சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

சாமர சம்பத்

பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய ஆட்சி முறையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது பிரதேச  நிர்வாக முறையில் மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுதல் அல்லது சமூகப் பங்கேற்பு கருத்தியல் முறையைச் செயல்படுத்துவதற்கான பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைத்து மக்களுக்கு நெருக்கமான நிர்வாக அமைப்பை நிறுவுவதற்காகும். 

சமூகப் பங்கேற்பு என்ற கருத்தியல் தற்போது உலகின் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனங்களிலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென உள்ளூராட்சி சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அது நடைமுறையில் உள்ளதா  என்பதில் சிக்கல் உள்ளது. உள்ளூராட்சி நிறுவனங்களில் சமூகப் பங்கேற்பு என்ற கருத்தியல் தற்போது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

உள்ளூராட்சி நிறுவன வகைகள்:

இலங்கையில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவை முக்கியமாக 03 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கையில் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் நிறுவப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை கட்டளைச் சட்டத்தில் இந்த ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களிலும் சமூகப் பங்களிப்பை உறுதி செய்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நிதி மற்றும் கொள்கை வகுத்தல் குழு, வீடமைப்பு மற்றும் சனசமூக அபிவிருத்தி குழு, கைத்தொழில் சேவைகள் குழு, சுற்றாடல் மற்றும் வசதிகள் குழு என்ற குழுக்கள் கட்டாயம்  நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் தேவைக்கேற்ப மேலும் குழுக்களை நியமிக்கலாம். இலங்கையில் உள்ள 341 உள்ளூராட்சி நிறுவனங்களில் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்ட விதம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தி ஆராயப்பட்டதுடன் குளியாப்பிட்டிய நகர சபையில் உள்ள குழுக்களின் செயற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

சமூக பங்கேற்பு கருத்தியல்

சமூக பங்கேற்பு என்ற கருத்தியல் சமூக இருப்பு, சமூக பங்கேற்பு மற்றும் சமூக தலையீடு என 03 படிநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் வினைத்திறனான ஆட்சி முறைக்கு, சமூகத்தின் ஈடுபாடு மட்டுமல்ல, சபையின் செயல்பாடுகளில் பங்கேற்பதும் முக்கியம் ஆகும். 

சமூகப் பங்கேற்பின் காரணமாக நிதிச் செலவுகளைக் குறைப்பதற்கான இயலுமை காணப்படுதல், உழைப்பு மற்றும் சொத்து சமூகத்திற்கே சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தல், பாதுகாப்பும் பராமரிப்பும் பொதுச் சமுதாயத்தினருக்கே என்ற எண்ணத்தை ஏற்படுத்துதல், சமூக ஒற்றுமை மற்றும் பிரஜைகளின் கடமைகள் தொடர்பான அறிவு  மக்கள் மத்தியில் வளர்ச்சியடைவதுடன் விளைத்திறன் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு இயலுமை காணப்படுவதாக இந்த கருத்தியலை நடைமுறைப்படுத்தியபோது கண்டுகொள்ள முடியுமாக இருந்தது. 

குளியாபிட்டிய நகர சபையின் செயற்பாட்டு குழுக்கள்

பிரதேச சபை கட்டளைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி கட்டாயமாகச் செயல்படவேண்டிய 04 குழுக்களுக்கு மேலதிகமாக இன்னும் 03 குழுக்கள் குளியாபிட்டிய நகர சபையில் நடைமுறையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதன்படி, குளியாபிட்டிய நகர சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் குழுக்களாக நிதி மற்றும் கொள்கை வகுத்தல் குழு, வீடமைப்பு மற்றும் சனசமூக அபிவிருத்தி குழு, கைத்தொழில் சேவைகள் குழு, சுகாதார, சுற்றாடல் மற்றும் பொதுவசதிகள் குழு, திண்மக் கழிவு முகாமைத்துவக் குழு, நூலக ஆலோசனைக் குழு, கொள்வனவுக் குழு என்பன காணப்படுகின்றன. சமூக பங்கேற்பு பிரதிநிதித்துவத்துடன் நிறுவப்பட வேண்டிய இந்தக் குழுக்கள், நகர சபையின் உறுப்பினர்கள் தவிர்ந்த மற்ற உறுப்பினர்கள் அதாவது  பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது  இரு குழுக்களிலேயே மட்டுமேயாகும். அதுவும் முதன்மைக் குழுக்கள் தவிர்ந்த திடக்கழிவு மேலாண்மைக் குழு மற்றும் நூலக ஆலோசனைக் குழு போன்ற இரு குழுக்களிலாகும்.

இந்தக் குழுவின் கூட்டம் மற்றும் செயல்பாடு மற்றும் உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு,

இல.செயற்குழுக்கள்சபை உறுப்பினர்கள்குழு கூடப்பட்ட நாட்களின் எண்ணிக்கைசபை உறுப்பினர்கள் தவிர்ந்த மற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
1நிதி மற்றும் கொள்கை வகுத்தல் குழு1106
2வீடமைப்பு மற்றும் சனசமூக அபிவிருத்தி குழு0805
3திண்மக் கழிவு முகாமைத்துவக் குழு040511
4நூலக ஆலோசனைக் குழு160110
5சுகாதார, சுற்றாடல் மற்றும் பொதுவசதிகள் குழு0702
6கொள்வனவுக் குழு1106
7கைத்தொழில் சேவைகள் குழு0705

குளியாபிட்டிய நகர சபையின் நிதி மற்றும் கொள்கை வகுத்தல் குழுவினால் பல்வேறு கொள்வனவுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டு அது தொடர்பான முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அந்தக் குழுவில் சமூக பங்களிப்பிற்கான பொது பிரதிநிதித்துவம் எதுவும் காணப்படவில்லை.

வீடமைப்பு மற்றும் சனசமூக அபிவிருத்தி குழு பல்வேறு சமூக நடவடிக்கைகளில் முடிவுகளை மேற்கொண்டுள்ளது. அவை அனைத்தும் பொதுமக்கள் மீது தாக்கம் செலுத்தும் சிறந்த முடிவுகளாகும். மேலும், தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில்  சமூகத்தின் அபிப்பிராயங்களை கருத்தில்கொண்டு செயல்படுத்தும் போது, மேலும் வெற்றிகரமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.

குளியாப்பிட்டிய  நகர சபையில் சமூகப் பங்களிப்புகளைப் பெற்ற மிக வெற்றிகரமான குழுவாகத் திண்மக் கழிவு முகாமைத்துவக் குழுவைக் குறிப்பிடலாம். பிரதேசவாசிகள், சுற்றாடல் உத்தியோகத்தர்கள், திண்மக்கழிவு உத்தியோகத்தர்கள், விவசாய சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சபை உறுப்பினர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

திண்மக்கழிவு மையங்களில் உர உற்பத்தி, அவற்றின் தரம், வீதிகளில் கழிவுகளை முறையற்ற முறையில் அகற்றுதல், குப்பை சேகரிப்பை முறைப்படுத்துதல், திரவ உரங்கள் தயாரிப்பது தொடர்பாக உள்ளூர் மக்களிடம் கருத்துகளைப் பெற இக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அது தொடர்பில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இது மிகவும் சிறந்த நிலைமையாகும். 

எவ்வாறாயினும், நகர சபையில் நிறுவப்பட்ட குழுக்கள் மற்றும் அக்குழுக்களில் சமூகத்தின் பங்களிப்பு குறைந்த அளவில் காணப்படுகின்றமை குறித்து குளியாபிட்டிய நகரசபையின் செயலாளர் திரு.எச்.எம்.கே.பி.ஹேரத்திடம் வினவியபோது, சமூகத்தின் பங்களிப்பு குறைவாகக் காணப்படுவதை ஏற்றுக்கொண்டதுடன்  அதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நகர சபையின் சில விடயங்கள் மற்றும் குழுக்களின் சில விடயங்கள் தொடர்பிலும் பொதுமக்களை இணைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே அக்கறை காட்டுவதாக அவர் மேலும்  குறிப்பிட்டார்.

இது தொடர்பில் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் என்.ஏ.தர்மசிறி கூறுகையில், உள்ளுராட்சி சட்டங்களின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி குழுக்களையும் நிறுவி அதில் கட்டாயமாகச் சமூகத்தைப் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும் என்பதாகவும், சிறந்த சேவையை நடைமுறைப்படுத்துவதில் பொதுமக்களை இணைத்துக்கொள்வது முக்கிய வகிபாகமாகக் காணப்படும் அதே வேளை, அதன் மூலம் உள்ளூராட்சி நிறுவனங்களின் நிர்வாகத்தை மேற்கொள்வது மிகவும் எளிதாகும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கான மிகவும் வெற்றிகரமான வழிமுறை சமூகப் பங்கேற்பு என்ற கருத்தியல் நடைமுறையே என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிகளை மேற்கொள்வது மற்றும் ஒப்புதல்களை பெறுவது, விதிமுறைகளை அங்கீகரிப்பது போன்ற நடவடிக்கைகள் தலைவர் தலைமையில் சபை கூட்டங்கள் மூலம் தீர்மானிக்கப்படும். இதில் மற்ற நபர்களுக்குக் கருத்து தெரிவிக்கவோ, தலையிடவோ முடியாது. இதன் காரணமாக, சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காகக் குழுக் கருத்தியல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குழுக்களில் விவாதிக்கப்பட்ட விடயங்கள், அறிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் மூலம் சபைக்கு அனுப்பப்படுகின்றன. நிலைமை இவ்வாறிருக்க, சம்பந்தப்பட்ட குழுக்களில் சமூகப் பங்களிப்பு அல்லாத சபை உறுப்பினர்கள் மட்டும் குழு உறுப்பினர்களாகக் காணப்பட்டால் குறித்த சட்டத்தின் உத்தேச நோக்கங்கள் நிறைவேறுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.  

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts