தகவலறியும் உரிமை

2022 நிதியாண்டில், பயணிகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை!

ஒரு நாட்டில் முறையான பொதுப் போக்குவரத்து என்பது உடலின் உயிரணுக்களுக்கு சமனானதாகும். பெரும்பான்மையான மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கை தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ள காரணத்தால், நாட்டில் பொதுப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது இன்றியமையாததாகும். பொதுமக்களுக்காகக் கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. ஏனெனில், பஸ் தரிப்பிடங்கள் பொதுப் போக்குவரத்தை எதிர்பார்த்து வீதிக்கு வரும் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்புப் பெற உதவுகின்றது.   

தலைநகரில் இவ்வாறான கணிசமான பஸ் தரிப்பிடங்கள் அமையப் பெற்றுள்ள போதிலும் தலைநகருக்கு வெளியே, பிரதேசவாரியாக நோக்கும்போது போதுமானளவு தரிப்பிடங்கள் இல்லை என்பதே யதார்த்தமாகும். 

அந்த வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி வீதிப் பயணிப் போக்குவரத்து அதிகார சபைக்கு நாம் சமர்ப்பித்த தகவல் கோரிக்கையைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளை அணுக முடிந்தது.

2022 ஆம் ஆண்டில் பயணிகள் பாதுகாப்புக்கான பஸ் தரிப்பிடங்கள் நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை என்பது கிடைக்கப் பெற்ற தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

மேலும் 2022 ஆம் ஆண்டில் கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மினுவாங்கொடை, கட்டான, நீர்கொழும்பு, திவுலப்பிட்டிய, வத்தளை, அவிசாவளை, இரத்மலானை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் 27 பயணிகள் தரிப்பிடங்கள் அமைப்பதற்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு 20 வீத முற்பணத்தை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 26, 2022 ஆம் திகதி அன்று நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட தேசிய வரவு செலவுத் திட்டம் சுற்றறிக்கை எண். 03/2022, பொதுச் செலவினம் கட்டுப்படுத்தலின் கீழ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாத திட்டங்களைச் செயல்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டில் பயணிகள் தரிப்பிடம் அமைத்தல் திட்டம் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லையென வீதிப்பயணிப் போக்குவரத்து அதிகார சபை அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி, கிருலப்பனை மற்றும் 141 ஆல் இலக்க பஸ் தரிப்பிடங்கள் தொடர்பாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவல் கோரிக்கையில், “குறித்த வீதியில் பேருந்துப் பயணத்தை ஆரம்பிக்கும் இடமான நாரஹேன்பிட்டி தரிப்பிடத்திற்கு அருகாமையில் மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பயணிகள் தரிப்பிடங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பஸ் நிலையத்தில் பயணிகள் தரிப்பிடத்தை நிர்மாணிப்பதற்கு போதிய இட வசதி இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்குக் கூட நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நாட்டில் நாம் வாழ்வது எவ்வளவு துரதிஷ்டமானது? 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts