சமூகம்

65 வயதிலும் நம்பிக்கையுடன் பற்பொடி தயாரிக்கிறார்.

லதா துரைராஜா
எனக்கு மொத்தம் எட்டு பிள்ளைகள். மூத்தவர் கலியாணம்முடிச்சு போயிற்றார். ஆனால் போரில செல்விழுந்து அவன்ர மனிசி செத்துப்போச்சு 5வயசுப்பிள்ளை மட்டும் தப்பிச்சு. இரண்டாவது மகன் 2009-2014 வரை தடுப்பு முகாமில வெளியவந்து வெளிநாட்டுக்குபோகப்போறன் எண்டு போனவன்தான் எங்கயெண்டே தெரியாது. ஆள் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றுகூடத் தெரியாது…

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்பார்கள். ஆலமரம், வேப்பமரத்தின் குச்சிகளால் பல்லுவிளக்கிய காலம் இருந்தது. அடுப்புக்கரியாலும் விளக்கினோம். பின்னர் உமியை எரித்து உப்புடன் கலந்து விளக்கினோம். இப்போது உள்ள பலருக்கு இவை தெரியாது. பிளாஸ்ரிக் பல்துலக்கியும், விதவிதமான நிறங்களில் மணங்களில் பற்பசையும் வந்து ஆக்கிரமித்துவிட்டது. போட்டிபோட்டுக்கொண்டு அவற்றை விளம்பரம் செய்கின்றனர். ‘நீங்கள் பாவிக்கும் பற்பசையில் உப்பு இருக்கா’ என்பதுதான் முதற்கேள்வி….இப்படி விளம்பரம் போகிறது. எமது பழக்கவழக்கமெல்லத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடித்து பற்பசையை வாங்க பழக்கிவிட்டு இப்ப மீண்டும் உப்பிருக்கா என்கிறது முதாளித்துவம். ஆனாலும் நம் மக்கள் மறக்கவிடமாட்டார்கள்! அவர்களது ஜீவோனாபாயத்திற்காக தொடரும் தொழில்தான் ‘பற்பொடி தயாரிப்பு.’ முல்லைத்தீவில் அனிஞ்சியன்குளம் பகுதியில் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருபவர்தான் 65 வயதான திருமதி. பத்மநாதன் தனராணி. பற்பொடித் தயாரிப்பு தன் வாழ்கையில் வந்தவந்த விதத்தையும் அதைநம்பிய தமது வாழ்வனுபவத்தையும் கட்டுமரனுடன் பகிர்ந்து கொண்டார்.

த கட்டுரன்: இந்த பற்பொடி தயாரிக்க ஏதேனும் பயிற்சி பெற்றீர்களா?
தனராணி: (சிரித்துக்கொண்டே)இல்லவே இல்லை….. வறுமை உங்களைச் சூழ்ந்து நிற்குமானால், உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள எதையாவது செய்ய முயல்வீர்கள். எனது மகனும் அப்படித்தான் இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறேன். அதுவும் கையில் ஒரு சதமும் இல்லாத நிலையில் எப்பிடி சாப்பிடுறது என்பதே திண்டாட்டமா இருக்கும்போது, பிழைக்கிறதுக்கு வழியத்தேடித்தேடி மூளை அலையும். இங்க உமி இலகுவாக கிடைக்கும். எனது இரண்டாவது மகன் 15 வருடங்களுக்க முன் இதை செய்யத்தொடங்கினான். இப்ப நாங்கள் தொடர்ந்து செய்கிறோம்.

த கட்டுமரன்: இப்ப உங்கள் மகன் என்ன எங்கே? என்ன செய்கிறார்?
தனராணி: எனக்கு மொத்தம் எட்டு பிள்ளைகள். அவர்களில் மூத்த ஆறு பேரும் ஆண்கள், கடைசி இரண்டும் தான் பெண்கள். மூத்த மகன் 1974 ஆம் ஆண்டிலும் கடைசி மகள் 1996-ஆம் ஆண்டிலும் பிறந்தார்கள். இப்ப கடைசி இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைத் தவிர யாரும் எங்களுடன் இல்லை.

த கட்டுமரன்: ஏன் உங்கள் மகன்மார்களுக்கு என்ன நடந்தது?
தனராணி: எங்கள் ஐந்தாவது மகன் 1984-ஆம் ஆண்டு பிறந்தான். அவன் ஊனமுற்ற பிள்ளையாக இருந்தான். அவனால் நடக்க முடியாது. காலைக்கடன்களைக் கழிப்பதற்கும் தூக்கிக்கொண்டுதான் போகவேண்டியிருந்தது. 1992 ஆம் ஆண்டு ஆறாவது மகன் பிறந்தான். ஐந்தாவது வயதிலேயே அவனுக்கு கடுங்காய்ச்சல். மருத்துவ வசதிகள் சரியாக கிடைக்காததால் இறந்துபோனான். தம்பியாரின் இறப்பைத் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த ஐந்தாவது (உடல் ஊனமுற்ற) மகனும் அடுத்த நான்கு மாதங்களிலேயே இறந்துவிட்டான். ஆக, ஒரே ஆண்டில் இரண்டு பிள்ளைகளை அடுத்தடுத்துப் பறிகொடுத்தோம்.

பத்மநாதன் தனராணி கணவருடன்

மூத்தவர் கலியாணம்முடிச்சு போயிற்றார். ஆனால் போரில செல்விழுந்து அவன்ர மனிசி செத்துப்போச்சு 5வயசுப்பிள்ளை மட்டும் தப்பிச்சு. இரண்டாவது மகன் 2009-2014 வரை தடுப்பு முகாமில வெளியவந்து வெளிநாட்டுக்குபோகப்போறன் எண்டு போனவன்தான் எங்கயெண்டே தெரியாது. ஆள் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றுகூடத் தெரியாது. மூன்றாவது மகன் கிட்டடியிலதான் கட்டாருக்கு போனார். மற்றவர் கலியாணம் முடிச்சு தனியா போயிற்றார். இப்படியே எல்லாரும் இந்த போரால சிதறிபோக நாங்க இன்னும் வாழ்றதுக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறம். எட்டு பிள்ளையள பெத்தும் நாங்க கடைசிவரை எங்களின்ர கையை நம்பித்தான் வேலைசெய்யவேணும். போர் என்னவோ ஓய்ந்துபோனதுதான்! ஆனால் நாங்கள் வாழ்வதற்கான போராட்டம் இன்னமும் ஓயவில்லை.

த கட்டுமரன்: சுயதொழில் செய்ய அரசாங்கம் மூலம் உதவி ஏதும் பெறவில்லையா?
தனராணி: இயந்திரம் வாங்கித் தொழில் செய்வதென்றால் கடன் வாங்கலாம். அதிலும் 60 வயதிற்குள் இருந்தால் மட்டுமே கடன் தருவார்கள். எங்கள் இருவருக்குமே 60 தாண்டி பல வருடங்கள் ஆகிவிட்டன. திருமண வயதில் நிற்கும் பெண் பிள்ளைகளின் பெயரில் கடனை வாங்கி அவர்கள் மேல் பாரத்தை சுமத்த விரும்பவில்லை. நாங்கள் இப்ப செய்யும் தொழிலுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. வெறும் 20 மூடை உமி கிடைச்சால் போதும். பாரமில்லாத பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதால், இந்த பற்பொடி உற்பத்தித்தொழில் எங்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. எங்கட உயரத்திற்கு ஏற்ற சுமைதான்.

த கட்டுமரன்: இது என்ன “உயரத்திற்கேற்ற சுமை”?
தனராணி: (சிரித்தவாறே) நானும் கணவரும் சாதாரண உயரத்தை விட உயரம் குறைந்தவர்கள். எங்களைப் போலவே எங்களுடைய பிள்ளைகளும் உயரம் குறைவாகத்தான் பிறந்தார்கள். உயரமும் குறைவு, உடலும் மெலிவு என்றிருக்கையில், மற்றவர்களைப் போன்று அதிக எடைகளைத் தூக்கமுடியாதே! அதைத்தான் கூறினேன்.

த கட்டுமரன்: 20 மூடை உமியில் எவ்வளவு பற்பொடி செய்ய முடியும்?
தனராணி: நாங்கள் வைத்திருக்கும் சிறிய குடிலில் ஒரே தடவையில் 10 மூடை உமியைத்தான் எரிக்கமுடியும். தொடர்ந்து மூன்று நாட்கள் எரிந்த உமிச் சாம்பலை அள்ளி, அரித்தெடுத்தால், பற்பொடிக்கு உகந்த அரை மூடை சாம்பல் கிடைக்கும். அதற்கென உள்ள, இளஞ்சிவப்பு நிற வண்ணப்பொடி மற்றும் உப்புநீர் ஆகியவற்றைக் கலந்து இரண்டு நாட்கள் நிழலில் உலர வைச்சு; 25 கிராம் நிறைகொண்ட பாக்கெட்டுகளாக அடைப்போம். சுமார் ஆயிரத்து ஐந்நூறு பாக்கெட்டுகள் வரை அதில் கிடைக்கும்.

த கட்டுமரன்: இதனால் கிடைக்கும் வருமானம் உங்கள் நான்கு பேருக்கும் போதுமானதாக இருக்கின்றதா? 
தனராணி: 1500 பக்கெட்டுகளை வித்தால் இரண்டாயிரம் ரூபாய்வரை இலாபம் கிடைக்கும். பற்பொடி பக்கெற் ஒண்டு வெளியில 5ரூபா விக்குது. நாங்கள் 3 ரூபாவுக்கு குடுக்கிறம். எனது ஒரு மகள் எனக்கு உதவிறா. மற்றவர் ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யிறா.அதனால எங்கட குடும்ப செலவ ஓரளவுக்கு சமாளிக்க முடியுது. ஏண்டாலும் இந்த பற்பொடியால பேருக்கு முன்னர் கிடைத்த வருமானத்தைவிட இப்ப அதிகமா கிடைக்குது. ஏனெண்டால் அப்ப சுத்திச் சுத்தி மல்லாவிக்குள் மட்டும்தான் விற்க முடிந்தது. மாதத்திற்கு ஒருமுறைதான் 10 மூடை உமி எரித்து உற்பத்தியில் ஈடுபடுவோம். இப்போது வாரத்திற்கு இரண்டு முறை உற்பத்தி செய்கிறோம். பல மாவட்டங்களில் விற்பனையும் செய்கிறோம்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts