வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பு பேச்சு மற்றும் போலிச் செய்திகள்- அமெரிக்க தலைநகரின் வன்முறையை அடிப்படையாகக் கொண்டது.

தாரிக்கா ஹேவாகே

வெறுக்கத்தக்க பேச்சு எவ்வாறு வன்முறைக்கும் சமூகத்திலுள்ள வெவ்வேறு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தோற்றுவிப்பதற்கும் காரணமாகிறது என்பதற்கு 2021 ஜனவரி 06 ஆம் திகதி அமெரிக்காவின் தலைநகரில் இடம்பெற்ற வன்முறையில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவமானது அண்மையில் இடம்பெற்ற மிகச்சிறந்த உதாரணமாகும். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் டுவீட் காரணமாக ஏற்பட்ட இச்சம்பவம், சமூக வலைத்தளங்களுக்கூடாக பரப்பப்படும் வெறுக்கத்தக்க பேச்சின் விளைவால் இடம்பெறக்கூடிய வன்முறைக்கு மிகப்பொருத்தமான உதாரணமாகும். அதேபோன்று அமெரிக்காவின் 2015 இற்கான ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் வேட்பாளர்கள் மீது சேறுபூசும் வகையில் போலிச்செய்திகள் பரப்பப்பட்டமையானது அண்மைய வரலாற்றில் போலிச்செய்திகள் செல்வாக்குச் செலுத்தியமையை எடுத்துக்காட்டும் இன்னுமொரு உதாரணமாகும். இச்சம்பவங்கள் கருத்து சுதந்திரத்துக்கும் வெறுப்பு பேச்சு/போலிச் செய்திகளுக்கும் இடைப்பட்டவையாக கருதப்பட முடியாதவை. சிலர் கருத்து சுதந்திரம் மற்றும் தகவலறியும் உரிமை எனும் போர்வையில் வெறுக்கத்தக்க பேச்சை மூடிமறைக்கப் பார்க்கின்றார்கள்.

போலிச்செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சை பரப்புவதென்பது கருத்து சுதந்திரத்தை உள்ளடக்கிய மனித உரிமைக்கான சர்வதேச உடன்படிக்கைகளை முற்றாக மீறும் ஒரு செயன்முறையாகும். ஐக்கிய அமெரிக்கா 1992 ஆம் ஆண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனத்தில் (ஐ.சி.சி.பி.ஆர்) கைச்சாத்திட்டுள்ளது. மேலும், மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்தின் (யு.டி.எச்.ஆர்) 19வது சரத்தில் கருத்து சுதந்திரம் மனித உரிமையாக முதன் முதலில் அங்கீகாரம் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து சர்வதேச உடன்படிக்கைகளில் கருத்து சுதந்திரத்துக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை தெளிவாக அடையாளம் காண்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஐ.சி.சி.பி.ஆர் இன் 19வது சரத்து, கருத்து சுதந்திரத்தை மனித உரிமையாக அடையாளம் காட்டியுள்ளதுடன் அதில், ‘எவ்வித குறுக்கீடுமின்றி கருத்தை வெளிப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு’ என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. (1ம் பந்தி ) கருத்து சுதந்திரத்துக்கான உரிமை அனைவருக்கும் உண்டு, இந்த உரிமையானது தேடல், பெற்றுக்கொள்ளல் மற்றும் அனைத்து வகையான தகவல்கள் மற்றும் சிந்தனைகளை வழங்குதல், எல்லைகளைப் பொருட்படுத்தாமல், வாய்வழியாக, எழுத்தாக அல்லது அச்சினூடாக, சித்திர வடிவில் அல்லது அவர் விரும்பும் ஏதேனுமொரு ஊடகத்திற்கூடாக வெளிப்படுத்தும் சுதந்திரத்தை உள்ளடக்கியதாக இருக்கும். (2வது பந்தி) இக்கட்டுரையின் 2வது பந்தியில் வழங்கப்பட்டுள்ள உரிமகைளின் பயன்பாடு விசேட கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. ஆனால் இவை சட்டத்தால் வழங்கப்பட்ட மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் மட்டும், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கலாம். (அ) மற்றவர்களின் உரிமைகள் அல்லது நற்பெயருக்கு மதிப்பளிப்பதற்காக் (ஆ) தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு, அல்லது பொது சுகாதாரம் அல்லது ஒழுக்கங்களின் பாதுகாப்பிற்காக’. ஐ.சி.சி.பி.ஆர் இல் கருத்துச் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதும் அமெரிக்காவின் சமீபத்திய வரலாறு, அத்தகைய கட்டுப்பாடுகளின் உண்மையான செயல்படுத்தல் குறைவடைந்திருப்பதனை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்க தலைநகரில் இடம்பெற்ற வன்முறையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது வெறுக்கத்தக்க பேச்சு பரப்பப்படும் விடயம் தொடர்பில் சர்வதேச சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம். போலிச் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு பரப்பப்படுவதை தடுக்க வேண்டுமாயின் சமூக வலைத்தளங்களில் இடம்பெறக்கூடிய போலிச் செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பில் கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டியது கட்டாயம். கடும் ஒழுங்குபடுத்தல்களை நடைமுறைப்படுத்துவதுடன் குற்றவாளிகளுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்படவும் வேண்டும். பொதுமக்கள், குறிப்பாக வெறுக்கத்தக்க பேச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக குறிப்பிட்ட வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பில் முறையிடுவதற்கு ஊக்குவிக்கப்படல் வேண்டும். மேலும், ஊடகவியலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள், சுதந்திரம் மற்றும் அமைதியான சமூகத்தை தோற்றுவிப்பதில் அவர்களுக்குள்ள பங்களிப்பு என்பன வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலிச் செய்திகளை கட்டுப்படுத்துவதற்கு மிக அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலான ஊடக தர்மம் பற்றிய கல்வி வழங்கப்படல் வேண்டும். ஊடக நிறுவனங்கள் அரசியல் பக்கச்சார்பாக செயற்படும் சந்தர்ப்பங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பரப்பப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதனால் அவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்படல் வேண்டும். வெறுக்கத்தக்க பேச்சை கட்டுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் சமூகத்திலுள்ள அனைத்து அரசியல் பிரிவுகளுக்குமிடையில் ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்குவதனை ஊக்குவிக்கும் வகையிலுமான கல்வி ஊடகத்துறையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts