியான வேறுபாடுகள் ஏதேனும் உள்ளனவா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

ஐவன் சில்வாவை சுட்டிக்காட்டிய அருட்தந்தை கஸ்பேர்ஸ் அவர் ஒரு சிங்களவர் எனக் குறிப்பிட்டார். சிங்களவரான ஹேக்கை சுட்டிக்காட்டிய அருட்தந்தை, அவர் ஒரு தமிழர் எனக் குறிப்பிட்டார். 

“வித்தியாசத்தை காணுங்கள்” என அருட்தந்தை கஸ்பேர்ஸ் கேட்டுக்கொண்டார். 

இருவரும் ஒரே மாதிரியாக இருந்தனர். அவர்களது உயரமும் தோல் நிறமும் ஒரே மாதிரியானவை. 

ஹேக் குழப்பமடைந்தார். ஐவன் சிரிப்பை அடக்குவதற்காக உதடுகளை இறுக்கிக்கொண்டு, தரையை பார்த்துக்கொண்டிருந்தார். அவர்களை ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். 

சில நொடிகளில் அவர்களை தமிழ் மற்றும் சிங்கள மாதிரிகளாக அருட்தந்தை கஸ்பேர்ஸ் உருவாக்கினார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பாக ஆவணக்கதையொன்றை ஒருதடவை எழுதினேன். அதனை கிறிஸ்டி ஷெல்டன் பெர்னாண்டோ இயக்கினார். பழம்பெரும் நடிகர் எச். ஏ. பெரேரா தமிழ் தொழிலாளியாக நடித்தார். 

ஒப்பனை கலைஞர் புத்தி கலப்பதி தனது பணியை செய்துமுடித்தபோது, உண்மையான தோட்டத் தொழிலாளர்களுக்கு மத்தியில் தலைப்பாகை அணிந்த எச். ஏ. பெரேராவை அடையாளம் காண முடியவில்லை. ஆவணக்கதையை நாம் படமாக்கினோம். 

மாத்தளையிலிருந்து மலையக பாடசாலைக்குச் செல்லும் ஒரேயொரு ஆசிரியர் பேருந்தில் பயணித்தார். அவர் பாடசாலைக்கு புதியவர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களை அறிந்திருக்கவில்லை. அவர் ஆரம்பத்திலிருந்து எச். ஏ. பெரேராவை ஒரு தோட்டத் தொழிலாளி என தவறாக புரிந்துகொண்டார். எச். ஏ. பெரேராவுக்கு தமிழில் ஓரளவு கதைக்க முடிந்தாலும் அவர் அதனை தவிர்த்துவந்தார்.   

தோட்ட கண்காணிப்பாளர் வழங்கிய மதிய விருந்துபசாரத்திற்கு அந்த ஆசிரியரும் வரவழைக்கப்பட்டார். ஒரு தமிழ் தோட்டத் தொழிலாளி சாப்பாட்டு மேசையில் அமர்ந்து தோட்ட கண்காணிப்பாளருடன் சிங்கள மொழியில் சரளமாக உரையாடுவதைக் கண்டு ஆசிரியர் குழப்பமடைந்தார். 

அடுத்ததாக நான் இன்னுமொரு சிக்கலை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. கதை எழுதுபவராகவும் விவரண தயாரிப்பாளராகவும் நான் அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்றேன். பிரபல மெண்டலின் இசைக்கலைஞரான என்டணி சுரேந்திரா போன்ற பல நண்பர்களை எனக்குத் தெரியும்.  

நாங்கள் ஒருநாள் வரவேற்பு பகுதியிலுள்ள மேசையருகே பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சாரம் மற்றும் மேற்சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயதான நபர் எம்மை நோக்கி வந்தார். அவர் எம்மிருவரையும் பார்த்து, மரண அறிவித்தல் தொடர்பான படிவமொன்றை தமிழில் நிரப்பித் தருமாறு கோரினார். 

சுரேந்திரா கொழும்பில் பிறந்த ஒரு தமிழர். நான் கண்டியில் பிறந்த ஒரு சிங்களவர். அந்த மனிதருக்கோ நான் சுரேந்திராவை விட தமிழ் போன்ற தோற்றமுடையவனாக தோன்றியுள்ளேன். 

சுரேந்திரா சிரிக்காமல் அவருக்கு உதவினார். நாங்கள் சந்தித்துக்கொள்ளும்போது இந்த சம்பவத்தை இன்னும் நினைவுபடுத்திக்கொள்வோம். 

உலகில் வாழும் சகல மனிதர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் ஒரே அடையாளத்தையும் அடையாள அட்டையையும் மாத்திரமே கொண்டுள்ளனர். அதுதான் மனிதநேயம்.

පොදු මිනිසා සහ හැදුනුම්පත

The Everyday Person And The Identity Card

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts